Feb 9, 2010

இதையும் படியுங்கள்!

கடந்த சில நாட்களாக நான் எதுவும் எழுதவில்லை. ஏன்? அதிக வேலையா? தெரியவில்லை. ஏன் இத்தனை நாட்கள் இவ்வளவு பதிவுகள் எழுதினேன்? காரணம் தெரியவில்லை. அதே போல் ஏன் எழுதவில்லை? என்பதற்கும் காரணம் தெரியவில்லை. நான் தினமும் எழுதுகிறேனோ இல்லையோ, தினமும் என் எழுத்துக்களைப் படிக்க வரும் அந்த 100 பேருக்கு நன்றி. தினமும் படிக்க வருபவர்களின் எண்ணிக்கையை ஒரு 500 பேராக ஆக்கலாம் தான். ஆனால் அதற்குரிய உழைப்பு என்னிடம் இல்லை. சில சமயம் எழுதப் பிடிக்கிறது. பல சமயம் படிக்க மட்டுமே பிடிக்கிறது. அது ஏன்? எப்படி தினமும் எழுதுவதற்கும், எழுதாதற்கும் காரணம் தெரியவில்லையோ அதே போல் இதற்கும் காரணம் தெரியவில்லை.

சில சமயம் நம்மை அறியாமல் வாழ்க்கையில் ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. ஏதாவது ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தால்தான் வாழ்க்கை சுவையாக இருக்கிறது. இல்லையென்றால் ஏதோ ஒரு வெற்றிடத்தில் இருப்பது போல் ஒரு பிரம்மை ஏற்படுகிறது. எதை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று சரியாக தெரியவில்லை. பணமா? பதவியா? அந்தஸ்தா? இதில் எதிலுமே இப்போது அதிக நாட்டம் இல்லை. காரணம், தெரியவில்லை. நானும் மற்றவர்களிடம் அன்பாக இருப்பது போல, மற்றவர்களும் என்னிடம் அன்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அன்பு மட்டுமே சந்தோசம் அளிக்க கூடிய ஒன்று. சரிதானே?

எனக்கும் அழகான பெண்களுக்குமான (அது என்ன அழகானப் பெண்கள்? எல்லாப் பெண்களுமே அழகுதான்) நட்புகளை நான் என்றைக்குமே மறைத்ததில்லை. நான் அழகோ இல்லை அசிங்கமோ, நான் சிகப்போ இல்லை கருப்போ, பெண்கள் என்னை நேசிக்கவே செய்கிறார்கள். எனக்கும் பெண்களுக்குமான அலைவரிசைகள் அப்படி. என்னிடம் பழகுவதில் அவர்களுக்கு அப்படி ஒன்றும் ஆபத்தில்லை. பல் இருந்தும் பட்டாணி சாப்பிட ஆசைப்படாதவன் நான். ஆனால் சமீபகாலமாக முகம் பார்க்காமல் ஏற்படும் இணைய நட்பில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. அது பிடிக்கவும் இல்லை.அதனால் தொந்தரவு அதிகமாக உள்ளது. அதனால் அவர்களிடமிருந்து ஒதுங்கி போகவே ஆசைப்படுகிறேன். ஆனாலும், தொடர்ந்து துன்புறுத்தும் தொந்தரவுகள்........?

விதியைப் பற்றி முன்பெல்லாம் நான் அதிகம் யோசித்தது இல்லை. சமீபகாலமாக விதியை நினைத்தாலே பயமாக இருக்கிறது. எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் ஒரு குடும்பம். அழகான கவிதையான குடும்பம். மூன்று பெண்கள், ஒரு ஆண் என்று நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்கள் லண்டனில் வேலை செய்கிறார்கள். ஒரு பையன் அமெரிக்கவில் படிக்கிறான். ஒரு பெண் ரஷ்யாவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு, சொந்த ஊரில் கிடைத்த ஹவுஸ்சர்ஜன் வாய்ப்பை வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு, மலேசியாவின் ஒரு தீவான சபாவில்தான் ஹவுஸ் சர்ஜன் செய்வேன் என்று அடம்பிடித்து அங்கு சென்றார். இதனை விதி என்பதா? இல்லை, ஒரு டாக்டர் பையன் BMW கார் வாங்கியதற்கு பார்ட்டி தருகிறேன் என்று கூறியதற்காக, மூன்று கார்களில் பார்டிக்கு சென்று, சாப்பிட்டு வரும் வழியில், புது காரில்தான் வருவேன் என்று அடம்பிடித்து, புது காரில் ஏறி, வீட்டிற்கு திரும்பும் வழியில் கார் பஸ்ஸில் மோதி அப்பளமாக அனைவரும் இறந்து அந்த பெண்ணும் இறந்து விட்டதை விதி என்பதா? ஒன்றும் புரியவில்லை. அந்த வீட்டை கடந்து செல்லும் போதெல்லாம் என் மனம் ஒரே இறுக்கமாக உள்ளது.

" யாகாவராயினும் நாகாக்க" என்று வள்ளுவர் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டு சென்றுவிட்டார். ஆனால் நான் கடைபிடிப்பதாக தெரியவில்லை. எனக்கு ஏழரை நாட்டு சனி இரண்டு ரவுண்டு முடிந்திருந்தாலும் என் நாக்கில் எப்போதுமே சனி குடி கொண்டுள்ளது. சில சமயம் என்னையறியாமல் நிறைய விசயங்கள் பேசக்கூடாத நபர்களிடம் பேசி விடுகிறேன். என்னிடம், 'நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் கவலை வேண்டாம்' என்று சொல்பவர்கள் சரியாக ஒரே நாளில் புல்ஸ்டாப், கமாவுடன் அப்படியே அந்த நபரிடம் சொல்லி விடுகிறார்கள். பிறகு நான் சமாளிப்பதற்கு பெரும் பாடாகி விடுகிறது. இது ஏன் நடக்கிறது? என்று பார்த்தால் நான் வெகு சுலபமாக எல்லோரையும் நம்பி விடுவதுதான்.

என் நண்பன் ஒருவன், " ஏன் எப்போதும் அனுபவமாகவும், உன்னைப்பற்றியுமே எழுதுகிறாய்? உன் துறை சார்ந்த பதிவுகளை எழுலாம் இல்லையா?" என்று கேட்டான். நான் சிரித்து மழுப்பி விட்டேன். அவன் என் எழுத்துக்களை சரியாக படிக்கவில்லை போலிருக்கிறது. நான் அனுபவங்களை மட்டும் எழுதுவதில்லை. நான் கதைகளும் எழுதியுள்ளேன். கவிதைகளும் எழுதியுள்ளேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதும்போதுதான் ஒரு மன திருப்தி ஏற்படுகிறது. அதனால் நான் என்னை மாற்றிக்கொள்வதாக இல்லை. அதற்காக மற்ற விசயங்கள் எழுத மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. துறை சார்ந்த பதிவுகள் எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை. 22 வயது வரை நிறைய படித்தாகி விட்டது. இப்போதுதான் படிப்பு அல்லாத மற்ற விசயங்களை படிக்க ஆரம்பித்து உள்ளேன். மீண்டும் போய் படித்து எழுத... சாரி, நண்பா, என்னை மன்னித்து விடு.

" நீ என்ன பெரிய ஆளா? இல்லை, என்னோடு உன்னை ஒப்பிட்டால் நான் தான் பெரிய ஆள். நான் உன்னைவிட சம்பளம் அதிகமாக வாங்குகிறேன். உன்னை விட எனக்குத்தான் பவர் அதிகம். என்னை பொறுத்தவரை நீ ஜீரோதான். உன்னையெல்லாம் என்னோடு எப்படி கம்பேர் செய்கிறார்கள்?...." இப்படி என்னிடம் ஒருவர் கூறியதாக வைத்துக்கொள்வோம். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு என்றால் அதிகம் கோபப்படுவேன். இப்போது அப்படி இல்லை. அவ்வாறு சொல்பவர்களை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. ஒரு சம்பளமும், பதவியுமா? ஒருவனை பெரிய ஆளா, இல்லை சின்ன ஆளா? என்று மதிப்பிடும் அளவுகோலாக இருக்கிறது. சத்தியமாக இல்லை. "நாம் நடந்து கொள்ளும் முறையிலும், நாம் எவ்வாறு மற்றவர்களுக்கும், நம் குடும்பத்திற்கும், இந்த உலகத்திற்கும் உதவி செய்பவனாக, நல்லவனாக, யாருக்கும் துரோகம் செய்யாதவனாக இருக்கிறோம் எனபதை பொறுத்தல்லவா இருக்கிறது?" இதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை.

எனக்குத் தெரிந்த டிரைவர் ஒருவருக்கு பத்து குழந்தைகள். சமீபத்தில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. வயது 52. பிழைத்து விட்டார். அவர் மனைவி 8 மாத கர்ப்பிணி. அவருக்கு இது பதினொராவது குழந்தை. இந்தியாவில் எங்கள் உறவினர் ஒருவருக்கு கல்யாணமாகி 13 வருடங்களாகியும் இன்னும் குழந்தை இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. ஒரு பக்கம் இப்படி. ஒரு பக்கம் அப்படி? என்னத்தை சொல்வது? ஒரு கூடுதல் தகவல், டிரைவரின் முதல் பெண்ணும் 8 மாத கர்ப்பிணி. ஒரே சமயத்தில் அம்மாவும், பெண்ணும் குழந்தை பெற்றெடுக்க போகிறார்கள். அந்த டிரைவர் குழந்தைகளை எப்படி கொஞ்சப் போகிறார் என்பதைப் பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது?

என் உறவினர் ஒருவர் அவர் வாழ்க்கையை தொலைத்து விட்டு தனி ஆளாக நிற்கிறார். எப்படியாவது அவரை காப்பாற்றி அவருக்கு ஒரு நல் வாழ்வை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது நடக்காமலே இருக்கிறது. இன்னும் அந்த உறவினர் மேலும் ஆண்டவன் மேலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இருவருமே நான் சொல்வதை ஒரு வேளை காது கொடுத்து கேட்கக் கூடும்!

பார்த்தீர்களா! இந்த கட்டுரையை எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி விட்டேன். என் மனம் போலவே ஒரே இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் இந்த கட்டுரையும் ஓடி ஆடி ஒரு முடிவிற்கு வந்து விட்டது.

எழுதி முடித்து, படித்துப் பார்த்தால் ஒரு நல்ல விசயம் நடந்திருக்கிறது. நான் பல விசயங்களை தொட்டிருக்கிறேன் என்று தெரிகிறது. வாசகர்கள் ஆதரவு இருந்தால் அனைத்தும் தனித் தனி பதிவுகளாக ஆகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.

நன்றி!!!.

11 comments:

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'இதையும் படியுங்கள்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th February 2010 06:49:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/182635

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Anonymous said...

உலக்ஸ், நல்ல ஒரு மனம் திறந்த பதிவு. இப்போ என்ன வந்துவிட்டது உங்க பதிவுகளுக்கு? என்ன குறைச்சலா போச்சு?

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நேர்ந்த தொல்லைகள் என்ன? அதையும் ஒரு பதிவாக போடுங்கள்... டோண்டு சாருக்கு நிகழாத தொல்லைகளா? அவர் சமாளிக்கவில்லையா? எதுவாக இருப்பினும் இங்கே சொல்லவும்..

//வாசகர்கள் ஆதரவு இருந்தால் //

மத்தபடி நீங்க எழுதுங்க இல்ல படியுங்க இல்ல என்ன வேணும்னாலும் பண்ணுங்க... ஆதரவு நிச்சியம் உண்டு..

Kumar said...

சும்மா எழுதுங்க. படிக்கிறதுக்கு தான் நாங்க இருக்கோம்ல. உங்க கிட்டே எனக்கு பிடிச்சதே இந்த அனுபவ பதிவு தான்.

Ramesh said...

நல்ல பதிவு, உங்கள் மனதோடு சேர்ந்து பயணம் செய்தது போல் இருந்தது.

இராகவன் நைஜிரியா said...

ஆதரவுக்கு என்ன... கொடுத்திட்டாப் போச்சு...

அக்கௌண்ட் நம்பர் வேணுமா அண்ணே?

இராகவன் நைஜிரியா said...

// எப்படி தினமும் எழுதுவதற்கும், எழுதாதற்கும் காரணம் தெரியவில்லையோ அதே போல் இதற்கும் காரணம் தெரியவில்லை.//

வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா...

காரணம் தெரியமலேயே பல விஷயங்கள் ஓடிகிட்டு இருக்கு... டோண்ட் ஒர்ரி ... பீ ஹாப்பி.. லெவலுக்கு வந்திட்டீங்கன்ன்னு நினைக்கிறேன்..

இராகவன் நைஜிரியா said...

// அன்பு மட்டுமே சந்தோசம் அளிக்க கூடிய ஒன்று. //

சந்தேகமில்லை... பிரதிபலன் எதிர் பார்க்காத அன்பு மட்டுமே சந்தோஷம் அளிக்க கூடியது.

iniyavan said...

//மத்தபடி நீங்க எழுதுங்க இல்ல படியுங்க இல்ல என்ன வேணும்னாலும் பண்ணுங்க... ஆதரவு நிச்சியம் உண்டு..//

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி அனானி நண்பரே!

iniyavan said...

//சும்மா எழுதுங்க. படிக்கிறதுக்கு தான் நாங்க இருக்கோம்ல. உங்க கிட்டே எனக்கு பிடிச்சதே இந்த அனுபவ பதிவு தான்.//

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ரொம்ப நன்றி குமார்.

iniyavan said...

//நல்ல பதிவு, உங்கள் மனதோடு சேர்ந்து பயணம் செய்தது போல் இருந்தது.//

வருகைக்கு நன்றி ரமேஷ்.

iniyavan said...

//ஆதரவுக்கு என்ன... கொடுத்திட்டாப் போச்சு...//

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி இராகவன் சார்.