எனக்கு நிறைய நண்பர்கள் என்று பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். இப்போது ஏன் மீண்டும் இங்கே சொல்கிறேன்? காரணம் இருக்கிறது. நண்பர்கள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்தே பார்க்க முடியாது. பெற்றோர்களுக்கு அடுத்து நண்பர்களால்தான் எனக்கு இந்த உலகம் புரிந்தது. நண்பர்களால்தான் நிறைய நல்ல விசயங்களையும், சில கெட்ட விசயங்களையும் கற்றுக் கொண்டேன். இது வரை எதிரிகள் என்று எனக்கு யாரும் கிடையாது. அப்படியே யாராவது எதிர்த்தாலும் அவர்களையும் என் சிறந்த நண்பர்களில் ஒருவராக ஆக்கிக்கொள்ளும் திறமை எனக்கு உண்டு.
நண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறோமே என்று ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாறும்போது நிறைய தடவை அழுது இருக்கிறேன். காலேஜ் படிக்கும் போது கூட ஒரு முறை என் நண்பன் MK ராஜ்குமார் +2 முடித்து இன்ஜினியரிங் காலேஜுக்கு ஹாஸ்டலுக்கு சென்ற அன்று இரவு இருவருமே கண்கலங்கினோம். ஆனால் இப்போது அவனை சந்தித்து பல வருடங்களாகிறது. ஆனாலும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். எல்லா ஊர்களிலும் இப்படிபட்ட நண்பர்கள் எனக்கு நிறைய இருக்கிறார்கள். எங்கள் ஊரில் ரொம்ப அதிகம். அனைவருமே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவர்கள், ஒரு சிலரைத் தவிர. எனக்கு அர்ஜுனனின் நண்பர் கண்ணனைவிட, துரியோதனன் நண்பன் கர்ணனை போன்றவர்களைத்தான் ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்தில் என்னைப் பார்க்கும் ஒரு சிலருக்கு என்னுடைய சில தனிப்பட்ட கொள்கைகளினால் என்னைப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பழக ஆரம்பித்த பிறகு என்னைவிட்டு விலகிச் சென்றவர்கள் எவருமில்லை. நட்புக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பவன் நான். ஒரே ஒரு விசயம் சொல்கிறேன். நான் +2 படித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன். அந்த பிரச்சனையின்போது அப்பா ஸ்பெசல் தாசில்தாராக திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தினமும் பாடிகார்டுடன்தான் ஜீப்பில் பள்ளி சென்று கொண்டிருந்தேன். பின்பு திருச்சியில் சித்தப்பா வீட்டிலிருந்து சில காலம் பள்ளி சென்று கொண்டிருந்தேன். ஏனென்றால் பிரச்சனையின் தீவிரம் அந்த மாதிரி. அன்று என்னைத் தேடிக்கொண்டிருந்தவர்கள் கையில் சிக்கியிருந்தால் இன்று இதை உங்களுக்காக எழுதிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் முடிவில் என்ன ஆனது தெரியுமா? அன்று என்னைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்று என் சிறந்த நண்பர்கள். எப்படி இது சாத்தியம்? எப்படி அவர்களால் எதிரியான என்னை நண்பராக பார்க்க முடிந்தது? அதுதான் நான்? எப்படி என்னால் முடிந்தது? அதன் சூட்சுமம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஒரு 100 USD டிமாண்ட் டிராப்டாகவோ, காசோலையாகவோ அனுப்பினால் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.
கடந்த 13 வருடங்களில் பல முறை இந்தியா சென்று வந்திருக்கிறேன். ஒரு சில பயணத்தைத் தவிர அனைத்து பயணங்களும் சந்தோசத்த தரக்கூடியதாகவே அமைந்தது. பெண் பார்க்க சென்றது, என் கல்யாணத்திற்கு சென்றது, என் மகள் பிறந்ததற்கு சென்றது, என் புது வீட்டு கிரஹபிரவேசத்திற்கு சென்றது என்று பல விதமான சந்தோசங்களுக்கு வித்திட்ட அந்த பயணங்கள் என்னால் மறக்க முடியாதது. ஒவ்வொரு முறை போகும்போதும் ஒவ்வொரு விதமான சந்தோச உணர்ச்சிகள், சந்தோச டென்ஷன்கள், ஒவ்வொரு விதமான மன நிலைகள் ஏற்படுவது வழக்கம்.
ஆனால் நான் இன்று இருக்கும் ஒரு பரப்பரப்பான மனநிலையை நான் என்றுமே அடைந்ததாக நினைவில்லை. ஆம். நாளை நான் இந்தியாவிற்கு செல்கிறேன். சென்னையில் ஒரு நாள் தங்கி திருச்சி செல்கிறேன். இதில் என்ன பரபரப்பு இருக்கிறது என்கின்றீர்களா? நான் இதுவரை நேரில் பார்க்காத நம் எழுத்துலகத்தைச் சேர்ந்த எனக்குப் பிடித்த சில நண்பர்களை நாளை சென்னையில் சந்திக்க இருக்கிறேன். திருப்பூரில் உள்ள ஒரு பிரபல பதிவரை சந்திக்கும் திட்டமும் உள்ளது. நண்பர்களின் எழுத்துக்களினால் மட்டுமே ஈர்க்கப்பட்டு அவர்களை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து நாளை காலை கோலாலம்பூரிலிருந்து சென்னை செல்கிறேன். அதீதமான சந்தோசத்தில் ஒரு வித படப்படப்புடன் இருக்கிறேன்.
நான் சந்திக்க போகும் அனைவரும் நான் மேலே குறிப்பிட்டுள்ள என் பால்ய காலத்து நண்பர்கள் போல் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் இந்த பயணம் எனக்கு ஒரு விதமான, விளங்கிக்கொள்ள முடியாத சந்தோசத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பால்ய நண்பர்கள் ஒரு விதம். ஆனால், பதிவுலக நண்பர்கள் அனைவரும் ஒரே விதமான அலைவரிசையில் பழகக் கூடியவர்கள். அதனால்தான் இந்த நட்பு கூடுதல் கவனம் பெறுகிறது.
நண்பர்கள் யாரும் என்னை அஜித் குமார் போலோ இல்லை கமல் போன்றா இருப்பேன் என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது என்பதற்காக என் போட்டோக்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
ஏன் இதையெல்லாம் இங்கே எழுதுகிறேன்? என்ன செய்வது? எல்லா நிகழ்வுகளையும் உங்களிடம் சொல்லாவிட்டால் என் தலையே வெடித்து விடும் போல் உள்ளது. சரி, நண்பர்களே அடுத்த 20 நாட்களுக்கு உங்களை இந்தியாவிலிருந்து சந்திக்கிறேன்.
புத்தாண்டு முடிவதற்குள் இன்னும் இரண்டு பதிவுகள் எழுத வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை முடியாமல் போனால், அதனால் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை இன்றே தெரிவித்துக் கொள்கிறேன்.