Nov 13, 2009

நான் ஏன் அப்படி இருந்தேன்???

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகி விட்டது. இருந்தாலும் அந்த சம்பவத்தின் வடு இன்னும் என் மனதை விட்டு வெளியேற மாட்டேன் என அடம் பிடிக்கிறது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களின் ஒரு ஞாயிறு விடுமுறையில் நண்பர்கள் அனைவரும் காலையிலேயே பீர் அடிக்க ஆரம்பித்து விட்டனர். சுவாரஸ்யமாக பேச்சு சென்று கொண்டிருந்தது. திடீரேன ஒரு நண்பர் கோபமாக கதத ஆரம்பித்தார். என்ன? என்று விசாரித்தோம். அவர் வயலுக்கு வாங்கிய மோட்டாரில் ஏதோ கோளாறு ஆகிவிட்டதாகவும், தன்னிடம் போய் அந்த கடைக்காரன் மட்டமான மோட்டாரை கொடுத்து விட்டானே? என புலம்பிக்கொண்டிருந்தார்.

நண்பர்கள் இருந்த போதையில் அது எப்படி உன்னை அவன் ஏமாற்றலாம்? என கோபம் கொண்டு, அந்த கடையில் சென்று கேட்கலாம் எனக் கிளம்பினார்கள். "நான் வரவில்லை" என நழுவப் பார்த்தேன். அதற்கு அனைவரும், " உலக்ஸ், சும்மா கேட்கத்தானே போறோம். வா" எனக் கூட்டிச் சென்றார்கள். நான் பொதுவாக இந்த மாதிரி விசயங்களுக்கு செல்வதில்லை. அதற்கு காரணம், அவர்களிடத்தில், அதாவது பிரச்சனை பண்ணுபவர்களிடம் பயம் என்று இல்லை. எனக்கு பயம் எல்லாம் என் அப்பாவிடம்தான்.

அப்பா அடிக்க மாட்டார். ஆனால் திட்டுவார். அவர் திட்டுவதைக் கேட்டால் பேசாமல் அவர் திட்டுவதற்கு பதில் இரண்டு அடி அடித்து விட்டால் பரவாயில்லை எனத்தோன்றும். வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் இருக்கும் அவர் திட்டுவது. இத்தனைக்கும் எந்த கெட்ட வார்த்தையும் பயன்படுத்த மாட்டார். இருந்தாலும் மனது வலிக்கும். அவர் திட்டிற்கு பயந்தே நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். தினமும் இரவு 9 மணிக்குள் வீட்டிற்கு வந்து சேர வேண்டும். இல்லையென்றால், தெரு முனையில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோபத்தில் நிற்பார். அப்போது எல்லாம் "என்ன இவர் வில்லன் போல் இருக்கிறாரே?" என மனதிற்குள் கோபப் படுவேன். ஆனால், அவ்வாறு திட்டுவதற்கு இன்று அவர் இல்லையே என ஏங்குகிறேன்.

சரி, சொல்ல வந்த விசயத்திற்கு வருகிறேன். பிறகு நானும் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர்களுடன் சென்றேன். ஆளுக்கு ஒரு வண்டியில் சென்றோம். எல்லோரும் அங்கே வண்டியில் போய் இறங்கியவுடன் அந்த காம்ளக்ஸே அதிர்ந்தது. நேரே அந்த கடைக்குப் போனோம். சாதாரணமாகத்தான் பேச்சு ஆரம்பித்தது. கடைக்காரர் ஒரு வெளியூர் வாசி. அவர் பொறுமையாக,

" நீங்க மோட்டாரை கொண்டு வாங்க சார். மாத்திக்கலாம்" என்றார்.

நண்பர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

"அது எப்படிடா, நீ குடுக்கும்போதே மட்டமானதா குடுக்கலாம்" என சண்டையிட ஆரம்பித்தார்கள். என்ன கொடுமை பாருங்கள்? அவர் வேறு மாற்றி தருகிறேன் என்கிறார். ஆனால், நண்பர்களோ அதை ஏற்கவில்லை. இப்படியே போன வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோசமான சண்டையாக மாறியது. எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. ஆனால், இடையில் நான் மட்டும் செல்ல முடியாது. நானும் ஒரு ஓரத்தில் அவர்கள் உடனே நின்று கொண்டிருந்தேன். எவ்வளவோ முயன்றும் என்னால் சண்டையை நிறுத்த முடியவில்லை. "பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்" என்று சொல்ல வடிவேலு போர் ஒருவர் அங்கு இல்லை.

திடீரென நண்பர் ஒருவர் அந்த கடைக்காரரின் சட்டையைப் பிடித்து ஓங்கி அடிக்க ஆரம்பித்தார். அவ்வளவுதான். நண்பர்கள் அனைவரும் அவரை துவைத்து எடுத்துவிட்டார்கள். என்னால் அதை தடுக்க முடியவில்லை. அவர் வாயெல்லாம் இரத்தம். பிறகு ஒரே கூட்டம் கூடிவிட்டது. அனைவரும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஊரில் நிறுத்தாமல் நேரே பக்கத்தில் உள்ள கிராமத்தில் என் நண்பரின் தோட்டத்தில் வண்டியை நிறுத்தினார்கள். அன்று இரவுவரை அங்கே இருந்தோம். காரணம் ஒரு வேளை அடிபட்ட அந்த நண்பர் போலிஸில் புகார் செய்தால் ஸ்டேசன் செல்வதை தவிர்க்கவே அந்த ஏற்பாடு.

ஒரு வழியாக இரவு ஊர் திரும்பினோம். நான் பயத்துடனேயே இருந்தேன். பயத்துக்கு காரணம் இரண்டு. ஒன்று அப்பா. இரண்டாவது காரணம் போலிஸ் கேஸ். ஊருக்கு வந்தால் எல்லாம் நார்மல். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவரவர் வீட்டிற்கு சென்றோம். அவருக்கு என்ன ஆயிற்று? என அடுத்த நாள் விசாரித்தேன். நாங்கள் அவர் போலிஸ் கேஸ் கொடுத்தால் என்ன செய்வது என்று நாங்கள் இரவு வரை ஒளிந்து இருந்தோம். அவரோ எங்களுக்குப் பயந்து கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு கடை உள்ளேயே காலை வரை இருந்திருக்கிறார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பிறகு ஏதாவது சந்தர்ப்பத்தில் அவரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மனதில் அவர் இரத்தக் காயத்துடன் நின்றது வந்து போகும். நான் அவரை அடிக்கவில்லை என்றாலும், நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன் என்பதே என்னை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும். வருடங்கள் உருண்டோடின.

சமீபத்தில் இந்தியா சென்ற போது என் இன்ஜினியர் நண்பருடன் ஒரு இடம் வாங்கும் விசயமாக சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு குரல்,

" என்ன இன்ஜினியர் சார், நல்லா இருக்கீங்களா?"

" ம்ம்ம். நல்லா இருக்கேன். நீங்க?"

" நல்லா இருக்கேன். எங்க இந்த பக்கம்?"

" என் நண்பர் இவர். மலேசியாவிலிருந்து வந்துருக்கார். இவருக்கு ஒரு இடம் பார்க்கிறோம்"

" எனக்குத் தெரியுமே இவரை. இவர் நண்பர்கள் எல்லாம் ரொம்ப சாதுவாச்சே" எனச் சொல்லி தன் கன்னங்களை தடவிக் கொண்டார் அந்த கடைக்காரர்.

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் இன்ஜினியர் நண்பருக்கு பழைய விசயம் எதுவும் தெரியாது. அப்போது எனக்கு ஏற்பட்ட மன வேதனைக்கு அளவே இல்லை. எப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன், எனத் தெரியவில்லை. யாரோ செய்த தவறுக்காக நான் அன்று கூனி குறுகி நின்றேன்.

ஏனோ, எனக்கு அவரிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றவில்லை!!!.

4 comments:

NO said...

அன்பான நண்பர் திரு உலகநாதன்,

உங்கள் பதிவுகளை நான் பல முறை படித்திருக்கிறேன்! இந்த பதிவையும் படித்தேன்! உங்கள் எழுத்துகளில் உள்ள Human content that too based on real life events நான் மற்ற எந்த பதிவர்களிடமும் பார்க்காதது! ஒன்றொன்றும் மிக அழகாக உங்களால் செதுக்கப்பட்டிருக்கிறது!

ஆனால் சந்தேகம் என்னவென்றால் ஒரு மனிதருக்கு இவ்வளவு விடயங்கள் நடந்திருக்குமா அல்லது நீங்களே பலவற்றை கற்பனையாக ஏற்றி விடுகிறீர்களா என்பதுதான்! Anyway that doesnt matter because,எதுவாக இருந்தாலும், உங்கள் எழுத்துகள் அதை சுவை படவே விவரிக்கின்றன!

வாழுத்துக்கள் and keep it up!

நன்றி

iniyavan said...

அன்பு நண்பர் No அவர்களுக்கு,

முதலில் உங்கள் வருகைக்கு என் இதயம் கனிந்த நன்றி.

எனக்கு நண்பர்கள் ரொம்ப அதிகம். இதை நான் பல முறை சொல்லி வருகிறேன். இந்த வலைப்பூவே என்னுடைய டைரி போல் ஆகிவிட்டது. நான் எழுதும் அத்தனை விசயங்களும் என் வாழ் நாட்களில் நடந்தவையே. இதில் எந்த பொய்யும் இல்லை. என் உண்மையான அனுபவங்களை மட்டுமே நான் இங்கே எழுதுகிறேன்.

"நான் சுவைப்பட எழுதிகிறேன்" - என்று நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'நான் ஏன் அப்படி இருந்தேன்???' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th November 2009 05:00:19 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/138299

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Beski said...

நல்லாயிருக்கு அனுபவப் பதிவு.

இப்போதெல்லாம் சொந்த சரக்கு கம்மியா இருக்கே?