என்னுடைய முந்தைய இடுகையில்,
"அதில் ஒன்று 'பரிசல்காரன் அவர்களுக்கு நன்றி' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். ஏனோ அப்போது இந்த இரண்டு வரி இடுகை அவரின் கவனம் பெறாமலே போனது. அன்று அவரின் கவனம் பெறாமல் போய்விட்ட அந்த இடுகை, இன்று அவரின் கவனம் பெற வேண்டும் என்பதற்காக மீண்டும் அதே தலைப்பில் இன்றைய இடுகையை எழுதுகிறேன்" என்று எழுதியிருந்தேன். ஆனால் என்ன ஆச்சர்யம் பாருங்கள், அந்த இடுகையும் அவரின் கவனம் பெறாமலேயே போய்விட்டது. இருக்கட்டும்! இருக்கட்டும்!!
நான் பொதுவாக யாருக்கும் என் இடுகையை படியுங்கள் என்றோ, பின்னூட்டமிடுங்கள் என்றோ கேட்டதில்லை. ஊருக்கு போகும்போது 'ஒரு வகையான சந்தோச உணர்ச்சி" என்ற ஒரு இடுகையை எழுதினேன். அதை மட்டும்தான் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பினேன். அடிக்கடி நான் அவரிடம் தொலைபேசியில் பேசுவேன். இப்போது பேசினால் இந்த இடுகைக்காக பேசியது போல் ஆகிவிடும் என்பதால் பேசாமல் இருக்கிறேன்.
சாதாரணமாக நான் எழுதுவதை ஒரு 150 பேர் முதல் 200 பேர் வரை படிப்பார்கள். தலைப்பில் பரிசலின் பெயர் இருக்கவே இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் வந்து சென்றிருக்கின்றார்கள். அந்த அளவிற்கு அவரின் எழுத்தின் வீச்சு இருக்கிறது.
அந்த இடுகைக்கும் மைனஸ் ஓட்டு போட்ட நண்பர் பல ஆண்டுகாலம் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
**********************************************
நான் காலேஜ் படித்த சமயம் எங்களின் ஆஸ்தான கனவு கன்னியாக விளங்கியவர் குஷ்பு. அவர் படம் ஒன்றை கூட தவறவிட்டதில்லை. ஒரு சமயத்தில் அவருடைய படம் இல்லாத குமுதம் இதழைப் பார்ப்பதே ஏதோ அதியம் போல இருக்கும். அந்த அளவிற்கு அவர் பாப்புலர். புதுக்கோட்டையில் அவருக்கு கோயில் எல்லாம் கட்டினார்கள். கவாஸ்கர் போல் ஒரு மனிதன் புகழின் உச்சியில் இருக்கும்போதே, சம்பந்தப்பட்ட துறையிலிருந்து ஒதுங்கி விடுவது நல்லது.
எதேச்சையாக நேற்று "வில்லு" படத்தின் பாடல் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில் விஜயுடன் குஷ்பு சேர்ந்து குத்தாட்டம் ஆடியதை பார்த்ததிலிருந்து ஒரே அறுவெருப்பாக உள்ளது. அவர் உடம்பும், அந்த அங்க அசைவும்....வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே. இவருக்கா கோயில் கட்டினார்கள்? என்று மனம் நினைத்தாலும், அன்றைய குஷ்புவிற்குத்தானே கோயில் கட்டினார்கள் என்று நினைத்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். இனிமேல் அவர் நடிக்காமல் இருப்பதே அவருக்கும், நமக்கும் நல்லது.
யாருக்காவது உங்கள் முதல் காதலியை இப்போது பார்க்க ஆசை இருக்கிறதா? எனக்கு இல்லை. ஏனென்றால், நாம் அப்போது அந்த வயதில் அவரை பார்க்கும்போது ஏற்பட்ட உணர்ச்சி, அவரின் அழகு தந்த மகிழ்ச்சி இப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.. ஏனென்றால் இப்போது எல்லாமே மாறியிருக்கும். அதுவும் அவள் இன்றைய குஷ்பு போல் இருந்து விட்டால்??? வேண்டவே வேண்டாம், நம் மனதில் ஒரு ஓரத்தில் அவள் எப்போதும்போல் அந்த அழகிலேயே, அன்றைய குஷ்பு போலவே இருந்துவிட்டு போகட்டும்.
யாராவது குஷ்புவைப் பார்க்க நேர்ந்தால், அவரிடம் நான் சொன்னதாக இந்த கருத்துக்களை சொல்லிவிடுங்கள்.
**********************************************
சமீபத்தில் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு உபயோகமான தகவலை நானும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நாம் ஹோட்டலில் தங்க நேர்கையில் கவனத்தில் கொள்ளவேண்டிய விசயம் இது. நாம் ஹோட்டலில் செக் இன் செய்யும்போது, நீங்கள் உங்கள் கிரடிட் கார்ட் மூலமாக அறை வாடகையை கொடுப்பவராக இருந்தால், உங்களின் கார்டை வாங்கி, வெரிஃபிகேஷ்ன் செய்து விட்டு உங்களிடம் திருப்பி கொடுப்பார்கள். பிறகு ஒரு ரூம் கீயாக ஒரு பிளாஸ்டிக் கார்டை தருவார்கள். அதை வைத்துதான் நாம் அறையை திறப்போம், விளக்குகளை போடுவோம். நாம் ஹோட்டலை விட்டு வரும்போது, அறை வாடகையை கொடுத்து விட்டு அந்த கீ கார்டை அவர்களிடமே கொடுத்து விட்டு வருவோம். அங்கேதான் விசயமே இருக்கிறது. என் நண்பர் என்ன சொல்கிறார் என்றால், அந்த கார்டில் நமது அனைத்து விபரங்களும், நமது கிரடிட் கார்டின் நம்பரும், சீக்ரெட் நம்பரும் பதிவாகி இருக்குமாம். நாம் அந்த கார்டை திருப்பி தரும் பட்சத்தில், நம்முடைய கிரடிட் கார்டை அங்கே வேலை பார்க்கும் நபர்கள் தவறாக பயன்படுத்த முடியுமாம். எனக்கும் அது உண்மைபோலவே தெரிகிறது.
நன்றாக யோசித்துப்பாருங்கள். ஆன் லைனில் ஒரு டெல் கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமென்றால், அதற்கு தேவை கிரடிட் கார்ட் நம்பரும், அதன் பின்னால் உள்ள மூன்று சீக்ரட் நம்பர் மட்டும்தான். சம்பந்தப்பட்ட நபர்தான் வாங்குகிறாரா என்று கம்ப்யூட்டருக்கு எப்படித்தெரியும்? நம்பர் தெரிந்த யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் ஆன் லைனில் வாங்க முடியும். விசயம் கேள்விப்பட்டதிலிருந்து நான் அந்த கார்டை திருப்பி வாங்கி வந்து விடுகிறேன்.
**********************************************
சென்ற வாரம் நண்பரின் வற்புறுத்தலினால் கோலாலம்பூரில் ஒரு தமிழ் பப்புக்கு சென்றேன். நான் என்னவோ ஏதோ என்று நினைத்து மிகவும் தயக்கத்துடன் உள்ளே சென்றேன். உள்ளே நுழைவதற்கு ஏகப்பட்ட டிரஸ் கோட். ஒரு வழியாக உள்ளே சென்றால், எனக்கு பெருத்த ஏமாற்றம். ஏன் என்று சொல்லுவதற்கு முன் நான் காலெஜ் படித்த போது நடந்த சம்பவம் ஒன்றினை உங்களுக்கு சொல்கிறேன்.
கடைசி ஒரு வருடம் நான் காலேஜுக்கு பஸ்ஸில் சென்று வந்தேன். காலை, மாலை இரு வேளைகளிலுமே பஸ்ஸில் அதிக கூட்டம் இருக்கும். பிடிக்குதோ, பிடிக்கலையோ கூட்டத்தில் நின்று கொண்டுதான் செல்ல வேண்டும். ஒரு முறை நண்பர்களுடன் பஸ்ஸிற்காக திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தோம். நீண்ட நேர காத்திருத்தலுக்குப் பிறகு ஒரு பஸ் வந்தது. நண்பர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏறினோம். சில நிமிடத்தில் ஒரு நண்பன் கீழே இறங்கினான். அவனைப் பார்த்து, " ஏண்டா, நீ வரவில்லையா?" எனக் கேட்டேன். அவன் கூறினான்,
" போடா. ஒரே ஆம்பளையா இருக்காங்க. எவன் வருவான் இந்த பஸ்ஸில"
இப்போது புரிகிறதா? நான் அந்த கிளப் உள்ளே சென்றதும், ஏன் ஏமாற்றம் அடைந்தேன் என்று? அதெல்லாம் வெள்ளி, சனி மட்டும்தானாம்??
அது இருக்கட்டும். ஆனால் அந்த சத்தம். கூச்சல். இசை என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து??? அம்மா, தாங்க முடியலை. நான் என்னை அழைத்து போன நண்பரிடம் கேட்டேன்,
"எப்படி சார், இந்த சத்ததுல அமைதியா உங்களால இருக்க முடியுது?"
"அதுக்குத்தான் உலக்ஸ், உங்களை பீர் சாப்பிட சொல்லுறேன்" இது எப்படி இருக்கு பாருங்க? அந்த சத்தம் எனக்கு கேட்காம இருக்க, நான் பீர் சாப்புடனுமாம். இந்த லட்சணத்துல என்ன பாட்டுக்கு எல்லாரும் ஆடினாங்க தெரியுமா?
" ஆடாதடா ஆடாதடா மனிதா. ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா"
தெரிஞ்சுதான் இந்த பாட்டை பாடுனாங்களா எனக்குத் தெரியலை?
**********************************************
ஐபோன் 3Gs வாங்குவதா அல்லது பிளேக் பெர்ரி போல்ட் 9500 ஸ்ட்ரோம் வாங்குவதா எனக்குழப்பத்தில் உள்ளேன். ஐபோன் 3Gs மல்டி மீடியாவுக்கு என்றும், மெயிலுக்கு என்றால் பிளேக் பெர்ரி போன் பெஸ்ட் என்றும் சொல்கிறார்கள். பிளேக் பெர்ரி என்றால் மாதா மாதம் மெயிலுக்காக பணம் கட்ட வேண்டும். ஆனால், ஐபோன் ஒரு வருட ஒப்பந்தத்துக்கு பிறகு எதுவும் கட்ட வேண்டியிருக்காது. அந்த ஒரு வருடத்தில் மெயிலும் பார்க்கலாம், போனும் பேசலாம். யாராவது உபயோகிக்கும் நண்பர்கள் எனக்கு எந்த போன வாங்குவது என்று தெரிவித்தால் நல்லது.
**********************************************