Mar 19, 2010

சனியன் புடிச்சா மாதிரி இருக்கு!

ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் உடம்பில் எந்த பிரச்சனை என்றாலும் உடனே டாக்டர் கிட்ட போவேன். மிக மிக சின்ன பிரச்சனைகளுக்கு கூட டாக்டரிடம் செல்வேன். பரிட்சை சமயங்களில் நிறைய கண்விழித்து படிப்பதால் பரிட்சை நெருங்கும் சமயங்களில் உடலும், மனசும் மிகவும் சோர்ந்து போகும். அப்போதெல்லாம் மதிபெண்கள் குறைந்துவிடுமோ என பயந்து பரிட்சைக்கு முதல் நாள் டாக்டரிடம் செல்வேன். அவரும் ஏதோ ஒரு மாத்திரை கொடுப்பார். அதை சாப்பிட்டால்தான் என்னால் தொடர்ந்து படிக்க இயலும். பல வருடங்களுக்கு பிறகுதான் தெரிந்தது, அவர் கொடுத்தது எல்லாம் வெறும் வைட்டமின் மாத்திரைகள் என்று. மனம்தான் அனைத்திற்கும் காரணம் என்று பின்னாளில் உணர்ந்தேன்.

அப்படி எதற்கு எடுத்தாலும் டாக்டரிடம் போய்க்கொண்டிருந்த நான் ஒரு குறிபிட்ட வயதில் டாக்டரிடம் போவதை அடியோடு நிறுத்திவிட்டேன். காரணம், மாத்திரைகளினால் ஏற்படும் பயம், பலவிதமான அனுபவங்களினால் ஏற்பட்ட மன அயற்சி மற்றும் பலவிதமான நோய்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டதன் விளைவு.

அதிவேக நடைப்பயிற்சி, தினமும் ஜிம்முக்கு போவது, யோகா செய்வது என்றான பிறகு டாக்டரிடமும் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. இந்த ஒழுங்கு கட்டுப்பாட்டினால் என் உடலைப் பற்றி என்னாலே அறிய முடிந்தது. எது எனக்கு ஒத்துக்கும், எது உடம்பிற்கு ஆகாது என்று என்னால் உணர முடிந்தது. உடம்பும் மனதும் ஒரு கட்டுப்பாட்டுடனேயே இருக்கிறது.

ஆனால், ஒரு விசயத்தில் மட்டும் என்னால் ஜெயிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை பிடிக்கும் சளி. எந்த வியாதி வந்தாலும் சரி பண்ணிவிடலாம் போல் உள்ளது. ஆனால் இந்த சளி பிடித்தால், சனியன் பிடித்தது போல் உள்ளது. எத்தனையோ விதமான அலோபதி மருந்துகளும் உள்ளன. ஆயிர்வேத மற்றும் இயற்கை மருந்துகளும் உள்ளன. ஆனால், எதை சாப்பிட்டாலும், சளி பிடித்தால் நம்மை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் போகிறது.

ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது ஒரு முறை கடுமையான சளித்தொல்லை. வழக்கம் போல மாத்திரை சாப்பிடாமல் சமாளித்துக்கொண்டு இருந்தேன். அவ்வாறு நான் கஷ்டப்படுவதை பார்த்த என் மேனேஜர்,

" உலக்ஸ், ஏன் இப்படி கஷ்டப்படுற. பேசாம நான் ஒரு மாத்திரை வாங்கி வர சொல்லுறேன். அதை சாப்பிடு. சரியாகும்" என்றார்.

" சார், மாத்திரை எல்லாம் சாப்பிட்டால், ரொம்ப அசதியா இருக்கும். அப்புறம் வேலை பார்க்க முடியாது. அப்புறம் இருமல் வரும். இருமலுக்கு மாத்திரை சாப்பிட சொல்வீங்க. அப்புறம் காது அடைக்கும். அப்புறம் அதுக்கும் மாத்திரை சாப்பிட சொல்வீங்க. இதல்லாம் வேண்டாம் சார்" என்றேன்.

அப்போது ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்ததால், என்னை மிகவும் வற்புறுத்தி, ஒப்புக்கொள்ள வைத்து, மாத்திரை வாங்கிவர வைத்தார். நான், "வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. மதிய உணவிற்கு பிறகு சாப்பிடுகிறேன்" என்றேன். அவரும் சரியென்றார்.

வேலையில் பிறகு பிஸியாகி விட்டேன். மாலையில் மேனேஜர், " என்ன உலக்ஸ், மாத்திரை சாப்பிட்டவுடன் இப்போ பரவாயில்லை போலிருக்கு?" என்றார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது, நான் மாத்திரையே சாப்பிடவில்லை என்று. உடனே நான்,

" ரொம்ப நல்ல மாத்திரை சார்"

" அதனாலதான் சாப்பிட சொன்னேன்"

" அது எப்படி சார், நீங்க தந்த மாத்திரைய சட்டை பாக்கட்டுல வைச்சுருந்தாலே, சளி சரியா போயிடுது"

அவர் என்னை கோபத்துடன் அன்று முறைத்தது இன்னும் என் நினைவில் உள்ளது. நான் மலேசியா வரும்வரை அவர் என் உடம்பை பற்றி விசாரிப்பதையே நிறுத்தி விட்டார்.

சொன்னது போலவே இருமல், காது அடைப்பு எல்லாம் அப்போது வந்தது. அம்மா சொன்னார்கள் என்பதற்காக, தினமும் துளசி சாப்பிட்டேன். கஷாயம் சாப்பிட்டேன். நண்பர்கள் சொன்னதால் ஆட்டுக்கால் சூப்பு, பங்கஜ கஸ்துரி, இருமலுக்கு இரவில் மஞ்சள் பொடி கலந்த பால் சாப்பிட்டு பார்த்தேன். இரவில் இருமல் வராமல் இருக்க இரண்டு மிளகு, இரண்டு அரிசி வாயில் போட்டுக்கொண்டு தூங்கினேன். பிறகு நண்பர்கள் சொன்னதால் சமகன் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். ஸ்டப்ஸில்ஸ், நிவாரன் 90 இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்தும் சாப்பிட்டும் சளி சரியாக போக ஒரு வாரம் ஆனது.

அடுத்த முறை சளி பிடித்த போது எதுவுமே சாப்பிடாமல், மூக்கடைப்பு, இருமல், காது அடைப்பு அனைத்தையும் அனுபவித்தேன். ஒரு வாரம் கழித்து சரியானது.

அடுத்த வருடத்தில் நண்பர்களின் தொந்தரவின் பெயரால் டாக்டரிடம் சென்று ஊசியெல்லாம் போட்டு, மாத்திரை எல்லாம் சாப்பிட்டு போதையுடன் ஒரு வாரத்தை கடத்தினேன். பின்பு சரியானது.

" சளி பிடித்தால், மாத்திரை சாப்பிட்டால் ஏழு நாளில் சரியாகிவிடும்
மாத்திரை சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும்"

என்ற உண்மை பிறகுதான் எனக்கு தெரிந்தது. இந்த நேரத்தில் நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. கடுமையான இருமலால் பாதிக்கப்பட்ட நோயாளி டாக்டரிடம் சென்றான். அவனை பரிசோதித்த டாக்டர் ஒரு இருமல் மருந்தை கொடுத்து,

" தினமும் மூன்று வேளை இந்த மருந்தை சாப்பிட்டு வா. சரியாகிவிடும்"

" இருமலா டாக்டர்?"

" இல்லை, இருமல் மருந்து"

கடந்த ஒரு வாரமாக நிறைய அலைச்சல். மன உளைச்சல் ஏற்படுத்தும் வேலை. ஒரு வாரத்திற்கு ஒரு முறை கோலாலம்பூருக்கு காரில் பயணம். நான் மேலே சொன்ன அனைத்து விதமான ஹெல்த் சம்பந்தமான உடற்பயிற்சி செய்து வந்தாலும், ஓயாத அலைச்சலாலும், தூக்கமின்மையாலும், சளி என்னும் சனியன் என்னை பிடித்து ஆட்டுகிறது. என்னுடைய வேலையில் நான் இன்னும் சில காலத்திற்கு விடுமுறை எல்லாம் எடுக்க முடியாது.

ஒரு மாத்திரை சாப்பிடனும். அந்த ஒரு மாத்திரையில் உடம்பில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகி விடனும். யாருக்காவது தெரியுமா? இந்த மாத்திரை எனக்கு அல்ல. ஆஸ்பத்திரியில் இருக்கும் அனைத்து நோயாளிகளுக்காகவும் கேட்கிறேன். யார் சொல்லறீங்களோ அவங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசு உண்டு.

ஆனா, எனக்கு உடனடி தேவை. சளி, இருமல், தொண்டை கரகரப்பு சரியாப்போக ஒரு மாத்திரை. நாலு நாளுக்குள்ள சொல்லுங்க. ஏன்னா சளி பிடிச்சு மூன்று நாள் ஏற்கனவே முடிஞ்சு போச்சு. நீங்க சொல்லலைனாலும், இன்னும் நாலு நாட்களில் அதுவே சரியாகிவிடும்.

என்ன நான் சொல்லறது!

17 comments:

பாலாஜி சங்கர் said...

நீங்க சொன்ன சரிதான்

அ. நம்பி said...

//"சளி பிடித்தால், மாத்திரை சாப்பிட்டால் ஏழு நாளில் சரியாகிவிடும் மாத்திரை சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும்"//

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.

"மருந்து உட்கொண்டால் ஒரே வாரத்தில் சளி குணமாகிவிடும்; இல்லையென்றால் ஏ...ழு நாள் அவதிப்பட நேரிடும்" என்று என் நண்பர் (மருத்துவர்) வேடிக்கையாகச் சொல்வார்.

`ஒரெ' என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்து விரைவில் சொல்லிவிடுவார்; `ஏழு' என்று சொல்லும்போது அழுத்தம் கொடுத்து முழநீளம் இழுத்துக்கொண்டே போவார்.

கண்ணகி said...

:)...;)...ஆமாங்க ஆமாம்.. நீங்க சொன்னது ரொம்ப கரக்ட்...

" சளி பிடித்தால், மாத்திரை சாப்பிட்டால் ஏழு நாளில் சரியாகிவிடும்
மாத்திரை சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும்"

இதேமாதிரி எல்லா நோய்களும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..

இராகவன் நைஜிரியா said...

எதாவது ஒரு சாமியாரைப் போய் பார்க்கலாம்... சர்வ ரோக நிவாரணம் கிடைக்கலாம்...??? :-)

Ramesh said...

If you do yoga and breething exercise regularly you will not get cold. Consult your yoga teacher.

தனி காட்டு ராஜா said...

அதுதான் உங்க பேருலயே உலக்கை (உலக்ஸ் ) இருக்கே ......எடுத்து சளியை துரத்து துரத்துனு துரத்த வேண்டியதுதானே ...................

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நித்தியிடம் போங்கள் அவர் ஏதோ தடிவைத்துள்ளாராம் ,தட்டியதும் குணமாகுமாம். நான் சொல்லவில்லை சாரு சொன்னார்.
எனக்கு கோடை காலத்தில் இத் தொல்லையுண்டு. ஒவ்வாமையாம். AERIUS 5mg நாளுக்கு ஒன்று பாவிப்பேன். ஒரு மாதம் பாவிக்கும்படி வைத்தியர் கூறினார். கடந்த 10 வருடமாக கோடையில் பாவிப்பேன். தற்காலிக விடுதலையே! பிரான்சில் இந்தக் கோடைகால ஒவ்வாமையில் சுமார் 15 மில்லியன் மக்கள் வயதுப் பாகுபாடின்றி அல்லலுருவதாகப் புள்ளி விபரம் கூறுகிறது.

கண்மணி/kanmani said...

ஒரே வழி 1..2..3..4..5..6..7..ன்னு எண்ணினா 7 வது நாள் போயிந்தி...இட்ஸ்கான்:))

iniyavan said...

//நீங்க சொன்ன சரிதான்//

வருகைக்கு நன்றி பாலாஜி.

iniyavan said...

//`ஒரெ' என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்து விரைவில் சொல்லிவிடுவார்; `ஏழு' என்று சொல்லும்போது அழுத்தம் கொடுத்து முழநீளம் இழுத்துக்கொண்டே போவார்.//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி அ.நம்பி.

iniyavan said...

//:)...;)...ஆமாங்க ஆமாம்.. நீங்க சொன்னது ரொம்ப கரக்ட்...//

வருகைக்கு நன்றி கண்ணகி.

iniyavan said...

//எதாவது ஒரு சாமியாரைப் போய் பார்க்கலாம்... சர்வ ரோக நிவாரணம் கிடைக்கலாம்...??? :-)//

ரொம்ப நன்றி இராகவன் சார்.

iniyavan said...

//If you do yoga and breething exercise regularly you will not get cold. Consult your yoga teacher.//

என்ன செய்தாலும் மனிதர்கள் அனைவருக்கும் சளிப் பிடிப்பது இயல்பு ரமேஷ்.

வருகைக்கு நன்றி இரமேஷ்.

iniyavan said...

//அதுதான் உங்க பேருலயே உலக்கை (உலக்ஸ் ) இருக்கே ......எடுத்து சளியை துரத்து துரத்துனு துரத்த வேண்டியதுதானே ..........//

என்ன ஒரு அருமையான ஐடியா சார். வருகைக்கு ரொம்ப நன்றி சுதந்திர யோகி.

iniyavan said...

//எனக்கு கோடை காலத்தில் இத் தொல்லையுண்டு. ஒவ்வாமையாம். AERIUS 5mg நாளுக்கு ஒன்று பாவிப்பேன்.//

வருகைக்கும், கருத்திற்கும் ரொம்ப நன்றி யோகன்.

iniyavan said...

//ஒரே வழி 1..2..3..4..5..6..7..ன்னு எண்ணினா 7 வது நாள் போயிந்தி...இட்ஸ்கான்:))//

வருகைக்கு நன்றி கண்மணி.

Romeoboy said...

எனக்கு தெரிந்த ஒரு வைத்தியம் சாரே .. சளி பிடிப்பது வைட்டமின் சி கம்மியாகும் போது தான். சுடும் சாப்பாட்டில் தயிர் உற்றி சுடு குறைவதர்க்குள் சாப்பிடவேண்டும்.