Mar 15, 2010

துளித்துளியாய்....

தினமும் அதிகாலையில் வேகமான நடைப்பயிற்சி முடித்து வீட்டிற்கு வந்தவுடன், குளிர்ந்த ஏஸி ஹாலில், சன் டிவியிலோ அல்லது சன் மியூஸிக்கிலோ ஒரு பத்து நிமிடம் இரண்டு மூன்று பாடல்கள் பார்த்துவிட்டு குளிக்க செல்வது வழக்கம். நடைப்பயிற்சிக்கு பிறகு இப்படி பாடல்கள் கேட்பது மனதிற்கு இதமாகவும், சுகமாகவும் இருக்கும். நீங்கள் அனுபவித்து பாருங்கள். அப்போதுதான் அதன் சுவையை உணர முடியும். அப்படித்தான் இன்று காலையும் பாடல்களை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், இன்று நான் பார்த்த பாடல் என் மனதை லேசாக்குவதற்கு பதிலாக என் நினைவுகளை எங்கெல்லாமோ அழைத்துச் சென்று மனதை இறுக்கமாகி விட்டது. அப்படி என்ன பாடல்? அதற்கும் என் மனம் இறுக்கமாவதற்கும் என்ன சம்பந்தம்?

" துளித்துளியா கொட்டும் மழைத்துளியாய்
இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்
காதலிலே உன் காதலிலே..."

இப்படிப்போகும் அந்த பாடல். நடிகர் குணாலும், நடிகை மோனலும் ஆடிப்பாடிய பாடல் அது. என்ன இந்தப் பாடலில் விசேஷம் என்றால், அதில் நடித்த இருவருமே இப்போது உயிருடன் இல்லை. இருவருமே வெவ்வேறு பிரச்சனைகளில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனவர்கள். என்ன பிரச்சனை என்றாலும் அதற்கு ஒரு நல்ல முடிவு இல்லாமல் இருக்காது. அந்த நல்ல முடிவினை நோக்கி வாழ்க்கையை நகர்த்தாமல் ஏன் தற்கொலை என்ற முடிவிற்கு செல்கிறார்கள்? என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

நாங்கள் பள்ளியில் படித்த சமயத்தில் என் நண்பன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றான். அவனை உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்று அவனை பிழைக்க வைத்தோம். அவனிடம், "ஏன் இந்த முடிவு எடுத்தாய்?" என்று கேட்டதற்கு அவன் சொன்ன காரணம், அவன் அம்மா அவனை திட்டி விட்டார்களாம். என்ன கொடுமை பாருங்கள்? யாராவது திட்டியதற்காக தற்கொலை செய்ய வேண்டும் என்றால், தினமும் எவ்வளவு பேர் சாகவேண்டும் இந்த உலகத்தில்?

அதே போல் என்னுடைய இன்னொரு நண்பனும் வேறு ஒரு காரணத்திற்காக தற்கொலைக்கு முயன்றான். அவனை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். நானும் சென்று பார்த்தேன். அவனை டாக்டர்கள் காப்பாற்றும்போது அவன் கதறிய கதறலை யாரேனும் பார்த்தார்கள் என்றால் எந்த ஜென்மத்திலும் தற்கொலை என்ற முடிவிற்கே போக மாட்டார்கள். அவன் குடித்தது பூச்சி மருந்து. அவன் வயிற்றை சுத்தபடுத்துவதற்காக அவனுக்கு நிறை தண்ணியெல்லாம் கொடுத்து வாந்தி எடுக்க வைத்தார்கள். அவ்வளவு துணிவாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவன், வாந்தி எடுக்கையில், " எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் டாக்டர்" என்று கத்தி தீர்த்து விட்டான்.

மேலே சொன்ன இரண்டு நண்பர்களும் இன்று கல்யாணம் செய்து குழந்தைகளுடன் நன்றாக உள்ளனர். ஆனால், வேறு சிலர் தற்கொலை செய்து தானும் இறந்து, குடும்பத்தினரையும் சோகத்துக்கு உள்ளாக்கி சென்று விட்டார்கள். என்னுடைய நிறைய நண்பர்கள் என்னுடைய வலைப்பூவை படிப்பதால், இதற்குமேல் உதாரணங்கள் கொடுக்க விரும்பவில்லை.

'தற்கொலை செய்வது கோழைத்தனம்' என்று நாம் சொல்வதுண்டு. ஆனால், தற்கொலை செய்துகொள்வது என்பது அவ்வளவு சாதரண விசயம் இல்லை. அதற்கு மிகுந்த மன உறுதியும், தைரியமும் வேண்டும். அவ்வளவு சாதாரணமாக யாராலும் தற்கொலை செய்துகொள்ள முடியாது.

உலகத்தில் உள்ளவற்றில் ஒன்று பிடிக்கவில்லையென்றால் கட்டாயம் வேறு ஒன்று பிடித்தே ஆக வேண்டும். அதுதான் நியதி. ஆனால், யாரோ மேல் உள்ள வெறுப்பிலோ அல்லது வேறு காரணங்களாலோ தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு எதுவுமே பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம்? எப்படி அவர்கள் மனம் கல்லாகி போகிறது?

ஆனால், மருத்துவ ஆய்வுகள் என்ன சொல்கிறது தெரியுமா? ஒரு மனிதனுக்கு தற்கொலை எண்ணம் வருவது ஒரு சில நிமிடங்கள்தான். அதை அவன் செயல்படுத்த நினைக்கும் அந்த நிமிடங்களில், அவனின் எண்ண ஓட்டங்களை ஏதாவது ஒன்று தடுத்து நிறுத்துமானால், அவன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தையே நிச்சயம் மாற்றிக்கொள்வான். அவன் குழந்தையின் அழுகையோ அல்லது அவனுக்கு பிடித்த பாடலோ அல்லது அவனுக்கு பிடித்த ரிங் டோனோ அவன் செல்போனில் அடித்தால் கூட அவன் அந்த முடிவை கைவிட வாய்ப்பிருக்கிறது.

சன் டிவியில் ஒரு முறை சுகிசிவம் சொன்ன ஒரு கதை இப்போது என் நினைவிற்கு வருகிறது. ஒரு அம்மா. அவளுக்கு ஒரே பையன். அவனை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறாள். ஆனால் அவள் நினைத்தது போல் அவன் புத்திசாலியாக இல்லை. அவனுக்கு படிப்பு சரியாக வரவில்லை. நல்ல வேலையும் கிடைக்கவில்லை. மனம் விரக்தியைடந்து தற்கொலைக்கு முயல்கிறான். அவன் அம்மா அவனை காப்பாற்றி விடுகிறாள். பிறகு அவனை கூப்பிட்டு கேட்கிறாள்:

" ஏன் தற்கொலைக்கு முயன்றாய்?"

" எனக்கு வாழப்பிடிக்கவில்லை?"

" ஏன்?"

" எனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. நல்ல வாழ்க்கை அமையவில்லை. அதனால் எனக்கு வாழப்பிடிக்கவில்லை"

" கஷ்டப்பட்டு உன்னை வளர்த்ததற்கு எனக்கு நீ செய்யும் உதவி இதுதானா?"

" அதுவும் ஒரு காரணம். என்னால் உன்னை வைத்து காப்பாற்ற முடியவில்லையே"

" இனி அவ்வாறு செய்யாதே"

" இந்த முறை என்னை காப்பாற்றி விட்டாய். அடுத்த முறை தூக்கில் தொங்கி உயிரைவிடுவேன்"

" அப்போதும் உன்னை காப்பாற்றிவிடுவேன்"

" நான் கத்தியால் என் கழுத்தை அறுத்துக்கொள்வேன்"

" அப்போதும் உன்னை காப்பாற்றிவிடுவேன்"

" ரயிலில் விழுந்து சாவேன்"

" அப்போதும் உன்னை காப்பாற்றிவிடுவேன்"

" மலையிலிருந்து குதித்து சாவேன்"

" அப்போதும் உன்னை காப்பாற்றிவிடுவேன்"

" கிணற்றில் குதித்து சாவேன்"

" அப்போதும் உன்னை காப்பாற்றிவிடுவேன்"

இப்படியே அவன் சொல்லிகொண்டே போக, கடைசியில் அந்த அம்மா சொன்னாளாம்,

" முட்டாள். சாவதற்கே இவ்வளவு வழிகள் இருக்கும் போது, வாழ்வதற்கு எவ்வளவு வழிகள் இருக்கும்"

இந்த அழகான உலகத்தையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும் விட்டுவிட்டு எப்படித்தான் தற்கொலைக்கு முயல்கின்றார்களோ, தெரியவில்லை. யாரேனும் இறந்துவிட்டால், அவர்கள் உறவினர்கள் இல்லை என்றால் கூட என்னையறியாமல் நான் அழுவதுண்டு.

ஆனால், தற்கொலை செய்து இறந்தவர்களுக்காக என்றுமே நான் அழுததில்லை.

6 comments:

அப்பாவி முரு said...

நல்ல பதிவு...

வாழ்த்துகள்...

iniyavan said...

//நல்ல பதிவு...

வாழ்த்துகள்...//

நன்றி முரு.

அமுதா கிருஷ்ணா said...

எனக்கு இப்படி தற்கொலை செய்து சாகிறவர்களை எழுப்பிவிட்டு நல்லா இரண்டு அறை விடணும் போல இருக்கும். கோபம் தான் வருகிறது.

sriram said...

தற்கொலை செய்து கொள்வதிற்கு பதிலாக, மருத்துவக்கல்லூரியில் போய் படுத்துக் கொள்ளலாம், எல்லா பாகங்களையும் எடுத்து உபயோகப் படுத்திக் கொள்வார்கள்.

எனக்கும் தற்கொலை செய்து கொள்பவர்களைப் பார்த்து பரிதாபமே வருவதில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

iniyavan said...

//எனக்கு இப்படி தற்கொலை செய்து சாகிறவர்களை எழுப்பிவிட்டு நல்லா இரண்டு அறை விடணும் போல இருக்கும். கோபம் தான் வருகிறது.//

வருகைக்கு நன்றி மேடம். நீங்கள் சொல்வதுதான் சரி.

iniyavan said...

//எனக்கும் தற்கொலை செய்து கொள்பவர்களைப் பார்த்து பரிதாபமே வருவதில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்