Apr 25, 2010

இந்தியா ஒளிர்கிறது!

எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டு அருகே சில பூக்கடைகள் உண்டு. காலை மாலை என எந்த வேலையிலும் பிஸியாகவே இருப்பார்கள். நான் சிறு வயதில் அவர்களை பார்த்து பொறாமைப் பட்டதுண்டு. எப்போதுமே இவ்வளவு கூட்டம் உள்ளதே, அப்படி என்றால் எவ்வளவு பணம் அவர்களிடம் இருக்கும்? என்று நான் அடிக்கடி அந்த வயதில் நினைப்பதுண்டு. அங்கே உள்ள ஒரு பூக்கடையில் ஒரு சிறு பெண் அவள் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருப்பாள். அவள் பார்க்க அத்தனை அழகாக இருப்பாள். நான் பள்ளி, கல்லூரி படித்த காலங்களில் அவள் அழகை பார்த்து வியந்ததுண்டு. அவள் மட்டும் சினிமாவில் சேர்ந்து இருந்தால், எங்கோ போயிருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது. இததனை வருடங்களுக்கு அப்புறமும் அந்த பூக்கடை இன்னும் அங்கே உள்ளது. இப்போது எல்லாம் நான் அதிகம் அந்த கடையை கவனிப்பதில்லை. ஆனால், கடந்த முறை கோவில் செல்லும் போது, அங்கே நிறுத்தி டிரைவரிடம் பூ வாங்க சொன்னேன். அப்போதுதான் கவனித்தேன். அதே இடத்தில் உட்கார்ந்து பூ கொடுக்கும் பெண்மணியை எங்கோ பார்த்தது போல் இருக்கவே, டிரைவரிடம் 'யார் அது?' என்று கேட்டேன். 'அவர்தான் பூக்கார அம்மாவின் பெண்' என்று என்னிடம் கூறினார். நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு சினிமா ஹீரோயின் போல இருந்த அவள், இன்று எலும்பும் தோளுமாய், மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். அவளை பார்க்காமலேயே இருந்திருக்கலாம். ஏன் பார்த்தோம் என்று ஆகிவிட்டது.

அவள் ஏன் இப்படி ஆனாள்? காரணம் வறுமை!

சிறு வயதில் எனக்கு செருப்பு வாங்கும்போது எங்கள் ஊரில் உள்ள ஒரு கடைக்கு அப்பா கூட்டிச்செல்வார். அப்போது அந்த கடையில் என் வயது உடைய ஒரு பையனையும் பார்த்திருக்கிறேன். அப்பா ரொம்ப முயற்சி செய்துதான் அவனை பள்ளியில் படிக்க வைத்தார். முயற்சி என்றால் அப்பா பள்ளியில் சேர்த்து விடவில்லை. அந்த பையனின் அப்பாவிற்கு வேண்டிய உதவிகள் செய்து, புத்திமதி சொல்லி அவனை படிக்க வைக்க உதவி செய்தார். ஆனால் என்ன நடந்தது? சமீபத்தில் அதே கடையியில் அவன் அப்பா இருந்த இடத்தில் அவனைப் பார்த்தேன். ஏன் அவன் படிப்பு என்ன ஆயிற்று? அவனால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை.

காரணம் வறுமை!

இப்படி நான் சொல்லிக்கொண்டே போக நிறைய உதாரணங்கள் உள்ளது. ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர். பணம் பணக்காரர்களிடம் மட்டுமே செல்கிறது. ஆனால் இந்தியா முன்னேறிக்கொண்டுதான் உள்ளது. உழைக்கும் ஏழை வர்க்கத்தினர் இவ்வாறு கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கையில் ஒரு சில சுயநல மனிதர்கள் மக்களின் பணத்தை சுரண்டி வாழ்க்கையை நடத்துவதை பார்க்கும் போது உள்ளம் கொதிக்கிறது.

அப்படிப்பட்ட ஒருவர்தான் கேதன் தேசாய். ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருந்த இவர் கொள்ளையடித்த மொத்த பணத்தின் மதிப்பு இதுவரை நமக்கு தெரிந்தவரையில் 3000 கோடி ரூபாய்.

பஞ்சாபில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதில், ரூ.1,800 கோடி ரொக்கமாகவும்; 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. டெல்லி, அரியானா, குஜராத் மாநிலங்களில் தேசாய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பல கோடி ரொக்கம், தங்கத்தை மூட்டை மூட்டையாக லாரிகளில் ஏற்றியதை பார்த்தபொது மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். டெல்லியில் உள்ள மருத்துவக் கவுன்சில் தான், நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதன் தலைவராக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருபவர் கேதன் தேசாய். இளம் வயதில் இந்த உயர்ந்த பதவியில் அமர்ந்தவர் இவர்.

தேசாய் பல ஆண்டாகவே லஞ்ச வேட்டையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிகிறது. இதில் என்ன சந்தேகம் என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வளவு கொள்ளை ஒரு சில வருடங்களில் முடியுமா என்ன?. ஒரு கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க, குறைந்தப்பட்சம் ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்கிறார்.

இவ்வளவு பணத்தையும் சும்மா வீட்டில் வைத்திருந்திருக்கிறார். எதற்காக இவ்வளவு பணம்? அதுவும் வெறும் பணமாகவே எதற்காக வைத்திருந்தார்? என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார்? ஒரு சாதாரண மனிதன் இன்கம்டேக்ஸ் கட்டவில்லை என்றால் 'லபோ திபோ' என்று குதிக்கும் அரசாங்கம், இவ்வளவு பணம் ஒரு தனி மனிதனிடம் போகும் வரையில் எப்படி ஒன்றும் செய்யாமல் இருந்தது? சத்தியமாக அவர் ஒருவரால் மட்டும் இந்த ஊழலை செய்திருக்க முடியாது. இதில் நிறைய நபர்கள் உடந்தையாக இருந்திருக்க வேண்டும். யாரோ வேண்டாத ஒருவர் சிபிஐயிடம் போட்டுக் கொடுத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மாட்டி இருக்க வாய்ப்பே இல்லை.

போலிஸ் அவரை அரஸ்ட் செய்து விட்டது. முடிவில் என்ன நடக்கும்?. அவர் விரைவில் ஜாமினில் வெளி வந்துவிடுவார். கேஸ் ஒரு 10 வருடம் நடக்கும். அதன் பிறகு அவருக்கு வயதாகி இறந்துவிடுவார். அது வரை அவரிடம் உள்ள சொத்துக்களின் மூலம் அவரும் அவர் குடும்பத்தாரும் சந்தோசமாகவே வாழ்வார்கள். ஆனால், எங்கள் ஊர் பூக்காரியின் குடும்பமும், செருப்பு தைப்பவனிம் குடும்பமும் காலம் முழுவதும் வேதனைகளை சுமந்தே வாழ வேண்டும்?. என்ன நியாயம் இது? நான் குறிப்பிட்டது இரண்டு நபர்களை பற்றி மட்டுமே. இது போல் லட்சக்கணக்கான மக்கள் ஏழையாகவே பிறந்து, வாழ்ந்து, ஏழையாகவே இறந்து போகிறார்கள்.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தை ஏன் இன்னும் கடுமையாக்க முடியவில்லை? ஏன் தீர்ப்பு வருவதில் தாமதம் ஆகிறது? என்ன காரணம்? ஒருவரைத்தானே இப்போது பிடித்திருக்கிறார்கள். இது போல் இன்னும் எத்தனை பேரோ?

சிலசமயம் அதிக ஜனநாயகம் கூட ஆபத்துதான் என்று நினைக்கிறேன். என்ன செய்வது, என்னால் இது போல் எழுதுவதைத்தவிர வேறு என்ன செய்து விட முடியும்?

ஆம், இந்தியா ஒளிர்கிறது. ஊழல் பெருச்சாளிகள் மூலமாகவும்,அரசியல்வாதிகள் மூலமாகவும்.

5 comments:

Anonymous said...

எனக்கும் இதே கவலைதான்.

இராகவன் நைஜிரியா said...

இந்தியா ஒளிர்கிறது - பணக்காரர்களுக்கு மட்டும்.

// இவ்வளவு பணத்தையும் சும்மா வீட்டில் வைத்திருந்திருக்கிறார். எதற்காக இவ்வளவு பணம்? அதுவும் வெறும் பணமாகவே எதற்காக வைத்திருந்தார்? என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார்? //

நாய் கையில் கிடைத்த தேங்காய் மாதிரி... அத்துனைப் பணமும் அவர் வீட்டில் அனாவசியமாக முடங்கி தேசத்தின் நலனை பாதித்துவிட்டு இருக்கின்றது.

iniyavan said...

//எனக்கும் இதே கவலைதான்.//

வருகைக்கு நன்றி shirdi.

iniyavan said...

//நாய் கையில் கிடைத்த தேங்காய் மாதிரி... அத்துனைப் பணமும் அவர் வீட்டில் அனாவசியமாக முடங்கி தேசத்தின் நலனை பாதித்துவிட்டு இருக்கின்றது.//

உண்மைதான் இராகவன்ஜி.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'இந்தியா ஒளிர்கிறது!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th April 2010 09:28:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/233281

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.