Feb 20, 2010

ஜாலியாய் ஒரு பதிவு!

காரில் ஒரு சின்ன பிரச்சனை. சரி செய்வதற்காக மெக்கானிக் எடுத்து சென்றுள்ளார். இரண்டு நாட்களாக அடுத்தவர் கார் மூலம் எங்கும் செல்ல வேண்டியுள்ளது. 11 வருடங்களாக நன்றாக உழைத்து வந்த சோனி 29 இன்ச் டிவி திடீரென வேலை செய்யாமல் அடம் பிடிக்கிறது. மலேசியாவில் எதுவும் ரிப்பேர் செய்ய மாட்டார்கள். உடனே புதுசு வாங்குவார்கள். இருந்தாலும் ஒரு ரிப்பேர் கடையை கண்டுபிடித்து அதை சரி செய்ய கொடுத்துள்ளேன். நெருங்கிய உறவினரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அந்த கவலை வேறு. அலுவலக வேலை விசயத்திலும் அமைதியற்ற ஒரு சூழல். நிறைய கதை கரு கையில் உள்ளது. எழுத என்னவோ ஒரு சோம்பேறித்தனம். எதாவது பதிவு எழுதவும் மூடு இல்லை. இன்று விடுமுறை வேறு. இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது என் மகள், " அப்பா, அம்மாவுக்கு ஒரு நாளாவது சமையலுக்கு உதவக்கூடாதா?" என்று கேட்க, எனக்கும் சரியெனபட இன்று சமைக்க ஆரம்பித்தேன்.

மனைவி முகத்தில் ஏகப்பட்ட சந்தோசம் அதே சமயம் சிறு வருத்தமும். சந்தோசம் உதவி செய்கிறேன் என ஒப்புக்கொண்டதற்கு, வருத்தம் "இத்தனை நாள் நாம் கேட்டு உதவி செய்யாத மனுஷன், பெண் கேட்டதும் மறு பேச்சில்லாமல் சரி என்று சொல்லி விட்டாரே" என்று. ஒரு வழியாக காலிபிளவரை வைத்து ஒரு ஐட்டம் செய்தேன். ஒரு முறை நாம் சமைத்து பார்த்தால்தான் அதன் கஷ்டம் தெரியும். எத்தனை நாட்கள் மனைவி கஷ்டப்பட்டு சமைப்பதை சரியில்லை என்று சொல்லியிருக்கிறோம்? சமையல் என்பது ஒரு தனிக்கலை. முழு ஈடுபாட்டுடன் செய்ததால் சந்தோசமாக உள்ளது.

இந்த சமயத்தில் சுஜாதா ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது, " டிவி நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும் சமையல் நிகழ்ச்சியில், சமையல் முடிந்தவுடன், அதை யாராவது நிலையத்தில் உள்ளவர்கள் சாப்பிடுவார்களா? இல்லை அப்படியே குப்பையில் கொட்டி விடுவார்களா? என சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், பார்க்க அழகாக உள்ளது. ருசி எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை"

நம்புங்கள். நான் சமைத்த காலிபிளவர் மிக அருமையாக இருந்தது. நான் சமைத்தேன் என்பதற்காக சொல்லவில்லை. முடிந்தால் நீங்களும் சமைத்து ருசி பார்க்கவும். இதோ நான் சமைத்தவுடன் இன்று எடுத்த போட்டோ:செய்முறை:

01. பூண்டு, இஞ்சி தேவையான அளவிற்கு எடுத்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

02. காலிபிளவரை சிறு துண்டுகளாக அழகாக நறுக்கி, அதனை நல்ல சுடுதண்ணியில் போட்டு அடுப்பில் வைத்து அதிகம் வேகவிடாமல் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்வதால் அதில் ஏதேனும் பூச்சிகள் இருந்தால் போய் சுத்தமாகிவிடும். அதிகம் வேகவிட்டால் குழைந்து விடும்.

03. தேவையான அளவு வெங்காயம் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

04. தேவையான அளவு தக்காளி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

05. கருவேப்பிலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

06. பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி காயவிடவும்.

07. கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை காய்ந்த எண்ணையில் போட்டு கலர் மாறும் வரை கிளறவும்.

08. கருவேப்பிலையை அதில் போட்டு கிளறவும்.

09. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டை போடவும்.

10. நறுக்கிய வெங்காயத்தை போடவும்.

11. நறுக்கிய தக்காளியை போட்டு நன்று கிளற வேண்டும்.

12. பிறகு தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளறவும்.

13. தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

14. சிறிது நேரம் கழித்து நறுக்கிய காலிபிளவரை போட்டு கிளறி மூடிவிடவேண்டும்.

15. பிறகு கொதித்தவுடன் கொஞ்சம் கொத்தமல்லியைப் போட்டு இறக்கவும்.

இதனை கிரேவியாகவும் வைத்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம் இல்லை நன்றாக சுண்டியவுடன் இறக்கி வைத்து மற்ற காய்கறிகள் போலும் சாப்பிடலாம்.

இதற்கு பெயர் என்ன என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. காலிபிளவர் என்ற பெயருடன் கறி என்றோ, பிரை என்றோ அல்லது வறுவல் என்றோ ஏதோ ஒன்று சொல்லிக்கொள்ளலாம்.

19 comments:

tamil comedy said...

romba jolly dhan ponga boss!!

CS. Mohan Kumar said...

அப்பாக்களுக்கு பெண் என்றால் எப்போதும் ஸ்பெஷல் தான்; நமக்கு தெரிந்த சமையல்.. வேண்டாம் விட்டுடலாம்

iniyavan said...

//romba jolly dhan ponga boss!!//

வருகைக்கு நன்றி தமிழ்காமடி.

iniyavan said...

//அப்பாக்களுக்கு பெண் என்றால் எப்போதும் ஸ்பெஷல் தான்; நமக்கு தெரிந்த சமையல்.. வேண்டாம் விட்டுடலாம்//

வருகைக்கு நன்றி மோகன்.

அமுதா கிருஷ்ணா said...

பார்க்க நல்லாதான் இருக்கு

Anonymous said...

சாரிங்க உலக்ஸ் , நான் தெரியாம மல்லிகா பத்திரிநாத் வலைபூவுக்குல வரத்துக்கு பதிலா இங்க வந்துட்டேன் :-)

அன்புடன் நான் said...

செய்முரை விளக்கத்தை பார்த்தா... இது முதல் முறையா தெரியல.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சமையலைப் பற்றி மிகத்தான் பயப்படுகிறீர்கள். பொதுவாக வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழ் ஆண்கள்
99./. மிகச் சுவையாகச் சமைப்பார்கள். ஆனால் திருமணத்தின் பின் சமையல் செய்வது வெகு குறைவு.
நீங்கள் சைவம் சாப்பிடுபவரா? அசைவம் சாப்பிடுபவரானால் வெங்காயம் போட்டு தாளிக்கும் போது
கொஞ்ச இறாலும் போட்டுப் பாருங்கள். மிகச் சுவையாக இருக்கும்.
இந்த கோவாப்பூ பிரட்டல் நன்றாக இருக்குமென நம்புகிறேன்.
ஈழத்தில் கோலிபிளவரை கோவாப்பூ என்போம். கோவா= முட்டைக்கோசு

மாதேவி said...

மகள் கேட்டால் ஜாலி:))
சமையல் நன்றாக இருக்கிறது.

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

உலகநாதன்,எல்லாவற்றலும் தேவையான அளவு தேவையான அளவு'ன்னு திரும்ப திரும்ப சொல்லி இருக்கீங்களே..
'தேவையான அளவு'க்கு கப் எங்க கிடைக்கும் ???

:)

மணிஜி said...

உலக்ஸ்..சமையலில் பெண்களை விட ஆண்கள்தான் சுவை. நளபாகம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். தமயந்தி பாகம் என்று சொல்லவில்லை!!(நான் மிக நன்றாக சமைப்பேன்..வெஜ் & நான்வெஜ்)

iniyavan said...

//பார்க்க நல்லாதான் இருக்கு//

சாப்பிடவும் நல்லாத்தான் இருக்கும் மேடம்.

iniyavan said...

//சாரிங்க உலக்ஸ் , நான் தெரியாம மல்லிகா பத்திரிநாத் வலைபூவுக்குல வரத்துக்கு பதிலா இங்க வந்துட்டேன் :-)//

தெரியாமல் வந்தாலும் வருகைக்கு நன்றி நண்பரே!

iniyavan said...

//நீங்கள் சைவம் சாப்பிடுபவரா? அசைவம் சாப்பிடுபவரானால் வெங்காயம் போட்டு தாளிக்கும் போது
கொஞ்ச இறாலும் போட்டுப் பாருங்கள். //

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி யோகன்.

iniyavan said...

//செய்முரை விளக்கத்தை பார்த்தா... இது முதல் முறையா தெரியல.//

சத்தியமாய் இதுதான் முதல் முறை நண்பா!

iniyavan said...

//மகள் கேட்டால் ஜாலி:))
சமையல் நன்றாக இருக்கிறது.//

வருகைக்கு நன்றி மாதேவி.

iniyavan said...

//உலகநாதன்,எல்லாவற்றலும் தேவையான அளவு தேவையான அளவு'ன்னு திரும்ப திரும்ப சொல்லி இருக்கீங்களே..
'தேவையான அளவு'க்கு கப் எங்க கிடைக்கும் ???

:)//

வீட்டுல தேடிப்பாருங்க அறிவன். தங்கள் வருகைக்கு நன்றி.

iniyavan said...

//உலக்ஸ்..சமையலில் பெண்களை விட ஆண்கள்தான் சுவை. நளபாகம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். தமயந்தி பாகம் என்று சொல்லவில்லை!!(நான் மிக நன்றாக சமைப்பேன்..வெஜ் & நான்வெஜ்)//

தலைவரே,

சொல்லவே இல்லை. அடுத்த முறை சென்னை வரும்போது உங்கள் சமையல் சாப்பிட ஆசை.

Yazhini said...

// சமையல் என்பது ஒரு தனிக்கலை. முழு ஈடுபாட்டுடன் செய்ததால் சந்தோசமாக உள்ளது //

உண்மை தான் ! உங்கள் செய்முறை விளக்கம் பார்த்தாலே தெரிகிறது. ஈடுபாட்டோடு சிறிது அன்பையும் சேர்த்தல், மிக அருமையாக ருசிக்கும். உலகநாதன் சார் அப்படி தான் செய்து இருக்கிறார் போலும்.