Jan 22, 2010

மிக்ஸர் - 22.01.10

இந்த முறை விடுமுறை முடிந்து மலேசியாவிற்கு கிளம்பிவதற்கு முதல் நாள் நண்பர்களின் வற்புறுத்தலின் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பார்க்கச் சென்றேன். பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி கலையரங்கத்தில் படம் பார்த்தேன். தியேட்டர் முன்பு போல் இல்லை. எங்கு திரும்பினாலும் ஒரே அழுக்காக இருக்கிறது. தியேட்டரில் மெயிண்டனன்ஸ் போதவில்லை. படம் ஆரம்பித்தவுடன் ஒரே விசில் சத்தம். பல வருடங்களுக்கு அப்புறம் தியேட்டரில் ரசிகர்களின் சத்தங்களுக்கிடையே படம் பார்த்தது என் கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்தியது. பலவிதமான நிகழ்வுகள் வந்து போயின. கதையையும், திரைக்கதையையும், லாஜிக்கையும் விட்டு விட்டு பார்த்தால் படம் மிக பிரமாண்டம். எல்லோரும் ரீமா சென்னின் நடிப்பைப் பற்றி எழுதி விட்டார்கள். அவர் குரலில் இருந்த கவர்ச்சிதான் என்னை கட்டிப்போட்டு விட்டது. யாருடைய குரல் என்று தெரியவில்லை. அது ஒரு மாதிரியான வசீகரம். சில வசனங்கள் 'ஏ' ரகம் தான். அதனால், குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது. இந்த வரியைச் சொல்லும் போது ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது. காலேஜ் படிக்கும் போது யாராவது இப்படி சொன்னால், உடனே நான், " ஏன் குடும்பத்தோட சினிமாவுக்கு போறீங்க. தனித் தனியா போய் பாருங்க" என்று கிண்டல் அடிப்பேன். அது போல இந்தப் படத்தையும் தனித் தனியா பாருங்கள். படத்தின் இடைவேளையில் இரு நண்பர்களின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.

" மாப்பிள்ளை என்னமா படத்தை எடுத்துருக்கார் செல்வா?"

" நீ எதைச் சொல்ற?"

" படத்துல உள்ள சீன்களடா!"

" ரீமா சென்னைத்தானே? சூப்பாரா காமிச்சிருக்காரு"

" நான் அதைச் சொல்லடா. பழைய காலத்தை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துருக்கார் பாரு"

" அப்படியா, எனக்கு ஒண்ணும் அப்படித் தெரியலையே?"

" அதெல்லாம் ஹிஸ்ட்ரி தெரிஞ்சவங்களாலத்தான் படத்தை ரசிக்க முடியும்"

" அப்படியா, எனக்கு ஜியாக்ரபிதான் தெரியும்"

அடிக்க ஓடுகிறார் நண்பர்.

இந்த ஜோக்கையும், லாஜிக்கையும் விட்டுத் தள்ளுங்கள். படத்தை ஒரு தடவை தனித் தனியாக (குடும்பத்தோடு அல்ல) சென்று பார்க்கலாம் செல்வாவின் உழைப்பிற்காக!!

***************************************

எங்கள் உறவினர் ஒருவருக்கு வித்தியாசமான பிரச்சனை. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று டாக்டரிடம் சென்று இருக்கிறார். அவருடைய இரத்த அழுத்தத்தை சோதித்த டாக்டருக்கு ஒரே ஆச்சர்யம். அவருடைய இடது கையில் இரத்த அழுத்தம் சரியாக உள்ளது. ஆனால், அவருடைய வலது கையில் தறுமாறாக உள்ளது. டாக்டர் உடனே, " என்ன இது. உங்கள் அம்மாவிற்கும் இப்படி உள்ளது. உனக்கும் இப்படி உள்ளது. உடம்பு சரியானவுடன் வா, உன்னை முழுவதும் பரிசோதிக்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இவர் பயந்து கொண்டு இன்னும் செல்ல வில்லை. அதற்கு முன் என்னிடம், "நீ உன் வலைப்பூவில் எழுது. யாராவது டாக்டர் நண்பர்கள் என்ன காரணமாக இருக்கும் என்று சொல்வார்கள். பிறகு நான் டாக்டரிடம் செல்கிறேன்" என்கிறார்.

அதனால், விசயம் தெரிந்த நண்பர்கள் பின்னூட்டத்திலோ, மெயிலிலோ பதில் சொல்லவும்.

***************************************

நேற்றும், அதற்கு முந்தைய நாளும் எழுதிய " இதற்கு யார் காரணம்" என்ற என்னுடைய பதிவிற்கு என் தோழிகளிடமிருந்து ஏகப்பட்ட அர்ச்சனைகள். "நீங்கள் எப்படி இது போல எழுதலாம். நல்ல விசயங்கள் மட்டும் எழுதலாமே. படிக்க கொஞ்சம் அசிங்கமாக உள்ளதே" என்று ஏகப்பட்ட போன்கால்கள் மற்றும் மெயில்கள். "எது நல்ல விசயம்? எது கெட்ட விசயம்?'' என்று எந்த விளக்கமும் யாரும் சொல்ல முடியாது. எல்லாம் அவர் அவர்கள் பார்வையைப் பொறுத்தது. நான் நடந்த நிகழ்ச்சியை அப்படியே ஒரு சிறுகதை போல் எழுதினேன். அவ்வளவுதான். மற்றபடி எப்படியாவது பிரபலமாக ஆக வேண்டும் என்பதற்காக அந்த கட்டுரைகளை எழுத வில்லை என்பதை என் நலம் விரும்பிகளுக்கு இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

***************************************

இந்த முறை லால்குடியில் உள்ள என் வீட்டில் நுழைந்தவுடன் என் கண்ணில் பட்டது இரண்டு ரூம்களின் பாத்ரூம் அருகில் உள்ள சுவர்களில் ஒரே ஈரம். முதலில் அது மழையால் இருக்கலாம் என விட்டு விட்டேன். பிறகு சுவரைத் தொட்டுப்பார்த்தால் கையில் தண்ணீர் வருகிறது. நானும் இன்ஜினியரும் சேர்ந்து எல்லா இடமும் சரி பார்த்ததில் வீட்டின் சுவரின் பின்னால் உள்ள பைப்பில் லீக் இருந்தது தெரிந்தது. நாங்கள் அதன் மூலம் தண்ணீர் உள்ளே சென்று இருக்கலாம் என் நினைத்து ப்ளம்பரை வரச் சொன்னோம். இருந்தாலும் என் மனம் எல்லாம் ஒரே கவலை. வேறு எங்காவது லீக் என்றால் இரண்டு பாத்ரூம் சுவரிலும் உள்ள டைல்ஸை உடைக்கவேண்டும். பிளம்பர் வந்தவுடன் அந்த பைப் லீக்கை பார்த்து விட்டு 'அந்த பைப்பில் லீக் இல்லை' என்று கூறிவிட்டார். பிறகு அந்த இடத்தில் உள்ள சுவற்றை சிறிது உடைத்தால், சத்தியமாக நம்ப மாட்டீர்கள், "சுவற்றின் செங்கலிலிருந்து தண்ணீர் அருவியாய் பீச்சி அடிக்கிறது". செங்கலிலிருந்து தண்ணீர் கொட்டுவதை அன்றுதான் பார்த்தேன். ஆனால், லீக் எங்கே என்று கண்டு பிடிக்க முடியவில்லை. பிறகு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ரூமில் உள்ள ஹீட்டருக்கு செல்லும் பைப் லைனில் சிறிது லீக் இருப்பதை கண்டு பிடித்தோம். பின்பு அங்கே உடைத்துப் பார்த்தால் பைப் சூடான தண்ணீரினால் மெல்ட் ஆகி உடைந்து சுவற்றின் உள்ளேயே பல நாட்களாக லீக் ஆகிக் கொண்டிருந்திருக்கிறது. எங்கெல்லாம் பைப் லைன் போகிறதோ அங்கெல்லாம் தண்ணீர் சென்றிருக்கிறது. ஒவ்வொரு செங்கல்லும் ஒண்ணரை லிட்டர் தண்ணீர் குடிக்கும் என்ற விசயமே அன்றுதான் எனக்குத் தெரிந்தது.

அந்த லீக்கை கண்டுபிடிக்கும் வரை நான் வேண்டாத தெய்வமில்லை. ஒரு வழியாக அனைத்தையும் சரி செய்தோம். இன்னும் சுவற்றின் ஈரம் அப்படியே உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காயுமாம். எல்லாம் நல்லபடியாக முடிந்த பின் டிவியை ஆன் செய்தேன், அதில்,

" ஹைட்டியில் நில நடுக்கம். கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பலி. பல லட்சம் பேர் வீடு இழந்து தவிக்கிறார்கள். அதிபரே தன் மாளிகையை இழந்து ரோட்டுக்கு வந்து விட்டார்"

சே! என்ன கொடுமை இது?. பூமியின் ஒரு மூலையில் உள்ள நான் என் வீட்டில் ஏற்பட்ட சிறிய பிரச்சனைக்கு எல்லா தெய்வத்தையும் துணைக்கு அழைத்தேன். அடுத்த மூலையில் பூமியே பிளந்து...........எல்லோரும் வீடிழந்து......... இதில் என் தவறு எதுவும் இல்லையென்றாலும், ஒரு விதமான மன நிலைக்கு நான் ஆகிவிட்டேன் என்பதென்னவோ உண்மைதான்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னால் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிந்தது. ஆண்டவன் இப்போது மக்களை அதிகமாக சோதிக்க ஆரம்பித்து விட்டான்.

***************************************

ஒரே ஒரு வார்த்தைதாங்க சொன்னேன். அதிலேயிருந்து என் நண்பன் ஒருத்தன் என்னோட பேசறத நிறுத்திட்டாங்க. அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன். நீங்களே பாருங்க. பொங்கல் அன்றைக்கு என்னைப் பார்த்த அவன் நான் அணிந்திருந்த புது சட்டையைப் பார்த்துவிட்டு இப்படிக் கேட்டான்,

" என்ன மாப்பிள்ளை பொங்கல் சட்டையா?"

" இல்லைடா. என் சட்டை"

இது ஒரு தப்பாங்க??? பாவிப்ப்ய பேசறத நிறுத்திட்டான்.

***************************************

4 comments:

anujanya said...

சுவாரஸ்யம். தொடர்ந்து இந்த மாதிரி எழுதுங்க உலக்ஸ்.

அனுஜன்யா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அவருடைய இரத்த அழுத்தத்தை சோதித்த டாக்டருக்கு ஒரே ஆச்சர்யம். //

டாக்டர் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. மேற்கொண்டு மற்ற பரிசோதனைகளைத் தொடருங்கள்

இதுவும் ஒரு வகை குறியீடுதான். தகுதிவாய்ந்த இடத்திற்குச் சென்று மருத்துவ சிகிச்சையைத் தொடரவேண்டியது அவசியம்

iniyavan said...

//சுவாரஸ்யம். தொடர்ந்து இந்த மாதிரி எழுதுங்க உலக்ஸ்.

அனுஜன்யா//

நிச்சயம் எழுதுகிறேன் சார். உங்களுடைய வருகை எனக்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுக்கிறது சார்.
நன்றி சார்.

iniyavan said...

//டாக்டர் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. மேற்கொண்டு மற்ற பரிசோதனைகளைத் தொடருங்கள்

இதுவும் ஒரு வகை குறியீடுதான். தகுதிவாய்ந்த இடத்திற்குச் சென்று மருத்துவ சிகிச்சையைத் தொடரவேண்டியது அவசியம்//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி டாக்டர். நிச்சயம் டாக்டரிடம் போகச் சொல்கிறேன் டாக்டர்.