Dec 7, 2009

மீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா???

சிறு வயதில் என் நண்பரின் அப்பா ஒருவர் மிகப் பெரிய மீசை வைத்திருப்பார். பார்க்க கம்பீரமாக, அழகாக ஆனால் சற்று பயமாக இருக்கும். வீரப்பன் மீசை, என் நண்பர் நடிகர் நெப்போலியன் மீசை, பாரதியார் மீசை என எனக்குப் பிடித்த மீசைகள் பட்டியல் ஏராளம். எனக்கு அதனால் மீசையின் மீது ஒரு வித ஆசை இருந்து கொண்டே இருந்தது. எப்போது நாம் பெரியவன் ஆவோம்? எப்போது நமக்கு பெரிய மீசை வளரும்? என்று ஆவலாக கண்ணாடியை பார்த்துக் கொண்டே இருப்பேன். பத்தாவது படிக்கும் போது அந்த வயதில் தெரிந்து கொள்ளக் கூடாத பல விசயங்கள் தெரிய வந்தது. ஆனால், பாழாய் போன இந்த மீசை மட்டும் வளரவே இல்லை. மீசை அழகாக இருக்கும் பையன்களைத்தான் பெண்கள் சைட் அடிப்பார்கள் என்று பள்ளி நண்பர்கள் அனைவரும் வேறு சொல்லி பயமுறுத்தி வந்தார்கள். அதனால் எனக்கு அடிக்கடி அதைப் பற்றிய கவலை இருந்து கொண்டே இருந்தது.

பிறகு ஒரு வழியாக +2 படிக்கும் போது லேசாக மீசை அரும்ப ஆரம்பித்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அரும்பிய மீசைய அடிக்கடி கையால், முறுக்குவது போல் செய்து கொண்டே இருப்பேன். பார்க்கும் பெண்கள் எல்லாம் என் மீசையையே பார்ப்பதாக நினைத்துக் கொள்வேன். அப்போது நான் தலையில் ஸ்டெப் கட்டிங் வைத்திருந்தேன். நாம கொஞ்சம் தமிழ்நாட்டு கலரா இருந்ததால தினமும் எண்ணை வைத்து தலை சீவினால், அசிங்கமாக இருக்கும் என்று ஒரு நண்பன் சொன்னதால், அவன் அறிவுரைப்படி தினமும் தலைக்கு சோப்பு போட்டு குளிக்க ஆரம்பித்தேன். அதோடு இல்லாமல் பஸ் ஸ்டாண்டு போய், தலை முடிக்கு தினமும் ட்ரையர் போட்டு ஸ்டைலாக முடியை பறக்க விட்டு கொண்டுதான் பள்ளி செல்வது வழக்கம்.

தலையில் என்னை தடவ சொல்லி அப்பா என்னை தினமும் திட்டுவார். ஆனால் நான் கேட்டதில்லை. அப்பா தினமும் குளித்தவுடன் நன்றாக எண்ணை தடவி வழித்து தலையை வாரிக்கொண்டு போவார். நான் என்ன இது இப்படி எண்ணைத் தலையோடு போகிறாரே என்று நினைப்பேன். ஆனால், அவர் அந்த வயதில் இறக்கும் போது கூட தலை நிறைய முடி இருந்தது. எங்கள் பரம்பரையிலேயே தலை முடியை மிக விரைவாக தொலைத்தவன் நானாகத்தான் இருப்பேன்.

யாராவது, "என்ன மாப்பிள்ளை, இவ்வளவு சீக்கிரம் உனக்கு முடி போயிடுச்சு?" ன்னு, கேட்டா, " போனது ம...தானேடா. நானே கவலைப் படல, நீ ஏண்டா கவலைப்படற. அதுவுமில்லாம தலைக்கு வெளிய இருக்கறத பார்க்காதடா. தலை உள்ள இருக்கறத பாருடா" என்பேன். இன்னும் சில பேரிடம் வேறு விதமாக பதில் சொல்வேன்,

" டேய் உனக்குத் தெரியாது. தலையில் முடி இல்லாதவர்கள் தான் அந்த விசயத்தில்........"

இப்படியெல்லாம் பல காரணங்களை சொல்லி சமாளித்தாலும் மனதிற்குள் ஒரு வித ஏக்கம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏதோ சொல்ல ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கிறேன் பாருங்கள். இப்படி தலை முடி கொட்டி விட்டதால், குறைந்த பட்சம் நம் மீசையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என நினைத்து அதை தடவி தடவி பார்த்து வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனா, சமீபகாலமா என்ன பிரச்சனைனா, மீசையில் ஒரு சில வெள்ளை முடி தெரிய ஆரம்பித்து என்னை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. வெள்ளை முடி தெரிய ஆரம்பித்திருப்பதால், நான் ரொம்ப வயதானவன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். என்ன என்னோட வயசு, ஒரு.... அதிகமில்லை ஜெண்டில்மேன்... சரி, விடுங்க இந்த கட்டுரைக்கு அதுவா முக்கியம்???

சரி இந்த வெள்ளை முடிக்கு என்ன பண்ணலாம்? ஒரே யோசனை. டை அடிக்கலாம்னா யாரு அதை டெய்லி அடிக்கறது? இப்படி பல வகையில் சிந்தித்துக் கொண்டிருந்த நான் திடீரென ஒரு யோசனை தோன்ற அதை செயல்படுத்தலாமானு நினைச்சேன். வேற ஒண்ணுமில்லை. மீசையை அப்படியே எடுத்தா என்ன?

சிறு வயதில் ஒரு முறை ரஜினியின் மீசை இல்லாத ஒரு போட்டாவைப் பார்த்து எனக்கு அழுகையே வந்துவிட்டது. நடிகர்கள் என்றால் படத்தில் எப்படி இருப்பார்களோ அப்படியே நேரிலும் இருப்பாகள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. இப்படி அடுத்தவர்கள் மீசைக்கே அழுவும் நான், ஏன் மீசைய எடுக்க துணிந்தேன் என்று தெரியவில்லை.

சரி, ஒரு மாறுதலுக்காக எடுத்துவிடலாம் என நினைத்து வீட்டில் யாரிடமும் சொல்ல வில்லை. முதல் நாள் எடுக்க நினைத்தேன். என்னால் கொஞ்சமாக ட்ரிம் மட்டுமே செய்ய முடிந்தது. பிறகு அடுத்த நாள் இன்னும் கொஞ்சம். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஒரு வழியாக நேற்று முன் தினம் நெஞ்சம் படபடக்க மீசையை முழுவதுமாக எடுத்து விட்டேன். எடுத்து முடித்தவுடன் கண்ணாடியில் பார்க்கிறேன். எனக்கே என்னை பிடிக்கவில்லை. இனி ஒன்றும் செய்ய முடியாது. எடுத்தது எடுத்ததுதான்.

மாடியிலிருந்து கீழே வந்தால், என் பயன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறான். எதோ ஒரு விலங்கை பார்ப்பதைப் போல் பார்க்கிறான். என் பெண் என்னைப் பார்த்து சிரித்து விட்டு போகிறாள். வீட்டிலும் அதே நிலைதான். நேற்று டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மீசையில்லமல் இருந்த நடிகர் விஜய்யை என் பெண்ணிடம் காட்டி,

" இங்க பாருடா. அவர் கூடத்தான் மீசை இல்லாமல் இருக்கார்?" என்றேன்.

உடனே என் பெண் இப்படிக் கூறினாள்,

" ஆமாம் டாடி. உண்மைதான். ஆனா அவருக்கு நல்லா இருக்கு இல்லை"

நான் பதில் சொல்ல வில்லை. ஆனால் கம்பனியில் எல்லோரும் நல்லா இருப்பதாகவே கூறுகிறார்கள். ஒரு வேளை நான் மனம் வருத்தமடையக்கூடாது என்று அவர்கள் கூறி இருக்கலாம். என் பையனுக்காகவாவது மீண்டும் மீசையை வளர்க்க வேண்டும் போல் உள்ளது.

பெரியார் ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது,

" வெங்காயம். எதுக்காக மொட்டை அடிக்கிறானுங்க. சாமி மேல உள்ள பக்தியினாலா. இல்லை. இல்லை. எப்படி இருந்தாலும் திரும்பவும் வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான். திரும்ப வளராதுனு சொல்லிப் பாருங்க. ஒரு பய மொட்டை அடிக்க மாட்டான்"

ஆமாம். எனக்கும் மீசை திரும்ப வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் அப்படியே இருக்க வேண்டியதுதான்.

24 comments:

கோவி.கண்ணன் said...

//என்ன என்னோட வயசு, ஒரு.... அதிகமில்லை ஜெண்டில்மேன்... சரி, விடுங்க இந்த கட்டுரைக்கு அதுவா முக்கியம்???//

அஜித் வயசுதான்னு சொல்லி வைங்க. யூத்தாக நினைக்க வைக்கும்.
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

pl.visit

http://tvrk.blogspot.com/2008/06/blog-post_10.html

iniyavan said...

//அஜித் வயசுதான்னு சொல்லி வைங்க. யூத்தாக நினைக்க வைக்கும்.
:)//

வருகைக்கு நன்றி கோவி சார்.

iniyavan said...

//pl.visit

http://tvrk.blogspot.com/2008/06/blog-post_10.html//

உங்கள் பதிவைப் பார்த்தேன் டிவிஆர் சார். ஆனால் எதற்காக என்னை அந்தப் பதிவை பார்க்க சொன்னீர்கள்?

anujanya said...

நல்ல சுவாரஸ்யம். வயதானால் இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் வந்து தொலைக்குமா?

பெரியார் சொன்னது அட்டகாசம். எனக்கென்னவோ உண்மைன்னு தான் தோணுது :)

அனுஜன்யா

Jawahar said...

உங்க விசாலமான நெற்றி புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. பளிச் கண்கள் சுறுசுறுப்பைக் காட்டுது. இது மாதிரி ஆட்கள் மீசை இருந்தாலும் இல்லாவிட்டாலும் களையாத்தான் இருப்பாங்க. உங்க ஆபீஸ்காரங்க சொல்றது சரிதான்.

http://kgjawarlal.wordpress.com

அப்பாவி முரு said...

//ஆனால் கம்பனியில் எல்லோரும் நல்லா இருப்பதாகவே கூறுகிறார்கள்.//

இப்பிடி சொல்லிச் சொல்லிதான் உடம்பயே ரணகளமாக்கீட்டாங்க.

(நான் மீசையை இழந்து ஆறு வருசமாச்சு)

பின்னோக்கி said...

மீசையில இவ்வளவு மேட்டர் இருக்கா. நல்லாயிருக்கு.

Romeoboy said...

உங்கள் எழுத்துகளில் ஒரு வித கவர்ச்சி உள்ளது தல. உங்கள் எழுத்துகள் சாருவின் எழுத்து நடை போன்று இருக்கிறது,

மீசை இல்லாத போட்டோ போடுங்க எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுறேன் .

ஹேமா said...

இதெல்லாம் பெரிய பிரச்சனையா.
விடுங்க.வளர்ந்திடும்.மீசை இருந்தால் ஒரு கம்பீரம்தான்.

iniyavan said...

//நல்ல சுவாரஸ்யம். வயதானால் இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் வந்து தொலைக்குமா?

பெரியார் சொன்னது அட்டகாசம். எனக்கென்னவோ உண்மைன்னு தான் தோணுது :)

அனுஜன்யா//

தங்கள் வருகைக்கு நன்றி அனுஜன்யா சார்.

iniyavan said...

//உங்க விசாலமான நெற்றி புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. பளிச் கண்கள் சுறுசுறுப்பைக் காட்டுது. இது மாதிரி ஆட்கள் மீசை இருந்தாலும் இல்லாவிட்டாலும் களையாத்தான் இருப்பாங்க//

கொஞ்சம் ஓவரா இருக்கு நண்பா!.

வருகைக்கு நன்றி ஜவஹர்

iniyavan said...

//இப்பிடி சொல்லிச் சொல்லிதான் உடம்பயே ரணகளமாக்கீட்டாங்க.

(நான் மீசையை இழந்து ஆறு வருசமாச்சு)//

முரு,

நன்றி.

உங்கள் பல பதிவுகளில் பல முறை பின்னூட்டமிட்டும் ஒன்றுமே போஸ்ட் ஆகவில்லை. ஏன் என காரணம் தெரியவில்லை.

தெரிந்தால் சொல்லவும்.

iniyavan said...

//மீசையில இவ்வளவு மேட்டர் இருக்கா. நல்லாயிருக்கு.//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பின்னோக்கி.

iniyavan said...

//உங்கள் எழுத்துகளில் ஒரு வித கவர்ச்சி உள்ளது தல. உங்கள் எழுத்துகள் சாருவின் எழுத்து நடை போன்று இருக்கிறது, //

ரொம்ப நன்றி நண்பா! ஆனா அவ்வளவு பெரிய தலையுடன் நானா????

iniyavan said...

//மீசை இல்லாத போட்டோ போடுங்க எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுறேன் .//

ஐய்யா ரோமியோ,

இதானே வேணாங்கறது. ஏன் நீங்களும் என்னை கிண்டல் பண்ணவா???

iniyavan said...

//இதெல்லாம் பெரிய பிரச்சனையா.
விடுங்க.வளர்ந்திடும்.//

ரொம்ப நன்றி ஹேமா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உங்கள் பதிவைப் பார்த்தேன் டிவிஆர் சார். ஆனால் எதற்காக என்னை அந்தப் பதிவை பார்க்க சொன்னீர்கள்//

சும்மாதான்..அப்பவாவது நம்ம கடைப்பக்கம் வருவீங்கன்னுதான்

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா???' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th December 2009 10:56:03 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/149032

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

iniyavan said...

//சும்மாதான்..அப்பவாவது நம்ம கடைப்பக்கம் வருவீங்கன்னுதான்//

டிவிஆர் சார்,

நான் ரெகுலராக உங்க பதிவைப் படிக்கறவன் சார். என்ன ஒன்னு பின்னூட்டமிடுறது இல்ல, அவ்வளவுதான்.

தமிழ் உதயம் said...

எல்லாவற்றுக்கும் மனசு தான் காரணம். முடி, மீசை எல்லாம் அலங்காரம். அதை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் நம்மை பார்ப்பவர்கள் ஒரே மாதிரியாக தான் பார்ப்பார்கள். இதனால் ஒரு நன்மை உண்டு. அது... முடி, மீசையை வைத்து ஒரு இடுகை போட முடிகிறதே.

Chitra said...

ஒரு மீசைக்குள் இத்தனை feelingsaa......?!
நல்லா மனசை மீசை மூலமா கொட்டிட்டீங்க... அருமை.

iniyavan said...

//எல்லாவற்றுக்கும் மனசு தான் காரணம். முடி, மீசை எல்லாம் அலங்காரம். அதை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் நம்மை பார்ப்பவர்கள் ஒரே மாதிரியாக தான் பார்ப்பார்கள். இதனால் ஒரு நன்மை உண்டு. அது... முடி, மீசையை வைத்து ஒரு இடுகை போட முடிகிறதே.//

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி தமிழ் உதயம்.

iniyavan said...

//ஒரு மீசைக்குள் இத்தனை feelingsaa......?!
நல்லா மனசை மீசை மூலமா கொட்டிட்டீங்க... அருமை.//

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சித்ரா.