Nov 24, 2009

சில பகிர்தல்கள்!!!

கடந்த ஏழு எட்டு நாட்களாக எங்கள் ஊரில் கடுமையான மழை. விடாமல் பெய்கிறது. இந்த மாதிரி 25 வருடங்களுக்கு முன் பெய்ததாக சொல்கிறார்கள். எங்கும் போக முடியவில்லை. ஒரு வாரமாக வாக்கிங், யோகா, ஜிம் எங்கும் செல்ல முடியவில்லை. பார்க்கும் இடமெல்லாம் அனைவரும் தும்மிக் கொண்டு இருக்கிறார்கள். காய்கறி வாங்கக் கூட கடைக்குச் செல்ல முடியவில்லை. தினமும் மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால், இப்போது செல்ல முடியவில்லை. காரணம் மழை மட்டும் இல்லை. மழையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல். வீட்டிலிருந்து ஆபிஸ் 15 கிலோ மீட்டர்தான். தினமும் ஆபிஸ் வர ஒரு மணி நேரம் ஆகிறது. மாலையில் வீட்டிற்கு செல்ல 2 மணி நேரம் ஆகிறது. கார் இஞ்ச் இஞ்சாக நகர்கிறது. இரண்டு மணி நேரம் காரில், நெரிசலில் இருக்கும் போது கோபம் கோபமாக வருகிறது. யாரைப் பார்த்தாலும் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் போல் இருக்கிறது. இதில் யாராவது காரை முந்திக்கொண்டு செல்ல முயன்றால் அவனை அடிக்கலாம் போல இருக்கிறது. ஆனால் இதை எதையும் என்னால் செய்ய முடியவில்லை. காரணம் இது நம் ஊர் இல்லையே? நேற்று அலுவலகம் வரை வந்து வீட்டிற்கு திரும்பி விட்டேன். காரணம் வெள்ளம். பிறகு தண்ணிர் வடிந்தவுடன் சென்றேன். பிள்ளைகளும், பாவம் மழையுடனே செல்கிறார்கள். பள்ளி விடுமுறை விடலாம். ஆனால், ஏதோ ஐ ஏ எஸ் தேர்வு போல் இப்போதுதான் தீவிரமாகச் சொல்லித் தருகிறார்கள்.

இன்னொரு கொடுமை. ஆபிஸில் எங்கும் மின் விசிறி கிடையாது. ஏஸிதான். ஏஸி வைத்தால் ரொமப குளிர்கிறது. வைக்காவிட்டால் டெம்பரேச்சர் ரொம்ப கொடுமையாக உள்ளது. மொத்தத்தில் இயல்பு வாழ்க்கை ரொம்ப பாதித்து விட்டது. ஒரு வாரத்திற்கே இப்படி உள்ளதே? எப்படித்தான் சுனாமி வரும்போதும், பூகம்பம் வரும்போதும் இந்தோனேசியாவில் மக்கள் சமாளிக்கிறார்களோ? தெரியவில்லை. ஏனென்றால் இவை இரண்டும் வரும்போது மழையும் கண்டிப்பாக வரும். மொத்தத்தில் என்னால் எந்த பதிவும் படிக்கவோ, எழுதவோ முடியவில்லை.

சரி, இதையெல்லாம் ஏன் உங்களிடம் கூறுகிறேன்? என்கின்றீர்களா? உங்களிடம் சொல்லாமல் வேற யார்கிட்ட நான் என் கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்வது?

யாராவது கடவுள் கிட்ட சொல்லி கொஞ்சம் மழையை அடக்கி வாசிக்க சொல்லுங்கப்பா!!!!

****************************************

எனக்கு பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள வேண்டும் என ரொம்ப ஆசை. ஆனால், இது வரை சந்தர்ப்பம் அமையவில்லை. இனி அமைந்தாலும் போவேனா? என்பது கேள்விக்குறியே? ஏனென்றால், சென்ற சனிக்கிழமை நடந்த சந்திப்பின் உரையாடல்களை பார்க்கும் போது நமக்கும் அதற்கும் வெகு தூரம் எனத் தெரிகின்றது. நான் கொஞ்சம் ஜாலியான நபர். எப்போதாவதுதான் சீரியஸ். மொத்தத்தில் ஈஸி கோயிங் பெர்சன். அவர்கள் உரையாடல்களைப் பார்த்தால் ஏதோ பரிட்சைக்கு படித்து விட்டு போவது போல், இலக்கியம் என்றால் என்ன? கவிதை என்றால் என்ன? என்று தயார்படுத்திக்கொண்டு போக வேண்டும் போல் உள்ளது?. நான் சென்றால் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

பேசாமல் வேடிக்கை இங்கே இருந்தே பார்த்துவிட்டு போகின்றேன். ஏதாவது, ஜாலியான சந்திப்புன்னா சொல்லுங்கப்பா வறேன்???

****************************************

எனக்குப் பிடித்த எழுத்தாளர் சுஜாதாதான். இருந்தாலும் 'பிடித்தது பிடிக்காதது' பகுதியில் பாலகுமாரன் என்று எழுதினேன். காரணம் உயிரோடு இருப்பவர்கள் பற்றி எழுத வேண்டும் என்றதால் அப்படிக் குறிப்பிட்டேன். சுஜாதான் என்னுடைய இளமைக்காலங்களை மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டவர். பிறகு பாலகுமாரனும் படிக்க ஆரம்பித்தேன். முன்பெல்லாம் ஒரு நாவலை கையில் எடுத்தால் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைப்பேன். ஆனால், இப்போது??? ஊரில் இருந்து வரும்போது நண்பர் ஒருவர் பாலகுமாரன் எழுதிய 'திருவடி' என்ற நாவலை கொடுத்தார். ஒரு வாரத்திற்கு முன் தான் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு என்னால் ஒரு 20 பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. இன்னும் 100 பக்கம் கூட தாண்ட முடியவில்லை. என்னக் காரணம்? என்னுடைய படிப்பு ஆரவம் குறைந்து விட்டதா? இல்லை அந்த நாவல் என்னைக் கவர வில்லையா? என ஆராய்ச்சி செய்து பார்த்தால், அந்த நாவல் என்னை ஈர்க்க வில்லை என்றுதான் சொல்லுவேன். ஏதோ வரலாறு புத்தகத்தைப் படிப்பது போல் உள்ளது.

பாலகுமாரன் எழுத்தில் இருந்த கவர்ச்சி போய்விட்டதா? இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா? தெரியவில்லை.

****************************************

கவிதை மாதிரி!!!

காதலித்துப் பார்
தபால்காரன்
நண்பனாவான்

காதலித்தான்
ஆஸ்பத்திரியில்
இருக்கும்போது தான்
தெரிந்தது
தபால்காரன் அவள்
அண்ணன் என்று!

****************************************

சில தமிழ் வார்த்தைகளும் அதன் தமிழ் அர்த்தங்களும்

01. பசனன் - அக்கினி தேவன்
02. பசிதகனி - சோறு
03. பட்டாரகன் - கடவுள், குரு
04. மகாசூதம் -போர்ப்பறை
05. கொணசில் - வளைவு, கோணல்
06. கொண்கன் - கணவன்
07. அலிகம் - நெற்றி
08. கந்தோதம் - குவளை, தாமரை
09. கந்தோர் - அலுவலகம்
10.குறும்படி - வாசல்படி

இதை அப்படியே பயன் படுத்தினால் எப்படி இருக்கும்??

நான் இன்று காலை பசனனை கும்பிட்டு விட்டு பசிதகனி சாபிட்டு விட்டு, பிறகு கோவிலுக்கு சென்று பட்டாரகனை கும்பிட்டு, பிறகு அந்த கொணசிலில் திரும்பி கந்தோதம் பறித்து, திரு நீரை அலிகத்தில் பூசிக்கொண்டு, பிறகு ஒரு வழியாக குறும்படி தாண்டி கந்தோர் வந்தேன்.

****************************************

15 comments:

ரோஸ்விக் said...

சிங்கபூருக்கு வாங்க...எதுவும் படிச்சிட்டு வர வேண்டாம்....சும்மா ஜாலியா சந்திச்சிட்டு போகலாம்....நம்ம லெவலுக்கு....:-)

dondu(#11168674346665545885) said...

மழையில் வாக்கிங் போய் பாருங்கள். நான் ரெகுலராக செய்கிறேன்.

பார்க்க:
http://dondu.blogspot.com/2008/11/blog-post_26.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

இராகவன் நைஜிரியா said...

இனியவரே... நல்ல பகிர்தல்கள்..

// சரி, இதையெல்லாம் ஏன் உங்களிடம் கூறுகிறேன்? என்கின்றீர்களா? //

யார்கிட்டேயாவது சொல்லிடணும்.. மனசுகுள்ளேயே வச்சு இருந்தா அழுத்தம் ரொம்ப ஜாஸ்தியா ஆயிடும்..

நீங்க சொன்னது சரிதாங்கோ..

// பேசாமல் வேடிக்கை இங்கே இருந்தே பார்த்துவிட்டு போகின்றேன். ஏதாவது, ஜாலியான சந்திப்புன்னா சொல்லுங்கப்பா வறேன்??? //

அண்ணே ஜடாயு மாதிரி அங்க உட்கார்ந்துகிட்டு, சென்னையில் நடப்பதை பார்ப்பீங்களா... நல்ல கண்பார்வைங்க உங்களுக்கு..

// பாலகுமாரன் எழுத்தில் இருந்த கவர்ச்சி போய்விட்டதா? இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா? தெரியவில்லை.//

அவர் எழுத்தின் மேல் இருந்த கவர்ச்சி போயிடுச்சு...

அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைச்சுகிட்டு இருக்கார்..

விக்னேஷ்வரி said...

உங்களிடம் சொல்லாமல் வேற யார்கிட்ட நான் என் கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்வது? //
நல்லதொரு தோழமையை இந்தப் பதிவுலகம் உங்களுக்கு அளித்திருப்பதில் மகிழ்ச்சி.

பேசாமல் வேடிக்கை இங்கே இருந்தே பார்த்துவிட்டு போகின்றேன். ஏதாவது, ஜாலியான சந்திப்புன்னா சொல்லுங்கப்பா வறேன்??? //
அதுக்கு ஏன் இத்தனை கேள்விக்குறி.

இது கவிதையா, காமெடியா... நல்லா இருக்கு.

இதை அப்படியே பயன் படுத்தினால் எப்படி இருக்கும்?? //
உங்களுக்கு யாரிடமிருந்தாவது அடி கிடைக்கும். ;)

நான் இன்று காலை பசனனை கும்பிட்டு விட்டு பசிதகனி சாபிட்டு விட்டு, பிறகு கோவிலுக்கு சென்று பட்டாரகனை கும்பிட்டு, பிறகு அந்த கொணசிலில் திரும்பி கந்தோதம் பறித்து, திரு நீரை அலிகத்தில் பூசிக்கொண்டு, பிறகு ஒரு வழியாக குறும்படி தாண்டி கந்தோர் வந்தேன். //
கண்ணைக் கட்டுது சாமி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சாதாரணமா ஜல்லிதான் அடிச்சுகிட்டிருப்போம் :) இந்தச் சந்திப்புலயும் அந்தப் பேச்சுகளுக்கு முன்னாலும் பின்னாலும் மொக்கைதான் :)

அதனால, தைரியமா வாங்க.

நிகழ்காலத்தில்... said...

\\பாலகுமாரன் எழுத்தில் இருந்த கவர்ச்சி போய்விட்டதா? இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா? தெரியவில்லை.\\

ஆமாம் போய்விட்டது. ஆனால் அதைவிட பயன் தரத்தக்க தியானம்,யோகம் சம்பந்தமான நம் முன்னோர்களின் வரலாற்றினை எழுதுவார். பொறுமையாய் படையுங்கள்.

அதன் அருமை புரியும்

வாழ்த்துகள்

iniyavan said...

//சிங்கபூருக்கு வாங்க...எதுவும் படிச்சிட்டு வர வேண்டாம்....சும்மா ஜாலியா சந்திச்சிட்டு போகலாம்....நம்ம லெவலுக்கு....:-)//

வருகைக்கு நன்றி ரோஸ்விக். நிச்சயம் சிங்கப்பூர் வறேன்.

iniyavan said...

//மழையில் வாக்கிங் போய் பாருங்கள். நான் ரெகுலராக செய்கிறேன்.//

அடை மழைல எப்படி சார் போகமுடியும்?

iniyavan said...

//இனியவரே... நல்ல பகிர்தல்கள்..//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி இராகவன் சார்.

iniyavan said...

//நல்லதொரு தோழமையை இந்தப் பதிவுலகம் உங்களுக்கு அளித்திருப்பதில் மகிழ்ச்சி.//

உங்கள் வருகைக்கும் தெளிவான கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி விக்கி.

iniyavan said...

//சாதாரணமா ஜல்லிதான் அடிச்சுகிட்டிருப்போம் :) இந்தச் சந்திப்புலயும் அந்தப் பேச்சுகளுக்கு முன்னாலும் பின்னாலும் மொக்கைதான் :)

அதனால, தைரியமா வாங்க.//

உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி குருஜி.

iniyavan said...

//ஆமாம் போய்விட்டது. ஆனால் அதைவிட பயன் தரத்தக்க தியானம்,யோகம் சம்பந்தமான நம் முன்னோர்களின் வரலாற்றினை எழுதுவார். பொறுமையாய் படையுங்கள்.

அதன் அருமை புரியும்

வாழ்த்துகள்//

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

Nan said...

nalla pagirvu thalai

dondu(#11168674346665545885) said...

அடைமழையில்தான் போகணும். என்னோட பதிவை படிக்கலையா?

பதிவர் சந்திப்புகள் மெரீனாவில் நடக்கையில் மழை பெய்தால் அடைமழையில் சொட்ட சொட்ட நனைந்துகொண்டே போய் கடலலையில் நிற்பதையும் செய்திருக்கிறேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Romeoboy said...

அன்று நடந்தது இலக்கிய பதிவர் சந்திப்பு சார். வரும் மாதம் கண்டிப்பா பதிவர் சந்திப்பு நடக்கும் முடிந்தால் கலந்துகொள்ளுங்கள் .

நட்புடன்,
ரோமீயோ