Jan 8, 2010

யானைக்கும் அடி சறுக்கும்! - 1

நான் என்ன நேரத்தில் 'ஒரு வகையான சந்தோச உணர்ச்சி' என்று பதிவு எழுதினேனோ அடுத்த நாள் நான் அனுபவித்தது என்னவோ ஒரு வகையான கோபம் கலந்த எரிச்சல் உணர்ச்சி. வந்த அன்றிலிருந்து சில நாட்கள் அதே மனநிலையில் இருந்ததாலும், வேறு பல வேலைகள் இருந்ததாலும் என்னால் எதையும் எழுத முடியவில்லை. ஆனால், சென்னையில் சில நண்பர்களை சந்தித்தது மனதிற்கு மிகுந்த சந்தோசத்தை அளித்தது. அது குறித்து பின்னாளில் தனி பதிவாக எழுதுகிறேன். அப்படி என்ன நேர்ந்தது அடுத்த நாள்?

சில நண்பர்களுக்கு அந்த அனுபவத்தை ஏற்கனவே சொல்லியிருந்தாலும், அதனை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். டிசம்பர் 28ம் தேதி அதிகாலை சரியாக 2.50 க்கு எல்லோரும் தூங்கி எழுந்து, புறப்பட்டு வேனில் பக்கத்து டவுனில் உள்ள ஏற்போட்டுக்கு வர காலை 6 மணி ஆனது. காலை 6.50க்கு கோலாலம்பூருக்கு விமானம். காலை சரியாக 7.30 க்கு தரையிறங்க வேண்டும். பிறகு 8.35க்கு புறப்படும் ஜெட் ஏர்வேஸில் சென்னைக்கு கிளம்புவதாக ஏற்பாடு. 28ம் தேதி நண்பர்களை சந்தித்து விட்டு, அன்று இரவு சென்னையில் தங்கி, 29ம் தேதி சென்னையில் இருந்து காலை 11.45க்கு புறப்படும் கிங் ஃபிஷர் விமானத்தில் திருச்சிக்கு செல்ல வேண்டும்.

நான் எந்த காரியத்தையும் திட்டமிடாமல் செய்ய மாட்டேன். எங்கு செல்வதாக இருந்தாலும் நன்கு திட்டமிட்டு ஒரு செக் லிஸ்ட் தயாரித்து அதன் படிதான் நடப்பேன். அதனால் இது வரை எதையும் மறந்தது இல்லை. தொலைத்து இல்லை. எதையும் தவறவிட்டதுமில்லை. கடந்த 13 வருடங்களில் சுமார் 40 முறை இந்தியா வந்து சென்று இருப்பேன். ஒரு முறை கூட இவ்வாறு நடந்தது இல்லை. இந்த பயணம் திடீரென முடிவானது. டிக்கட் கைக்கு கிடைத்தவுடன், ஏஜண்டை அழைத்து கேட்டேன், " கோலாம்பூரில் லோக்கல் விமானம் 7.30க்கு தரை இறங்குகிறது. ஜெட் ஏர்வேய்ஸ் 8.35க்கு புறப்படுகிறது. எப்படி இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் போர்டிங் பாஸ் வாங்கி, இமிக்ரேசன், கஸ்டம்ஸ் முடிந்து விமானத்தை பிடிக்க முடியும்?''

" கவலைப்படாதீங்க சார். உங்களுக்காக ட்ரேன்ஸ்வர் கவுண்டர்ல போர்டிங் பாஸ் ரெடியாக இருக்கும். அதனால் உடனே சென்று விடலாம்"

ஏனென்றால் கோலாலம்பூர் விமான நிலையம் மிகப் பெரியது. இமிகிரேஷன் முடிந்து இண்டர் நேஷனல் டெர்மினல் போக ஒரு ட்ரேயினில் செல்ல வேண்டும், பிறகு நம் விமானம் இருக்கும் கேட்டை அடைய வேண்டும்.

நானும் நம்பி விட்டேன். கோலாலம்பூருக்கு 7.30க்கு தரை இறங்க வேண்டிய விமானம் பத்து நிமிட தாமதத்தில் 7.40க்கு இறங்கியது. விமானத்தை நிறுத்திய இடம் கடைசி கேட்டில். அங்கு இருந்து ட்ரேன்ஸ்வர் கவுண்டருக்கு வேகமாக, இல்லை இல்லை ஓடினோம். என் 5 வயது பையன் ஓடிய வேகம் இன்னும் என் நெஞ்சை என்னவோ செய்கிறது. கவுண்டரை அடைய 7.55. அங்கு ஒரே க்யூ. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அங்கு இருந்த அந்த அழகிய பெண்ணை அணுகி போர்டிங் பாஸ் கேட்டேன். அவர் உடனே யாருக்கோ போன் செய்தார். வந்த நண்பர் என்னிடம் யாருக்கோ போன் செய்து பேசிக்கொண்டே போர்டிங் பாஸ் எழுதப்போனவர், எங்களைப் பார்த்து, "சார், ஜெட் ஏர்வேய்ஸ் கவுண்டர் க்ளோஸ் பண்ணிட்டாங்க. அதனால நீங்க லெவல் 5க்கு போய் அங்க டிக்கட் வாங்கிக்கோங்க"

எவ்வளவோ மன்றாடிபார்த்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏஜெண்ட்க்கு போன் செய்தால் அவர் போனை எடுக்கவில்லை. காலையில் என்ன செய்து கொண்டிருந்தாளோ தெரியவில்லை. மீண்டும் லெவல் 5க்கு பிள்ளைகளுடன் ஓடினேன். போனால் ஜெட் ஏர்வேய்ஸ் கவுண்டரில் யாரும் இல்லை. அருகிலிருந்தவர்கள், " நீங்கள் லெவெல் 4ல் உள்ள ஜெட் ஏர்வேய்ஸ் ஆபிஸ் செல்லுங்கள். அங்கே உங்களுக்கு யாராவது உதவ வாய்ப்பு உள்ளது" என்றார்கள். மீண்டும் பிள்ளைகளுடன், லக்கேஜுடனும் ஓட்டம். லெவல் 4க்கு போனால், ஆபிஸ் பூட்டி இருந்தது.

அங்கே இருந்த சிலர், " நீங்கள் லெவல் 5க்கு மீண்டும் சென்று அங்கே உள்ள செக்யூரிட்டி ஆபிஸில் புகார் செய்யுங்கள்" என்றார்கள். மீண்டும் ஓட்டம். அங்கே போனால், அவர்கள், " நாங்கள் வெறும் செக்யூரிட்டி ஆபிஸர்தான். எங்களுக்கு ஒன்றும் பவர் இல்லை" என்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே எங்கள் பெயர்களை சொல்லி விமானத்திற்கு வருமாறு அழைத்தார்கள். அப்போது மணி 8.25. நான் சந்தோசமானேன். அதனால் அதே ஆபிசரிடம் சொல்லி பேசச் சொன்னேன். அவர் ஜெட் ஏர்வேய்ஸ் கேட்டை தொடர்பு கொண்டபோது, அவர்கள் முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

முடிவு, எங்களை விட்டுவிட்டு விமானம் பறந்து விட்டது. எரிச்சலான எரிச்சல். அனைத்து திட்டமும் பாழ். எல்லோர் மீதும் கோபம். அடுத்து என்ன செய்வது? அம்மாவிற்கு போன் செய்து முடித்தவுடன், நண்பர் தண்டோராவிற்கு போன் செய்தேன். நண்பர்கள் சந்திப்பை அடுத்த நாள் வைத்துக்கொள்ளச் சொன்னேன். அவரும் ஏற்பாடு செய்வதாக கூறினார். ஒரு நாள் தள்ளிப் போனதால்தானோ என்னவோ, அடுத்த நாள் ஒரு சில நண்பர்கள் வரவில்லை.

அனுபவம் தொடரும்...

4 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலை ரொம்ப மோசமானது .

மனதை தளரவிடக்கூடாது .

பரிசல்காரன் said...

!

iniyavan said...

//ரொம்ப மோசமானது .

மனதை தளரவிடக்கூடாது//

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

iniyavan said...

நன்றி பரிசல்.

ம்ம்ம்ம்ம்.