Feb 24, 2010

இதற்கு யார் காரணம் ?

இரண்டு நாட்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் 'மறுபக்கம்' என்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். தமிழ்நாட்டு நண்பர்கள் அந்த நிகழ்ச்சியை ஏற்கனவே பார்த்து இருக்கக் கூடும். அந்த நிகழ்ச்சியில் காண்பித்த இரண்டு செய்திகளும் என்னை சினம் கொள்ள செய்தன. அந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஸ்பேக்.

நான் எட்டாவது படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம். அப்போது நான் பார்க்க ரொம்ப ஒல்லியாக இருப்பேன். நம் கலர் வேறு உங்களுக்கே தெரியும். அப்போது எனக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை போக்கியது என் அப்பாதான். 'நாம் ஒல்லியாக இருக்கிறோம், மாநிறமாக வேறு இருக்கிறோம்' என்று சிகப்பான பையன்களை பார்க்கும் போதெல்லாம் எண்ணங்கள் தோன்றும். அப்பாதான் நல்ல தைரியத்தை கற்றுக்கொடுத்தார். படிப்பில் கவனத்தை செலுத்த சொல்லிக்கொடுத்தார். அப்போது என்னை கேலி செய்பவர்களை பார்த்து பயப்படவோ அல்லது ஓடிப்போகவோ மாட்டேன். பள்ளி விடும் வரை காத்திருப்பேன். பள்ளி முடிந்தவுடன் என்னை கேலி செய்தவர்களை உண்டு இல்லை என பண்ணிவிடுவேன். எனக்கு உதவுவதற்கு என்ற சில நண்பர்களை புரோட்டா, டீ எல்லாம் வாங்கி கொடுத்து வைத்திருந்தேன். அப்போதே பாருங்கள் என்ன ஒரு கிரிமினல் புத்தி? என்ன செய்வது? நம்மால் ஒன்றும் முடியாதல்லவா? அதனால்தான் அந்த ஏற்பாடு. அது தவறு என்று இப்போது தெரிகிறது. இங்கே அந்த செய்திகளை குறிப்பிடுவதற்கு காரணம், 'நான் எப்படி தைரியமாக அந்த பிரச்சனைகளை எதிர்கொண்டேன்' என்று சொல்வதற்கு மட்டுமே. இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் உங்களுக்கே தெளிவாக புரியும்.

நான் +2 படிக்கும்போது என்னை ஒருவன் அதேபோல கிண்டல் செய்ய நான் அவனை கண்டபடி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டி விட்டேன். அதற்கு அவன், "மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்கு போக ரயில்வே ஸ்டேசன் வருவல்ல. அப்போ உன்னை பின்னி எடுக்கிறேன்" எனக் கூறிவிட்டான். அவன் மிகுந்த பலசாலி. நான் ஒல்லி. நண்பர்கள் எல்லோரும் பயந்தார்கள். என்னை அடி பின்னிவிடுவான் என்றார்கள். நான் சிறிதும் கலங்கவில்லை. ரயில்வே ஸ்டேசன் சென்றேன். அவன் இருந்தான். நேரே அவனிடம் சென்று, " என்னை அடிப்பதாக சொன்னாயே, இதோ இங்கே உன் கண் முன்னால் நிற்கிறேன். அடி" என்றேன். நிலை குலைந்து போனான் அவன். இங்கே என்ன சொல்ல வருகிறேன் என்றால், தைரியம் அதாவது பயந்து ஒதுங்காமல் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும். இது போல் பல நிகழ்வுகளை சொல்லலாம். ஆனால், இப்போது அது என் நோக்கம் அல்ல.

இப்போது விசயத்திற்கு வருகிறேன். மக்கள் தொலைக்காட்சியின் அந்த நிகழ்ச்சியில் நான் பார்த்த இரண்டு செய்திகளில் என்னை மிகவும் பாதித்தது இதுதான். ஒரு ஏழை மாணவன் கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்துள்ளான். அவன் படிப்பதற்கே அவர்கள் வீட்டில் கடன் வாங்க வேண்டி இருந்துள்ளது. அந்த நிலையில் சீனியர் மாணவர்கள் சிலர் சேர்ந்து அவனை பார்ட்டி வைக்கும்படி வற்புறுத்தி உள்ளார்கள். இவனோ, 'என்னிடம் பார்ட்டி வைக்கும் அளவிற்கு எல்லாம் பணம் இல்லை' என்று சொல்லி இருக்கிறான். தொடர்ந்து அவர்கள் வற்புறுத்தவே அவர்கள் தொல்லை தாங்காமல் ஹாஸ்டல் வார்டனிடம் புகார் செய்திருக்கிறான். ஹாஸ்டல் வார்டனோ, "நீ ஒன்றும் கவலைப்படாதே. நான் பிரின்ஸிபாலிடம் சொல்லி அவர்களிடம் பேச சொல்கிறேன்' என்றிருக்கிறார். இவனும் பிரச்சனை முடிந்தது என்ற தைரியத்தில் அவனுடைய அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்திருக்கிறான். நடு இரவு ஒரு மணி அளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. சில சமயம் வார்டன் கதவை தட்டி எல்லா ரூமிலும் ஆட்கள் இருக்கிறார்களா? என்று சரிபார்ப்பது வழக்கமாம். இவனும் அது போல நினைத்து கதவை திறந்திருக்கிறான். திறந்து பார்த்தால் அவனை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் நான்கு பேர் நின்றிருக்கிறார்கள். இவன் பயந்து நடுங்கி என்ன விசயம்? என்று கேட்க, அவர்கள், "நீ வார்டனிடம் எங்களைப் பற்றி என்ன சொன்னாய்?" என்று கேட்டிருக்கிறார்கள். இவன் நடந்த விசயத்தை சொல்லி இருக்கிறான். அடுத்து அவர்கள் செய்த செயல்தான் மிகக் கொடுமையானது.

அந்த நால்வரும் சேர்ந்து அவனை மேலிருந்து நான்கு புளோருக்கு மாடிப்படிகள் வழியாக படிகளில் இழுத்தே வந்திருக்கிறார்கள். நாலாவது மாடிக்கும் வந்ததும், அங்கிருந்து அவனை அப்படியே தூக்கி கீழே வீசி எறிந்திருக்கிறார்கள். கீழே விழுந்த அந்த பையன் உடனே கோமா ஸ்டேஜுக்கு சென்று விட்டான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்த கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்கொலை முயற்சி என்று கேஸை மூடி விட்டார்கள். பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அவனுக்கு இப்போது நினைவு திரும்பியிருக்கிறது. இவ்வளவு விசயங்களும் அவன் சொல்லித்தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆனால் என்ன கொடுமை என்றால், அந்த பையனுக்கு இடுப்புக்கு கீழே ஒரு உணர்வும் இப்போது இல்லை. அவன் இருந்தும் இல்லாத நிலை. பெற்றோர்களுக்கு இப்போது மிகுந்த சிரமம்.

இப்போது அவர்கள் கேட்பது, அவர்களின் பையனை தண்டித்தவர்களுக்கு ஏன் இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. விசயம் தெரிந்திருந்தும் கல்லூரி நிர்வாகம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? சம்பந்தப்பட்ட அந்த மாணவர்கள் இன்னும் அங்குதான் படித்துக்கொண்டிருக்கிறார்கள். எதுமே தவறு செய்யாதவர்கள் போல் இருக்கிறார்களே? அரசாங்கம் தலையிட்டு எங்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நியாயமான கேள்விகள்தான். இப்போதெல்லாம், கல்லூரி நடத்துவதே ஒரு வியாபாரமாகிப்போன நிலையில் அவர்களிடம் நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

இன்னொரு செய்தி. இதே போல் இன்னொரு கல்லூரியில் ஒரு மாணவியை ராகிங் செய்ய, செய்வதறியாத அந்த மாணவி ஆஸிட்டை எடுத்து குடித்துவிட, துடி துடித்து இறந்து போயிருக்கிறாள். என்ன கொடுமை பாருங்கள்? எப்படி ஒரு மாணவன் சக மாணவனை ராகிங் என்ற பெயரால் இப்படி கொடுமைப்படுத்த முடிகிறது. அவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகள்தானா? அவர்கள் படித்து என்ன சாதிக்க போகிறார்கள்? இவர்கள் பெற்றோர்கள் எல்லாம் என்ன சொல்லி கொடுத்து வளர்த்திருப்பார்கள்?

சிறு வயதிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு தைரியத்தை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். பயம் என்ற உணர்ச்சியே இல்லாமல் வளர்க்க வேண்டும். பிரச்சனைகளை பார்த்து ஓடி ஒளியாமல் அதனை எதிர்கொள்ள சொல்லிக் கொடுக்க வேண்டும். நான் என் பிள்ளைகளை அப்படித்தான் வளர்க்கிறேன். "யாராவது அடித்தால் திருப்பி அடி. பயப்படாதே, எதற்கும், எப்போதும்'' என்று தினமும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து அவர்களின் பய உணர்ச்சியை போக்க வேண்டும். நல்லது எது? கெட்டது எது? என்று சொல்லிக்கொடுப்பதும் பெற்றோர்கள் கடமைதான். எல்லாவற்றையும் பள்ளிகளில் எதிர்பார்ப்பது கஷ்டம்.

எப்படி செக்ஸ் கல்வி முக்கியம் என்று சொல்கிறார்களோ? அதே போல், ராகிங் செய்வது தவறு என்பதையும், அப்படியே யாராவது செய்தாலும் அதை எதிர்கொள்வது எப்படி என்பதையும், பள்ளி கல்லூரி நிர்வாகங்களே சொல்லிக் கொடுக்க அரசு உத்தரவிடவேண்டும். ராகிங் செய்பவர்களுக்கு மாணவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாம் பிள்ளைகளை நிம்மதியாக பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ அனுப்ப முடியும்.

11 comments:

Anonymous said...

What if our children get into police case.
My opinion is not to advise to attack but "attack to defend"

Anonymous said...

///நான் என் கருத்தினை சொன்னதற்கு அப்புறம் டி எஸ் பி என்ன முடிவு எடுத்தார்? என்பதை பிறகு சொல்கிறேன்.///
what happened to the next part to this....?
http://www.iniyavan.com/2010/01/18-2.html

jegan said...

சார், நான் உங்க கருத்துக்கு ஒத்து போக முடிய வில்லை. எப்படி சமாளிக்கிரதுன்னு சொல்லி கொடுக்கனுமே தவிர, திரும்பி அடிக்க சொல்ல கூடாது. எதாவது சிக்கல் என்றால் , அடி தான் முதல் ஆயு தம் அப்படிகிற மாதிரி ஆகி விடும். I hope you don't mistake me - ஜெகன்

iniyavan said...

//What if our children get into police case.
My opinion is not to advise to attack but "attack to defend"//

உண்மைதான்.

வருகைக்கும் உங்கள் உதவிக்கும் நன்றி நண்பா!

iniyavan said...

//what happened to the next part to this....?//

விரைவில் சொல்கிறேன்.

iniyavan said...

//சார், நான் உங்க கருத்துக்கு ஒத்து போக முடிய வில்லை. எப்படி சமாளிக்கிரதுன்னு சொல்லி கொடுக்கனுமே தவிர, திரும்பி அடிக்க சொல்ல கூடாது. எதாவது சிக்கல் என்றால் , அடி தான் முதல் ஆயு தம் அப்படிகிற மாதிரி ஆகி விடும். I hope you don't mistake me - ஜெகன்//

நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால், அடிக்க வந்தால் பயந்து ஒதுங்ககூடாது என்பதை சொல்வதற்காகவே அப்படி எழுதினேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்களைப் போல் என் நண்பரும் இங்கே தன் பிள்ளைகளுக்கு அடிவாங்கி வராதே திருப்பி அடி; அல்லது அடுத்தவர் அடிக்குமுன் அடி.. எனக் கூறியனுப்ப அவர்களோ! தங்கள் மேல் தவறிருந்தாலும்
அடுத்தவன் வாய்திறக்குமுன் அவன் வாய் வெத்திலை போட வைத்து; கடைசியில் பாடசாலை தந்தையைக் கூப்பிட்டு பிள்ளைக்கு குழந்தை வைத்தியரிடம் ஆலோசனைக்குப் போகும் படி கூறியதுடன்;
இது தொடர்ந்தால் பாடசாலை மாறவேண்டுமெனவும் கூறி விட்டார்.
அதனால் எந்தப் பெற்றோருமே வன்முறையை போதிக்காது தவிர்த்து ; சினேக பூர்வமாக தேடுதலை
இளமையிலே போதிக்க வேண்டும்.
இப்படி இருந்தால் இந்த ராக்கிங் எனும் கேடே இருக்காது. இந்தச் சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம்
உண்மையை மறைந்துள்ளது. முதல் இந்த நிர்வாகங்களும் தண்டிக்கப்பட வேண்டியவை.
தவறு செய்தது எந்தக் கொம்பன் பிள்ளையானாலும் ; தவறை உணர்த்த வேண்டும்.பேயாளும் நம் நாடுகளில் இது நடக்குமா?

Romeoboy said...

ராக்கிங் முற்றிலும் ஒழிக்கவேண்டிய ஒன்று தலைவரே. ஆனால் அது அவ்வளவு எளிது அல்ல.

iniyavan said...

//தவறு செய்தது எந்தக் கொம்பன் பிள்ளையானாலும் ; தவறை உணர்த்த வேண்டும்.பேயாளும் நம் நாடுகளில் இது நடக்குமா?//

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி யோகன்.

iniyavan said...

//ராக்கிங் முற்றிலும் ஒழிக்கவேண்டிய ஒன்று தலைவரே. ஆனால் அது அவ்வளவு எளிது அல்ல.//

உண்மைதான் ரோமியோ. வருகைக்கு நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

குழந்தைகளிடம் பெற்றோர் நன்கு பேச வேண்டும் காலேஜில் எது நடந்தாலும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர் தலை போற வேலை இருந்தாலும் பேச்சிற்கு செவி சாய்க்க வேண்டும்..