Feb 11, 2010

தெய்வங்களும், நானும் மற்றும் விதியும்..........

நேற்று முன்தினம் எழுதிய பதிவில் இப்படி எழுதியிருந்தேன்:

"விதியைப் பற்றி முன்பெல்லாம் நான் அதிகம் யோசித்தது இல்லை. சமீபகாலமாக விதியை நினைத்தாலே பயமாக இருக்கிறது. எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் ஒரு குடும்பம். அழகான கவிதையான குடும்பம். மூன்று பெண்கள், ஒரு ஆண் என்று நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்கள் லண்டனில் வேலை செய்கிறார்கள். ஒரு பையன் அமெரிக்காவில் படிக்கிறான். ஒரு பெண் ரஷ்யாவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு, சொந்த ஊரில் கிடைத்த ஹவுஸ்சர்ஜன் வாய்ப்பை வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு, மலேசியாவின் ஒரு தீவான சபாவில்தான் ஹவுஸ் சர்ஜன் செய்வேன் என்று அடம்பிடித்து அங்கு சென்றார். இதனை விதி என்பதா? இல்லை, ஒரு டாக்டர் பையன் BMW கார் வாங்கியதற்கு பார்ட்டி தருகிறேன் என்று கூறியதற்காக, மூன்று கார்களில் பார்ட்டிக்கு சென்று, சாப்பிட்டு வரும் வழியில், புது காரில்தான் வருவேன் என்று அடம்பிடித்து, புது காரில் ஏறி, வீட்டிற்கு திரும்பும் வழியில் கார் பஸ்ஸில் மோதி அப்பளமாக, அனைவரும் இறந்து, அந்த பெண்ணும் இறந்து விட்டதை விதி என்பதா? ஒன்றும் புரியவில்லை. அந்த வீட்டை கடந்து செல்லும் போதெல்லாம் என் மனம் ஒரே இறுக்கமாக உள்ளது"

இந்தப் பதிவை எழுதிய அன்றைய இரவுதான் அந்த பெண்ணின் உடல் வீட்டிற்கு வந்தது. அதாவது அந்த பெண் இறந்தது சென்ற வெள்ளிக்கிழமை நடு இரவு. பிறகு எல்லா பார்மாலிட்டிகளையும் முடித்து எங்கள் ஊருக்கு வந்து சேர அத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இன்று மதியம் அடக்கம் செய்கிறார்கள். அதாவது ஒரு வாரம் கழித்து. ஏனென்றால் அனைத்து சகோதர, சகோதரிகளும் மற்ற நாடுகளிலிருந்து வர தாமதமாகிவிட்டது. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. உலகத்திலேயே 'BMW கார்தான் மிக உயர்ந்த பாதுகாப்பான கார்' என்கிறார்கள். எப்படி இப்படி அப்பளமாகிப் போனது? என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. அதுவும் புது கார் வேறு. அதைத்தான் விதி என்று கூறினேன். நான் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது வெகு சிலரே இருந்தனர். அந்த பெண்ணின் உடலைப் பார்த்ததும் என்னால் துக்கத்தை கட்டுப் படுத்த முடியவில்லை. நான் அடைந்த வேதனையை பார்த்த மற்றவர்கள் வியந்திருக்கக் கூடும். என்ன இது? இந்தியாவிலிருந்து வந்த ஒருவன் யாரோ ஒரு பெண்ணிற்காக இப்படி கலங்குகிறானே? என்று. காரணம் இருக்கிறது.

இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் அந்தப் பெண் உயிருடன் இருந்த போது நான் பார்த்தது இல்லை. விதியைப் பாருங்கள். முதல் முறையாக ஒரு பெண்ணை இறந்தவுடன்தான் பார்க்கிறேன். அந்த பெண்ணின் பெற்றோர்களைப் பார்த்தபோது என்னால் எதுவுமே பேச முடியவில்லை. அவர்களும் அழுது அழுது ஓய்ந்து போய் இருந்தார்கள். அந்த மரணம் அவர்களுக்கு தந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தவுடன் என் நினைவுகள் ஒரு 12 வருடம் பின்னோக்கிச் சென்றது.

மலேசியாவிற்கு 1997 ஜூலை மாத இறுதியில் கிளம்பியபோதே என் தங்கை மிகச் சோர்வாக இருப்பதைப் பார்த்தேன். அப்போதெல்லாம் மாதம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்பாவிடம், ஏன் அப்படி இருக்கிறாள் என்று கேட்டபோது, ஒன்றும் இல்லை, சாதாரண உடல் வலிதான் என்று கூறினார். நானும் எந்த வித சிந்தனையும் இல்லாமல் மலேசியாவிற்கு வந்து விட்டேன். நான் வெளி நாட்டிற்கு வந்த குஷியில் அனைத்தையும் மறந்து போனேன். அப்பா பேசும் போதெல்லாம், எல்லோரும் நன்றாக இருப்பதாகவே கூறினார். குறைந்த சம்பளத்தில் என் வாழ்க்கை ஆரம்பமானது. அப்போதெல்லாம் லட்சம் சேமிப்பது என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது. அப்பா ஒரு நாள் போன் செய்தபோது, " ரவி, உன் தங்கைக்கு ஒரு ஆப்பரேசன் செய்ய வேண்டி உள்ளது. அதனால் உன் முதல் இரண்டு மாத சம்பளத்தை ஆப்பரேசனுக்காக கட்டி விட்டேன்" என்று கூறினார்.

நான் உடனே, " அதனால் என்ன அப்பா, பரவாயில்லை" என்று சொன்னேனே தவிர, இவ்வளவு பெரிய தொகை வெறும் ஆப்பரேசனுக்கு மட்டுமே என்றால், அது பெரிய ஆப்பரேசனாகத்தான் இருக்கும் என்று இந்த மர மண்டைக்குத் தெரியவில்லை. அதுவுமில்லாமல் நம் குடும்பத்திற்கு ஒரு கெடுதலும் நடக்காது என்று இருந்து விட்டேன். ஒரு துளி சந்தேகம் கூட வராமல் அப்பா பார்த்துக்கொண்டிருக்கிறார். இது நடந்து ஒரு மாதம் கழித்து, அதாவது ஜனவரி 1, 1998 அன்று மதியம் ஊரிலிருந்து ஒரு போன் வந்தது. என் நண்பன்தான் பேசினான். அப்பா என்னை உடனே கிளம்பி வரச்சொன்னதாகச் சொன்னான். 'என்ன காரணம்?' என்று கேட்டதற்கு, 'வா பேசிக்கலாம்' எனக் கூறினான். நான் ஏற்கனவே ஜனவரி 8ம் தேதி ஊருக்கு போவதற்கு டிக்கட் புக் செய்து வைத்திருந்ததால், ஒரு வாரத்திற்கு முன் செல்வது அப்படி ஒன்றும் பெரிய விசயமாக எனக்குத் தோன்றவில்லை. அதுவுமில்லாமல் முதல் முறை வெளி நாடு வந்து போவதால் உடனே வர ஒப்புக்கொண்டேன். அன்று இரவே சென்னைக்கு கிளம்பினேன். சென்னையை அடைந்ததும் வெளியில் வந்து பார்த்தால் நான் அன்று இரவே ஊருக்கு கிளம்புவதற்காக, டிரைவருடன் ஒரு காரை எங்கள் நிறுவன MD ஏற்பாடு செய்து வைத்துள்ளார். இந்த மரமண்டைக்கு அப்போது கூட தவறாக ஒன்றும் தெரியவில்லை.

இரவோடு இரவாக ஊருக்கு பயணமானேன். எங்கள் ஊருக்கு காலை ஒரு ஆறு மணி வாக்கில் சென்றோம். எங்கள் தெரு நெருங்கும் வரையில் எனக்கு ஒன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், தெருவில் நுழைந்தவுடன் வித்தியாசத்தை உணர்ந்தேன். ஒரே கும்பல். மனம் பதபதைக்க ஆரம்பித்தது. இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நன்றாக கவனித்ததில் வீட்டில் முன் பந்தலும், கும்பலாக மக்களும் தெரிந்தார்கள். ஏதோ நடந்திருப்பதை உள்ளுணர்வு சொல்லியது. ஆனால், யார்.....? தெரியவில்லை. ஒரே குழப்பம். வீட்டில் நுழையும் தறுவாயில், 'யாருக்கு என்ன நடந்தது என்று சொல்லாமலே' என்னைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள். பிறகு அழுதுகொண்டே விசாரிக்கையில் என் தங்கை இறந்துவிட்டதாக கூறினார்கள். 'எப்படி இறந்தாள்?' என்று கேட்டதற்கு, 'உனக்குத் தெரியாதா? ஆறு மாதமாக இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை. பிறகு மாற்று கிட்னி பொறுத்தினார்கள். அப்படியும் பயனில்லாமல் இறந்து விட்டாள்" என்றார் ஒருவர். "எப்படி கிட்னி கிடைத்தது?" என்று கேட்ட என்னை வினோதமாக பார்த்தார் அந்த நபர். புரிந்து கொண்ட நான் வீட்டில் உள்ள அனைவரையும் ஒவ்வொருவராக பார்த்தேன், இவரா? இல்லை அவரா? யார் கொடுத்திருப்பார்? இந்தக் கொடுமை யாருக்குமே வரக்கூடாது. பிறகுதான் தெரிந்தது என் பெரிய அக்கா அவர்கள் கிட்னியை கொடுத்திருக்கிறார்கள் என்று.

அவர்களை பார்க்கலாம் என்றால், "தான் கிட்னி கொடுத்தும் பயனில்லாமல் போய் விட்டதே" என்று மூர்ச்சையாகி இருந்தார்கள். என்னை கேட்டிருந்தால் நான் கொடுத்திருப்பேனா? என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. பிறகு என் தங்கையை பார்த்து கதறி கதறி அழுதேன். அன்று மறுபடியும், தெய்வம் என்ற ஒன்று உள்ளதா? என்று குழம்பிப்போனேன். வாழ வேண்டிய வயதில் எங்களை விட்டு என் அன்புத் தங்கை பிரிந்து விட்டாள். அந்த இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் ஒரு வினோதப் பழக்கம், நாங்கள் யாரும் 'அண்ணா, அக்கா' என்று உறவு முறை சொல்லி கூப்பிடுவதில்லை. எல்லோருமே பெயர் சொல்லித்தான் கூப்பிட்டுக்கொள்வோம். அப்படிப்பட்ட எங்கள் குடும்பத்தில் ஒரு முறை அவளுடைய தோழிகள் மத்தியில் என்னை, 'என் அண்ணா' என்று சொன்னதும், ஒரு முறை 'அன்புள்ள அண்ணா' என்று எனக்கு கடிதம் எழுதியதும் இன்றும் என் நினைவில் உள்ளது. அதனால்தான், என் தங்கையைத் தவிர வேறு யாரையும் என்னை 'அண்ணா' என்று கூப்பிட அனுமதிப்பதில்லை.

என் தங்கைக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது என்பதும், எங்கள் குடும்பத்திற்கு பணத் தேவை இருக்கிறது என்பதும் என் MDக்கு நண்பர்கள் மூலமாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் எனக்கு மலேசியா வாய்ப்பு கொடுத்திருப்பார் என்று இன்றும் நம்புகிறேன். 'தெய்வம்' என்று ஒன்று உள்ளதா? எனக் குழம்பிப்போனேன் என்று சொன்னேன் அல்லவா? பிறகுதான் தெரிந்தது, தெய்வம் என்பது வேறு எங்கும் இல்லை, நாம் வாழும் பூமியிலேயே இருக்கிறது, என்று.

எனக்கு உதவிய எங்கள் MDயும், கிட்னி குடுத்த அக்காவும், என் கண்களுக்குத் தெய்வமாக தெரிந்தார்கள். இன்றும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்பா ஏன் முன்பே என்னிடம் அனைத்தையும் கூறவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். "அவனே இப்போது தான் அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் எல்லாவற்றையும் கூறினால், எனக்கு மலேசியா வேலையே வேண்டாம், என்று வந்துவிடுவான். அதனால் முடிந்த வரை நாம் காப்பாற்ற முயற்சி செய்வோம்" என்று என் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார். அதோடு இல்லாமல் நண்பர்களையும் என்னிடம் எதும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி இருக்கிறார்.

நாங்கள் அனைவரும் என் தங்கையின் நினைவிலிருந்து மீண்டு வர பல காலம் ஆனது. அதனால் ஒவ்வொரு புது வருடமும் அந்த நினைவுகள் வந்து போகிறது. என்ன செய்ய? விதி வலியது இல்லையா?

அன்று இரவு ஆக்ஸிடண்டில் இறந்து போன அந்த பெண்ணின் உடலைப் பார்க்கும் போது என் தங்கையின் நினைவு வந்து போனது. அதனால் மனதிற்குள்ளேயே கதறி கதறி அழுதேன். இன்று என் தங்கை இருந்திருந்தால் அவளுக்கும் இரண்டு குழந்தைகள் இருந்திருக்கும். நாம் நினைப்பது எல்லாமே நடக்கிறதா என்ன?

இந்த முறை ஊருக்கு சென்ற போது தங்கைக்கு சாமி கும்பிட்டபோது தாங்காமல் அம்மா அழுதார்கள். நான் மனதை கல்லாக்கிகொண்டேன். என் இன்னொரு அக்கா, " ஏம்மா அழற? அவ இன்னேரம் வேறு எங்காவது பிறந்து நல்லா வாழ்ந்துகிட்டு இருப்பா. கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினார்கள்.

ஆம், உண்மைதான். என் தங்கை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள், என் மகளாக.

30 comments:

கோவி.கண்ணன் said...

ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருக்கிறீர்கள், அப்படித்தான் இது போன்ற நிகழ்வுகளை எழுத முடியும்

துபாய் ராஜா said...

நெகிழ்ச்சியான பதிவு.

//தெய்வம் என்பது வேறு எங்கும் இல்லை, நாம் வாழும் பூமியிலேயே இருக்கிறது, என்று.//

உண்மையான உண்மை. தெய்வங்கள் மனித உருவில் வந்து உதவுவதை உள்ளத்தால் உணரலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்கள் அன்பான சகோதரியின் மரணம் உங்களை ஆட்டிவிட்டது. எனக்கோ தொடராகப் பல அன்பானவர் மரணங்கள்.
அவர்கள் உடலில் கூட விழிக்க முடியா அந்நிய நாட்டு அகதி வாழ்வு.
இப்போ அழுவதில்லை. அழக் கண்ணீர் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று மனம் கல்லாகிவிட்டது.
தெய்வமா? அப்படியென்றாகிவிட்டது.

PPattian said...

கலங்கி, நெகிழ்ந்து விட்டேன்.. ஆம் சில சமயம் நம்மை மீறி செயல்கள் நடப்பது உண்டு..

பாலாஜி சங்கர் said...

நெகிழ்ச்சியான பதிவு

எதிரில் பேசுவது போல் இருந்தது

மணிஜி said...

நெகிழ்ச்சி உலக்ஸ்...

பரிசல்காரன் said...

நெகிழ்சியாக இருக்கிறது சார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

கண்ணகி said...

நெகிழவைத்த்விட்டது...உங்கள் தங்கை சொன்னதுபோல், நீங்கள் நினைத்ததுபோல் உங்கள் மகளே உங்கள் தங்கை...

Anonymous said...

//கொஞ்சம் இளைப்பாறலாம் வாங்களேன்//

உலக்ஸ், இது நியாயமா? இளைப்பாற அழைத்து விட்டு, மன பாறத்தை ஏத்தி விட்டுடீங்க..

//உலகத்திலேயே 'BMW கார்தான் மிக உயர்ந்த பாதுகாப்பான கார்' என்கிறார்கள். எப்படி இப்படி அப்பளமாகிப் போனது?//

நம்ம ஊர் நாகப்பா கார்பரேஷன் முதலாளி திரு.லஷ்மனன் அவர்களின் மாப்பிள்ளை,
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில், மிக பாதுகாப்பான காராக கருதபடும்
ஆடி காரில் பயனம் செய்த போது, மரக்கிளை ஒன்று, மேலே விழுந்து, ஓட்டுனர் இருக்கையில்
இருந்த அவர் மீது விழுந்து இறந்து போனார்.. இதுக்கு என்ன சொல்ல.. கன்டிப்பா விதி தான்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

மிகவும் வருத்தமாக உள்ளது , நீங்கள் சொல்வது சரிதான் . சில மனிதர்கள் செய்யும் உதவி நம்மால் மறக்க முடியாதது . நான் நேரில் சொன்னதுபோல் உங்களை ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள் . கவலைப்பட வேண்டாம் .

சிநேகிதன் அக்பர் said...

மிக வருத்தமான சம்பவம். மனதை கனக்க செய்து விட்டீர்கள். இருவருக்கும் எனது அஞ்சலிகள் .

iniyavan said...

//ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருக்கிறீர்கள், அப்படித்தான் இது போன்ற நிகழ்வுகளை எழுத முடியும்//

ஆமாம் சார். அந்த பெண்ணை பார்த்தவுடன் என்னால் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதான் என் உணர்வுகளை எழுதினேன்.

வருகைக்கு நன்றி கோவி சார்.

iniyavan said...

//உண்மையான உண்மை. தெய்வங்கள் மனித உருவில் வந்து உதவுவதை உள்ளத்தால் உணரலாம்.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி துபாய் ராஜா.

iniyavan said...

//உங்கள் அன்பான சகோதரியின் மரணம் உங்களை ஆட்டிவிட்டது. எனக்கோ தொடராகப் பல அன்பானவர் மரணங்கள்.
அவர்கள் உடலில் கூட விழிக்க முடியா அந்நிய நாட்டு அகதி வாழ்வு.
இப்போ அழுவதில்லை. அழக் கண்ணீர் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று மனம் கல்லாகிவிட்டது.
தெய்வமா? அப்படியென்றாகிவிட்டது//

இதுவும் கடந்து போகும் என்று நினைத்து ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு வாழப் பழகிக்கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி யோகன்.

iniyavan said...

//கலங்கி, நெகிழ்ந்து விட்டேன்.. ஆம் சில சமயம் நம்மை மீறி செயல்கள் நடப்பது உண்டு..//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புபட்டியன்.

iniyavan said...

//நெகிழ்ச்சியான பதிவு

எதிரில் பேசுவது போல் இருந்தது//

வருகைக்கு நன்றி பாலாஜி.

iniyavan said...

//நெகிழ்ச்சி உலக்ஸ்...//

வருகைக்கு நன்றி தலைவரே.

iniyavan said...

//நெகிழ்சியாக இருக்கிறது சார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை...//

வருகைக்கு நன்றி பரிசல்.

iniyavan said...

//நெகிழவைத்த்விட்டது...உங்கள் தங்கை சொன்னதுபோல், நீங்கள் நினைத்ததுபோல் உங்கள் மகளே உங்கள் தங்கை...//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கண்ணகி.

iniyavan said...

//உலக்ஸ், இது நியாயமா? இளைப்பாற அழைத்து விட்டு, மன பாறத்தை ஏத்தி விட்டுடீங்க..//

வருகைக்கு நன்றி நண்பா.

iniyavan said...

//மிகவும் வருத்தமாக உள்ளது , நீங்கள் சொல்வது சரிதான் . சில மனிதர்கள் செய்யும் உதவி நம்மால் மறக்க முடியாதது . நான் நேரில் சொன்னதுபோல் உங்களை ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள் . கவலைப்பட வேண்டாம் .//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்டார்ஜன்.

iniyavan said...

//மிக வருத்தமான சம்பவம். மனதை கனக்க செய்து விட்டீர்கள். இருவருக்கும் எனது அஞ்சலிகள் .//

வருகைக்கு நன்றி அக்பர்.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'தெய்வங்களும், நானும் மற்றும் விதியும்..........' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th February 2010 04:14:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/184190

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

பலருக்கு தாங்க முடியாத வேதனை வரும்போது கடவுள் இருக்கின்றாரா என ஐயாம் ஏற்படுவதும், கடவுள் குணம் கொண்ட நல்ல மனங்களை பார்க்கும்போது நம்பிக்கையும் பிறப்பது நிஜமே..


ஆழ்ந்த அனுதாபங்கள்..

karthik said...

padikkum podhu manadhukku kastamaga irunthathu.

please keep writing.

karthik.
usa.

Anonymous said...

many spelling mistakes. Please correct this.

Anonymous said...
This comment has been removed by the author.
iniyavan said...

//ஆழ்ந்த அனுதாபங்கள்..//

வருகைக்கு நன்றி தோழி.

iniyavan said...

//padikkum podhu manadhukku kastamaga irunthathu.

please keep writing.

karthik.
usa.//

வருகைக்கு நன்றி கார்த்திக்

iniyavan said...

//many spelling mistakes. Please correct this.//

அன்று அவசரமாகவும், கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டும் எழுதியதால் சில பிழைகள் ஏற்பட்டுவிட்டன. மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.