Mar 1, 2010

என் வலது கண் துடித்தது!

சிறு வயதில் யார் என்னிடம் இப்படிச் சொன்னார்கள் என்று எனக்கு நினைவில்லை. ஆனால், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ரொம்ப பீடிகை போட விரும்பவில்லை. விசயம் இதுதான். ஆண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது நடக்கும் என்றும், வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும் என்றும், பெண்களுக்கு அப்படியே ரிவர்ஸ்ல நடக்கும் என்றும் என்னிடம் யாரோ சொல்லி விட்டார்கள். சொன்னது யார்? என்ற சிந்தனைக்கு செல்ல நான் விரும்பவில்லை.. ஒரு பாட்டுல கூட கண்ணதாசன் எழுதியிருப்பார். கதாநாயகி இப்படி பாடுவாள், "என் வலது கண்ணும் துடித்தது, உன்னை........"

சகுனம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை நம்பாமல் வாழ்வது ரொம்ப நல்லது. நம்ப ஆரம்பித்து விட்டோமானால் நம்மை அது உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். ஜாதகம் பார்ப்பதோ, இல்லை ஜோசியம் பார்ப்பதோ நம் நாட்டில் மட்டும் உள்ள பழக்கமாகவே நான் நினைக்கிறேன். எந்த ஐரோப்பியன் அல்லது அமெரிக்கன் ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்து கொள்கிறான். நாம்தான் எல்லாவற்றையும் பார்க்கிறோம். இப்போது லேட்டஸ்டாக வாஸ்து .....

இந்த கண் துடிக்கும் சமாச்சாரம் என்னை பொருத்தவரை உண்மை என்றே நான் நினைக்கிறேன். என் வீட்டில் இது வரை நடந்த அனைத்து மரணங்களின் போதும் என் வலது கண் விடாமல் ஒரு வாரம் துடித்திருக்கிறது. அதை வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் சொல்லி இருக்கிறேன். அதே போல் நான் கனவில் காணும் சில நிகழ்வுகளும் அப்படியே நடந்துவிடுகின்றன். அப்படியே என்றால் அப்படியே அல்ல. ஓரளவு அப்படியே. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. கல்யாணத்திற்கு முன் (அப்படியே வைத்துக்கொள்வோமே- இப்போது அல்ல) வந்த நடிகைகள் சம்பந்தப்பட்ட கனவுகள் மட்டும் நடக்கவே இல்லை. என்ன ஒரு ஓர வஞ்சனை பாருங்கள் இந்த கனவிற்கு!

மீண்டும் விசயத்திற்கு வருகிறேன். இது சம்பந்தமாக என் நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம். அந்த நண்பர் இதுபோன்ற நம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும் இந்த கண் துடிக்கும் சமாச்சாரத்தை போய் அவர் மனைவியிடம் சொல்லி இருக்கிறார். அவர் இந்த மாதிரி விசயங்களில் நம்பிக்கை அதிகம் உள்ளவர். நண்பரின் மனைவிக்கு ஒரு முறை தொடர்ந்து இடது கண் துடிக்க அவர் பயந்து போய் நண்பரிடம் சொல்ல அவர் கடுப்பாகி விட்டார். தொடர்ந்து ஒரு வாரம் அவருடைய கண் துடிக்கவே தினமும் இந்தியாவுக்கு போன் செய்து எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள? என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார். முடிவில் நண்பர் வெறுத்துப் போய் மனைவியை டாக்டரிடம் அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் கண்ணில் ஒன்றும் கோளாறு இல்லை என்று சொல்லி, எதற்கும் இந்த ஐ டிராப்ஸை கண்ணில் விடுங்கள் என்று சொல்லி நிறைய பீஸ் வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார்.

ஆனால், எனக்கு அப்படி இல்லை. எனக்கு வலது கண் துடித்தால் நிச்சயம் ஏதாவது ஒரு கெட்ட விசயம் நடக்கிறது அல்லது காதுக்கு வருகிறது. இது ஏன் எனக்கு மட்டும் நடக்கிறது என்று தெரியவில்லை. ஏதாவது மருத்துவ காரணங்கள் இருக்கிறதா? என்றும் தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த விசயத்திற்கு வருகிறேன். பத்து நாட்களுக்கு முன் ஒரு நாள் என் வலது கண் துடிக்க ஆரம்பித்தது. அதனால் நான் மிகுந்த ஜாக்கிரதை ஆனேன். அன்றைய தினம் குடும்பத்தோடு 'அசல்' படம் சென்றேன். மிகவும் ஜாக்கிரதையானவன் ஏன் அந்த படத்திற்கு சென்றேன் என்கின்றீர்களா? அந்த ஊரில் வேறு எந்த தமிழ் படமும் ஓடவில்லை. தியேட்டருக்கு சென்று டிக்கட் புக் செய்துவிட்டு ஒரு தமிழ் கடைக்கு சென்று மளிகை சாமான் வாங்கலாம் என்று போய் கடையில் வண்டியை நிறுத்தினேன். பின்னால் வந்த ஒரு மலாய் பெண்மணி தன்னுடைய காரால் என்னுடைய காரின் பின்புறம் மோதிவிட்டார். நன்கு கவனிக்கவும். நின்ற வண்டியில் மோதிவிட்டார். காரிலிருந்து இறங்கி திட்டலாம் என்று போனால், அவர் கண்களெல்லாம் கலங்கி நான் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு உடனே ஓடிவிட்டார். இந்த சம்பவத்திற்கு அப்புறம் வலது கண் துடிப்பது நின்றுவிடும் என நினைத்தேன். நிற்கவில்லை. அட்லீஸ்ட் 'அசல்' படம் பார்த்தபிறகாவது நிற்கும் என நினைத்தேன். அப்படியும் நிற்கவில்லை.

அடுத்த நாள் ஊருக்கு போன் செய்தால் உறவினர் ஒருவரின் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என செய்தி வந்தது. தொடர்ந்து துடித்துக்கொண்டே இருந்தது. தினமும் நானும் என் நண்பரின் மனைவியைப் போலவே தினமும் போன் செய்து அனைவரின் உடல்நிலையும் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.

சென்ற வாரம் ஒரு கனவு கண்டேன். வலது கண்ணும் துடித்துக்கொண்டே இருந்தது. கனவு கண்டால் பலிக்கும் பட்சத்தில், அதை உடனே வெளியில் சொல்லி விட்டால், கனவு பலிக்காது என்று ஒருவர் சொன்னதால் அம்மாவிற்கு போன் செய்தேன். " அம்மா, இனி பாத்ரூம் செல்லும்போது கவனமாக நடந்து செல். முக்கியமாக இரவில். வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது பாத்ரூமில்தான். அதுவும் இல்லாமல் டைல்ஸ் வழுக்கும், அதனால் அதிக கவனம் தேவை" என்று மேம்போக்காக பயத்தை ஏற்படுத்தாமல் கூறினேன்.

அதற்கு அம்மா, " நான் எப்போதும் மிகுந்த கவனமாகத்தான் இருப்பேன். இனி இன்னும் கவனமாக இருக்கிறேன்" என்று கூறினார். அப்போதும் என் வலது கண் துடித்துக்கொண்டுதான் இருந்தது.

அம்மாவிற்கு போன் செய்த அடுத்த நாள் ஊரிலிருந்து போன் வந்தது. என் வயதான சித்தப்பா பாத்ரூம் டாய்லட்டில் வழுக்கி விழுந்து அவரின் ஒரு கால் பேஸினின் உள்ளே சென்று, தோல் கிழிந்து, தசை கிழிந்து, பிறகு கதவை உடைத்து அவரை தூக்கி ஆஸ்பத்திரி சென்று, அன்றே ஆப்பரேசன் செய்து, இப்போது அவர் ஆஸ்பத்திரியில். அவருக்கு வயது 76 இருக்கும். ஆஸ்பத்திரியைவிட்டு அவர் வர இன்னும் 15 நாட்கள் ஆகலாம். ஆஸ்பத்திரி செலவுகள், கதவு ரிப்பேர் செலவுகள், டாய்லெட் ரிப்பேர் செலவுகள்........

விசயத்தை கேட்டவுடன் உடனே என் வலது கண் துடிப்பது நின்று விட்டது. இப்போது சொல்லுங்கள், வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும் என்ற என் நம்பிக்கை சரியா அல்லது தவறா?

10 comments:

Mohan said...

//இப்போது சொல்லுங்கள், வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும் என்ற என் நம்பிக்கை சரியா அல்லது தவறா?//
எவ்வளவு பெரிய கேள்வியை சாதாரணமாக கேட்டுவிட்டீர்கள்! பதில் சொல்வது கஷ்டம்... இது அவரவர் நம்பிக்கையைப் பொருத்தது...

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லாமே நல்லதே நினைப்போம்.

பரிசல்காரன் said...

எல்லாஆஆம் நன்மைக்கே பாஸ்!

iniyavan said...

//எவ்வளவு பெரிய கேள்வியை சாதாரணமாக கேட்டுவிட்டீர்கள்! பதில் சொல்வது கஷ்டம்... இது அவரவர் நம்பிக்கையைப் பொருத்தது...//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மோகன்.

iniyavan said...

//எல்லாமே நல்லதே நினைப்போம்.//

நன்றி ஸ்டார்ஜன்.

iniyavan said...

//எல்லாஆஆம் நன்மைக்கே பாஸ்!//

நன்றி பரிசல்.

Killivalavan said...

எனக்கும் இதுபோல் நடந்துள்ளது/நடக்கிறது!!!
-கிள்ளிவளவன்

Senthil kumar said...

Enakkum valathu kan Tuddithatu, sila virumba thagatha kanvukalum vandhana... marutuvaridam sendru parisodhanai seidha podhu .kannin parrvai thiran kuraindhu ulladhu endrum ,mooku kannadi aniya vendum ena unarthinar........ nanum unardhen. ennum valdhu kan thudikkirathu.... 2 natkallaha.... asambavitham eadhum nadanthal Thodarkiran................

Mariselvam R said...

thiruvilaiyadal 9m pakuthiyil aangalukku valathu kan thudithaal thaan nallathu entru irukkirathe... atharkaana aaathaaram..

திருவிளையாடல் பகுதி-9

இந்த தகவல் பட்டமகிஷி காஞ்சனமாலைக்கும் தெரியவரவே, அவளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. கண்டோர் வியக்கும் வேள்விச்சாலை ஒன்றை அமைத்தான் மலையத்துவஜன். யாகம் கோலாகலமாகத் துவங்கியது. நாட்டுமக்கள் தங்கள் வாரிசை எதிர்பார்த்து ஆவலுடன் யாகபூஜையில் கலந்து கொண்டனர். மலையத்துவஜனும், காஞ்சனமாலையும் புனிதநீராடி, வேப்பிலை மாலை சூடி யாக குண்டத்தின் முன் அமர்ந்தனர். யாக குண்டத்தில் பல்வகை பொருட்கள் போடப் பட்டன. குடம் குடமாக நெய் ஊற்றப்பட்டது. வேள்விப்புகை மதுரை நகரெங்கும் பரவியது. இந்திரன் அந்த யாகத்தின் பலனைப் பெற்றுக் கொண்டு, அதற்கேற்ப பலனும் அளித்தான்.அப்போது யாகசாலையில் பூமழை பொழிந்தது. மன்னனுக்கு வலது தோளும் வலது கண்ணும் துடித்தன. ஆண்களுக்கு வலது கண், வலது தோள் துடித்தால் சுபமான நிகழ்ச்சிகள் ஏற்படும். பெண்களுக்கு இடது கண் துடித்தால் அது சுபசகுனம். அதற்கேற்ப, காஞ்சனமாலைக்கு இடது கண் துடித்தது.அப்போது அந்த இடமேபிரகாசமானது. யாக குண்டத்தில் எரிந்த அக்னியின் மத்தியில், பளிச்சென வெளிச்சம் உண்டானது. அதன் மத்தியில் பச்சை நிறத்தில் மூன்று வயதுடைய ஒரு பெண் குழந்தை, நின்ற நிலையில் தோன்றியது. ஆம்... தெய்வத்தாயான மீனாட்சி பூமியில் அவதரித்து விட்டாள். காஞ்சனமாலை என்னும் பெண் தெய்வம் மதுரை மக்களுக்கு கொடுத்த மற்றொரு தெய்வம் அவள். மதுரைக்கு போகிறவர்கள் மீனாட்சியை மட்டும் வணங்கினால் போதாது. அவள் இந்த பூமியில் அவதரிக்க காரணமான காஞ்சனமாலையையும் வணங்கி வர வேண்டும். கோயில் கிழக்குவாசல் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் எழுகடல் தெருவில் இந்த அம்மைக்கு தனிக் கோயில் இருக்கிறது. அந்தக் குழந்தையைக் கண்டு அகமகிழ்ந்தாள் காஞ்சனா.

shathiyam said...

வணக்கம் ஜயா கண்துடிப்பு பற்றி எனது அனுபவங்கள் இடதுகண் துடித்தால் பணவிரயம் துக்கம் மனக்கவலை ஏற்பட்டது வலதுகண் துடித்தால் பணவரவு மனமகிழ்ச்சி ஏற்பட்டது.இதே பலன் நண்பர்கள் சிலருக்கும் நடைபெற்றது