Feb 28, 2010

மாமரம் - சிறுகதை

ஒன்பது வருடங்களுக்கு முன் என் நண்பர் ஆர்.பாலசுபரமணியன் எழுதிய கதை இது. ஆபீஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியை வைத்து எழுதினார். என்னிடம் படித்துப்பார்த்து விட்டு கொடுக்கும்படி கூறினார். நான் திருப்பித்தரவில்லை. சென்ற வாரம் ஏதோ தேடிக்கொண்டிருக்கையில் இந்தக் கதை கிடைத்தது. நண்பர் இப்போது சவுதி அரேபியாவில் வேலைசெய்கிறார். அவரிடம் தொடர்பு கொண்டபோது இந்தக் கதையை என் பிளாக்கில் வெளியிடுமாறு கூறினார். அதனால் நான் மீண்டும் டைப் செய்து இங்கே வெளியிடுகிறேன். கதையைப் பற்றிய நிறைகுறைகளை பின்னூட்டமூலமாகவோ அல்லது அவரின் மெயிலுக்கோ தெரிவிக்கலாம். அவரின் மெயில் ஐடி: ramana_bala@hotmail.com

இனி கதை:

தொலைவிலிருந்து வரும்போதே வீட்டை மறைத்துக் கொண்டு இருந்தது மாமரம். மாமரம் என்பதற்காக மாங்காய்கள் காய்க்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது போல் இருந்தது அந்த மரம். பசிய இலைகளும், செந்தளிர்களுமாக வளப்பமாக நின்று கொண்டிருந்தது. எல்லா மரங்களையும் போல இதுவும், சில பறவை இனங்கள் தங்கி போவதற்கும், கூடு கட்டவும் பயன் பட்டுக்கொண்டிருந்தது. இந்த மரத்தை வெட்ட ஆள் கூப்பிட்டு வரும்படி என் மனைவி அடிக்கடி கூறிக்கொண்டிருந்தாள். வெட்டப் பிடிக்காததால், மற்ற அலுவல்களுக்கு முக்கியம் கொடுத்து, வசதியாக மறந்து போய் கொண்டிருந்தேன்.

இந்த வீட்டிற்கு குடி வந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகியிருந்தது. நகரில் மரத்துடன், எல்லா வசதிகளுடன் அமைந்த வீடு கிடைப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் மனைவிக்கும் முதலில் இந்த வீடு பிடித்ததற்கு காரணம் வாசலில் இருந்த மாமரம்தான். ஓஹோ என்று வளர்ந்து வானம் பிடிக்க நிற்கவில்லை என்றாலும் கூட, தரையில் வெயில் விழாமல் குடை பிடித்துக் கொண்டிருந்தது மரம். அதனால் இதையே காரணமாக கூறி என் மனைவி இந்த மரத்தை வெட்டச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"ஒரு கீரை, பூ செடி வைக்க முடிகிறதா? வெயில் இல்லாமல் எப்படி வளரும்?"

ஒரு ஓய்வு நாளில் இப்படி ஆரம்பித்த பேச்சு நாளுக்கு நாள் வலிமை கூடிக்கொண்டே இருந்தது.

" ஒரே இலையாக விழுகிறது, பெருக்கி மாளவில்லை, சிவப்பு கட்டெறும்பு கூட்டம் கூட்டமாக மரத்தில் குடியிருக்கிறது. எப்ப கடித்து வைக்குமோ" என்பதாக போய்க் கொண்டிருந்தது.

இந்த வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே பக்கத்து வீட்டுப் பெண், இந்த மரத்தை காய்க்கவே காய்க்காத மரம் என்று கூறியிருக்கிறாள். நானும் இதை முன்னமே அறிந்திருந்தேன். இதற்கு முன் இந்த வீட்டில் குடியிருந்தது என் நண்பர்தான். அவ்வப்பொழுது இங்கு வந்து போயிருக்கிறேன்.

அன்று அவர்களுடைய இந்த வீட்டில், ஒரு மாலைப் பொழுதில், டீ அருந்திக்கொண்டிருந்தோம். ஊரெல்லாம் மாமரங்கள் காய்த்துக் கொண்டிருக்க, கண்கள் இந்த மரத்தில் அவற்றை தேடின.

"என்ன, இந்த மரத்தில், ஒரு பூ. சின்ன பிஞ்சு கூட இல்லை?"

வார்த்தைகள்தாம். கேட்ட பிறகுதான் அந்த கேள்வியின் முட்டாள்த்தனம் எனக்கு உறைத்தது. குழந்தை செல்வம் இல்லாத என் நண்பர் வீட்டில் இந்த அசந்தர்ப்பமான சொற்கூட்டம் எத்த்கைய வேதனையை ஏற்படுத்தியிருக்கும்?. அது வரையில் நன்றாக அனுபவித்து பேசி டீ குடித்துக் கொண்டிருந்த கணங்கள் சட்டென்று காணாமல் போய்விட்டன. என் நண்பருக்கும், அவர் மனைவிக்கும் காயத்தை என் கேள்வி ஏற்படுத்தியிருந்தது. அண்றைய பேச்சு, அதற்கு பிறகு உப்பு சப்பில்லாமல் அவசரமாக முடிந்து போய் விட்டது. வீட்டிற்கு வந்த பிறகும், என் மனம் என்னையே திட்டிக்கொண்டிருந்தது. இதனாலேயே, இந்த வீட்டீகு வந்தவுடன், இந்த மரத்தின் காய்க்காத தன்மையைப் பற்றி என் மனைவியிடம் நான் சொல்லவே இல்லை.

ஏதோ ஒரு நாள் ஊரிலிருந்து என் மனைவியின் உறவினர் வந்திருந்தார். கோடையில் காற்று பற்றி எரியும் கரிசல் காட்க்காரர் அவர். மாமரத்தையும் அதன் குளிர்ந்த நிழலையும் ஐம்புலன்களாலும் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

" மாப்பிள்ளை, ஒரு மரம் பத்து டன் ஏ.சிக்கு சமமான குளிர்ச்சித் தரும்"

ஏதோ ஒரு முறையில் மாப்பிள்ளையாகியிருந்த எனக்கு, எவ்வளவு பெரிய மரம், எந்த வகை மரம், இவ்வளவு குளிர்ச்சியைத் தரும் என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. இது என் மனைவியின் காதுகளில் விழுகிறதா என்று மட்டும் அறிந்து கொள்ள ஆவலாயிருந்தது.

அன்று அலுவலக வேலையின் தீவிரத்தில் அமிழ்ந்து போயிருந்த எனக்கு, என் மனைவியிடமிருந்து ஃபோன் வந்தது.

"தேனீ மரத்தில் கூடு கட்டியிருக்கு. எனக்கு பயமாக இருக்கு. இன்னைக்காவது ஆட்களை கூட்டி வாருங்கள்"

"தேனீ ஒன்னும் பண்ணாது"

" என்னைக் கொட்டினால் பரவாயில்லை. உங்கள் குழந்தையை கொட்டி வைத்தால் உங்களுக்கு தாளாதே என்றுதான்"

என் குழந்தை நடுவில் திருப்பு சீட்டாக நின்று கொண்டிருந்தது.

" சரி, நான் சாயந்திரம் வந்து பார்க்கிறேன்". டொக்கென்று வைக்கப்பட்ட ஃபோன் அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருந்திருக்க வேண்டும்.

அலுவலக வேலை முடிந்த கையுடன் புறப்பட்டு, யாரைக் கூப்பிட்டு இந்த மரத்தை வெட்ட சொல்வது என்ற யோசனையுடன் வீடு வந்து கொண்டிருந்தேன். மரத்தில் தேனீ இருந்த அடையாளமே இல்லை. " எல்லாம் ஓடிப் போச்சுங்க" என்றபடி வந்து நின்றாள் என் மனைவி. எப்படி என்று நானும் கேட்கவேயில்லை.

அன்று இரவு என் மனைவியும், குழந்தையும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மெதுவாக, சத்தமில்லாமல் கதவை திறந்து மரத்திடம் வந்து நின்றேன்.

"மரமே! நீ கொஞ்சம் பூத்து ஒரு சில பிஞ்சுகளையாவது பிரசவித்துவிடேன்" . வாய் திறந்து, யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்த பிறகு அதனிடம் கூறிக் கொண்டிருந்தேன். பெரிய ஜே.கே. என்று நினைப்பா மரம் காய்த்து விடுவதற்கு என்று என் மனம் கிண்டலடித்தது. காய்க்காத முருங்கை மரத்திற்கு செருப்படி கொடுத்தால் காய்க்கும் என்று எங்கேயோ படித்த ஞாபகம் இப்போழுது வந்து தொலைத்தது. மனிதனுக்கு உபயோகமில்லாத பொருட்களுக்கு என்னவெல்லாம் நேருகிறது. கறவை சக்தி இழந்த பசுக்கூட்டம் லாரி லாரியாக வெளி மாநிலம் போவதற்கும் இது தானே காரணம்.

என் நண்பர் இந்த வீட்டை காலி செய்த அன்று அவர்களுக்கு நான் உதவி செய்து கொண்டிருந்தேன். எல்லா சாமான்களையும் லாரியில் ஏற்றியாகிவிட்ட பிறகு என் நண்பரும் அவர் மனைவியும் எங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தனர். சிறிது கலங்கிய கண்களுடன் அவர் மனைவி, " உங்கள் மனைவியிடம் இந்த மரத்திற்கு தினமும் கண்டிப்பாக தண்ணீர் விடச் சொல்லுங்கள். இந்த மரம் கண்டிப்பாக காய்க்கும்". கண்டிப்பாக என்னை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் அவ்வாறு கூறவில்லை. அவர் வேதனை இந்த மரமும் படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து கூறுவது போல இருந்தது. தொலைவில் திரும்பிய காரிலிருந்து என் நண்பரின் மனைவி இந்த மரத்திற்கு தனியாக கை காட்டிக் கொண்டிருந்தது போல தோன்றியது.

இந்த கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில் ஒரு பூவையோ, வடுவையோ கூட இந்த மரம் பிறப்பித்து விடவில்லை. பருவங்கள் மாறி இலைகளையெல்லாம் கொட்டத் தொடங்கியிருந்தது மரம்.

" எவ்வளவு குப்பை. இதையெல்லாம் கூட்டி பெருக்க எனக்கு தெம்பில்லை. காலையில் பெருக்கி முடிந்ததும் மாலையில் மறுபடியும் சேர்ந்து எழவெடுக்கிறது இந்த மரம். வெட்டி தொலைக்கவும் மாட்டேன் என்கிறீர்கள்"

இனிமேலும் தள்ளிப் போட்டு கொண்டிருக்க முடியாது. இல்லயென்றால் தினம் வீட்டில் சண்டை வெடிக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை பக்கத்து வீட்டில் அரிவாள் வாங்கி நிறைய கிளைகளை வெட்டிக் கழித்துவிட்டேன். முழுவதும் வெட்டிவிட என் மனம் இடம் தரவில்லை. இப்போதிக்கு இது போதும். சம்மர் க்ராப் வெட்டிக்கொண்ட பள்ளி சிறுவனை போல இருந்தது மரம்.

மரங்களும், மாடுகளும் மாத்திரம்தான் உபயோகமில்லாமல் போகின்றனரா என்ன? சக மனிதர்களும் கூட அவ்வளவாக உபயோகமில்லாமல் போகின்றனர். எங்களுடையது ஒரு தனியார் நிறுவனம். அவ்வப்பொழுது எடுக்கப்படும் அதிரடி மாற்றங்களில் இந்த முறை நான் அதிகப்படியான ஆளாக நிர்வாகத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். காய்ப்பு குறைந்ததோ, காய் சிறுத்ததோ இல்லை பழம்தான் புளித்ததோ தெரியவில்லை. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் படி மூன்று மாத அறிவிப்பில் என்னுடைய இருப்பிற்கு அவசியமில்லை என்று நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொண்டது நிர்வாகம். அவ்வளவு சுலபமாக ஒருவரை வேலையிலிருந்து போகச் சொல்ல முடியுமா? என்று கேட்பவர்கள் அரசாங்க வேலையிலோ அல்லது யூனியன் அரவணைப்பிலோ இருக்கக் கூடும். இந்த மூன்று மாத காலத்திற்குள், வேறு வேலை தேட வேண்டிய நிஜம் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

வீட்டிற்கு வந்து மனைவியிடம் அலுவலக ஆணையை காண்பித்தேன். நிகழ் காலம் குறித்த கவலையுடன் அவள் ஸ்தம்பித்து போயிருந்தாள். மெளனமாக நின்று கொண்டிருந்தது மரம்.

இந்த வீட்டை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் காலி செய்ய வேண்டியிருக்கும். அடுத்தது இந்த வீட்டிற்கு யார் குடிவரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்காவது நிறைய குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும், மரமும் பூத்துக் குலுங்க வேண்டும் என்றும் விரும்பியது மனம்.

Feb 26, 2010

இந்த வீடியோவை பாருங்கள்....

நம்மைச் சுற்றி ஆபத்துகள் எப்போதும் உள்ளன. அதில் முக்கியமானது பிரயாணங்களின் போது ஏற்படும் விபத்து. டூவீலர் அல்லது கார் ஓட்டும்போது ஏற்படும் விபத்துகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. டூவீலர்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து ஓட்டினால் ஓரளவு நாம் விபத்துக்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நம்மில் நிறைய பேர் ஹெல்மெட் போடுவதில்லை. அரசாங்கம் ஹெல்மெட் போடுவதை சட்டமாக கொண்டுவந்தாலும் நாம் மதிப்பதில்லை. ஏதாவது காரணங்கள் சொல்லி அதை தடுத்து நிறுத்துகிறோம். மலேசியாவில் டூவீலர் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். பின்னாடி உட்கார்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது இங்கே உள்ள சட்டம். இல்லையென்றால் மிக அதிக அபராதம் செலுத்த வேண்டி வரும். அதனால் அனைவரும் ஹெல்மெட் அணிந்துதான் வண்டி ஓட்டுகின்றார்கள்.

அதே போல்தான் கார் ஓட்டுவதும். கார் ஓட்டும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணியவேண்டும். பின்னால் அமர்ந்து வருபவர்களும் சீட் பெல்ட் அணிவது ரொம்ப முக்கியம். நம் ஊருக்கு செல்லும்போதெல்லாம் நான் சீட் பெல்ட் அணிந்து காரில் செல்வது வழக்கம். அதைப் பார்த்து கிண்டல் பண்ணியவர்கள் ஏராளம். ஆனால் இப்போது, " இவன் இப்படித்தான்" என விட்டு விட்டார்கள். என்னால் ஒரு சில பேர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவதை பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது. கார் விபத்தில் தப்பித்தவர்களால் மட்டுமே சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்தை சொல்ல முடியும். மலேசியாவில் சாலைகள் மிக அருமையாக இருக்கும். அதில் கார் ஓட்டிச்செல்வது மிக அருமையான அனுபவம். ஹைவேஸில் அதிக பட்ச வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டர். நான் மாதம் ஒரு முறை எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூருக்கு சென்று வருகிறேன்.மொத்தம் 375 கிலோ மீட்டர் தூரம். ஒவ்வொரு முறை போகும்போதும் அதிக பட்ச ஸ்பீடில் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் ஏதாவது விபத்து ஒன்று கண்ணில் படுவதுண்டு. அந்த விபத்துக்களைப் பார்க்கும்போது என்னையறியாமல் என் கார் மெதுவாக செல்வதுண்டு. நிறைய விபத்துகளில் நான் பார்க்கிறேன். அதிகம் பாதிக்கப்படுவர்களும், இறப்பவர்களும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தவர்களே.

நண்பர் ஒருவர் கீழ்கண்ட வீடியோவை அனுப்பினார். சீட் பெல்ட்டின் அவசியத்தை உணர்த்தும் வீடியோ இது. இப்போது நம் ஊர் சாலைகளும் உலகத் தரத்திற்கு இருப்பதால், இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்களும் தயவு செய்து காரில் செல்லும்போது சீட் பெல்ட் போடும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.

Feb 24, 2010

இதற்கு யார் காரணம் ?

இரண்டு நாட்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் 'மறுபக்கம்' என்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். தமிழ்நாட்டு நண்பர்கள் அந்த நிகழ்ச்சியை ஏற்கனவே பார்த்து இருக்கக் கூடும். அந்த நிகழ்ச்சியில் காண்பித்த இரண்டு செய்திகளும் என்னை சினம் கொள்ள செய்தன. அந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஸ்பேக்.

நான் எட்டாவது படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம். அப்போது நான் பார்க்க ரொம்ப ஒல்லியாக இருப்பேன். நம் கலர் வேறு உங்களுக்கே தெரியும். அப்போது எனக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை போக்கியது என் அப்பாதான். 'நாம் ஒல்லியாக இருக்கிறோம், மாநிறமாக வேறு இருக்கிறோம்' என்று சிகப்பான பையன்களை பார்க்கும் போதெல்லாம் எண்ணங்கள் தோன்றும். அப்பாதான் நல்ல தைரியத்தை கற்றுக்கொடுத்தார். படிப்பில் கவனத்தை செலுத்த சொல்லிக்கொடுத்தார். அப்போது என்னை கேலி செய்பவர்களை பார்த்து பயப்படவோ அல்லது ஓடிப்போகவோ மாட்டேன். பள்ளி விடும் வரை காத்திருப்பேன். பள்ளி முடிந்தவுடன் என்னை கேலி செய்தவர்களை உண்டு இல்லை என பண்ணிவிடுவேன். எனக்கு உதவுவதற்கு என்ற சில நண்பர்களை புரோட்டா, டீ எல்லாம் வாங்கி கொடுத்து வைத்திருந்தேன். அப்போதே பாருங்கள் என்ன ஒரு கிரிமினல் புத்தி? என்ன செய்வது? நம்மால் ஒன்றும் முடியாதல்லவா? அதனால்தான் அந்த ஏற்பாடு. அது தவறு என்று இப்போது தெரிகிறது. இங்கே அந்த செய்திகளை குறிப்பிடுவதற்கு காரணம், 'நான் எப்படி தைரியமாக அந்த பிரச்சனைகளை எதிர்கொண்டேன்' என்று சொல்வதற்கு மட்டுமே. இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் உங்களுக்கே தெளிவாக புரியும்.

நான் +2 படிக்கும்போது என்னை ஒருவன் அதேபோல கிண்டல் செய்ய நான் அவனை கண்டபடி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டி விட்டேன். அதற்கு அவன், "மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்கு போக ரயில்வே ஸ்டேசன் வருவல்ல. அப்போ உன்னை பின்னி எடுக்கிறேன்" எனக் கூறிவிட்டான். அவன் மிகுந்த பலசாலி. நான் ஒல்லி. நண்பர்கள் எல்லோரும் பயந்தார்கள். என்னை அடி பின்னிவிடுவான் என்றார்கள். நான் சிறிதும் கலங்கவில்லை. ரயில்வே ஸ்டேசன் சென்றேன். அவன் இருந்தான். நேரே அவனிடம் சென்று, " என்னை அடிப்பதாக சொன்னாயே, இதோ இங்கே உன் கண் முன்னால் நிற்கிறேன். அடி" என்றேன். நிலை குலைந்து போனான் அவன். இங்கே என்ன சொல்ல வருகிறேன் என்றால், தைரியம் அதாவது பயந்து ஒதுங்காமல் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும். இது போல் பல நிகழ்வுகளை சொல்லலாம். ஆனால், இப்போது அது என் நோக்கம் அல்ல.

இப்போது விசயத்திற்கு வருகிறேன். மக்கள் தொலைக்காட்சியின் அந்த நிகழ்ச்சியில் நான் பார்த்த இரண்டு செய்திகளில் என்னை மிகவும் பாதித்தது இதுதான். ஒரு ஏழை மாணவன் கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்துள்ளான். அவன் படிப்பதற்கே அவர்கள் வீட்டில் கடன் வாங்க வேண்டி இருந்துள்ளது. அந்த நிலையில் சீனியர் மாணவர்கள் சிலர் சேர்ந்து அவனை பார்ட்டி வைக்கும்படி வற்புறுத்தி உள்ளார்கள். இவனோ, 'என்னிடம் பார்ட்டி வைக்கும் அளவிற்கு எல்லாம் பணம் இல்லை' என்று சொல்லி இருக்கிறான். தொடர்ந்து அவர்கள் வற்புறுத்தவே அவர்கள் தொல்லை தாங்காமல் ஹாஸ்டல் வார்டனிடம் புகார் செய்திருக்கிறான். ஹாஸ்டல் வார்டனோ, "நீ ஒன்றும் கவலைப்படாதே. நான் பிரின்ஸிபாலிடம் சொல்லி அவர்களிடம் பேச சொல்கிறேன்' என்றிருக்கிறார். இவனும் பிரச்சனை முடிந்தது என்ற தைரியத்தில் அவனுடைய அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்திருக்கிறான். நடு இரவு ஒரு மணி அளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. சில சமயம் வார்டன் கதவை தட்டி எல்லா ரூமிலும் ஆட்கள் இருக்கிறார்களா? என்று சரிபார்ப்பது வழக்கமாம். இவனும் அது போல நினைத்து கதவை திறந்திருக்கிறான். திறந்து பார்த்தால் அவனை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் நான்கு பேர் நின்றிருக்கிறார்கள். இவன் பயந்து நடுங்கி என்ன விசயம்? என்று கேட்க, அவர்கள், "நீ வார்டனிடம் எங்களைப் பற்றி என்ன சொன்னாய்?" என்று கேட்டிருக்கிறார்கள். இவன் நடந்த விசயத்தை சொல்லி இருக்கிறான். அடுத்து அவர்கள் செய்த செயல்தான் மிகக் கொடுமையானது.

அந்த நால்வரும் சேர்ந்து அவனை மேலிருந்து நான்கு புளோருக்கு மாடிப்படிகள் வழியாக படிகளில் இழுத்தே வந்திருக்கிறார்கள். நாலாவது மாடிக்கும் வந்ததும், அங்கிருந்து அவனை அப்படியே தூக்கி கீழே வீசி எறிந்திருக்கிறார்கள். கீழே விழுந்த அந்த பையன் உடனே கோமா ஸ்டேஜுக்கு சென்று விட்டான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்த கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்கொலை முயற்சி என்று கேஸை மூடி விட்டார்கள். பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அவனுக்கு இப்போது நினைவு திரும்பியிருக்கிறது. இவ்வளவு விசயங்களும் அவன் சொல்லித்தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆனால் என்ன கொடுமை என்றால், அந்த பையனுக்கு இடுப்புக்கு கீழே ஒரு உணர்வும் இப்போது இல்லை. அவன் இருந்தும் இல்லாத நிலை. பெற்றோர்களுக்கு இப்போது மிகுந்த சிரமம்.

இப்போது அவர்கள் கேட்பது, அவர்களின் பையனை தண்டித்தவர்களுக்கு ஏன் இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. விசயம் தெரிந்திருந்தும் கல்லூரி நிர்வாகம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? சம்பந்தப்பட்ட அந்த மாணவர்கள் இன்னும் அங்குதான் படித்துக்கொண்டிருக்கிறார்கள். எதுமே தவறு செய்யாதவர்கள் போல் இருக்கிறார்களே? அரசாங்கம் தலையிட்டு எங்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நியாயமான கேள்விகள்தான். இப்போதெல்லாம், கல்லூரி நடத்துவதே ஒரு வியாபாரமாகிப்போன நிலையில் அவர்களிடம் நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

இன்னொரு செய்தி. இதே போல் இன்னொரு கல்லூரியில் ஒரு மாணவியை ராகிங் செய்ய, செய்வதறியாத அந்த மாணவி ஆஸிட்டை எடுத்து குடித்துவிட, துடி துடித்து இறந்து போயிருக்கிறாள். என்ன கொடுமை பாருங்கள்? எப்படி ஒரு மாணவன் சக மாணவனை ராகிங் என்ற பெயரால் இப்படி கொடுமைப்படுத்த முடிகிறது. அவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகள்தானா? அவர்கள் படித்து என்ன சாதிக்க போகிறார்கள்? இவர்கள் பெற்றோர்கள் எல்லாம் என்ன சொல்லி கொடுத்து வளர்த்திருப்பார்கள்?

சிறு வயதிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு தைரியத்தை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். பயம் என்ற உணர்ச்சியே இல்லாமல் வளர்க்க வேண்டும். பிரச்சனைகளை பார்த்து ஓடி ஒளியாமல் அதனை எதிர்கொள்ள சொல்லிக் கொடுக்க வேண்டும். நான் என் பிள்ளைகளை அப்படித்தான் வளர்க்கிறேன். "யாராவது அடித்தால் திருப்பி அடி. பயப்படாதே, எதற்கும், எப்போதும்'' என்று தினமும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து அவர்களின் பய உணர்ச்சியை போக்க வேண்டும். நல்லது எது? கெட்டது எது? என்று சொல்லிக்கொடுப்பதும் பெற்றோர்கள் கடமைதான். எல்லாவற்றையும் பள்ளிகளில் எதிர்பார்ப்பது கஷ்டம்.

எப்படி செக்ஸ் கல்வி முக்கியம் என்று சொல்கிறார்களோ? அதே போல், ராகிங் செய்வது தவறு என்பதையும், அப்படியே யாராவது செய்தாலும் அதை எதிர்கொள்வது எப்படி என்பதையும், பள்ளி கல்லூரி நிர்வாகங்களே சொல்லிக் கொடுக்க அரசு உத்தரவிடவேண்டும். ராகிங் செய்பவர்களுக்கு மாணவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாம் பிள்ளைகளை நிம்மதியாக பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ அனுப்ப முடியும்.

Feb 20, 2010

ஜாலியாய் ஒரு பதிவு!

காரில் ஒரு சின்ன பிரச்சனை. சரி செய்வதற்காக மெக்கானிக் எடுத்து சென்றுள்ளார். இரண்டு நாட்களாக அடுத்தவர் கார் மூலம் எங்கும் செல்ல வேண்டியுள்ளது. 11 வருடங்களாக நன்றாக உழைத்து வந்த சோனி 29 இன்ச் டிவி திடீரென வேலை செய்யாமல் அடம் பிடிக்கிறது. மலேசியாவில் எதுவும் ரிப்பேர் செய்ய மாட்டார்கள். உடனே புதுசு வாங்குவார்கள். இருந்தாலும் ஒரு ரிப்பேர் கடையை கண்டுபிடித்து அதை சரி செய்ய கொடுத்துள்ளேன். நெருங்கிய உறவினரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அந்த கவலை வேறு. அலுவலக வேலை விசயத்திலும் அமைதியற்ற ஒரு சூழல். நிறைய கதை கரு கையில் உள்ளது. எழுத என்னவோ ஒரு சோம்பேறித்தனம். எதாவது பதிவு எழுதவும் மூடு இல்லை. இன்று விடுமுறை வேறு. இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது என் மகள், " அப்பா, அம்மாவுக்கு ஒரு நாளாவது சமையலுக்கு உதவக்கூடாதா?" என்று கேட்க, எனக்கும் சரியெனபட இன்று சமைக்க ஆரம்பித்தேன்.

மனைவி முகத்தில் ஏகப்பட்ட சந்தோசம் அதே சமயம் சிறு வருத்தமும். சந்தோசம் உதவி செய்கிறேன் என ஒப்புக்கொண்டதற்கு, வருத்தம் "இத்தனை நாள் நாம் கேட்டு உதவி செய்யாத மனுஷன், பெண் கேட்டதும் மறு பேச்சில்லாமல் சரி என்று சொல்லி விட்டாரே" என்று. ஒரு வழியாக காலிபிளவரை வைத்து ஒரு ஐட்டம் செய்தேன். ஒரு முறை நாம் சமைத்து பார்த்தால்தான் அதன் கஷ்டம் தெரியும். எத்தனை நாட்கள் மனைவி கஷ்டப்பட்டு சமைப்பதை சரியில்லை என்று சொல்லியிருக்கிறோம்? சமையல் என்பது ஒரு தனிக்கலை. முழு ஈடுபாட்டுடன் செய்ததால் சந்தோசமாக உள்ளது.

இந்த சமயத்தில் சுஜாதா ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது, " டிவி நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும் சமையல் நிகழ்ச்சியில், சமையல் முடிந்தவுடன், அதை யாராவது நிலையத்தில் உள்ளவர்கள் சாப்பிடுவார்களா? இல்லை அப்படியே குப்பையில் கொட்டி விடுவார்களா? என சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், பார்க்க அழகாக உள்ளது. ருசி எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை"

நம்புங்கள். நான் சமைத்த காலிபிளவர் மிக அருமையாக இருந்தது. நான் சமைத்தேன் என்பதற்காக சொல்லவில்லை. முடிந்தால் நீங்களும் சமைத்து ருசி பார்க்கவும். இதோ நான் சமைத்தவுடன் இன்று எடுத்த போட்டோ:செய்முறை:

01. பூண்டு, இஞ்சி தேவையான அளவிற்கு எடுத்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

02. காலிபிளவரை சிறு துண்டுகளாக அழகாக நறுக்கி, அதனை நல்ல சுடுதண்ணியில் போட்டு அடுப்பில் வைத்து அதிகம் வேகவிடாமல் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்வதால் அதில் ஏதேனும் பூச்சிகள் இருந்தால் போய் சுத்தமாகிவிடும். அதிகம் வேகவிட்டால் குழைந்து விடும்.

03. தேவையான அளவு வெங்காயம் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

04. தேவையான அளவு தக்காளி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

05. கருவேப்பிலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

06. பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி காயவிடவும்.

07. கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை காய்ந்த எண்ணையில் போட்டு கலர் மாறும் வரை கிளறவும்.

08. கருவேப்பிலையை அதில் போட்டு கிளறவும்.

09. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டை போடவும்.

10. நறுக்கிய வெங்காயத்தை போடவும்.

11. நறுக்கிய தக்காளியை போட்டு நன்று கிளற வேண்டும்.

12. பிறகு தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளறவும்.

13. தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

14. சிறிது நேரம் கழித்து நறுக்கிய காலிபிளவரை போட்டு கிளறி மூடிவிடவேண்டும்.

15. பிறகு கொதித்தவுடன் கொஞ்சம் கொத்தமல்லியைப் போட்டு இறக்கவும்.

இதனை கிரேவியாகவும் வைத்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம் இல்லை நன்றாக சுண்டியவுடன் இறக்கி வைத்து மற்ற காய்கறிகள் போலும் சாப்பிடலாம்.

இதற்கு பெயர் என்ன என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. காலிபிளவர் என்ற பெயருடன் கறி என்றோ, பிரை என்றோ அல்லது வறுவல் என்றோ ஏதோ ஒன்று சொல்லிக்கொள்ளலாம்.

Feb 17, 2010

நீங்களும் ஏமாந்து விடாதீர்கள்!

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் என் நண்பர் ஒருவர் ஒரு ஸ்கீமை சொல்லி என்னை அதில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தினார். நான் இந்த முதலீடு விசயங்களில் அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. "உடம்பு முழுவதும் எண்ணையை தடவிகிட்டு மண்ணில் விழுந்தாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்" னு ஒரு பழமொழி சொல்வாங்க இல்லையா? நான் அந்த டைப். அதிக ஆசைப்படாமல் இருந்ததும் ஒரு காரணம். சேமிக்கும் அளவிற்கோ, முதலீடு செய்யும் அளவிற்கோ என்னிடம் பணம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம். ஏதோ சம்பாதிச்சோம் செலவு பண்ணினோம்னு இருந்தேன். ஓரளவுக்கு பணம் வந்த பிறகு கூட சாதாரணமாகத்தான் இருந்தேன்.

2004 ஆம் ஆண்டு வாக்கில் தங்கம் ஒரு கிராம் 650 ரூபாய் மலேசியாவில் விற்றது. நண்பர்கள் பலர், சொன்னால் நம்ப மாட்டீர்கள், அரை கிலோ வாங்கினார்கள். " ஏன் இவ்வளவு வாங்குகின்றீர்கள்? கடை வைக்கப் போகின்றீர்களா?" என நக்கலாக கேட்டபோது, ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, " தங்கம் விலை ஏறும் வாய்ப்பு உள்ளது. அதனால் இப்போதே வாங்கி பேங்க் லாக்கரில் வைத்துவிட்டால், பெண் கல்யாணத்திற்கு உதவும்" என்று பதில் கூறினார் ஒரு நண்பர். அவர் பெண்ணுக்கு கல்யாண வயது என்றோ இல்லை கல்யாண வயதை நெருங்கி கொண்டிருந்தார் என்றோ நீங்கள் நினைத்தீர்களானால் அது தவறு. அப்போது அவரின் பெண்ணின் வயது ஒன்று. நான் வீட்டில் சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்றும் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி என்றும் இப்போது உணர்கிறேன். அப்போது 3,25,000 ரூபாய்க்கு அவர் வாங்கிய தங்கத்தின் இன்றைய மதிப்பு சுமார் 8,64,000 ரூபாய். ஏறக்குறைய 5,39,000 ரூபாய் லாபம் அடைந்திருக்கிறார் 6 வருடத்தில். நான் அந்த சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேன்.

ஆனால், என்னுடைய லாஜிக் என்னவென்றால், அவர் தங்கத்தை அப்படியே வைத்திருக்காமல், எல்லாவற்றையும் விற்று இன்று பணமாக்கி, 3,25,000 ரூபாயை மட்டும் தங்கமாக வைத்து விட்டு, லாபத்தை பணமாக்கி அதை FD யில் வைத்தால் அதை உண்மையான லாபமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால், நாம் என்ன செய்வோம்,

"அப்பா, நான் 5,39,000 ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டோம்" என சொல்லுவோமே தவிர, அதை பணமாக்க மாட்டோம். இதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது. திரும்பவும் தங்க விலை குறைந்தால் என்ன ஆவது? இந்த மாதிரி எண்ணங்களால்தான் எதிலும் அதிக ரிஸ்க் எடுக்காமல் இருந்து வந்தேன்.

எல்லோரும் என்னை கேட்பதுண்டு, "பைனான்ஸ் ப்ரொபஷனில் இவ்வளவு பெரிய ஆளாக இருந்து கொண்டு முதலீடு விசயத்தில் இவ்வளவு வீக்காக இருக்கிறாயே". நான் அவ்வாறு கேட்கிறார்களே எனக் கோபப்படுவதில்லை. ஏனென்றால் உண்மையைத்தானே சொல்கிறார்கள். அந்த அளவிற்கு இருந்த என்னை, நான் மேலே முதல் பாராவில் குறிப்பிட்ட அந்த நபர் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை கரைத்து, குழப்பி முதலீடு செய்யுமாறு வற்புறுத்தினார். 2004 லிருந்தே அவர் என்னை எல்.ஐ.ஸியில் முதலீடோ அல்லது பாலிஸியோ எடுக்கச் சொல்லி தொந்தரவு செய்தார். நான் மறுத்துக்கொண்டே இருந்தேன். இந்த முறை அவர் நச்சரிப்பு தாங்காமல் ஒப்புக்கொண்டேன். அவர் என்னை SBI UNIT Linked Insurance Office க்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த மேனேஜர் கம்ப்யூட்டரில் எக்ஸல் டேபிளில் பலவாறு கணக்கு போட்டு,

" சார், இந்த ஸ்கீமுல வருசத்துக்கு 5 லட்சம்னு மூன்று வருடம் தொடர்ந்து முதலீடு செஞ்சீங்கன்னா, மூன்று வருடம் லாக் இன் பீரியட் முடிந்தவுடன் நீங்கள் முதலீடு செய்த 15 லட்சத்துக்கு நாங்கள் 30 லட்சம் கொடுப்போம். நாங்கள் சாதாரண பங்குகளிலோ அல்லது Mutual Fund லோ முதலீடு செய்வதில்லை. எல்லாம் பெரிய பெரிய கம்பனிகளில்தான் முதலீடு செய்வோம். அதுவுமில்லாமல் மூன்று வருடத்திற்கு இன்ஸ்யூரன்ஸ் வேறு உங்கள் குடும்பத்திற்கு கவர் ஆகிவிடும்" என்று கூறினார்.

இதைக் கேட்ட நான் என் இயல்பு நிலையிலிருந்து மாறி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பேரில் ஒரு லட்சமும், என் தம்பியின் பேரில் ஒரு லட்சமும் போட்டேன். நான் காசோலை கொடுக்கும் முன் என்னைப்போட்டு புடுங்கி எடுத்தார். அவசரப் படுத்தினார். ஒரு நாள் என் தேவைக்கு கார் எல்லாம் கொடுத்தார். பின்புதான் எனக்குத் தெரிந்தது. 5 லட்சத்துக்கு கிட்டத்தட்ட அவருக்கு கமிஷன் 1 லட்ச ரூபாய். ஒரு லட்சத்துக்கு 20,000 ரூபாய் கமிஷன். இதே அடுத்த ஏஜண்டிடம் சென்றிருந்தால், அந்த கமிஷனில் பாதி எனக்கு கிடைத்திருக்கும். அதாவது 90,000 கட்டினால் போதும். ஆனால், தெரிந்த நண்பரே என்னை ஏமாற்றி விட்டார்.அதோடு இல்லாமல், அவருடைய டார்கெட்டை முடிக்க என் 5 லட்சம்தான் உதவியிருக்கிறது. அதனால், பேங்கின் மூலம் அவருக்கு மொரிஷியஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்து, போயும் வந்து விட்டார். இப்படியே சம்பாரித்து பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.

ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் பணம் கட்ட வேண்டிய தருணத்தில் திருச்சியில் உள்ள பேங்க் மேனேஜருக்கு போன் பண்ணினேன். அந்த புண்ணியவான், "சார், நான் பொய் சொல்ல விரும்புல. fund நல்லா போகலை. அதனால நீங்க ஒரு டேர்மோட நிறுத்திக்குங்க" என்று கூறினார். அவருக்கு ஏனோ எனக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும் போல. நானும் ஒரு வருடத்திற்கு பிறகு கட்டவில்லை. அம்மா ஒவ்வொரு முறையும் போன் செய்யும் போது 'பேங்கில் இருந்து லட்டர் வந்துள்ளது' என்பார்கள். லாக் இன் பீரியட்ல தானே இருக்கு? அதனால் என்ன எழுதியிருந்தால் என்ன? என்று விட்டு விட்டேன்.

மூன்று வருடம் முடிந்து, தீபாவளி சமயத்தில் ஊருக்கு போயிருந்த போது பணத்தை எடுக்கலாம் என விசாரித்தபோது, அவர்கள் சொன்னதைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். 5 லட்சத்துக்கு 10 லட்சம் வர வேண்டும், ஆனால் அவர்கள் சொன்னதோ,

" சார், இப்போ எடுத்தீங்கன்னா, 2,50,000 ரூபாய் தான் கிடைக்கும். அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"

நொந்து போய் வந்து விட்டேன். பொங்கலுக்கு போன போது கேட்டேன்,

" இன்னும் ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கங்க சார். அதிகம் கிடைக்கும்"

போட்ட பணம் கிடைக்க இன்னும் எத்தனை ஆறு மாதம் காத்து இருக்க வேண்டும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஒழுங்கா பேங்க்ல FDல இருந்திருந்தாலாவது நார்மல் பேங்க் வட்டி வந்திருக்கும். உள்ளதும் போய் இப்போ முதலுக்கே மோசமாயிருச்சு.

அதனால என்னோட அனுபவத்துல சொல்றேன், நல்ல முதலீடுனா என்னோட சாய்ஸ் ரெண்டுதான்:

1) நிலம் (வயல்) அல்லது வீட்டு மனை
2) தங்கம்.

இல்லைனா பேங்க்ல கொடுக்கற வட்டி போதும்னு இருந்துட வேண்டியதுதான். மீதி எல்லாத்துலயும் அதிக ரிஸ்க் இருக்கு.

ஏதோ உங்க கிட்ட பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு, அதான் சொல்லிட்டேன் .

Feb 16, 2010

மிக்ஸர் - 16.02.10

பரிசல் பழகுவதற்கு இனிமையானவர். இரண்டு முறை முயற்சித்தும் இன்னும் என்னால் சந்திக்க இயலவில்லை. விரைவில் சந்திப்பேன். நான் பதிவுலகத்திற்கு வந்ததற்கு பரிசல் எப்படி காரணமோ அதேபோல் இன்னும் பதிவுலகை விட்டு விலகாமல் இருப்பதற்கும் பரிசலே காரணம். சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். ஏனென்றால் அப்போதிருந்தே பல விசயங்களையும் படித்து நண்பர்களுடன் விவாதிப்பேன். எல்லா பத்திரிக்கைகளையும், பேப்பர்களையும் படித்துவிட்டு விவாதிப்பேன். அரசியலாகட்டும், சினிமாவாக இருக்கட்டும், இல்லை படிப்பாக இருக்கட்டும், அனைத்தையும் விவாதிப்பேன். அதனால் நான் பேசுவதே அதிகமாக இருக்கும். ஆனால், சில காலமாக நான் பேசுவதை குறைத்துக்கொண்டு அடுத்தவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கிறேன். அதற்கு காரணம் பரிசல். என்னைவிட வயதில் சிறியவர் பரிசல். ஆனால், நல்ல விசயங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். இப்போதெல்லாம் தினமும் ஒரு 30 நிமிடம் காலையோ அல்லது மாலையோ பரிசலிடம் கூகிளில் பேசாவிட்டால் ஒரு திருப்தி ஏற்படுவதில்லை. எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. நேரில் பார்க்காமலேயே ஒருவரிடம் இவ்வளவு அன்பாக பழக முடியுமா? ஆம். முடியும், அது பரிசலால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட நண்பனின் புத்தகவெளியீட்டு விழாவிற்கு என்னால் செல்ல முடியாதது வருத்தமாக உள்ளது. பரிசல் இது போல் நிறைய எழுத வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

கேபிள் சங்கர். நல்ல கலகலப்பான மனிதர். யாரை பார்த்தாலும், 'தலைவரே' என்று அன்போடு அழைப்பவர். ஒரே ஒரு முறை நேரில் நண்பர் தண்டோரா அலுவலத்தில் சந்தித்து இருக்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவர் வாய்திறந்து பேசினாலே ஒரே சந்தோசம்தான். சிரித்துக்கொண்டே இருக்கும் மாமனிதர். அன்று கார்க்கியிடன் சேர்ந்து நன்றாக பாடவும் செய்தார். ஒரு இயக்குனருக்கான அனைத்து தகுதியும் இருந்தும் ஏன் இன்னமும் ஜெயிக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. விரைவில் ஒரு நல்ல படத்தை இயக்குவார் என நம்புகிறேன். தலைவருக்கும் வாழ்த்துக்கள். பரிசலும், கேபிளும் எப்படியாவது புத்தகங்களை எனக்கு மலேசியாவிற்கு அனுப்பி வைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். பணம் கொடுத்துவிடுவேன்!!!

போட்டோக்கள் அனைவரது பதிவுகளிலும் பார்த்தேன். ஆனால் பதிவர் நண்பர் மோகன் குமாரின் படங்கள்தான் டாப். என்ன ஒரு கிளாரிட்டி. என்ன கேமரா மோகன்? கலக்கிட்டீங்க.

***********************************

சனிக்கிழமை 'அசல்' படம் பார்த்தேன். எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டு, யுவகிருஷ்ணாவின் விமர்சனத்தையும் படித்து விட்டு தியேட்டருக்கு சென்றேன். விமர்சனங்களை படித்து விட்டு படம் பார்க்க செல்வதில் சில நல்லதும் இருக்கிறது பல கெட்டதும் இருக்கிறது. "யுவா" எழுதிய மூன்று விசயங்கள் படம் பார்க்கும் வரை மனதில் இருந்து கொண்டே இருந்தது. 1) கதை - என்ற இடத்தில் அஜித்தின் பெயர் இடம் பெறுகிறது. இல்லாத ஒன்றுக்கு ஏன் பெயர் போடுகிறார்கள், 2) உதவி இயக்குநர் - அஜித்தின் பெயரும் உள்ளது - இனி அவர் இயக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன், 3) நான் பாவனாவாய் இருந்தால் அங்கிள் அஜித்தை சைட் கூட அடிக்க மாட்டேன். யுவாவின் இந்த மூன்று கருத்துக்களுடன் நானும் ஒத்துப் போகிறேன்.

ஆனால் இதையும் மீறி படம் அப்படி ஒன்றும் குறை சொல்லும்படி இல்லை. படம் ரொம்ப போர் என்று சொல்ல முடியவில்லை. அதே சமயம் சூப்பர் டூப்பர் என்றும் சொல்ல முடியவில்லை. பாடல்கள் சுமார் ரகம்தான். இந்த முறை பரத்வராஜ் சரணை நன்றாக ஏமாற்றிவிட்டார். அஜித்தின் தந்தையை பற்றிய பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்டால், அப்படியே சிவாஜியை பற்றி பாடுவதுபோல் உள்ளதாம். இது சரண் சொன்னது. நான் கண்களை மூடிக்கொண்டும் கேட்டேன், திறந்து கொண்டும் கேட்டேன், எனக்கு ஏதும் தோன்றவில்லை. படத்தை படமாக்கியவிதம் அருமை. ஒரு ஆங்கிலப் படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது. ஆனால் பில்லாவின் பாதிப்பு நிறைய இடங்களில் தெரிகிறது. 'தல' கொஞ்சம் உடம்பை குறைத்தால் நல்லது. நான் அசலை அனுபவித்தே பார்த்தேன். ஆனால் என்ன ஒரு கொடுமையான விசயம் என்றால், தியேட்டரில் என் குடும்பத்தையும், ஆப்பரேட்டரையும் சேர்த்து மொத்தமே 10 பேர்தான்.

***********************************

சமீபத்தில் நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். எங்கள் குடும்பத்தில் உள்ள சிலரும், அவர் குடும்பத்தில் உள்ள சிலரும் சேர்ந்து ஆளுக்கு 50,000 ரூபாய் போட்டு ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, ஏழை எளியவர்களின் படிப்பிற்கும், ஏழை நோயாளிகளுக்கும் உதவலாம் என ஒரு மனதாக பேசி ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். இதைபற்றி சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

" நீங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உதவி தேவைப்படுகிறதா? என்று பாருங்கள். நம் குடும்பத்திலேயே கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருந்தால், அவர்களை விட்டு விட்டு மற்றவர்களுக்கு உதவுவதில் என்ன பயன்? நம் குடும்பம் என்றால், அனைத்து உறவினர்களையும் குறிப்பிடுகிறேன். நம்மிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால், நாம் அடுத்தவர்களுக்கு உதவினால், அவர்கள் அதை நினைத்து நமக்கு நன்றி சொன்னால் சந்தோசப்படுகிறோம். அப்படி சொல்லாவிட்டால் கூட அதை பெரிதாக நினைக்காமல், ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற திருப்தியோடு இருக்கிறோம். அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், இதே உறவினர்களுக்கு உதவி செய்து அவர்கள் நன்றி சொல்லாவிட்டாலோ அல்லது நாம் எதிர்பார்த்த மரியாதை தரவில்லையென்றாலோ மிகுந்த கோபம் அடைகிறோம். இது தவறு. எதையும் எதிர்பார்க்காமல் செய்வதுதான் உதவி. ஏதாவது எதிர்பார்த்து உதவி செய்தால் அதில் ஒரு புண்ணியமும் இல்லை. அதனால், முதலில் உங்கள் உறவினர்களுக்கு ஏதாவது உதவி தேவையா? என்று பாருங்கள். பிறகு டிரஸ்ட் ஆரம்பிப்பதை பற்றி யோசியுங்கள்"

அவர் சொல்வது சரி என்றும் படுகிறது. குழப்பத்தில் நான். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

***********************************

"என் உறவினர் ஒருவர் அவர் வாழ்க்கையை தொலைத்து விட்டு தனி ஆளாக நிற்கிறார். எப்படியாவது அவரை காப்பாற்றி அவருக்கு ஒரு நல் வாழ்வை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது நடக்காமலே இருக்கிறது. இன்னும் அந்த உறவினர் மேலும் ஆண்டவன் மேலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இருவருமே நான் சொல்வதை ஒரு வேளை காது கொடுத்து கேட்கக் கூடும்"

இப்படி ஒரு பதிவில் எழுதியிருந்தேன். உடனே நல்ல வேலையிலிருக்கும் வெளிநாட்டில் உள்ள ஒரு தோழியிடமிருந்து ஒரு மெயில் வந்தது. "என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள். நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். அந்த நபரின் போன் நம்பர் குடுங்கள். என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள், நான் பேசுகிறேன். நான் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்கிறேன். நான் அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்" என்று எழுதியிருந்தார்கள். அதை பற்றி சம்பந்தப்பட்ட நண்பருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். சும்மா படித்து விட்டு போகாமல் எனக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்து என்னை தொடர்பு கொண்ட அந்த தோழிக்கு என் இதயம் கனிந்த நன்றி.

***********************************

வெள்ளிக்கிழமை இரவு ரொம்ப போர் அடித்ததால் மலேசியா ஆஸ்ட்ரோவில் ஆறுமுகம் என்ற ஒரு பாடாவதியான படத்தை பார்த்தேன். பார்க்க பார்க்க இந்த படத்தை எங்கேயோ பார்த்தது நினைவுக்கு வந்தது. அப்படியே படம் அண்ணாமலை போல இருந்தது. இந்த படம் அதன் ரீ மேக்கா என்று எனக்குத் தெரியவில்லை. தலைவர் இடத்தில் பரத். வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த லட்சணத்தில் இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா.

சில படங்கள் மலேசியா ஆஸ்ட்ரோவில் டைரக்டாக ரிலீஸ் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். கொடுமைடா சாமி!

***********************************

கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் 'தல'யின் பேச்சை படிக்க நேர்ந்தது. இந்த மாதிரி தைரியமாக பேச தலைவர் சூப்பர் ஸ்டார்னால மட்டும்தான் முடியும். அதனால்தானோ, என்னவோ, தலைவரே எழுந்து கைதட்டியிருக்கார். எப்போதும் அமைதியாக இருக்கும் தல இந்த தடவை பொங்கி எழுந்துருக்கார். எனக்கு என்னவோ பாட்சா பட வெற்றியில் தலைவர் பேசிய பேச்சுக்கள் ஞாபகம் வந்து போனது. வாழ்த்துக்கள் தல.

கார்க்கி கோபித்துக் கொள்ள வேண்டாம். எனக்கு விஜயும் பிடிக்கும்.

***********************************

Feb 11, 2010

தெய்வங்களும், நானும் மற்றும் விதியும்..........

நேற்று முன்தினம் எழுதிய பதிவில் இப்படி எழுதியிருந்தேன்:

"விதியைப் பற்றி முன்பெல்லாம் நான் அதிகம் யோசித்தது இல்லை. சமீபகாலமாக விதியை நினைத்தாலே பயமாக இருக்கிறது. எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் ஒரு குடும்பம். அழகான கவிதையான குடும்பம். மூன்று பெண்கள், ஒரு ஆண் என்று நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்கள் லண்டனில் வேலை செய்கிறார்கள். ஒரு பையன் அமெரிக்காவில் படிக்கிறான். ஒரு பெண் ரஷ்யாவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு, சொந்த ஊரில் கிடைத்த ஹவுஸ்சர்ஜன் வாய்ப்பை வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு, மலேசியாவின் ஒரு தீவான சபாவில்தான் ஹவுஸ் சர்ஜன் செய்வேன் என்று அடம்பிடித்து அங்கு சென்றார். இதனை விதி என்பதா? இல்லை, ஒரு டாக்டர் பையன் BMW கார் வாங்கியதற்கு பார்ட்டி தருகிறேன் என்று கூறியதற்காக, மூன்று கார்களில் பார்ட்டிக்கு சென்று, சாப்பிட்டு வரும் வழியில், புது காரில்தான் வருவேன் என்று அடம்பிடித்து, புது காரில் ஏறி, வீட்டிற்கு திரும்பும் வழியில் கார் பஸ்ஸில் மோதி அப்பளமாக, அனைவரும் இறந்து, அந்த பெண்ணும் இறந்து விட்டதை விதி என்பதா? ஒன்றும் புரியவில்லை. அந்த வீட்டை கடந்து செல்லும் போதெல்லாம் என் மனம் ஒரே இறுக்கமாக உள்ளது"

இந்தப் பதிவை எழுதிய அன்றைய இரவுதான் அந்த பெண்ணின் உடல் வீட்டிற்கு வந்தது. அதாவது அந்த பெண் இறந்தது சென்ற வெள்ளிக்கிழமை நடு இரவு. பிறகு எல்லா பார்மாலிட்டிகளையும் முடித்து எங்கள் ஊருக்கு வந்து சேர அத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இன்று மதியம் அடக்கம் செய்கிறார்கள். அதாவது ஒரு வாரம் கழித்து. ஏனென்றால் அனைத்து சகோதர, சகோதரிகளும் மற்ற நாடுகளிலிருந்து வர தாமதமாகிவிட்டது. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. உலகத்திலேயே 'BMW கார்தான் மிக உயர்ந்த பாதுகாப்பான கார்' என்கிறார்கள். எப்படி இப்படி அப்பளமாகிப் போனது? என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. அதுவும் புது கார் வேறு. அதைத்தான் விதி என்று கூறினேன். நான் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது வெகு சிலரே இருந்தனர். அந்த பெண்ணின் உடலைப் பார்த்ததும் என்னால் துக்கத்தை கட்டுப் படுத்த முடியவில்லை. நான் அடைந்த வேதனையை பார்த்த மற்றவர்கள் வியந்திருக்கக் கூடும். என்ன இது? இந்தியாவிலிருந்து வந்த ஒருவன் யாரோ ஒரு பெண்ணிற்காக இப்படி கலங்குகிறானே? என்று. காரணம் இருக்கிறது.

இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் அந்தப் பெண் உயிருடன் இருந்த போது நான் பார்த்தது இல்லை. விதியைப் பாருங்கள். முதல் முறையாக ஒரு பெண்ணை இறந்தவுடன்தான் பார்க்கிறேன். அந்த பெண்ணின் பெற்றோர்களைப் பார்த்தபோது என்னால் எதுவுமே பேச முடியவில்லை. அவர்களும் அழுது அழுது ஓய்ந்து போய் இருந்தார்கள். அந்த மரணம் அவர்களுக்கு தந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தவுடன் என் நினைவுகள் ஒரு 12 வருடம் பின்னோக்கிச் சென்றது.

மலேசியாவிற்கு 1997 ஜூலை மாத இறுதியில் கிளம்பியபோதே என் தங்கை மிகச் சோர்வாக இருப்பதைப் பார்த்தேன். அப்போதெல்லாம் மாதம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்பாவிடம், ஏன் அப்படி இருக்கிறாள் என்று கேட்டபோது, ஒன்றும் இல்லை, சாதாரண உடல் வலிதான் என்று கூறினார். நானும் எந்த வித சிந்தனையும் இல்லாமல் மலேசியாவிற்கு வந்து விட்டேன். நான் வெளி நாட்டிற்கு வந்த குஷியில் அனைத்தையும் மறந்து போனேன். அப்பா பேசும் போதெல்லாம், எல்லோரும் நன்றாக இருப்பதாகவே கூறினார். குறைந்த சம்பளத்தில் என் வாழ்க்கை ஆரம்பமானது. அப்போதெல்லாம் லட்சம் சேமிப்பது என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது. அப்பா ஒரு நாள் போன் செய்தபோது, " ரவி, உன் தங்கைக்கு ஒரு ஆப்பரேசன் செய்ய வேண்டி உள்ளது. அதனால் உன் முதல் இரண்டு மாத சம்பளத்தை ஆப்பரேசனுக்காக கட்டி விட்டேன்" என்று கூறினார்.

நான் உடனே, " அதனால் என்ன அப்பா, பரவாயில்லை" என்று சொன்னேனே தவிர, இவ்வளவு பெரிய தொகை வெறும் ஆப்பரேசனுக்கு மட்டுமே என்றால், அது பெரிய ஆப்பரேசனாகத்தான் இருக்கும் என்று இந்த மர மண்டைக்குத் தெரியவில்லை. அதுவுமில்லாமல் நம் குடும்பத்திற்கு ஒரு கெடுதலும் நடக்காது என்று இருந்து விட்டேன். ஒரு துளி சந்தேகம் கூட வராமல் அப்பா பார்த்துக்கொண்டிருக்கிறார். இது நடந்து ஒரு மாதம் கழித்து, அதாவது ஜனவரி 1, 1998 அன்று மதியம் ஊரிலிருந்து ஒரு போன் வந்தது. என் நண்பன்தான் பேசினான். அப்பா என்னை உடனே கிளம்பி வரச்சொன்னதாகச் சொன்னான். 'என்ன காரணம்?' என்று கேட்டதற்கு, 'வா பேசிக்கலாம்' எனக் கூறினான். நான் ஏற்கனவே ஜனவரி 8ம் தேதி ஊருக்கு போவதற்கு டிக்கட் புக் செய்து வைத்திருந்ததால், ஒரு வாரத்திற்கு முன் செல்வது அப்படி ஒன்றும் பெரிய விசயமாக எனக்குத் தோன்றவில்லை. அதுவுமில்லாமல் முதல் முறை வெளி நாடு வந்து போவதால் உடனே வர ஒப்புக்கொண்டேன். அன்று இரவே சென்னைக்கு கிளம்பினேன். சென்னையை அடைந்ததும் வெளியில் வந்து பார்த்தால் நான் அன்று இரவே ஊருக்கு கிளம்புவதற்காக, டிரைவருடன் ஒரு காரை எங்கள் நிறுவன MD ஏற்பாடு செய்து வைத்துள்ளார். இந்த மரமண்டைக்கு அப்போது கூட தவறாக ஒன்றும் தெரியவில்லை.

இரவோடு இரவாக ஊருக்கு பயணமானேன். எங்கள் ஊருக்கு காலை ஒரு ஆறு மணி வாக்கில் சென்றோம். எங்கள் தெரு நெருங்கும் வரையில் எனக்கு ஒன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், தெருவில் நுழைந்தவுடன் வித்தியாசத்தை உணர்ந்தேன். ஒரே கும்பல். மனம் பதபதைக்க ஆரம்பித்தது. இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நன்றாக கவனித்ததில் வீட்டில் முன் பந்தலும், கும்பலாக மக்களும் தெரிந்தார்கள். ஏதோ நடந்திருப்பதை உள்ளுணர்வு சொல்லியது. ஆனால், யார்.....? தெரியவில்லை. ஒரே குழப்பம். வீட்டில் நுழையும் தறுவாயில், 'யாருக்கு என்ன நடந்தது என்று சொல்லாமலே' என்னைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள். பிறகு அழுதுகொண்டே விசாரிக்கையில் என் தங்கை இறந்துவிட்டதாக கூறினார்கள். 'எப்படி இறந்தாள்?' என்று கேட்டதற்கு, 'உனக்குத் தெரியாதா? ஆறு மாதமாக இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை. பிறகு மாற்று கிட்னி பொறுத்தினார்கள். அப்படியும் பயனில்லாமல் இறந்து விட்டாள்" என்றார் ஒருவர். "எப்படி கிட்னி கிடைத்தது?" என்று கேட்ட என்னை வினோதமாக பார்த்தார் அந்த நபர். புரிந்து கொண்ட நான் வீட்டில் உள்ள அனைவரையும் ஒவ்வொருவராக பார்த்தேன், இவரா? இல்லை அவரா? யார் கொடுத்திருப்பார்? இந்தக் கொடுமை யாருக்குமே வரக்கூடாது. பிறகுதான் தெரிந்தது என் பெரிய அக்கா அவர்கள் கிட்னியை கொடுத்திருக்கிறார்கள் என்று.

அவர்களை பார்க்கலாம் என்றால், "தான் கிட்னி கொடுத்தும் பயனில்லாமல் போய் விட்டதே" என்று மூர்ச்சையாகி இருந்தார்கள். என்னை கேட்டிருந்தால் நான் கொடுத்திருப்பேனா? என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. பிறகு என் தங்கையை பார்த்து கதறி கதறி அழுதேன். அன்று மறுபடியும், தெய்வம் என்ற ஒன்று உள்ளதா? என்று குழம்பிப்போனேன். வாழ வேண்டிய வயதில் எங்களை விட்டு என் அன்புத் தங்கை பிரிந்து விட்டாள். அந்த இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் ஒரு வினோதப் பழக்கம், நாங்கள் யாரும் 'அண்ணா, அக்கா' என்று உறவு முறை சொல்லி கூப்பிடுவதில்லை. எல்லோருமே பெயர் சொல்லித்தான் கூப்பிட்டுக்கொள்வோம். அப்படிப்பட்ட எங்கள் குடும்பத்தில் ஒரு முறை அவளுடைய தோழிகள் மத்தியில் என்னை, 'என் அண்ணா' என்று சொன்னதும், ஒரு முறை 'அன்புள்ள அண்ணா' என்று எனக்கு கடிதம் எழுதியதும் இன்றும் என் நினைவில் உள்ளது. அதனால்தான், என் தங்கையைத் தவிர வேறு யாரையும் என்னை 'அண்ணா' என்று கூப்பிட அனுமதிப்பதில்லை.

என் தங்கைக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது என்பதும், எங்கள் குடும்பத்திற்கு பணத் தேவை இருக்கிறது என்பதும் என் MDக்கு நண்பர்கள் மூலமாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் எனக்கு மலேசியா வாய்ப்பு கொடுத்திருப்பார் என்று இன்றும் நம்புகிறேன். 'தெய்வம்' என்று ஒன்று உள்ளதா? எனக் குழம்பிப்போனேன் என்று சொன்னேன் அல்லவா? பிறகுதான் தெரிந்தது, தெய்வம் என்பது வேறு எங்கும் இல்லை, நாம் வாழும் பூமியிலேயே இருக்கிறது, என்று.

எனக்கு உதவிய எங்கள் MDயும், கிட்னி குடுத்த அக்காவும், என் கண்களுக்குத் தெய்வமாக தெரிந்தார்கள். இன்றும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்பா ஏன் முன்பே என்னிடம் அனைத்தையும் கூறவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். "அவனே இப்போது தான் அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் எல்லாவற்றையும் கூறினால், எனக்கு மலேசியா வேலையே வேண்டாம், என்று வந்துவிடுவான். அதனால் முடிந்த வரை நாம் காப்பாற்ற முயற்சி செய்வோம்" என்று என் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார். அதோடு இல்லாமல் நண்பர்களையும் என்னிடம் எதும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி இருக்கிறார்.

நாங்கள் அனைவரும் என் தங்கையின் நினைவிலிருந்து மீண்டு வர பல காலம் ஆனது. அதனால் ஒவ்வொரு புது வருடமும் அந்த நினைவுகள் வந்து போகிறது. என்ன செய்ய? விதி வலியது இல்லையா?

அன்று இரவு ஆக்ஸிடண்டில் இறந்து போன அந்த பெண்ணின் உடலைப் பார்க்கும் போது என் தங்கையின் நினைவு வந்து போனது. அதனால் மனதிற்குள்ளேயே கதறி கதறி அழுதேன். இன்று என் தங்கை இருந்திருந்தால் அவளுக்கும் இரண்டு குழந்தைகள் இருந்திருக்கும். நாம் நினைப்பது எல்லாமே நடக்கிறதா என்ன?

இந்த முறை ஊருக்கு சென்ற போது தங்கைக்கு சாமி கும்பிட்டபோது தாங்காமல் அம்மா அழுதார்கள். நான் மனதை கல்லாக்கிகொண்டேன். என் இன்னொரு அக்கா, " ஏம்மா அழற? அவ இன்னேரம் வேறு எங்காவது பிறந்து நல்லா வாழ்ந்துகிட்டு இருப்பா. கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினார்கள்.

ஆம், உண்மைதான். என் தங்கை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள், என் மகளாக.

Feb 9, 2010

இதையும் படியுங்கள்!

கடந்த சில நாட்களாக நான் எதுவும் எழுதவில்லை. ஏன்? அதிக வேலையா? தெரியவில்லை. ஏன் இத்தனை நாட்கள் இவ்வளவு பதிவுகள் எழுதினேன்? காரணம் தெரியவில்லை. அதே போல் ஏன் எழுதவில்லை? என்பதற்கும் காரணம் தெரியவில்லை. நான் தினமும் எழுதுகிறேனோ இல்லையோ, தினமும் என் எழுத்துக்களைப் படிக்க வரும் அந்த 100 பேருக்கு நன்றி. தினமும் படிக்க வருபவர்களின் எண்ணிக்கையை ஒரு 500 பேராக ஆக்கலாம் தான். ஆனால் அதற்குரிய உழைப்பு என்னிடம் இல்லை. சில சமயம் எழுதப் பிடிக்கிறது. பல சமயம் படிக்க மட்டுமே பிடிக்கிறது. அது ஏன்? எப்படி தினமும் எழுதுவதற்கும், எழுதாதற்கும் காரணம் தெரியவில்லையோ அதே போல் இதற்கும் காரணம் தெரியவில்லை.

சில சமயம் நம்மை அறியாமல் வாழ்க்கையில் ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. ஏதாவது ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தால்தான் வாழ்க்கை சுவையாக இருக்கிறது. இல்லையென்றால் ஏதோ ஒரு வெற்றிடத்தில் இருப்பது போல் ஒரு பிரம்மை ஏற்படுகிறது. எதை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று சரியாக தெரியவில்லை. பணமா? பதவியா? அந்தஸ்தா? இதில் எதிலுமே இப்போது அதிக நாட்டம் இல்லை. காரணம், தெரியவில்லை. நானும் மற்றவர்களிடம் அன்பாக இருப்பது போல, மற்றவர்களும் என்னிடம் அன்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அன்பு மட்டுமே சந்தோசம் அளிக்க கூடிய ஒன்று. சரிதானே?

எனக்கும் அழகான பெண்களுக்குமான (அது என்ன அழகானப் பெண்கள்? எல்லாப் பெண்களுமே அழகுதான்) நட்புகளை நான் என்றைக்குமே மறைத்ததில்லை. நான் அழகோ இல்லை அசிங்கமோ, நான் சிகப்போ இல்லை கருப்போ, பெண்கள் என்னை நேசிக்கவே செய்கிறார்கள். எனக்கும் பெண்களுக்குமான அலைவரிசைகள் அப்படி. என்னிடம் பழகுவதில் அவர்களுக்கு அப்படி ஒன்றும் ஆபத்தில்லை. பல் இருந்தும் பட்டாணி சாப்பிட ஆசைப்படாதவன் நான். ஆனால் சமீபகாலமாக முகம் பார்க்காமல் ஏற்படும் இணைய நட்பில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. அது பிடிக்கவும் இல்லை.அதனால் தொந்தரவு அதிகமாக உள்ளது. அதனால் அவர்களிடமிருந்து ஒதுங்கி போகவே ஆசைப்படுகிறேன். ஆனாலும், தொடர்ந்து துன்புறுத்தும் தொந்தரவுகள்........?

விதியைப் பற்றி முன்பெல்லாம் நான் அதிகம் யோசித்தது இல்லை. சமீபகாலமாக விதியை நினைத்தாலே பயமாக இருக்கிறது. எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் ஒரு குடும்பம். அழகான கவிதையான குடும்பம். மூன்று பெண்கள், ஒரு ஆண் என்று நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்கள் லண்டனில் வேலை செய்கிறார்கள். ஒரு பையன் அமெரிக்கவில் படிக்கிறான். ஒரு பெண் ரஷ்யாவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு, சொந்த ஊரில் கிடைத்த ஹவுஸ்சர்ஜன் வாய்ப்பை வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு, மலேசியாவின் ஒரு தீவான சபாவில்தான் ஹவுஸ் சர்ஜன் செய்வேன் என்று அடம்பிடித்து அங்கு சென்றார். இதனை விதி என்பதா? இல்லை, ஒரு டாக்டர் பையன் BMW கார் வாங்கியதற்கு பார்ட்டி தருகிறேன் என்று கூறியதற்காக, மூன்று கார்களில் பார்டிக்கு சென்று, சாப்பிட்டு வரும் வழியில், புது காரில்தான் வருவேன் என்று அடம்பிடித்து, புது காரில் ஏறி, வீட்டிற்கு திரும்பும் வழியில் கார் பஸ்ஸில் மோதி அப்பளமாக அனைவரும் இறந்து அந்த பெண்ணும் இறந்து விட்டதை விதி என்பதா? ஒன்றும் புரியவில்லை. அந்த வீட்டை கடந்து செல்லும் போதெல்லாம் என் மனம் ஒரே இறுக்கமாக உள்ளது.

" யாகாவராயினும் நாகாக்க" என்று வள்ளுவர் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டு சென்றுவிட்டார். ஆனால் நான் கடைபிடிப்பதாக தெரியவில்லை. எனக்கு ஏழரை நாட்டு சனி இரண்டு ரவுண்டு முடிந்திருந்தாலும் என் நாக்கில் எப்போதுமே சனி குடி கொண்டுள்ளது. சில சமயம் என்னையறியாமல் நிறைய விசயங்கள் பேசக்கூடாத நபர்களிடம் பேசி விடுகிறேன். என்னிடம், 'நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் கவலை வேண்டாம்' என்று சொல்பவர்கள் சரியாக ஒரே நாளில் புல்ஸ்டாப், கமாவுடன் அப்படியே அந்த நபரிடம் சொல்லி விடுகிறார்கள். பிறகு நான் சமாளிப்பதற்கு பெரும் பாடாகி விடுகிறது. இது ஏன் நடக்கிறது? என்று பார்த்தால் நான் வெகு சுலபமாக எல்லோரையும் நம்பி விடுவதுதான்.

என் நண்பன் ஒருவன், " ஏன் எப்போதும் அனுபவமாகவும், உன்னைப்பற்றியுமே எழுதுகிறாய்? உன் துறை சார்ந்த பதிவுகளை எழுலாம் இல்லையா?" என்று கேட்டான். நான் சிரித்து மழுப்பி விட்டேன். அவன் என் எழுத்துக்களை சரியாக படிக்கவில்லை போலிருக்கிறது. நான் அனுபவங்களை மட்டும் எழுதுவதில்லை. நான் கதைகளும் எழுதியுள்ளேன். கவிதைகளும் எழுதியுள்ளேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதும்போதுதான் ஒரு மன திருப்தி ஏற்படுகிறது. அதனால் நான் என்னை மாற்றிக்கொள்வதாக இல்லை. அதற்காக மற்ற விசயங்கள் எழுத மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. துறை சார்ந்த பதிவுகள் எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை. 22 வயது வரை நிறைய படித்தாகி விட்டது. இப்போதுதான் படிப்பு அல்லாத மற்ற விசயங்களை படிக்க ஆரம்பித்து உள்ளேன். மீண்டும் போய் படித்து எழுத... சாரி, நண்பா, என்னை மன்னித்து விடு.

" நீ என்ன பெரிய ஆளா? இல்லை, என்னோடு உன்னை ஒப்பிட்டால் நான் தான் பெரிய ஆள். நான் உன்னைவிட சம்பளம் அதிகமாக வாங்குகிறேன். உன்னை விட எனக்குத்தான் பவர் அதிகம். என்னை பொறுத்தவரை நீ ஜீரோதான். உன்னையெல்லாம் என்னோடு எப்படி கம்பேர் செய்கிறார்கள்?...." இப்படி என்னிடம் ஒருவர் கூறியதாக வைத்துக்கொள்வோம். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு என்றால் அதிகம் கோபப்படுவேன். இப்போது அப்படி இல்லை. அவ்வாறு சொல்பவர்களை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. ஒரு சம்பளமும், பதவியுமா? ஒருவனை பெரிய ஆளா, இல்லை சின்ன ஆளா? என்று மதிப்பிடும் அளவுகோலாக இருக்கிறது. சத்தியமாக இல்லை. "நாம் நடந்து கொள்ளும் முறையிலும், நாம் எவ்வாறு மற்றவர்களுக்கும், நம் குடும்பத்திற்கும், இந்த உலகத்திற்கும் உதவி செய்பவனாக, நல்லவனாக, யாருக்கும் துரோகம் செய்யாதவனாக இருக்கிறோம் எனபதை பொறுத்தல்லவா இருக்கிறது?" இதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை.

எனக்குத் தெரிந்த டிரைவர் ஒருவருக்கு பத்து குழந்தைகள். சமீபத்தில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. வயது 52. பிழைத்து விட்டார். அவர் மனைவி 8 மாத கர்ப்பிணி. அவருக்கு இது பதினொராவது குழந்தை. இந்தியாவில் எங்கள் உறவினர் ஒருவருக்கு கல்யாணமாகி 13 வருடங்களாகியும் இன்னும் குழந்தை இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. ஒரு பக்கம் இப்படி. ஒரு பக்கம் அப்படி? என்னத்தை சொல்வது? ஒரு கூடுதல் தகவல், டிரைவரின் முதல் பெண்ணும் 8 மாத கர்ப்பிணி. ஒரே சமயத்தில் அம்மாவும், பெண்ணும் குழந்தை பெற்றெடுக்க போகிறார்கள். அந்த டிரைவர் குழந்தைகளை எப்படி கொஞ்சப் போகிறார் என்பதைப் பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது?

என் உறவினர் ஒருவர் அவர் வாழ்க்கையை தொலைத்து விட்டு தனி ஆளாக நிற்கிறார். எப்படியாவது அவரை காப்பாற்றி அவருக்கு ஒரு நல் வாழ்வை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது நடக்காமலே இருக்கிறது. இன்னும் அந்த உறவினர் மேலும் ஆண்டவன் மேலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இருவருமே நான் சொல்வதை ஒரு வேளை காது கொடுத்து கேட்கக் கூடும்!

பார்த்தீர்களா! இந்த கட்டுரையை எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி விட்டேன். என் மனம் போலவே ஒரே இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் இந்த கட்டுரையும் ஓடி ஆடி ஒரு முடிவிற்கு வந்து விட்டது.

எழுதி முடித்து, படித்துப் பார்த்தால் ஒரு நல்ல விசயம் நடந்திருக்கிறது. நான் பல விசயங்களை தொட்டிருக்கிறேன் என்று தெரிகிறது. வாசகர்கள் ஆதரவு இருந்தால் அனைத்தும் தனித் தனி பதிவுகளாக ஆகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.

நன்றி!!!.

Feb 1, 2010

என்னால் மறக்க முடியாத பெண்!

சென்ற முறை நான் அலுவலக பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்த போது நடந்த சம்பவம் இது. கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் சிங்கப்பூர் விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தேன். அப்போது ஒரு நடுத்தர வயது அம்மாவும், ஒரு இளம்பெண்ணும் என்னை நோக்கி வந்தார்கள். அந்த அம்மாவிற்கு ஒரு 40 வயது இருக்கலாம். அந்த பெண்ணிற்கு 17 வயதுதான் இருக்க வேண்டும். நல்ல அழகு. நல்ல நிறம். பார்க்க லட்சணமாக இருந்தாள். அந்த அம்மாவும் ஏறக்குறைய அவர் வயதிற்குரிய அழகுடன் இருந்தார். அவர் என்னிடம் வந்து சிங்கப்பூர் இமிகிரேஷன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரச்சொன்னார். நானும் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு பாரத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் தங்கும் விலாசத்தைப் பற்றி கேட்டபோதுதான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அவர் கொடுத்த ஹோட்டல் முகவரி அப்படிப்பட்டது. இனி எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடலை கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள்:

"அங்கு தங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்?"

" வேலை செய்யப் போறோம் சார்"

" என்ன வேலை செய்யப்போறீங்க?"

" அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, தங்குபவர்களுக்கு மசாஜ் செய்வேன் சார்"

" இதுக்கு முன்னாடி அங்கு போயிருக்கீங்களா"

" ம்ம். ஏற்கனவே இரண்டு முறை வேலை பார்த்திருக்கிறேன் சார்"

" எத்தனை மாசம் தங்கப் போறீங்க?"

" முதல்ல ஒரு மாசம் அப்புறம் இன்னுமொரு மாசம்"

" டூரிஸ்ட் விசால வந்துருக்குறீங்க. எப்படி இரண்டு மாசம் தங்க முடியும்?"

" முதல்ல ஒரு மாசம் தங்குவோம் சார். அப்புறம் எப்படியாவது அடுத்த மாசம் விசா வாங்கிவிடுவோம். இல்லைனா மலேசியா போயிட்டு திரும்பி வந்துடுவோம்"

" இவ்வளவு செலவு பண்ணி வந்திருக்கிறது வெறும் ரெண்டு மாத வேலைக்குத்தானா?"

" இரண்டு மாதம் போதும் சார். செலவு பண்ணியதைவிட மூன்று மடங்கு சம்பாதித்துவிடுவோம் சார்"

('அவர் என்ன வேலை செய்து சம்பாதிப்பார்' என்பதனை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்)

" உங்க கூட இருக்கிற அந்தப் பெண் யார்?"

" என்னுடைய மகள்"

" ஏங்க படிக்கிற வயசுல அந்த சின்னப் பெண்ண இதுல ஈடுபடுத்துறீங்களே, இது நியாயமா?"

" என் புருஷன் நல்லா இருந்தா, நான் ஏன் சாமி இப்படி இருக்கப்போறேன்"

" ஏன், அவர் உங்களை வைத்து சரியா காப்பாத்துறது இல்லையா"

" ஏன் சார், நீங்க வேற ஜோக் அடிச்சுட்டு இருக்கீங்க. அந்த ஆள் நல்லா என்னை சக்கையா புளிஞ்சிட்டு ஐந்து புள்ளைய கொடுத்துட்டான். தினமும் குடிதான். அடிதான். போதாக் குறைக்கு கொஞ்ச நாளா என் தங்கச்சியையும் வைச்சிட்டு இருக்கான். அவன் என்ன காப்பாத்துறதாவது. நான்தான் கொஞ்ச காலமா அவனை காப்பாத்திட்டு வரேன்"

" அதுக்காக இந்த மாதிரி தொழிலுக்கு வரணுமா?. வேற வேலையே இந்தியால இல்லையா?"

" ஆமாம், விரும்பி இந்த தொழிலுக்கு வந்தேனாக்கும். சிங்கப்பூருல வீட்டு வேலை இருக்குனு சொல்லி என்னை கூப்பிட்டு வந்து இந்த பாழும் கிணத்துல தள்ளி விட்டதே என் புருசன் தான் சார்" என்றவர் அழ ஆரம்பித்தார்.

ஏர்போர்ட்டில் எல்லோரும் என்னையே பார்க்கவே, சிறிது நேரம் கழித்து அவர் அமைதியானவுடன், என் மனதை உறுத்திய அந்த கேள்வியை மீண்டும் கேட்டேன்,

" சரி, நீங்கதான் இப்படி ஆயிட்டிங்க. படிக்க வேண்டிய வயசுல இருக்க உங்க பொண்ண ஏம்மா இப்படி?"

" இதுவும் ஒரு காரணத்திற்காகத்தான் சார். என் புருசனுக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். அவருக்கு உடனடியா ஆப்பரேசன் பண்ணனும். என்னால அவ்வளோ பணம் புறட்ட முடியாது. இவளை வைச்சுத்தான் நான் பணம் சம்பாதிச்சு அவரை காப்பாத்தணும்"

" அப்படி எதுக்குமா அந்த ஆளை காப்பாத்தணும்னு நினைக்கறீங்க. உங்களுக்கு இவ்வளவு கொடுமை செஞ்ச அவன் சாவட்டும்னு உட வேண்டியதுதானே?"

" அது எப்படி சார். ஆயிரம்தான் இருந்தாலும் என்னை தொட்டு தாலி கட்டின புருஷன் இல்லையா?"

(பாழாப் போன தாலி சென்டிமெண்ட் நம்ம ஊரு பொண்ணுங்களை விட்டு என்னைக்கு போய்த்தொலையுமோ தெரியலை?)

அதற்குமேல் அந்த அம்மாவிடம் எனக்கு பேச விருப்பம் இல்லை. விமானம் வந்தவுடன் ஏறி அமர்ந்தவன் அவர்கள் இருக்கும் இடம் கூட திரும்பி பார்க்கவில்லை. குழப்பமான மன நிலையில் பயணம் செய்தேன்.

சிங்கப்பூரை அடைந்ததும், அந்தம்மா என்னிடம் ஓடி வந்து,

" சார், முடிஞ்சா நைட்டு எங்க ஹோட்டலுக்கு வாங்க. என் பொண்ணும் அங்கதான் இருப்பா. நம்ம ஆளா இருக்கீங்க வந்துட்டு போங்க"

பதில் சொல்லமால் காரில் ஏறினேன். அன்று முழுவதும் அந்த சின்னப் பெண்ணே என் மனதை ஆக்கிரமித்திருந்தாள். நான் செல்லவில்லை. ஆனால் யாரோ ஒருவன் அவளை...... என்ன கொடுமை இது? நம்புவதற்கு உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். நானும் அப்படித்தான் கஷ்டப்பட்டேன்.

ஒரு குடும்பத்தில் கணவன் சரியில்லாத காரணத்தால் அந்த குடும்பமே சீரழிந்து போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. அந்த பெண் இப்போது எங்கு இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? எங்கு இருந்தாலும் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

ஒவ்வொரு முறை சிங்கப்பூர் செல்லும்போது செராங்கன் ரோடை கடக்கும் போதெல்லாம் அவளை பார்த்து விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே செல்கிறேன்.