Jan 29, 2010

சகியே!

மூளையில் சேகரித்து
வைத்திருந்த நினைவுகளிலிருந்து
ஒன்றை எடுத்து சரி பார்த்தேன்.

நான் எப்போதிலிருந்து
கவிதை என்ற ஒன்றை
எழுத ஆரம்பித்தேன்?

ஆம் சகியே!
உன்னைப் பார்த்ததிலிருந்துதான்
நான் எழுதிய முதல் கவிதையே
உன்னைப் பற்றித்தான்.

எப்படி இருக்கிறது
என்றதற்கு
'கிறுக்கல்கள்' என்று சொல்லி
நகர்ந்து போனாய்.

கவிதையைப் பற்றி
கவிதை எழுதினால்
எப்படி கிறுக்கலாகும்
என நினைத்து குழம்பிப் போனேன்.

பின்பு நான் எழுதிய
அனைத்தையும் கிறுக்கல்கள்
என்றாய், ஏன் என்னையே
கிறுக்கன் என்றாய்.

காலத்தின் கட்டாயத்தினால்
நான் உன்னிடம் எழுதிய
முதல் கிறுக்கலை
பத்து மாதத்திற்கு
பிறகு 'நீ எழுதிய அழகிய
கவிதை இது' என்கிறாய்.

இங்கே
கவிதை கிறுக்கல்கள் ஆனதும்
என் கிறுக்கல் கவிதை ஆனதையும்
நினைத்து
வியந்து போய் நிற்கிறேன்
நான்!!!

Jan 28, 2010

குற்ற உணர்வு!

சூடாகிப் போன உடம்பால்
அடக்க முடியாத
தருணங்களில்
சலிப்பான நிமிடங்களில்
வெறுப்பான உணர்வுகளால்
கோபம்
எப்போதும் குழந்தை
மேல்தான்

சனியன்!
சீக்கிரம் தூங்காதா
நம் ஆசை தீராதா
கடுப்பில் திட்டிவிட்டு
மெல்ல நகர்ந்து
அவள் அருகே
தூங்கி விடுகிறேன்.

சில சமயம்
எல்லாம் முடிந்து
சலித்துப்
படுக்கையில்
குழந்தையின்
அழகான அமைதியான
தூங்கும் முகம்
கண்டு
நொந்து நூலாகி
அந்த கணத்தை நினைத்து
குழந்தையை சனியன்
என்றதற்காக
வெட்கி தலை
குனிகிறேன்
இனி அவ்வாறு
நடந்துக் கொள்ளக்கூடாது
என்று தீர்மானிக்கிறேன்.

அடுத்த நாள் இரவு,
சனியன்,
சீக்கிரம் தூங்காதா...
.....

கடைசியில் என்
தீர்மானம் என்னவோ
பிரசவ
வைராக்கியம் போல்
ஆகிவிட்டது.

Jan 25, 2010

ஆத்ம திருப்தி - சிறுகதை

அப்பா மேல் ஆத்திரமாக வந்தது. அவருக்கு என்ன குறைச்சல் இந்த வீட்டில்? ஏன் வீட்டை விட்டு தனியே போகிறேன் என்கிறார்? புரியாமல் தவித்தான் ரவி.
“கீதா, உனக்கு ஏதாச்சும் தெரியுமா? ஏன் அப்பா இப்படி சொல்லறார்? நீ ஏதாவது சொன்னியா? கோபமா ஏதாவது பேசினியா?.”

“இல்லைங்க. நான் எதுக்குங்க அப்பாட்ட கோபமா பேசப்போறேன்!”

“பின்ன எதுக்காக அப்பா வீட்டை விட்டு போறேன்னு சொல்லிட்டே இருக்கார்? . ஒரு வேளை, பசங்க ஏதாச்சும் சொல்லியிருப்பாங்களா? கீதா, அருணையும் , ரேவதியையும் கூப்பிடு”

" இதோ கூப்பிடுறேங்க என்றவள், விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளை கூப்பிட்டாள்.

இருவரிடமும் விசாரித்தான் ரவி. பிள்ளைகள் இருவருமே ஒரே பதிலைச் சொன்னார்கள்,

"நாங்கள் இருவரும் தாத்தாவுடன் விளையாடிகொண்டுதான் இருக்கோம். தாத்தாதான் எங்களுக்கு ஹோம் ஒர்க் எல்லாம் சொல்லித்தருகிறார். எங்களுக்கு தாத்தான்னா ரொம்ப பிடிக்கும்" என்றன குழந்தைகள்.

தானும் அப்பாவிடம் ஒன்றும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. அவருக்கு எல்லா வசதிகளும் இந்த வீட்டில் இருக்கும்போது, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார். "எதற்கும் அப்பாவிடம் நாளை காலை இன்னொரு முறை பேசிப் பார்க்க வேண்டியதுதான்" என்று நினைத்து தூங்கப் போனான். ஆனால், நடந்தது என்ன? கீதா, ரவியைக் கட்டிப்பிடித்து, நிம்மதியாக தூங்கினாள். ஆனால், ரவிக்குத்தான் தூக்கம் போனது. யோசித்து கொண்டே வந்தவனுக்கு அப்போதுதான் டீக்கடை அருகே வந்துவிட்டதை கவனித்தான்.

ஒரு டீயை ஆர்டர் செய்தவன் மறுபடி யோசிக்க ஆரம்பித்தான். அப்பா ஏன் அந்த ஒரு முடிவு எடுத்தார்? நாம் என்ன குறை வைத்தோம்? ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டு தானே இருக்கோம். கீதாவும், பார்த்து பார்த்து அல்லவா, அப்பாவை கவனிக்கிறாள். பின் ஏன் தனியே போக வேண்டும் என்கிறார்? இவ்வாறு பலவாறு சிந்திக்கையில், டீயை நீட்டினார் கடைக்காரர். டீ மிகுந்த சுவையாக இருந்ததை உணர்ந்தான். ஒரு வேளை அவன் மனம் தெளிவானதை அது உணர்த்தியதோ? ஒரு தெளிவான முடிவுடன், அப்பாவை எப்படியும் வீட்டை விட்டு அனுப்பக் கூடாது என்ற வைராக்கியத்துடன் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டின் கதவைத் திறந்தான். அதற்குள், கீதா குளித்து முடித்து, சாமி கும்பிட்டு, அழகான புடவையில் மங்களகரமாக இருந்தாள். அதுதான் கீதா என சந்தோசப்பட்டான்.

" அப்பா எங்க கீதா?"

" ரூம்ல தாங்க இருக்கார்"

அப்பாவின் அறைக்குள் நுழைந்தான் ரவி.

"வாப்பா ரவி. என்ன நான் சொன்னத யோசிச்சியா?" - அவனுக்கு முன் அவர் விசயத்தை ஆரம்பித்தார்.

" அது சம்பந்தமா தான் பேச வந்துருக்கேன்ப்பா. என்ன காரணத்தினால வீட்ட விட்டு தனியா போறேன்னு சொல்லறீங்க. தயவு செய்து சொல்லுங்கப்பா"

"எத்தனை தடவை சொல்லறதுப்பா. எனக்கு யார் மேலேயும் கோபம் இல்லை. நான் சந்தோசமாத்தான் இந்த முடிவ எடுத்துருக்கேன். தயவு செய்து என்னை என் வழியில் விடு" என்று தீர்மானமாக கூறிய அப்பாவை ஆச்சர்யத்துடன் பார்த்தான் ரவி.

என்ன என்னவோ பேச வந்தவன், அவர் சற்று கடுமையாக தன் முடிவில் உறுதியாக இருக்கவே, எப்போதும் போல் மவுனமானான். அவனுக்குத் தெரியும், அவர் ஒரு முடிவு எடுத்து விட்டால் யாராலும் மாற்ற முடியாது. ஏன் அவராலேயும் கூட. அதன் பிறகு பேசி பிரயோசனம் இல்லை என முடிவு எடுத்து அதற்குரிய முயற்சியில் இறங்கினான்.

சரியாக ஒரு மாதத்தில் அவர் கூறியபடி ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் அவரை சேர்த்தான். வாராவாரம் அவரை அவனும் மனைவியும் பிள்ளைகளுடன் சென்று பார்ப்பதாக ஏற்பாடு. அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய சொல்லி அதன் பொறுப்பாளரிடம் கூறினான். தேவையான பணத்தை கொடுத்தான். அவன் அப்பா ராகவன் முகத்தில் என்றும் இல்லாத மகிழ்ச்சி. ஆனால் இவன் முகமோ இறுகி இருந்தது.

ரவி அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு தன் மணி பர்ஸிலிருந்து தன் தந்தையின் போட்டோவை எடுத்த ராகவன், கண்ணில் கரகரவென்று கண்ணீரோடு, “அப்பா, என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்களுக்கு செஞ்ச அந்த பாவத்திற்கு பிரயாசித்தமாக நானும் நீங்கள் பட்ட கஷ்டத்தை அனுபவிக்க முடிவு எடுத்து விட்டேன். என் பையன் என்னைப்போல இல்லாவிட்டாலும், பிள்ளையையும், பேரக்குழந்தைகளையும் பிரிந்து நீங்கள் பட்ட வேதனையை நானும் அனுபவிப்பதாக முடிவெடுத்து விட்டேன்” என்று அழுது போட்டோவை கண்ணில் ஒத்திக்கொண்டார்.

இதை தெரியாத ரவி, " நாம் என்ன அப்பாவுக்கு குறை வைத்தோம்" என்று மன வருத்ததுடனே தன் வீட்டை நோக்கி கிளம்பினான்.

Jan 22, 2010

மிக்ஸர் - 22.01.10

இந்த முறை விடுமுறை முடிந்து மலேசியாவிற்கு கிளம்பிவதற்கு முதல் நாள் நண்பர்களின் வற்புறுத்தலின் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பார்க்கச் சென்றேன். பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி கலையரங்கத்தில் படம் பார்த்தேன். தியேட்டர் முன்பு போல் இல்லை. எங்கு திரும்பினாலும் ஒரே அழுக்காக இருக்கிறது. தியேட்டரில் மெயிண்டனன்ஸ் போதவில்லை. படம் ஆரம்பித்தவுடன் ஒரே விசில் சத்தம். பல வருடங்களுக்கு அப்புறம் தியேட்டரில் ரசிகர்களின் சத்தங்களுக்கிடையே படம் பார்த்தது என் கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்தியது. பலவிதமான நிகழ்வுகள் வந்து போயின. கதையையும், திரைக்கதையையும், லாஜிக்கையும் விட்டு விட்டு பார்த்தால் படம் மிக பிரமாண்டம். எல்லோரும் ரீமா சென்னின் நடிப்பைப் பற்றி எழுதி விட்டார்கள். அவர் குரலில் இருந்த கவர்ச்சிதான் என்னை கட்டிப்போட்டு விட்டது. யாருடைய குரல் என்று தெரியவில்லை. அது ஒரு மாதிரியான வசீகரம். சில வசனங்கள் 'ஏ' ரகம் தான். அதனால், குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது. இந்த வரியைச் சொல்லும் போது ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது. காலேஜ் படிக்கும் போது யாராவது இப்படி சொன்னால், உடனே நான், " ஏன் குடும்பத்தோட சினிமாவுக்கு போறீங்க. தனித் தனியா போய் பாருங்க" என்று கிண்டல் அடிப்பேன். அது போல இந்தப் படத்தையும் தனித் தனியா பாருங்கள். படத்தின் இடைவேளையில் இரு நண்பர்களின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.

" மாப்பிள்ளை என்னமா படத்தை எடுத்துருக்கார் செல்வா?"

" நீ எதைச் சொல்ற?"

" படத்துல உள்ள சீன்களடா!"

" ரீமா சென்னைத்தானே? சூப்பாரா காமிச்சிருக்காரு"

" நான் அதைச் சொல்லடா. பழைய காலத்தை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துருக்கார் பாரு"

" அப்படியா, எனக்கு ஒண்ணும் அப்படித் தெரியலையே?"

" அதெல்லாம் ஹிஸ்ட்ரி தெரிஞ்சவங்களாலத்தான் படத்தை ரசிக்க முடியும்"

" அப்படியா, எனக்கு ஜியாக்ரபிதான் தெரியும்"

அடிக்க ஓடுகிறார் நண்பர்.

இந்த ஜோக்கையும், லாஜிக்கையும் விட்டுத் தள்ளுங்கள். படத்தை ஒரு தடவை தனித் தனியாக (குடும்பத்தோடு அல்ல) சென்று பார்க்கலாம் செல்வாவின் உழைப்பிற்காக!!

***************************************

எங்கள் உறவினர் ஒருவருக்கு வித்தியாசமான பிரச்சனை. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று டாக்டரிடம் சென்று இருக்கிறார். அவருடைய இரத்த அழுத்தத்தை சோதித்த டாக்டருக்கு ஒரே ஆச்சர்யம். அவருடைய இடது கையில் இரத்த அழுத்தம் சரியாக உள்ளது. ஆனால், அவருடைய வலது கையில் தறுமாறாக உள்ளது. டாக்டர் உடனே, " என்ன இது. உங்கள் அம்மாவிற்கும் இப்படி உள்ளது. உனக்கும் இப்படி உள்ளது. உடம்பு சரியானவுடன் வா, உன்னை முழுவதும் பரிசோதிக்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இவர் பயந்து கொண்டு இன்னும் செல்ல வில்லை. அதற்கு முன் என்னிடம், "நீ உன் வலைப்பூவில் எழுது. யாராவது டாக்டர் நண்பர்கள் என்ன காரணமாக இருக்கும் என்று சொல்வார்கள். பிறகு நான் டாக்டரிடம் செல்கிறேன்" என்கிறார்.

அதனால், விசயம் தெரிந்த நண்பர்கள் பின்னூட்டத்திலோ, மெயிலிலோ பதில் சொல்லவும்.

***************************************

நேற்றும், அதற்கு முந்தைய நாளும் எழுதிய " இதற்கு யார் காரணம்" என்ற என்னுடைய பதிவிற்கு என் தோழிகளிடமிருந்து ஏகப்பட்ட அர்ச்சனைகள். "நீங்கள் எப்படி இது போல எழுதலாம். நல்ல விசயங்கள் மட்டும் எழுதலாமே. படிக்க கொஞ்சம் அசிங்கமாக உள்ளதே" என்று ஏகப்பட்ட போன்கால்கள் மற்றும் மெயில்கள். "எது நல்ல விசயம்? எது கெட்ட விசயம்?'' என்று எந்த விளக்கமும் யாரும் சொல்ல முடியாது. எல்லாம் அவர் அவர்கள் பார்வையைப் பொறுத்தது. நான் நடந்த நிகழ்ச்சியை அப்படியே ஒரு சிறுகதை போல் எழுதினேன். அவ்வளவுதான். மற்றபடி எப்படியாவது பிரபலமாக ஆக வேண்டும் என்பதற்காக அந்த கட்டுரைகளை எழுத வில்லை என்பதை என் நலம் விரும்பிகளுக்கு இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

***************************************

இந்த முறை லால்குடியில் உள்ள என் வீட்டில் நுழைந்தவுடன் என் கண்ணில் பட்டது இரண்டு ரூம்களின் பாத்ரூம் அருகில் உள்ள சுவர்களில் ஒரே ஈரம். முதலில் அது மழையால் இருக்கலாம் என விட்டு விட்டேன். பிறகு சுவரைத் தொட்டுப்பார்த்தால் கையில் தண்ணீர் வருகிறது. நானும் இன்ஜினியரும் சேர்ந்து எல்லா இடமும் சரி பார்த்ததில் வீட்டின் சுவரின் பின்னால் உள்ள பைப்பில் லீக் இருந்தது தெரிந்தது. நாங்கள் அதன் மூலம் தண்ணீர் உள்ளே சென்று இருக்கலாம் என் நினைத்து ப்ளம்பரை வரச் சொன்னோம். இருந்தாலும் என் மனம் எல்லாம் ஒரே கவலை. வேறு எங்காவது லீக் என்றால் இரண்டு பாத்ரூம் சுவரிலும் உள்ள டைல்ஸை உடைக்கவேண்டும். பிளம்பர் வந்தவுடன் அந்த பைப் லீக்கை பார்த்து விட்டு 'அந்த பைப்பில் லீக் இல்லை' என்று கூறிவிட்டார். பிறகு அந்த இடத்தில் உள்ள சுவற்றை சிறிது உடைத்தால், சத்தியமாக நம்ப மாட்டீர்கள், "சுவற்றின் செங்கலிலிருந்து தண்ணீர் அருவியாய் பீச்சி அடிக்கிறது". செங்கலிலிருந்து தண்ணீர் கொட்டுவதை அன்றுதான் பார்த்தேன். ஆனால், லீக் எங்கே என்று கண்டு பிடிக்க முடியவில்லை. பிறகு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ரூமில் உள்ள ஹீட்டருக்கு செல்லும் பைப் லைனில் சிறிது லீக் இருப்பதை கண்டு பிடித்தோம். பின்பு அங்கே உடைத்துப் பார்த்தால் பைப் சூடான தண்ணீரினால் மெல்ட் ஆகி உடைந்து சுவற்றின் உள்ளேயே பல நாட்களாக லீக் ஆகிக் கொண்டிருந்திருக்கிறது. எங்கெல்லாம் பைப் லைன் போகிறதோ அங்கெல்லாம் தண்ணீர் சென்றிருக்கிறது. ஒவ்வொரு செங்கல்லும் ஒண்ணரை லிட்டர் தண்ணீர் குடிக்கும் என்ற விசயமே அன்றுதான் எனக்குத் தெரிந்தது.

அந்த லீக்கை கண்டுபிடிக்கும் வரை நான் வேண்டாத தெய்வமில்லை. ஒரு வழியாக அனைத்தையும் சரி செய்தோம். இன்னும் சுவற்றின் ஈரம் அப்படியே உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காயுமாம். எல்லாம் நல்லபடியாக முடிந்த பின் டிவியை ஆன் செய்தேன், அதில்,

" ஹைட்டியில் நில நடுக்கம். கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பலி. பல லட்சம் பேர் வீடு இழந்து தவிக்கிறார்கள். அதிபரே தன் மாளிகையை இழந்து ரோட்டுக்கு வந்து விட்டார்"

சே! என்ன கொடுமை இது?. பூமியின் ஒரு மூலையில் உள்ள நான் என் வீட்டில் ஏற்பட்ட சிறிய பிரச்சனைக்கு எல்லா தெய்வத்தையும் துணைக்கு அழைத்தேன். அடுத்த மூலையில் பூமியே பிளந்து...........எல்லோரும் வீடிழந்து......... இதில் என் தவறு எதுவும் இல்லையென்றாலும், ஒரு விதமான மன நிலைக்கு நான் ஆகிவிட்டேன் என்பதென்னவோ உண்மைதான்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னால் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிந்தது. ஆண்டவன் இப்போது மக்களை அதிகமாக சோதிக்க ஆரம்பித்து விட்டான்.

***************************************

ஒரே ஒரு வார்த்தைதாங்க சொன்னேன். அதிலேயிருந்து என் நண்பன் ஒருத்தன் என்னோட பேசறத நிறுத்திட்டாங்க. அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன். நீங்களே பாருங்க. பொங்கல் அன்றைக்கு என்னைப் பார்த்த அவன் நான் அணிந்திருந்த புது சட்டையைப் பார்த்துவிட்டு இப்படிக் கேட்டான்,

" என்ன மாப்பிள்ளை பொங்கல் சட்டையா?"

" இல்லைடா. என் சட்டை"

இது ஒரு தப்பாங்க??? பாவிப்ப்ய பேசறத நிறுத்திட்டான்.

***************************************

Jan 21, 2010

இதற்கு யார் காரணம்? (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்) - பாகம் 2

" ஆமாம்" என்று அவள் சொன்னவுடன், குமாருக்கு கோபம் தலைக்கு மேல் ஏற,

" ஏண்டி உனக்கு நான் என்ன குறை வைச்சேன். ஏன் இப்படி அலையிற"

" என்ன குறை வைச்சியா. நீ பாட்டு என்னை கிளப்பி விட்டுட்டு போயிட்ட. என்னால 'அது' இல்லாம இருக்க முடியல. அதான் எனக்கு புடிச்சவங்களோட படுக்க ஆரம்பிச்சேன்"

" இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்லை?"

" இதுல என்ன வெட்கம்"

" சீ! நீயும் ஒரு பெண்ணா?"

" இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. நீ இங்க இருந்து தினமும் என்னை நல்லா கவனி. நான் யார் கிட்டயும் போக மாட்டேன்"

" அது ஒண்ணுதான் வாழ்க்கையா"

"ஆமாம்", என்று சொல்லி விட்டு அவள் செய்த செயல் அவனை திக்குமுக்காட வைத்து விட்டது.

அவன் காலில் விழுந்தவள் கதறி கதறி அழ ஆரம்பி விட்டாள். குமாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

" உண்மையில் எனக்கு தினமும் வேண்டும்ங்க. என்னால அது இல்லாம வாழ முடியலைங்க" என்று கதறி அழுதவளை என்ன செய்வது, அவளைத் தேற்றுவதா? இல்லை அவள் பேசிய பேச்சுக்கு அவளை அடிப்பதா? என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் குமார். 'ஒரு பெண்ணுக்கு இத்தனை உணர்ச்சிகள் இருக்குமா?' என குழம்பி தவித்தான்.

பிறகு குமார் அவளிடம் சொன்னவைகள் யாருமே எந்த மனைவியிடமும் சொல்லக் கூடாதது,

" சரி. நீ எப்படியோ இருந்துட்டு போ. ஆனா, நான் வரும்போது என்னுடன் மட்டும் தான் இருக்கணும். சரியா?"

(பின்பு ஸ்டேசனில் அவனிடம், " ஏன் அவ்வாறு சொன்னாய்?" என்று கேட்டதற்கு, " சார், நான் அவள் மேல் உயிரையே வைத்து இருந்தேன். என்னைப்போல இருக்கும் ஒருவனுக்கு கிடைத்த தேவதை சார் அவள். என்னுடைய சந்தோசத்தை விட அவள் சந்தோசத்தை தான் பெரிதாக நினைத்தேன் சார். அதனால், அவளின் ஆசைக்கு நான் தடை போட விரும்பவில்லை. எந்த காரணம் கொண்டும் அவளை நான் இழக்க விரும்ப வில்லை சார்" என்று பதில் சொன்னானாம்.)

" சரி" என்று அவனை கட்டிபிடித்து அழ ஆரம்பித்தாள். பிறகு அந்த ஒப்பந்தத்துடன் மிலிட்டரி போனான் குமார். நாட்கள் ஓடியது. மாதங்கள் ஓடியது. அடுத்த லீவும் வந்தது.

வீட்டிற்கு வந்தான் குமார். தடபுடலாக எப்பவும் போல் அவனை நன்கு கவனித்தாள் வள்ளி. எல்லாம் நல்லபடியாகத்தான் போனது. 'எல்லாம்' என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நாள் நண்பன் ஒருவனைப் பார்க்க சென்றவன் வேலை சீக்கிரம் முடியவே இரவே வீடு திரும்பினான். வீட்டில் வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் வள்ளி இல்லை. இரவு 10 மணிக்கு மேல்தான் வந்தாள்.

" எங்கே போய் விட்டு வருகிறாய்" எனக் கேட்டான்.

" (ஒருவன் பெயரைச் சொல்லி) அங்கே போய்விட்டு வருகிறேன்" என்றாள்.

" நான் தான் சொல்லி இருக்கேன்ல. நான் இருக்கும்போது நீ யாரிடமும் போகக் கூடாது என்று"

அவள் சொன்ன பதில்தான் இந்த பதிவு எழுத காரணமாகி விட்டது.

" ஆமாம், நீ வருசத்துல ஒரு மாசம் வருவ. வந்து என்னோட 'இருந்துட்டு' போயிடுவ. அவன் வருசம் முழுதும் என்னை கவனிக்கிறான். நீ வந்துட்ட அப்படிங்கறதுக்காக அவனைப் பட்டினி போட முடியுமா என்ன?"

வந்த கோபத்தில் அவளை அடுத்து பேச விடாமல் அவளை கன்னத்தில் அறைய ஆரம்பித்தான் குமார். நடு ரோட்டில் யாரோ தன்னை நிர்வாணமாக நிற்க வைத்து செருப்பால் அடிப்பது போல் உணர்ந்தான் குமார். ஏதும் பேசாமல் ரூமில் போய் தூங்கி விட்டான். அவளின் அழுகைச் சத்தம் ஹாலில் நீண்ட நேரம் கேட்டது. எப்படித் தூங்கினான், எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. காலையில் எழுந்தபோது மணி 7. 'வள்ளி' என்று கூப்பிட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தவன் அதிர்ந்தான்.

ஹாலில் அவள் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் பெற்றோர்கள் குமார்தான் அவளை கொலை செய்து விட்டதாக அவன் மேல் கேஸ் போட்டு விட்டார்கள்.

"அவன் மேல் தவறு உள்ளதா? யார் மேல் தவறு? குமார் கொலை செய்து இருப்பானா? அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று எங்களிடம் கேட்டார் டி எஸ் பி.

நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே! யார் மேல் தவறு? தவறு குமார் மேல் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

நான் என் கருத்தினை சொன்னதற்கு அப்புறம் டி எஸ் பி என்ன முடிவு எடுத்தார்? என்பதை பிறகு சொல்கிறேன்.

Jan 20, 2010

இதற்கு யார் காரணம்? ( 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்) - பாகம் 1

என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு ஒரு டி.எஸ்.பி நல்ல பழக்கம். அவரிடம் ஒரு வித்தியாசமான கேஸ் வந்தது. அதை என் நண்பன் என்னிடம் கூறி, அவர் அவனிடமும் என்ன முடிவு எடுப்பதென்று ஆலோசனை கேட்டதாகவும் என்னுடைய கருத்து என்ன? என்றும் கேட்டான். நானும் என் கருத்தினைக் கூறினேன். இந்த சம்பவத்தைப் படிப்பவர்கள் இப்படி நடந்திருக்குமா? என எண்ண வேண்டாம். ஜனவரி ஆரம்பத்தில் நடந்த சம்பவம் இது. வித்தியாசமாக இருப்பதால்தான் இங்கே பதிக்கிறேன்.

சம்பவத்தின் நாயகன் பெயர் குமார் என்றும், நாயகி பெயர் வள்ளி என்று வைத்துக் கொள்வோம். இனி அந்த கேஸைப் பற்றிய விபரம்,

வள்ளி அந்த ஊரின் மிகச் சிறந்த அழகி. நல்ல கலர். உடல் முழுவதும் ஒரு நல்ல மினுமினுப்பு. பிரம்மன் அவளைப் படைக்கும்போது மிகுந்த சிரமப்பட்டு எல்லாமே மிகச் சரியான அளவில் வைத்திருந்தான். சினிமா நடிகைகள் போல் இல்லாமல் மேக்கப் இல்லாமலே அவள் எப்போதும் அழகாக தெரிந்தாள். அவள் வீட்டின் முன்னே எப்போதும் ஒரு கும்பல் இருந்து கொண்டே இருக்கும். அவளால் பைத்தியம் பிடித்து அலைந்தவர்கள் பல பேர். அவர்கள் அலைவது குறித்து எப்போதும் ஒரு வித மகிழ்ச்சியுடனே இருப்பாள். அவர்கள் குடும்பம் ஒன்றும் அவ்வளவு வசதியானது இல்லை. ஆனால் அந்த அளவு ஏழையும் இல்லை. ஆனால், அவள் மனதில் இருந்தது என்னவோ கலர் கலரான கனவுகள். பலரையும் பைத்தியமாக்கிய அவளுக்கும் திருமணம் பண்ணி வைக்க அவள் குடும்பம் விரும்பியது. அவளுக்காக மாப்பிள்ளை நிறைய இடத்தில் பார்த்தார்கள். அனைத்து மாப்பிள்ளைகளையும் அவள் நிராகரித்தாள். ஏன் ஒப்புக்கொள்ளவில்லை? என்ற சரியான காரணம் தெரியாமல் பெற்றோர்கள் குழம்பி தவித்தார்கள். அவளைக் கேட்டுப் பார்த்தும் ஒரு பிரயோசனமும் இல்லை.

அந்த நேரத்தில்தான் குமாரின் ஜாதகம் அவர்கள் பெற்றோர்களின் கைகளில் கிடைத்தது. ஜாதகம் நன்றாக பொருந்தியது. எல்லோரையும் ஆச்சர்யப் படுத்தும் விதமாக வள்ளி, குமாரை பிடிப்பதாக கூறிவிட்டாள். இத்தனைக்கும் குமார் ஒன்றும் அழகன் இல்லை. இதுவரை பார்த்த மாப்பிள்ளைகளிலே ரொம்ப சாதாரணமானவன். ஏன் வள்ளிக்கு குமாரைப் பிடித்து போனது? என யாருக்கும் தெரியவில்லை. பெற்றோர்கள் அவசரமாக அவள் மனம் மாறுமுன் கல்யாண ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தார்கள். ஊரே ஆச்சர்யப்படும் விதமாக அவள் கல்யாணம் நடந்தது.

குமார் வேலைப் பார்ப்பது மிலிட்டரியில். ஒரு மாத லீவில் வீட்டிற்கு வந்து இருந்தான். பெண் பார்க்கும் படலத்திற்கே பத்து நாட்கள் ஓடி விட்டது. அடுத்த பத்து நாட்களில் கல்யாணமும் நடந்து விட்டது. மீதி இருந்தது 10 நாட்கள்தான். அதற்கு பிறகு மீண்டும் ஊருக்கு வர ஒரு வருடமாகும்.

குமார் ஆசையுடன் எதிர்பார்த்த முதல் இரவும் வந்தது. என்னதான் வயது ஆகி இருந்தாலும் குமாரைப் பொறுத்தவரையில் அந்த விசயத்தில் அவன் ஒரு ஸீரோ வாகவே இருந்தான். ஆனால், வள்ளியை பொறுத்தவரை மிகுந்த ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டாள். குமாருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் அவளின் வேகத்தைப் பார்த்து கேட்டே விட்டான்,

" உனக்கு எப்படி இதில் இவ்வளவு ஆர்வம்?"

" என் போன்ற பெண்கள் கொஞ்சம் அதிகப்படியாக நடந்தால் இப்படி கேட்கிறீர்களே?" என ஓஓ வென அழத்தொடங்கினாள். குமாரும் அதோடு எந்த கேள்வியையும் கேட்காமல் அனுபவிக்க ஆரம்பித்தான். பத்து நாட்களும் அவளுடைய ஆளுமையில் நேரம் காலம் பார்க்காமல் அனுபவித்தான். குமார் ஊருக்கு போகும் நாளும் வந்தது. அழுகையுடன் அவனை அனுப்பி வைத்தாள் வள்ளி.

ஊருக்கு போன குமாரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நாள் முழுவதும் அவள் நினைவு. காமப் பசி வேறு. ஆறு மாதத்திற்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியாமல் அவசர விடுமுறையில் ஊருக்கு வந்தான். ஊருக்கு வந்தவுடனே இவனைப் பார்த்த பலர் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டதை கவனிக்கத் தவறவில்லை குமார். 'ஏன் அப்படி என்னவோ தங்களுக்குள் தன்னைப் பார்த்து பேசிக் கொள்கிறார்களே?' என நினைத்துக் கலவரமானான்.

வீட்டில் அந்த இரவில் அவனுக்கு ஒண்ணும் வித்தியாசம் தெரியவில்லை. அடுத்த நாள் அவனுடைய நெருங்கிய நண்பன் வீட்டிற்கு சென்றான். அவன் சொன்ன விசயம்தான் குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி என்ன சொன்னான்?

" மாப்பிள்ளை, சொல்றேனு தப்பா நினைக்காத. உன் மனைவி நடத்தை சரியில்லை. நிறைய பேரோட தொடர்பு இருப்பதா பேசிக்கிறாங்க. நானே அன்னைக்கு டவுன்ல வேற ஒருத்தரோட பார்த்தேன்"

நேரே வீட்டிற்கு வந்தவன் வள்ளியைப் பார்த்து விசயத்தைக் கேட்டான். பதில் சொல்லாமல் அவனுடன் அந்த இடத்திலேயே வித்தியாசமான முறையில் உறவு கொள்ள ஆரம்பித்தாள். காமம் வென்றதால் அவனால் கேட்க வந்த விசயத்தை முழுமையாக கேட்க முடியவில்லை. அடுத்த நாள் காலை முதலில் எழுந்தவுடன் கேட்க போனவனின் உதட்டில் முத்தமிட ஆரம்பித்தபோதே ஏதோ தப்பு இருப்பது உண்மைதான் என உணர்ந்தான்.அவளை விலக்கி விட்டு,

" ஊரில் எல்லோரும் சொல்வது உண்மையா?"

இந்த முறை அவள் யோசிக்காமல் பதில் சொன்னாள்,

" ஆமாம்"

- தொடரும்

Jan 19, 2010

பால்ய சிநேகிதன்!

சில
நிகழ்வுகள்
நிகழாமல்
இருப்பதே
நலம்.

பசியில் ருசித்து
சாப்பிட்டு என்
வாகனத்தை
வெளியே எடுக்கும்
வேளை
'ஸ்ஸ்ஸ்ஸ்'
என்ற விசில்
சத்தம்.

மோகன்ராஜ்
நன்றாக நினைவில்
உள்ளது.
5ம் வகுப்பில்
ஆசிரியரிடம்
பெரிய மிலிட்டரி
ஆபிஸர் ஆவேன்
என்று சொன்னவன்.

இன்று ஹோட்டல்
ஒன்றில்
செக்யூரிட்டியாய்.

பார்வையை தவிர்க்க
அவன் எண்ணிய
அந்த கணத்தில்
என் கண்கள் அவன்
விழிகள் சிந்திய நீரை
பார்த்து தொலைத்து
விட்டது.

காரில் நான்
செக்யூரிட்டியாய் அவன்
இன்று பசிக்காமலே
இருந்திருக்கலாம்.

Jan 9, 2010

யானைக்கும் அடி சறுக்கும்! - 2

பஸ் என்றால் அடுத்த பஸ்ஸை பிடித்து வரலாம். ஆனால், விமானத்தை தவறவிட்டால்? என்ன செய்வது? பணத்தை திரும்ப வாங்குவது என்பது இயலாத காரியம். ஏற்கனவே போர்டிங் பாஸ் அவர்களிடம் இருப்பதால், "நோ ஷோ" என்று சொல்லி ஒரு பைசா தர மாட்டார்கள். அப்போது திடீரென இன்னொரு பயம் வந்து விட்டது?

ஆமாம். எங்கள் லக்கேஜ் என்ன ஆனது? ஏனென்றால் லக்கேஜை நாங்கள் முதல் ஏற்போட்டிலே சென்னைக்கு புக் செய்து விட்டோம். லக்கேஜ் மட்டும் சென்னைக்கு சென்று விட்டதோ என்று ஒரே குழப்பம். ஏஜண்ட் பெண்மணி லைனில் வந்தாள். எந்த அளவிற்கு என் கோபத்தை காண்பிக்க முடியுமோ அந்த அளவிற்கு காண்பித்து பிறகு சமாதானமானேன். ஏனென்றால், அவர்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

அவர், " சார் நீங்கள் இருங்கள் நான் இந்தியன் ஏர்லைன்ஸில் டிக்கட் இருக்கிறதா என்று பார்க்கிறேன்" என்றார். இந்தியன் ஏர்லைன்ஸ் காலை 9.25க்கு புறப்படும். அப்போது 9 மணி. அந்த கவுண்டருக்கு சென்றால் அங்கேயும் மூடி விட்டார்கள். நான், " ஏர் ஏசியாவில் நேராக திருச்சி சென்று விடுகிறேன்" என்றேன். அவர் " அத்தனையும் வேஸ்ட் ஆகிவிடும். கிங் பிஷர் டிக்கட்டில் மட்டுமே 35000 ரூபாய் போய் விடும். மொத்தத்தில் 120,000 நஷ்டமாகிவிடும்" என்று ஏறக்குறைய அழுது விட்டார். நான் ஆபிஸுக்கு ஏற்கனவே போன் செய்து அவருக்கான பேமெண்டை நிறுத்தச் சொல்லிவிட்டேன்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. காலை 3 மணியிலிருந்து யாரும் சாப்பிடவில்லை. " சார், நீங்கள் போய் சாப்பிடுங்கள். நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றார். உடனே அங்கு உள்ள மெக்டனால்ஸ் சென்றோம். அங்கு சென்றால், ஏறக்குறைய அனைத்தும் தீர்ந்து விட்டது. சிக்கன் பர்கரும் ஏதோ ஒரு பன்னுடன் தந்தார்கள், என் மனைவியும், என் பையனும் சாப்பிடாமல் வெறும் ஜூஸ் மட்டும் சாப்பிட்டார்கள். இதை நான் இங்கு குறிப்பிடும் காரணத்தை இந்த கட்டுரையின் பின் பகுதியில் அறிவீர்கள். பிறகு ஏஜண்ட் கூறியபடி, ஜெட் ஏர்வேய்ஸ் ஆபிஸ் சென்றேன்.

முதலில் ஒரு 15 நிமிடம் கத்தி தீர்த்தேன். ஏஜெண்ட் ஜெட் ஏர்வேய்ஸ் ஆபிஸை குறை கூறினார். ஜெட் ஏர்வேய்ஸ் மேனேஜர் ட்ரேன்ஸ்வர் கவுண்டர் ஆளை குறை கூறினார். மொத்தத்தில் பாதிக்கப்பட்டது என்னவோ நான்தான். கஷ்டத்திலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால். இரவில் புறப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஜெட் ஏர்வேய்ஸுடன் கோ ஷேரின் விமானம். அதில் ஏதும் டிக்கட் கிடைக்குமா என்று பார்த்தார். நல்ல வேளை, டிக்கட் இருந்தது.

நான் அவ்வளவு கோபப்பட்டாலும், அந்த மேனேஜர் பொறுமையாக பதில் சொன்னார். அந்த பேச்சிலிருந்து வேண்டும் என்றுதான் அவர்கள் போர்டிங் பாஸ் தரவில்லை என்று உறுதி செய்து கொண்டேன். எங்களால், அவர்கள் விமானத்தை தாமதமாக்க விரும்பவில்லை. அந்த நேரத்தில் என் கோபத்தை குறைத்துக் கொண்டேன். ஏனென்றால், அவர்தான் எனக்கு இரவு விமானத்திற்கு அதே பணத்தில் டிக்கட் தர வேண்டும்.

அவர், " சார், உங்கள் லக்கேஜை ஆப் லோட் செய்து விட்டார்கள். அதனால், நீங்கள் காரணத்தை எழுதிக் கொடுத்து லெவல் 2க்கு சென்று உங்கள் லக்கேஜை வாங்கி வந்து விடுங்கள்" என்றார். கிட்டத்தட்ட அன்று அனைத்து லெவல்களுக்கும் ஓடி விட்டேன். பிறகு மீண்டும் லெவல் 2க்கு ஓடினேன். அங்கே என் லக்கேஜை கலக்ட் செய்தபோது, அங்கு இருந்த ஆபிஸர் லக்கேஜ் ஆப் லோட் செய்யப்பட்டதற்கான காரணத்தை எழுதச் சொன்னார். " அதிகாரிகளின் அலட்சியப்போக்கு" என்று எழுதி விட்டு வந்தேன்.

டிக்கட் ரெடியாக இருந்தது. காலை 10 மணி. இரவு 8.30க்குத்தான் விமானம். அது வரை என்ன செய்வது?. ஏற்போர்ட்டிலிருந்து டவுனுக்கு சென்று வர 150 வெள்ளி வரை செலவு ஆகும். செலவு ஆனாலும் லக்கேஜுடன் எப்படி செல்வது?

" சார், பக்கத்துல உள்ள ஹோட்டல தங்கிட்டு வாங்க. எங்கள் ரேட்டில் ரூம் புக் செய்து தருகிறேன். நீங்கள் லக்கேஜை இப்போதே இரவு விமானத்துக்கு செக் இன் செய்து விடுங்கள்" என்றார் ஜெட் ஏர்வேய்ஸ் மேனேஜர். அதே போல் லக்கேஜை இரவு விமானத்திற்கு புக் செய்து விட்டு போர்டிங் பாஸ் வாங்கினேன். போர்டிங் பாஸ் வாங்கிய போது அங்கு இருந்த அதிகாரி, " சார், சாயந்திரமாவது சீக்கிரம் வந்து விடுங்கள்" என்றார். கோபம் கலந்த சிரிப்புடன் அங்கு இருந்து நகர்ந்தேன்.

பின்பு ஹோட்டல் சென்றோம். போனால் அது ஒரு 5 ஸ்டார் ஹோட்டல். சாப்பாட்டுக்கே பல ஆயிரம் செலவு பண்ண வேண்டிய சூழ்நிலை. மதியம் ரெஸ்ட்ராண்டுக்கு சென்றோம். அங்கே உள்ள பெண்ணிடம், " சாப்பாடு ஹோட்டல் வாடகையுடன் சேராதா?'' என்றேன்.

" பிரேக் பாஸ்ட் உண்டு சார். காலையில வாங்க"

" காலையில மெட்ராஸ்ல இருப்பேன். அதனால லன்ச் தாங்க" என்றேன்.

அவர் எங்கேயோ பேசிவிட்டு, " மூன்று பேருக்கு தருகிறேன். ஆனால் ஒருவருக்கு நீங்கள் பே பண்ண வேண்டும்" என்றார்.

" சரி" என்று சந்தோசமாக ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் ஒரு பஃபே சாப்பாட்டின் விலை 45 வெள்ளி.

நானும் பிள்ளைகளும் புகுந்து விளையாட ஆரம்பித்தோம். ஆனால் எங்கள் வீட்டில் வெஜிட்டேரியன். ஒரு சிக்கன் லெக் பீஸை கடித்துக் கொண்டே காரணம் கேட்டேன்.

" ஏங்க இன்னைக்கு வைகுண்ட ஏகாதேசி இல்லையா? நான்வெஜ் சாப்பிடலாமா?"

" முதல்லயே சொல்லக் கூடாதா?"

" நீங்கதான், காணாததை கண்ட மாதிரி பர்கரை உடனே வாயில வைச்சிட்டீங்களே?"

" ஓக்கே. இப்ப மட்டும் நைட் பிளைட்டுல சாப்புடலை"

நைட்டும் பிளைட்டுலையும் அதையே சாப்பிட்டது தனிக்கதை.

அந்த இடைப்பட்ட நேரத்தில் ஏகப்பட்ட டென்ஷனுக்கு இடையில் கிங் ஃபிஷர் பிளைட்டையும் அடுத்த நாளுக்கு மாற்றிக் கொடுத்தார் ஏஜண்ட்.

பிறகு ஒருவாறு பொன்னான ஒரு நாளை கோலாலம்பூரில் வேஸ்ட் செய்து விட்டு அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தோம்.

29ம் தேதி. காலை சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை பதிவர்களை சந்தித்து விட்டு ஹோட்டலுக்கு வரும்போது இரவு 12 மணி. காலை எழுந்து 11.45 மணி திருச்சி பிளைட் பிடிக்க 9.30க்கு கிளம்பி ஏற்போர்ட்டை 10 மணிக்கு அடைந்தோம்.

போர்டிங் பாஸ் வாங்கும்போது சொன்னார்கள்,

" திருச்சி பிளைட் மூன்று மணி நேரம் லேட்"

Jan 8, 2010

யானைக்கும் அடி சறுக்கும்! - 1

நான் என்ன நேரத்தில் 'ஒரு வகையான சந்தோச உணர்ச்சி' என்று பதிவு எழுதினேனோ அடுத்த நாள் நான் அனுபவித்தது என்னவோ ஒரு வகையான கோபம் கலந்த எரிச்சல் உணர்ச்சி. வந்த அன்றிலிருந்து சில நாட்கள் அதே மனநிலையில் இருந்ததாலும், வேறு பல வேலைகள் இருந்ததாலும் என்னால் எதையும் எழுத முடியவில்லை. ஆனால், சென்னையில் சில நண்பர்களை சந்தித்தது மனதிற்கு மிகுந்த சந்தோசத்தை அளித்தது. அது குறித்து பின்னாளில் தனி பதிவாக எழுதுகிறேன். அப்படி என்ன நேர்ந்தது அடுத்த நாள்?

சில நண்பர்களுக்கு அந்த அனுபவத்தை ஏற்கனவே சொல்லியிருந்தாலும், அதனை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். டிசம்பர் 28ம் தேதி அதிகாலை சரியாக 2.50 க்கு எல்லோரும் தூங்கி எழுந்து, புறப்பட்டு வேனில் பக்கத்து டவுனில் உள்ள ஏற்போட்டுக்கு வர காலை 6 மணி ஆனது. காலை 6.50க்கு கோலாலம்பூருக்கு விமானம். காலை சரியாக 7.30 க்கு தரையிறங்க வேண்டும். பிறகு 8.35க்கு புறப்படும் ஜெட் ஏர்வேஸில் சென்னைக்கு கிளம்புவதாக ஏற்பாடு. 28ம் தேதி நண்பர்களை சந்தித்து விட்டு, அன்று இரவு சென்னையில் தங்கி, 29ம் தேதி சென்னையில் இருந்து காலை 11.45க்கு புறப்படும் கிங் ஃபிஷர் விமானத்தில் திருச்சிக்கு செல்ல வேண்டும்.

நான் எந்த காரியத்தையும் திட்டமிடாமல் செய்ய மாட்டேன். எங்கு செல்வதாக இருந்தாலும் நன்கு திட்டமிட்டு ஒரு செக் லிஸ்ட் தயாரித்து அதன் படிதான் நடப்பேன். அதனால் இது வரை எதையும் மறந்தது இல்லை. தொலைத்து இல்லை. எதையும் தவறவிட்டதுமில்லை. கடந்த 13 வருடங்களில் சுமார் 40 முறை இந்தியா வந்து சென்று இருப்பேன். ஒரு முறை கூட இவ்வாறு நடந்தது இல்லை. இந்த பயணம் திடீரென முடிவானது. டிக்கட் கைக்கு கிடைத்தவுடன், ஏஜண்டை அழைத்து கேட்டேன், " கோலாம்பூரில் லோக்கல் விமானம் 7.30க்கு தரை இறங்குகிறது. ஜெட் ஏர்வேய்ஸ் 8.35க்கு புறப்படுகிறது. எப்படி இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் போர்டிங் பாஸ் வாங்கி, இமிக்ரேசன், கஸ்டம்ஸ் முடிந்து விமானத்தை பிடிக்க முடியும்?''

" கவலைப்படாதீங்க சார். உங்களுக்காக ட்ரேன்ஸ்வர் கவுண்டர்ல போர்டிங் பாஸ் ரெடியாக இருக்கும். அதனால் உடனே சென்று விடலாம்"

ஏனென்றால் கோலாலம்பூர் விமான நிலையம் மிகப் பெரியது. இமிகிரேஷன் முடிந்து இண்டர் நேஷனல் டெர்மினல் போக ஒரு ட்ரேயினில் செல்ல வேண்டும், பிறகு நம் விமானம் இருக்கும் கேட்டை அடைய வேண்டும்.

நானும் நம்பி விட்டேன். கோலாலம்பூருக்கு 7.30க்கு தரை இறங்க வேண்டிய விமானம் பத்து நிமிட தாமதத்தில் 7.40க்கு இறங்கியது. விமானத்தை நிறுத்திய இடம் கடைசி கேட்டில். அங்கு இருந்து ட்ரேன்ஸ்வர் கவுண்டருக்கு வேகமாக, இல்லை இல்லை ஓடினோம். என் 5 வயது பையன் ஓடிய வேகம் இன்னும் என் நெஞ்சை என்னவோ செய்கிறது. கவுண்டரை அடைய 7.55. அங்கு ஒரே க்யூ. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அங்கு இருந்த அந்த அழகிய பெண்ணை அணுகி போர்டிங் பாஸ் கேட்டேன். அவர் உடனே யாருக்கோ போன் செய்தார். வந்த நண்பர் என்னிடம் யாருக்கோ போன் செய்து பேசிக்கொண்டே போர்டிங் பாஸ் எழுதப்போனவர், எங்களைப் பார்த்து, "சார், ஜெட் ஏர்வேய்ஸ் கவுண்டர் க்ளோஸ் பண்ணிட்டாங்க. அதனால நீங்க லெவல் 5க்கு போய் அங்க டிக்கட் வாங்கிக்கோங்க"

எவ்வளவோ மன்றாடிபார்த்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏஜெண்ட்க்கு போன் செய்தால் அவர் போனை எடுக்கவில்லை. காலையில் என்ன செய்து கொண்டிருந்தாளோ தெரியவில்லை. மீண்டும் லெவல் 5க்கு பிள்ளைகளுடன் ஓடினேன். போனால் ஜெட் ஏர்வேய்ஸ் கவுண்டரில் யாரும் இல்லை. அருகிலிருந்தவர்கள், " நீங்கள் லெவெல் 4ல் உள்ள ஜெட் ஏர்வேய்ஸ் ஆபிஸ் செல்லுங்கள். அங்கே உங்களுக்கு யாராவது உதவ வாய்ப்பு உள்ளது" என்றார்கள். மீண்டும் பிள்ளைகளுடன், லக்கேஜுடனும் ஓட்டம். லெவல் 4க்கு போனால், ஆபிஸ் பூட்டி இருந்தது.

அங்கே இருந்த சிலர், " நீங்கள் லெவல் 5க்கு மீண்டும் சென்று அங்கே உள்ள செக்யூரிட்டி ஆபிஸில் புகார் செய்யுங்கள்" என்றார்கள். மீண்டும் ஓட்டம். அங்கே போனால், அவர்கள், " நாங்கள் வெறும் செக்யூரிட்டி ஆபிஸர்தான். எங்களுக்கு ஒன்றும் பவர் இல்லை" என்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே எங்கள் பெயர்களை சொல்லி விமானத்திற்கு வருமாறு அழைத்தார்கள். அப்போது மணி 8.25. நான் சந்தோசமானேன். அதனால் அதே ஆபிசரிடம் சொல்லி பேசச் சொன்னேன். அவர் ஜெட் ஏர்வேய்ஸ் கேட்டை தொடர்பு கொண்டபோது, அவர்கள் முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

முடிவு, எங்களை விட்டுவிட்டு விமானம் பறந்து விட்டது. எரிச்சலான எரிச்சல். அனைத்து திட்டமும் பாழ். எல்லோர் மீதும் கோபம். அடுத்து என்ன செய்வது? அம்மாவிற்கு போன் செய்து முடித்தவுடன், நண்பர் தண்டோராவிற்கு போன் செய்தேன். நண்பர்கள் சந்திப்பை அடுத்த நாள் வைத்துக்கொள்ளச் சொன்னேன். அவரும் ஏற்பாடு செய்வதாக கூறினார். ஒரு நாள் தள்ளிப் போனதால்தானோ என்னவோ, அடுத்த நாள் ஒரு சில நண்பர்கள் வரவில்லை.

அனுபவம் தொடரும்...