Dec 21, 2009

பசி!

நேற்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "பசித்த மழை" கட்டுரையை படித்தேன். படித்து முடித்தவுடன் ஏதும் செய்ய முடியாத ஒரு நிலையில் சுமார் ஒரு மணி நேரம் அந்த கட்டுரையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் பசியை பற்றியும், மழையைப் பற்றியும் எழுதியிருந்தார். பசியின்போது ஏற்படும் உணர்வுகளைப் பற்றி அவர் எழுதி இருந்தது என்னை வெகுவாக பாதித்து விட்டது. இன்றும் எத்தனையோ நபர்கள் பசிக் கொடுமையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் திருச்சியில் வேலை பார்த்த போது என் ஆபிஸ் அருகில் ஒரு ரூமில் நண்பர் ஒருவர் இருந்தார். அவருடைய ரூம் மிகச் சிறியது. நாலடிக்கு நாலடி. அதில்தான் அவர் வாழ்ந்தார். அவருக்கு என்று யாரும் இல்லை. சில கம்பனிகளின் கணக்குகளை அவர் எழுதிக் கொடுப்பார். அப்போது கம்ப்யூட்டர் வர ஆரம்பித்த சமயம். அவருக்கு வரும் வேலைகள் குறைந்தன. அவர் ரூமில் சில சமயம் சமைப்பார். அவர் காலையில் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. ஒரு வேளைதான் சாப்பிடுவார். நான் மதியம் சாப்பிட அழைத்தாலும் வர மாட்டார். அவரைப் பார்க்கும் போது எல்லாம் வேதனையாக இருக்கும். அப்பொழுதே அவருக்கு 35 வயதுக்கு மேல். கல்யாணத்தைப் பற்றி பேசினால், ஒரு சிறிய சிரிப்பு சிரிப்பார். அது ஆயிரம் அர்த்தங்களை சொல்லும். இப்படி பல பேர் சாப்பிட வழியில்லாத நிலையில் இருந்ததை பார்த்திருக்கிறேன். நான் அப்போது எல்லாம் ஓரளவு வாழ்க்கையில் தெளிவடைந்திருந்தேன்.

ஆனால் சிறு வயதில், நிறைய தவறுகள் செய்தது நினைவுக்கு வருகிறது. நாங்கள் ஏழையும் இல்லை. ஆனால், பணக்காரர்களும் இல்லை. இரண்டுக்கும் நடுவில். என்னுடைய பார்வையில் இரண்டு விதமான நபர்கள்தான் வாழ்க்கையில் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்கள் பின்னாளில் பணக்காரர் ஆகிறார்கள் அல்லது பணக்காரர்கள் ஆக பிறந்தவர்கள் கடைசிவரை பணக்காரர்களாகவே வாழ்கிறார்கள். இந்த நடுத்தர வர்க்கம், கடைசி வரை அப்படியே இருந்து சாக வேண்டியதுதான். நான் அந்த வகையில் வந்தவன். என் நண்பர்களிடம் நான் அடிக்கடி இப்படி சொல்வேன், " இன்று சென்னையில் பணக்காரர்களாக இருக்கும் அனைவரும் ஒரு காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கெ கஷ்டப்பட்டவர்கள் தான். நாம் அந்த அளவிற்கு கஷ்டப்படாததால் நாம் எங்கே அவர்கள் போல் ஆவது?" ஆனால் நான் சொன்னது ஓரளவுதான் உண்மை என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு போராடுபவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறு வயதில் ஒரளவு கஷ்டப்பட்ட போதெல்லாம் அந்த குடும்ப கஷ்டங்களை நான் உணர்ந்ததே இல்லை. பல முறை சாப்பாடு சரியில்லை என்று சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்திருக்கிறேன். அப்போது எல்லாம் என்னை அம்மா என் மேல் உள்ள பாசத்தால் அடித்தில்லை. அது தவறு என்பதை இப்போது உணர்கிறேன். பல முறை ஹோட்டல் சாப்பாடு மோகத்தால் வீட்டு சாப்பாடு சரியில்லை என்று கத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் என்னிடம் மட்டும் காசு கொடுத்து ஹோட்டலில் சாப்பிட்டு வரச்சொல்வார்கள். மதிய வேளையில் ஹோட்டலில் இருந்து பஜ்ஜி வாங்கி வந்து யாருக்கும் கொடுக்காமல், அனைவரையும் பார்க்க வைத்துக்கொண்டு நான் மட்டும் சாப்பிட்டு இருக்கிறேன். எவ்வளவு காய்கறிகள் வீட்டில் செய்து இருந்தாலும், வீட்டில் அக்கா, தங்கை, தம்பிகள் இருக்கிறார்களே? அவர்களுக்கும் வேண்டுமே என்கிற கவலையில்லாமல் முதலில் நான் மட்டும் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் பல நாட்கள் காய்கறிகள் இல்லாமல் வெறும் ஊறுகாயுடன் சாப்பிடுவதை பல நாட்கள் கண்டும் காணாமல் போயிருக்கிறேன். அதெல்லாம் தவறு என்று இப்போது உணர்கிறேன். இப்போது உணர்ந்து என்ன பயன்? கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் எதற்கு? என் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் என் மேல் அப்போது எவ்வளவு கோபத்தில் இருந்து இருப்பார்கள்?

ஹோட்டல் சாப்பாடு என்று மட்டும் இல்லாமல் வீட்டிலும் நிறைய சாப்பிடுவேன். காலையில் குறைந்தது ஆறு இட்லி சாப்பிடுவேன். பிறகு மதியம் காலேஜில் டிபன் பாக்ஸில் உள்ள லெமன் சாதத்தையும் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்று தக்காளி சாதமும் மசாலாவுடன் முட்டையும் சாப்பிடுவேன். மாலை பள்ளி, கல்லூரி விட்டு வந்தவுடன், மிலிட்டரி ஹோட்டலுக்கு சென்று மூன்று புரோட்டா, ஒரு ஆம்லட், ஒரு ஸ்பெஷல் தோசை மற்றும் நறுக்கிய வெங்காயம் சாப்பிடுவேன். இரவு இரண்டு முறை குழம்பு ஊற்றி சாதம், ஒரு முறை ரசம் அப்புறம் தயிர் சாதம் இரண்டு காய்கறி அப்பளத்துடன் சாப்பிடுவேன். சாப்பிடுவதற்காகவே வாழ்ந்திருக்கிறேன் என்று இப்போது தெரிகிறது.

நான் அவ்வாறு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் எத்தனையோ பேர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினியாக இருந்திருக்கக் கூடும். அதுவெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது வருந்துகிறேன். மற்றவர்கள் பட்டினியால் இருக்கும்போது நாம் மட்டும் நிறைய சாப்பிட்டு வாழ்வது என்ன நியாயம்?

பசியின் கொடுமையை அறிந்த பிறகு என்னை நான் மாற்றிக் கொண்டேன். அப்பா 45 வருடம் திங்கட் கிழமை விரதம் இருந்தார். அதாவது முதல் இரவு சாப்பிட்டால், பிறகு அடுத்த நாள் இரவுதான் சாப்பிடுவார். நடுவில் வெறும் காபிதான். மிகக் கடுமையாக இருப்பார். அவர் இருந்ததால் நானும் திங்கட் கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தேன். 13 வருடங்கள் இருந்தேன். அப்பா இறந்த அன்று வெறுப்பில் அதனை விட்டு விட்டேன். முதல் நாள் இரவிற்கு பிறகு அடுத்த நாள் இரவு வரும் வரை சாப்பிடாமல் இருப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. தீபாவளி, பொங்கல் திங்கள் அன்று வந்தால் கூட எதுவும் சாப்பிட மாட்டேன். இரவு எப்போது வரும் என்று காத்திருப்பேன். பசி என்றால் என்ன? என்பதை அபோதுதான் உணர்ந்தேன்.

ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு எந்த நோயும் இல்லை. இருந்தாலும் நான் இப்போது சாப்பாட்டை வெகுவாக குறைத்து விட்டேன். எதையும் வீணாக்குவதில்லை. ஒரு பருக்கை கீழே விழுந்தாலும் எடுத்து சாப்பிடுவேன். பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கிறேன். மதியம் ஒரு வேளைதான் முழுச் சாப்பாடு. காலையும், இரவும் கால் அளவு சாப்பாடுதான். நடுவில் காபி, டீ தவிர எதுவும் சாப்பிடுவதில்லை. முன்பு அதிகமாக சாப்பிட்டதை சரி செய்யவே இப்படி பழகிபோனேன். இன்றும் எங்காவது ஒரு மூலையில் யாராவது சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படலாம். அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக என் சாப்பாட்டை குறைத்துக் கொண்டேன். நான் குறைத்தால் அவர்களுக்கு எப்படி சாப்பாடு கிடைக்கும் என்று கேள்வி கேட்கக் கூடாது. கிடைக்கும். இதை ஒரு தவமாகவே செய்கிறேன்.

அவர்களுக்காக மீண்டும் விரதம் இருக்கலாம் என முடிவு எடுத்துள்ளேன். நேரம் கிடைத்தால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'பசித்த மழை' கட்டுரையை நீங்களும் படியுங்கள். ஒரு வேளை நீங்களும் அவ்வாறு முடிவு எடுக்கக்கூடும்.

14 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

ப‌சியைப் ப‌ற்றி வேறு கோண‌த்தில் சிந்த்திருக்கிறீர்க‌ள்

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

இணையத்தில் சுட்டி இருந்தால் தரலாமே,பசித்த மழை'க்கு...

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

{பசியின் கொடுமையை அறிந்த பிறகு என்னை நான் மாற்றிக் கொண்டேன். அப்பா 45 வருடம் திங்கட் கிழமை விரதம் இருந்தார். அதாவது முதல் இரவு சாப்பிட்டால், பிறகு அடுத்த நாள் இரவுதான் சாப்பிடுவார்.}

பெரியவர்கள் இருந்த விரதங்களில் ஒரு அர்த்தம் இருக்கிறது.
என் ஐயாவும் திங்கள் விரதம் இருப்பார்;அதாவது காலை மற்றும் மதியம்..அதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..

முடிந்த அளவு திங்கள் மாலை யாராவது வறியவர்களுக்கு முழு இலையில் சாப்பாடு அளித்துவிட்டுத்தான் விரதம் விடுவார்..

பரிசல்காரன் said...

அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் சார்...

சுட்டிக்கு நன்றி!

iniyavan said...

From: writerramki@gmail.com
To: ulaks@hotmail.comஅன்பு உலகநாதன்

உங்கள் கட்டுரையை படித்தேன், மிக வெளிப்படையாகவும் நன்றாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

எஸ்ரா

iniyavan said...

//ப‌சியைப் ப‌ற்றி வேறு கோண‌த்தில் சிந்த்திருக்கிறீர்க‌ள்//

உங்கள் வருகைக்கு நன்றி கரிசல்.

iniyavan said...

//இணையத்தில் சுட்டி இருந்தால் தரலாமே,பசித்த மழை'க்கு...//

சுட்டி கொடுத்திருக்கிறேன்.

iniyavan said...

//முடிந்த அளவு திங்கள் மாலை யாராவது வறியவர்களுக்கு முழு இலையில் சாப்பாடு அளித்துவிட்டுத்தான் விரதம் விடுவார்..//

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அறிவன்.

iniyavan said...

//அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் சார்...

சுட்டிக்கு நன்றி!//

வருகைக்கு நன்றி பரிசல்.

iniyavan said...

//அன்பு உலகநாதன்

உங்கள் கட்டுரையை படித்தேன், மிக வெளிப்படையாகவும் நன்றாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

எஸ்ரா//

தங்களின் வருகைக்கும், என்னை மனம் திறந்து பாராட்டி மெயில் அனுப்பியதற்கும் என் இதயம் கனிந்த நன்றி எஸ்.ராமகிருஷ்ணன் சார்.

iniyavan said...

இந்த பதிவிற்கு கூட மைனஸ் ஓட்டு போட்ட அந்த இரண்டு புன்ணியவான்களும் நீடுடி வாழ எல்லாம் வல்ல என் ஏழு மலையானை பிரார்த்திக்கிறேன்.

Romeoboy said...

தலைவரே செம சாப்பாடு ராமன இருந்து இருக்கீங்க போல. பசியின் கொடுமையை நான் நிறைய தடவை அனுபவித்து இருக்கிறேன்.

iniyavan said...

//தலைவரே செம சாப்பாடு ராமன இருந்து இருக்கீங்க போல.//

ரோமியோ,

அதை நினைத்து வருத்தப்பட்டுத்தான் இந்த பதிவே!

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'பசி!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st December 2009 08:40:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/156935

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.