May 28, 2010

நானும் அழகான ஒரு நாள்!

என்னை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இரண்டு விசயங்கள் மிகத் தெளிவாக தெரியலாம். ஒன்று அதிக தன்னம்பிக்கை உடையவன். இன்னொன்று பெண்கள் மேல் அதிக பாசம் உள்ளவன். எப்படிப்பட்ட பாசம் என்பது இப்போது தேவை இல்லாத ஒன்று. அதிக தன்னம்பிக்கை ஏன் ஏற்பட்டது என்பதற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.

நான் எட்டாவது படிக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 9 ஆவது வகுப்பு படிக்கும் போதே காதல் வந்துவிட்டது. சிரிக்காதீர்கள்! அது காதல் இல்லை என்று இப்போது புரிகிறது. அது ஒரு இனக்கவர்ச்சிதான். ஆனால் அது படுத்திய பாடு அப்பப்பா!!! இதனால் ஏற்பட்ட பொறாமையில் என் நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னை, " போடா கருப்பா" என்று திட்டிவிட்டான். அன்றுதான் முதன்முதலாக என் நிறத்திற்காக வேதனை பட ஆரம்பித்தேன். ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையில் வாடினேன். என்னுடைய முதல் தோழியே என் அம்மாதானே!. என் அம்மா நல்ல சிகப்பு ஆனால் அப்பா கருப்பு. நான் அம்மாவிடம் சென்று சண்டை போட்டேன், " ஏன் என்னை கருப்பாக பெற்றீர்கள்?" என்று.

அம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நான் கேட்காததால், அப்பாவிடம் சொல்லிவிட்டார். அப்பா அன்று எனக்கு கூறிய அறிவுரைகள் தான் இன்று என்னை மிகப் பெரிய தன்னம்பிக்கை உள்ளவனாக மாற்றி உள்ளது. அப்பா எவ்வளவோ அறிவுரைகள் சொல்லி, என் தாழ்வுமனப்பான்மையை போக்கி, என்னை படிப்பில் அதிக கவனம் செலுத்த வைத்தார். அந்த வயதிலேயே சிகப்பாய் இருந்தவர்களை விட எனக்குத்தான் தோழிகள் அதிகம். அது இன்றுவரை தொடர்கிறது.

எனக்கும் காதல் வந்தது. மூன்று அக்கா, ஒரு தங்கையுடன் பிறந்த ஒருவனுக்கு காதல்கல்யாணம் கைகூடும் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். உங்களில் யாராவது காதலியின் திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு வந்திருக்கின்றீர்களா? உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் முன்னாடி உங்கள் முன்னால் காதலி இரண்டு குழந்தைகளுடன் சென்றால் எப்படி இருக்கும்??? அதன் வலி எப்படி இருக்கும் தெரியுமா?

சரி விடுங்கள், விசயத்திற்கு வருவோம். நான் பழகியவரையில் நிறைய பெண்கள் என்னை பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, யாருக்கும் கொஞ்சம் பொறுத்திருப்போம் என்று தோன்றவே இல்லை. பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். அந்த டீன் ஏஜ் பருவங்களில் என்னுடைய அருகாமையும், என் நட்பும் அவர்களுக்கு நிறைய தேவையாய் இருந்திருக்கிறது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்.

பிறகு படித்து முடித்து வேலைக்கு சேர்ந்தாயிற்று. ஆனால், கல்யாணம்???? என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, அனைவருக்கும் குழந்தைகள் பிறந்தும் கூட எனக்கு கல்யாணம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமலே இருந்தது. எல்லோருடைய கல்யாணங்களுக்கும் சென்று வரும்போது இருக்கும் வேதனை இருக்கிறதே? அதை எப்படி சொல்லி புரியவைப்பது? அக்காக்களுக்கெல்லாம் கல்யாணம் தாமதமாக பல காரணங்கள். ஒரு கட்டத்தில் எனக்கு இனி கல்யாணமே ஆகாது என்றுதான் நினைத்தேன்.

பிறகு ஒரு வழியாக என்னுடைய லைன் க்ளியர் ஆனபோது, நான் மார்க்கட் இழந்த நடிகை ஆகிப்போனேன். நான் அப்பாவிடம் சொன்னது ஒரே ஒரு கண்டிஷன்தான். எனக்கு வரப்போகும் மனைவி சிகப்பாக இருக்க வேண்டும். இன்னொரு கருப்பு ஜெனரேஷனை உருவாக்க நான் தயாராயில்லை. அப்பா பல இடங்களில் பெண் பார்த்தார். பெண் சிகப்பாக இருந்தால் ஜாதகம் பொருந்தாது. ஜாதகம் பொருந்தினால், பெண் கருப்பாக இருப்பார்கள். எல்லாம் சரியாக இருக்கும், ஆனால், " மாப்பிள்ளை வெளிநாடா? எங்களுக்கு இருப்பது ஒரே பொண்ணுதாங்க. அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது" என்பார்கள். ஒரு ஸ்டேஜில் நான் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

அப்போதுதான் ஆண்டவனாக பார்த்து என் பெரிய மாமனார் மூலம் ஒரு ஜாதகத்தை அனுப்பி வைத்தார். பெண்ணின் போட்டோவை பார்த்தவுடன் பிடித்து விட்டது. ஆனால், ஒரு சில காரணத்தால் நான் உடனே முடிவு சொல்லவில்லை. பின்பு அப்பா பார்த்த பெண்களை எல்லாம் வேண்டாம் என நிராகரித்தேன். ஏனென்றால் மனதில் அந்த பெண்ணே நின்றாள். எனக்குள் ஒரு மின்னல். எனக்காகவே அவள் பிறந்தவள் என்று. ஆறுமாதம் கழித்து அப்பாவிடம், ஒரு நண்பர் மூலமாக தூது விட்டேன், "அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று. மலேசியாவில் இருந்து திருச்சி சென்றேன். பெண் பார்க்கும் படலம் முடிந்து, என்னை பெண்ணுடன் தனியாக பேச அனுமதித்தார்கள். ஆனால், கடைசிவரை நான், அந்த பெண்ணிடம் என்னை பிடித்திருக்கிறதா? என்று கேட்கவே இல்லை. காரணம் ரொம்ப சிம்பிள், "என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்னைப்போலவே அவர்களுக்கும் சிகப்பான பையனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால்?" எது எப்படி இருப்பினும், நான் அவர்களை இழக்க விரும்பவில்லை. அன்று நான் சற்று சுயநலத்துடனே நடந்து கொண்டேன். பிறகு எல்லோருக்குமே பிடித்துபோக ஒரு வழியாக என் மனைவி ஆனால் அவள்.

அந்த தேவதை என் வாழ்வில் வந்தவுடன் தான் புரிந்து கொண்டேன். இது போல் ஒரு மனைவி அமைவாள் என்றால் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று. எவ்வளவு கவலைகள் இருந்தாலும், எப்போதுமே சந்தோசமாக இருப்பவன் நான். அவள் வந்தவுடன் என் வாழ்வில் இன்னும் அதிக சந்தோசம் வந்தடைந்தது. இதுவரை பெரிய சண்டை என்று எதுவும் வந்ததில்லை. என் சண்டைகள் எல்லாம் ஒரு சில மணித்துளிகள் தான். இது வரை எந்த ஒரு சண்டையின் முடிவிலும் அவள் மட்டும் மன்னிப்பு கேட்டதே இல்லை. நான்தான் எப்போதும் மன்னிப்பு கேட்பேன். ஏனென்றால், அவள் மேல் தவறே இருக்காது.

நான் பல ஜென்மங்களில் செய்த புண்ணியம்தான் என் மனைவி எனக்கு அமைந்தது. 11 வருடங்களுக்கு முன் எப்படி லவ் பண்ணினேனோ இன்னும் அதே அளவு லவ்வுடன் இருக்கிறேன். என் மனதளவில் உள்ளுக்குள் இருந்த எவ்வளவோ வக்கரங்களை துடைத்து என்னை சரி பண்ணியவள் என் மனைவி. என்னிடம் இருந்த அனைத்து குறைகளையுமே சரி பண்ணியவள். "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பது என் விசயத்தில் நூறு சதவிகிதம் உண்மை. என்னைவிட வயதில் குறைவானவராய் இருந்தாலும் என்னை வழி நடத்தி செல்வது என் மனைவியே என்பதில் எனக்கு எப்போதுமே சந்தோசம்தான்.எவ்வளவோ தோழிகள் இருந்தாலும், என் அம்மாவிற்கு பிறகு எனக்கு கிடைத்த அற்புதமான தோழி என் மனைவிதான்.

என் காதல் தோல்வி அடைந்ததற்காக இப்போது சந்தோசம் அடைகிறேன். அது மட்டும் நிறைவேறி இருந்தால் எனக்கு என் மனைவி கிடைத்திருக்க மாட்டார்களே! ஆனால், இன்றும் எனக்கு நிறைய தோழிகள். இருந்தாலும், என் மனைவி என்னை என்றுமே சந்தேகப்பட்டது இல்லை. உண்மையான காதலுடன் வாழும்போது மற்ற பெண்கள் என்னதான் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டாலும், உங்களால், நீங்கள் நினைத்தால் கூட கெட்டுப்போக முடியாது. உண்மைதானே! நானும் அப்படித்தான். இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், என் மனைவியே எனக்கு மீண்டும் மனைவியாக வேண்டும் என்று என் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

இதை எல்லாம் இங்கே நான் சொல்ல ஒரே ஒரு காரணம்தான். இன்று என் தேவதை எனக்கு கிடைத்த நாள் .

ஆம், இன்று என் கல்யாண நாள். இன்றுடன் என் திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது.

இந்த கட்டுரையை படிப்பவர்கள் மனதார வாழ்த்திவிட்டு செல்லுங்கள் நண்பர்களே!

May 27, 2010

மனதை உலுக்கிய ஒரு சம்பவம்???

ஒரு வாரமாக மனதில் அடக்கி வைத்திருந்த ஒரு விசயம். இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து ஏறக்குறைய 18 வருடங்கள் முடியப்போகிறது. என்னைப்பார்ப்பவர்கள் எல்லோருமே, "எப்படி உன்னால் ஒரே கம்பனியில் இவ்வளவு வருடங்களாக இருக்க முடிகிறது? வெளியில் போனால் இன்னும் பெரிய இடத்தை அடைய முடியுமே?" என்று கேட்பதுண்டு. இது உண்மையாக இருக்கலாம். ஆனால், நான் 1992லிருந்து இன்று வரை எந்த கம்பனிக்கும் வேலைக்காக அணுகியது இல்லை. காரணம், என் MDதான். என்னை தேர்வு செய்தது என் MD திரு ஆர். பார்த்தசாரதி. அவரை நாங்கள் RPS என்று அழைப்போம். என்னை செதுக்கிய சிற்பி அவர். நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். என் நிறுவனத்தை நான் ஒரு கோவிலாகத்தான் பார்க்கிறேன். இது கொஞ்சம் மிகையாக தெரியும். ஆனால் உண்மை அதுதான். என் இன்னொரு MD திரு S. Sridhar அவரும் என்மேல் அதிகம் அன்பு செலுத்துபவர். நான் எங்கள் MDக்களின் குடும்ப உறுப்பினர் அனைவருடனும் வேலை பார்த்திருக்கிறேன்.

எல்லோருமே என் மேல் அதிகம் அன்பு கொண்டவர்கள். ஒரு குடும்ப உறுப்பினர் போல்தான் என்னை நடத்துகிறார்கள். நான் நிறுவனத்தில் சேரும் போதே ஒரு ஆபிஸர் அளவில்தான் சேர்ந்தேன். பிறகு படிப்படியாக முன்னேறினேன். என்னதான் ஓரளவு பெரிய போஸ்டில் இருந்தாலும், என் இலக்கு வேறு. நான் அடைய நினைத்த உயரத்தை இன்னும் அடையாமல் இருப்பதாகவே நினைக்கிறேன். நண்பர்கள் கேட்பதுண்டு, " அவர்களாக வேலையில் இருந்து துரத்தினால்தான் வேறு வேலைக்கு போவியா?" என்று. உண்மையாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை நான் பணத்திற்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை. அதே சமயம் எனக்கு சேர வேண்டிய பணம் சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். பணம் மட்டுமா? வாழ்க்கை. இல்லை, செய்யும் தொழிலில் ஒரு சந்தோசம் கிடைக்க வேண்டும். அது எனக்கு என் நிறுவனத்தில் கிடைக்கிறது. அதனால், நான் வெளியில் செல்ல முயற்சிக்க வில்லை.

இப்போது இதை ஏன் இங்கு சொல்கிறேன். காரணம் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

சென்ற வருடத்தில் ஒரு நாள். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனத்தின் பாம்பே கிளையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த நிறுவனத்தின் முதலாளி உலக பணக்காரர்களில் ஒருவர். என் பயோடேட்டாவை எப்படியோ பெற்று என்னை தொலைபேசியில் நேர்காணல் நடத்தினார் அந்த நிறுவனத்தின் HR Manager. நான் கேட்காமலே என்னை தேர்வு செய்து விட்டதாகவும், நான் தான் கோலாலம்பூரின் அவர்கள் கிளையின் CFO ஆகவும் ஆகப் போவதாகவும் தெரிவித்தார். அவர்கள் எனக்கு தர இருப்பதாக சொன்ன சம்பளம், நான் தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு அதிகம். ஜென்மத்திற்கு அவ்வளவு சம்பளம் என்னால் எங்கள் கம்பனியில் வாங்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்கள் கொடுத்த மற்ற Benefits எல்லாம் மிக அதிகம். அவர்கள் கொடுப்பதாக சொன்ன ஆடம்பர சொகுசு அப்பார்மெண்ட் மிகப் பெரியது. பிள்ளைகளுக்கு இண்டர்நேஷனல் பள்ளியில் இலவச படிப்பு. இந்தியாவுக்கு இரண்டு முறை குடும்பத்துடன் செல்ல டிக்கட். இன்னும் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனாலும், நான் ஒப்புக்கொள்ளவில்லை.

காரணம், அப்போதுதான் எங்கள் கம்பனியில் ஒரு மிகப்பெரிய புராஜக்ட்டை எடுத்து இருந்தேன். அதை விட்டு போக எனக்கு மனமில்லை. நான் எதிர்பார்க்காமலே வாய்ப்பு வந்ததால், என்னால் அந்த ஷாக்கை உடனே எதிர்கொள்ள முடியவில்லை. யாராக இருந்தாலும் நன்றாக செட்டிலாகிவிட்ட ஒரு நிலையில், எதிர்பார்க்காமல் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடி முடிவு எடுப்பது என்பது ரொம்ப கஷ்டம். அதுவும் இல்லாமல் என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட என் கம்பனி ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கும் போது, கம்பனியை நட்டாற்றில் விட்டு விட்டு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. அதனால், முடிவை சொல்லாமல் இருந்தேன்.

தெரிந்த நண்பர்கள் எல்லோருமே, " நீ என்ன பைத்தியமா? யாராவது இப்படி இருப்பார்களா?" என்றார்கள். உண்மையில் இந்த விசயத்தில் பைத்தியமாகிப்போனேன். என்னை கேட்டு பார்த்து, மெயில் எல்லாம் அனுப்பியும் நான் சரியான முடிவு சொல்லாததால், அவர்கள் என்னிடம் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார்கள்.

ரொம்ப நாட்கள் காத்திருந்து போன மாதம், மும்பையிலிருந்து ஒருவருக்கு அதே வேலையை கொடுத்தார்கள். அவரும், அவர் மனைவியும், இரண்டு வயது குழந்தையும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மலேசியா வந்து சேர்ந்தார்கள். எனக்கு கொடுப்பதாக சொன்ன அந்த மிகப்பெரிய அப்பார்ட்மெண்டில் தங்கினர். அவருக்கு வயது 34, மனைவிக்கு வயது 29. அவர்கள் இருந்த அப்பர்ட்மெண்டில் இன்னும் நிறைய தளங்கள் காலியாக உள்ளன. இவர்கள் இருந்த 14வது மாடியில் இருக்கும் 5 ப்ளாட்டில் இவர்கள் ப்ளாட்டை தவிர மீதி நான்கும் காலியாகவே இருந்திருக்கிறது.

ஒரு மாதத்தில் என்ன ஆனது தெரியவில்லை. சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை. கணவரும், மனைவியும் சேர்ந்து, விஷம் கொடுத்து தங்களது இரண்டு வயது பையனை கொன்று விட்டு, அவன் சாகும்வரை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, செத்ததும் அவனை நன்றாக வெள்ளைத்துணியில் மூடி கட்டி வைத்து விட்டு, காது மூக்கு எல்லாம் பஞ்சை வைத்து அடைத்து விட்டு, பொறுமையாக இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். பின்பு பொறுமையாக 14வது மாடியில் இருந்து 25வது மாடிக்கு சென்று, அங்கே இருந்து கீழே குதித்து இறந்து விட்டார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. ஏன் இந்த கொடூர முடிவு? அந்த 2 வயது குழந்தை என்ன பாவம் செய்தான்?

இந்த விசயத்தை கேள்விபட்ட நான், சென்ற வெள்ளிக்கிழமை முழுவதும் ஒரு வித பதட்டத்துடனே இருந்தேன். என்னால் அவர்கள் சாவை ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ எனக்கே ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வு.

ஒரு பஸ்ஸில் போக டிக்கட் புக் செய்து வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் ஏதோ ஒரு காரணமாக நம்மால் அந்த பஸ்ஸில் செல்ல முடியவில்லை. அந்த பஸ் விபத்துக்குள்ளாகி, அனைவரும் இறந்துவிட்ட செய்தி வந்தால் எப்படி இருக்கும்????

அந்த மன நிலையில் நான்....

May 26, 2010

ஒரு இனிமையான பயணம் - 7

" சார், இந்த பக்கமா போகாதீங்க"

"ஏன்?''

"இது ஒரு மோசமான தெரு. இங்கே ரவுடிகள் அதிகம். உங்கள் பணம், நகைகளை பறித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். சண்டை போட்டீர்கள் என்றால், கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுவார்கள்" என்று பயமுறுத்தினார். எதுக்கு வம்பு என்று நினைத்து வந்த வழியே திரும்பி, வேறு வழியாக ஹோட்டலை சென்று அடைந்தோம். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரண்டு நாட்களாக லோக்கல் உணவு சாப்பிட்டு நொந்து போயிருந்த எங்களுக்கு, நம் நாட்டு உணவு கிடைக்கவே ஒரு வெட்டு வெட்டினோம். பிறகு ஆனந்த விகடன், குமுதம் எங்கே கிடைக்கும் என்று தேடி அலைந்து, வாங்கி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் காலை, காலை உணவினை முடித்துவிட்டு மலாக்கா Zoo சென்றோம். அன்று மே 1 ஆம் தேதியாக இருந்ததால் நல்ல கூட்டம். ஒவ்வொரு இடத்தையாக பார்த்தோம். எல்லா இடத்திலும் இருக்கும் அதே மிருகங்கள் தான். அங்கேயும் Bird Show, Elephant show பார்த்தோம். ஆனால், இங்கு எல்லா நிகழ்ச்சியுமே மலாய் மொழியில் நடத்துகிறார்கள். எங்களுக்கு மொழி புரியாததால் எங்களால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. Zooவிலேயே அரை நாள் ஓடிவிட்டது.

பிறகு அருகில் இருந்த மெக்டனால்ஸில் மதிய உணவை முடித்துவிட்டு Crocodile Park சென்றோம். எங்கு பார்த்தாலும் விதவிதமான முதலைகள். பிள்ளைகள் நிறைய சந்தோசம் அடைந்தார்கள். நான் பல இடங்களில் பார்த்து இருந்தாலும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியினை பற்றி குறிப்பிட நினைக்கிறேன். என்னவென்றால் ஒரு முதலையையும், ஒரு பாம்பையும் வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். என்னால் இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. அந்த அளவிற்கு மிகவும் திரில்லிங்காக இருந்தது.

முதலில் ஒருவர் ஒரு சாக்கு மூட்டையை தூக்கி வந்தார். நாங்கள் என்னவென்று ஆச்சர்யமாக பார்த்தோம். மூட்டையை திறந்தால் ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு. நல்ல நீளமும் அகலமும் கொண்டது. அதை மேடையில் விட்டார். மிக மெதுவாக அதன் அருகில் சென்று அதன் வாயை மிக இருக்கமாக பிடித்தார். பிறகு அந்த பாம்பை தன் உடலில் சுற்றிக்கொண்டார். அப்படியே அசையாமல் அதன் வாயை பிடித்துக்கொண்டே நின்றார். சிறிது நேரத்தில் பார்த்தால், அந்த பாம்பு அப்படியே அவரை இருக்குகிறது. சிறிது மூச்சு விட முடியாமல் திணருகிறார். அப்படியே சில நிமிடங்கள் நான் ஆடி போய் விட்டேன். பிறகு மற்றவர்களின் துணையுடன் அந்த பாம்பை அவரிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தார்கள். பிறகு அந்த பாம்பை அதே சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வைத்தார்கள். ஏன் இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என தெரியவில்லை.

அதைவிட பயங்கரமானது முதலையை வைத்து செய்த ஒரு செயல். மிகப்பெரிய முதலை அங்கே உள்ள சிறிய தண்ணீரில் இருந்தது. ஒருவர் மிக மெதுவாக அதன் அருகே சென்றார். அப்படியே மிக மெதுவாக அதன் வாலை பிடித்தார். அது திமிறியது. அது திமிர திமிர அப்படியே அதை மேடையை நோக்கி இழுத்து வந்தார். பிறகு ஒரு குச்சியால் அதன் வாயை தொட்டார். அது மெல்ல வாயை திறந்தது. சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு மெதுவாக அதன் அருகே போய் தன் ஒரு கையை அதன் வாயின் உள்ளே செலுத்தி மிக கவனமாக வெளியே எடுத்தார். அதன் பல்லின் மீதோ, இல்லை வாயின் மீதோ அவர் கை பட்டிருந்தால் அவ்வளவுதான். அவர் காலி. பின்பு அவர் செய்த ஒரு காரியம் தான் என்னை மிகவும் பயப்பட வைத்தது.

அங்கே உள்ளவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கினார். நான் கூட அவருக்குத்தான் கேட்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த பணத்தை வைத்து என்ன செய்தார் தெரியுமா? அந்த பணத்தை அப்படியே சுருட்டினார். சுருட்டிய பணத்தை கையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்தார். அப்படியே மிக மெதுவாக படுத்தபடியே உடம்பை நகர்த்தி நகர்த்தி முதலையின் அருகே சென்றார். அப்படியே சிறுது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், அந்த பணத்தை முதலையின் வாயில் வைத்தார். பின்பு நகர்ந்து கொஞ்ச தூரம் சென்றார். முதலை திறந்த வாயை மூடவே இல்லை. பின்பு மீண்டு நகர்ந்து சென்று அதன் வாயிலிருந்து அப்படியே மிக மெதுவாக பணத்தை எடுத்தார். பிறகு படுத்தபடியே நகர்ந்து சென்று எழுந்தார். என்னால் இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏன் உயிரை பணயம் வைத்து இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

பின்பு சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு, ButterFly Garden நோக்கி சென்றோம். வழித் தெரியாமல் இரண்டு மூன்று ரவுண்டு சுற்றி அங்கே போவதற்குள் மாலை ஆனது. பட்டர்ப்ளை அதைகம் இல்லாத ButterFly Garden அங்கேதான் பார்த்தேன். ஆனால், அங்கே நிறைய பாம்பு வகைகள் வைத்து இருக்கிறார்கள். கல்ர் கலரான, வித விதமான பாம்புகள். சில அழகாக இருந்தது, சில அருவெறுப்பாக இருந்தது. அங்கே சில மணி நேரம் செலவழித்துவிட்டு, மீண்டும் 40 நிமிட கார் பயணத்திற்கு பிறகு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 8.30 வரை ரெஸ்ட் எடுத்து விட்டு, வேறு எங்காவது செல்லலாம் என நினைத்தால் ஒரே டிராபிக். அதனால் முடிவை மாற்றிக்கொண்டு, நடந்து சென்று சாப்பிட்டு விட்டு, ஹோட்டலுக்கு வந்தோம்.

அடுத்த நாள் காலை சாப்பிட்டு முடித்தவுடன், என் நண்பருக்கு போன் செய்து கேட்டேன், " இன்னும் ஏதாவது பார்க்க வேண்டிய இடம் உள்ளதா?" என்று. அவர் கூறினார், " சார் நீங்க மேக்ஸிமம் எல்லாம் பார்த்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸ் இருக்கு. அது உங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்குமா என தெரியவில்லை?" என்றார். பிள்ளைகளை கேட்டேன், " போதும் டாடி, நாளை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கிறார்கள். நாம் இரவிற்குள் நம் வீட்டிற்கு சென்று விடலாமே?" என்றனர். எனக்கும் நல்ல யோசனையாக படவே, காலை 10.20 க்கு மலாக்காவை விட்டு கிளம்பினோம். இரண்டு மணி நேர கார் பயணத்திற்கு பிறகு செகாமட் என்ற இடம் வந்து சேர்ந்தோம்.

அங்கே செல்வம் ரெஸ்டாரண்ட் என்று ஒரு கடை உள்ளது. போகும் போது அங்குதான் டிபன் சாப்பிட்டோம். அதே இடத்தில் மதிய உணவிற்காக காரை நிறுத்தினேன். நம்ப மாட்டீர்கள். சின்னக்கடைதான். ஆனால், 9 விதமான காய்கறிகள், 3 விதமான சிக்கன், இரண்டுவிதமான மீன் வகைகள், சாதம், பிரியாணி, சாம்பார், ரசம், மீன் குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் சிக்கன் குழம்பு. திடீரென இவ்வளவு நம்ம ஊர் சாப்பாட்டு வகைகளை பார்த்ததும் தலை கால் புரியவில்லை. வேண்டியதை நன்றாக சாப்பிட்டு விட்டு, துக்க கலக்கத்தில் பயணத்தை தொடர்ந்தோம். மீண்டும் 3 மணி நேர கார் பயணத்திற்கு பிறகு சரியாக மாலை 6 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த நான்கு நாட்களும், எந்த விதமான அலுவலக கவலை இல்லாமல், குடுமப்த்துடன் செலவிட்டது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது. நீங்களும் சமயம் கிடைக்கும்போது, அலுவல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்காவது டூர் செல்லுங்கள். அப்போதுதான் நான் சொல்லும் உண்மைகள் உங்களுக்கு விளங்கும்.

பின் குறிப்பு:

ஏற்கனவே சொன்னதுப்போல பயணத்தின் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். அதனால் தான் இவ்வாறு எழுதினேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.

May 25, 2010

ஒரு இனிமையான பயணம் - 6

காரை திறப்பதற்கு ரிமோட்டை ஆன் செய்தால், ரிமோட் வேலை செய்யவில்லை. சரி, சாவியை வைத்து திறக்கலாம் என நினைத்து திறந்தால், கீஈ கீஈ என்று கார் அலறுகிறது. ரிமோட்டில் காரை க்ளோஸ் செயததால் ரிமோட்டில்தான் ஆன் செய்ய வேண்டும்.

என்ன செய்வது? பின்பு அருகில் இருந்த செக்யூரிட்டியிடம் சென்று கேட்டேன். அவர்தான் காரணத்தை கண்டுபிடித்தார். " சார், நீங்க வாட்டர் கேம் விளையாடும்போது ரிமோட்டை பேண்டிலேயே வைத்து இருந்தீர்களா?"

அப்போதுதான் எனக்கு உரைத்தது. போன், பர்ஸ் ஆகியவற்றை மனைவியிடம் கொடுத்த நான் ரிமோட்டை கொடுக்க மறந்துவிட்டிருக்கிறேன். ரிமோட் தண்ணீரில் நனைந்ததால் வேலை செய்யவில்லை. பிறகு செக்யூரிட்டி அருகே இருந்த யானைப்பாகனிடம் சென்று ஒரு சிறு கத்தியை வாங்கிவந்தார்.

" சார், ரிமோட்டை திறந்து பார்க்கலாம். தண்ணீரை துடைத்து பிறகு மாட்டி பார்க்கலாம். 95% வேலை செய்ய சான்ஸ் இல்லை. ஏனென்றால் இதுவும் செல் போன் போலத்தான். தண்ணீரில் மூழ்கினால் அவ்வளவுதான்" என்றார்.

கொஞ்சம் டென்ஷன் ஆனது உண்மைதான். ஒரு வேளை வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ரிமோட்டை ஓப்பன் செய்தோம். பிறகு வெயிலில் காய வைத்தோம். என் நல்ல நேரம் நன்றாக வேலை செய்தது. உடனே அவர்களுக்கு என் நன்றியை சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மலாக்கா கிளம்பினேன். போகும்போது ஒரு சிறிய தவறு செய்ய இருந்து சரி பண்ணிவிட்டேன். அதாவது எங்கள் ஊரிலிருந்து ரிசார்ட் வரும்போது KL Highway ஆனால் திரும்பி போகும் போது அதே Highway தான். ஆனால், அதன் பெயர் Johor Higway. ஹைவே மாறினால் கோலாலம்பூர் போக வேண்டி இருக்கும். ஒரு வழியாக மாலை 4 மணிக்கு மலாக்கா வந்து சேர்ந்தோம்.

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை 6 மணி அளவில் மலாக்காவில் உள்ள பகுதிகளை பார்க்க சென்றோம். மலாக்காவில் பார்க்க வேண்டிய இடங்கள்:

01. Malaka River
02. Eye on Malaka
03. St Francis Xavier church
04. Bukit Cina
05. Cheng Hoon Teng Temple
06. Christ Church
07. Cultural Museum
08. Sky Tower
09. Crocodile Park
10. Zoo
11. Butterfky garden

இன்னும் சில ஹிஸ்டாரிகல் இடங்களும் உள்ளன. ஆனால், பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதை மட்டுமே நான் தேர்வு செய்தேன். நாங்கள் முதலில் போனது. மலாக்கா ஸ்கை டவர்.


உயர்ந்த டவரில் சுற்றிலும் இருக்கைகள். டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். அங்கே இருவர் குடுமப்த்துடன் போட்டோ பிடித்தார்கள். நான் வேண்டாம் என்றேன். ஆனால் அவரோ, " சார், சும்மாதான் என்றார். போட்டோ பிடித்த பிறகு டவரில் உள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். டவரை மெதுவாக சுற்றிக்கொண்டே மேலே செல்வதற்கு ஒரு நிமிடம் ஆகிறது. மேலே 5 நிமிடம் சுற்றிக்கொண்டே நிற்கிறது. அங்கே இருந்து மலாக்காவை பார்க்க அருமையாக உள்ளது. சில போட்டோக்கள் எடுத்தேன். பிறகு கீழே வந்தவுடன் பார்த்தால், என் குடுமப போட்டோ பெரிய அளவில் பிரேமுடன் மாட்டி வைத்துள்ளார்கள். அதை என்னிடம் கொடுத்து 35 ரிங்கட் என்றார்கள். என்ன கொடுமை பாருங்கள். நான், " நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம்" என்று கூறி விட்டேன்.

டவர் மேலிலிருந்து எடுத்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு:பிறகு அங்கிருந்து நடந்து அருகே உள்ள ஒரு கப்பலில் ஏறினோம். மரத்தாலே கப்பல் செய்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு பெண் என்னைக் கூப்பிட்டாள். "என்ன என்றேன்?"

" உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா?"

" ஏன் என்னுடன்?"

" எனக்கு இந்தியர்கள் என்றால் பிடிக்கும்" என்றாள்.

அருகில் என் மனைவி இருக்கவே, " நோ தேங்க்ஸ்" என்று நழுவிவிட்டேன். பிறகு அங்கிருந்து மலாக்கா ரிவர் பகுதிக்கு சென்றோம். கடலிலிருந்து நீர் ஊருக்குள்ளே வருகிறது அதை அந்த டவுனை சுற்றி ஒரு ரிவராக அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். எல்லோரும் டிக்கட் வாங்கிக்கொண்டு போட்டில் அமர்ந்தோம். சரியாக 45 நிமிட பயணம். ஊருக்குள்ளேயே. அருமையாக இருக்கிறது. கட்டிடங்களின் பின் பகுதிகளில் அழகான ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறார்கள். நல்ல காற்று. மலாக்கா போகும் அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று இந்த படகு பயணம்.

பிறகு ஹோட்டலுக்கு சென்று காரை நிறுத்திவிட்டு, இந்திய ஹோட்டல் எங்கே இருக்கிறது என்பதை கேட்டறிந்து நடந்து சென்றோம். இரவு 10 மணி. ஒரு இந்தியர் வழி மறித்தார்,

" சார், இந்த பக்கமா போகாதீங்க"

- தொடரும்

May 24, 2010

ஒரு இனிமையான பயணம் - 5

எங்கள் டிக்கட்டில் உள்ள 4D சினிமா காட்சி இரவு 10.45க்குத்தான். ஆனால், அதுவரை என்ன செய்வது? அதனால் அந்த தியேட்டர் டிக்கட் கலக்டரிடம் சென்று 10.00 மணி காட்சிக்கு டிக்கட்டை மாற்றிக்கொள்ளலாமா? என்றேன். அவர், "முடியாது. தியேட்டர் புல் ஆகிவிட்டது. 10.15 ஷோக்கு முடியுமா என்று பார்க்கிறேன்" என்றார். ஆனால் சிலர் 10. மணி காட்சிக்கே டிக்கட் கவுண்டரில் வாங்கவே, அவரிடம் மீண்டும் சென்று, " 10 மணி காட்சிக்கு டிக்கட் இருக்கிறதே? அவர்கள் எல்லாம் வாங்குகின்றார்களே?" என்றேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை சிறிது நேரத்தில் உணர்ந்தேன். அவர், "சிறிது நேரம் காத்திருங்கள் சொல்கிறேன்" என்றார். பிறகு "இடம் இருக்கிறது வாருங்கள்" என்று கூப்பிட்டார்.

நாங்கள் தியேட்டரில் சென்று அமர்ந்தோம். அதுவரை 4D சினிமா என்றால் என்ன என்று எனக்குத்தெரியாது. 3D சினிமா கேள்விபட்டுள்ளேன். ஆனால் பார்த்தது இல்லை. சரியாக படம் 10 மணிக்கு ஆரம்பித்தது. எல்லோருக்கும் ஒரு கண்ணாடி கொடுத்து இருந்தார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே கம்ப்யூட்டர் கீ போர்ட், பேனா முகம் அருகே பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கால்களை யாரோ பிடித்து ஆட்டுவது போல் இருந்தது. படத்தில் ஒரு பேய் வந்தது. அதே நேரம் இருக்கைகள் எல்லாம் பயங்கரமாக ஆட ஆரம்பித்தது. பின்னாலிருந்து யாரோ முதுகை பிசைவது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் என் பெண், "டாடி, பயமா இருக்கு. வாங்க போகலாம்" என அழ ஆரம்பித்துவிட்டாள். பையன் என்ன செய்கிறான் என பார்த்தேன். கண்களை இருக்கி மூடிக்கொண்டு பயந்து கொண்டு சீட்டின் நுனியில் உட்கார்ந்து இருந்தான். இனி, அவர்களை படம் பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதில் நியாயம் இல்லை என நினைத்து அவர்களை கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். என் மனைவி வரும் வரையில் நாங்கள் வெளியே உட்கார்ந்து இருந்தோம்.

பின்புதான் தெரிந்தது, நாங்கள் வாங்கியிருந்த 10.45 காட்சியும், அவர் மாற்றித்தருகிறேன் என்று சொன்ன 10.15 காட்சியும் மீன் சம்பந்தப்பட்ட சினிமா என்று. ஒழுங்காக அது போயிருக்கலாம். அந்த சினிமாவில் 4D எபக்ட் இருந்தாலும், பயம் இல்லாமல் பார்த்து இருப்பார்கள் குழந்தைகள். பின்பு பிள்ளைகளின் பயத்தை போக்குவதற்காக வெளியே சின்ன சின்ன ரைடுகளில் விளையாட வைத்து, ரூமுக்கு வந்து சேர இரவு 11 மணி ஆனது.

அடுத்த நாள் காலை எழுந்து, ஹோட்டலில் கொடுத்த காலை உணவை முடித்துக்கொண்டு WaterWorld சென்றோம். செல்லும் வழியில் என் பெண் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்றாள். தேடிக்கண்டுபிடித்து அங்கே சென்று, டிக்கட் வாங்கி குதிரையில் ஏறினாள். மூன்று ரவுண்ட் என்று சொல்லி அதிகம் பணம் வாங்கினார்கள். நான் கூட ஏதோ அதிக தூரம் அழைத்துச்செல்வார்கள் என்று எண்ணினேன். பிறகுதான் தெரிந்தது, மிக சிறியதூரம் மட்டுமே குதிரையில் அழைத்துச் செல்கிறார்கள். நின்ற இடத்திலேயே மூன்று ரவுண்ட்.WaterWorldலும் சாப்பாட்டு டோக்கனும் டிக்கட்டுடன் சேர்த்தே கொடுக்கிறார்கள். அங்கே சென்று அனைவரும் உடை மாற்றி, ஒரு லாக்கர் வாடைக்கு வாங்கி துணிகளை எல்லாம் அதில் வைத்துவிட்டு உள்ளே சென்றோம். முதலில் சிறுவர் பகுதிக்கு சென்று பிள்ளைகளை விளையாட வைத்துவிட்டு பெரியவர்கள் பகுதிக்கு சென்றோம். ஏற்கனவே Sunway Lagoon Resortல் ரிஸ்க்கான Water Ride விளையாடி இருந்த அனுபவம் இருந்தாலும், கொஞ்சம் பயந்து கொண்டே தான் அந்த பகுதிக்கு சென்றேன். Family Ride க்கு மனைவி வர மறுக்கவே நானும் நண்பர் ஒருவரும் இருவர் உட்காரும் ஒரு டுயூப் வாங்கிக்கொண்டு உச்சி பகுதிக்கு சென்றோம். உச்சியிலிருந்து கீழே பார்க்கையில் என்னை அறியாமல் சிறிது பயமும், இதய துடிப்பு வேகமாகவும் அடிக்க ஆரம்பித்து விட்டது.
ஒருவிதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலே சென்று அமர்ந்தோம். அங்கே நின்ற ஒரு சீன நண்பர் எங்கள் ட்யுபை தள்ளி விட்டார். பிறகுதான் தெரிந்தது எவ்வளவு ரிஸ்க்கான விளையாட்டு அது என்பது. அந்தரங்கத்தில் பரப்பதுபோல் இருந்தது. அங்கே இங்கே வேகமாக சென்றது. கத்தி தீர்த்துவிட்டேன். அதெல்லாம் விட கொடுமை கீழே வந்து சேர்கையில் தலை குப்புற விழுந்து, ட்யூபில் இருந்து கீழே விழுந்து தண்ணீருக்குள் சென்று தண்ணீரை குடித்து, கத்தி, என் நண்பர் வந்து என் கையை பிடித்து அழைத்துச் சென்றார். நான் ஏன் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை என்று அன்றுதான் மிகவும் வருந்தினேன். கீழே வந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிறைய நிமிடங்கள் ஆனது.

ஆனால் ஒரு சில காட்சிகளை பற்றி எழுத இங்கே மிகவும் சங்கடமாக உள்ளது. நம் ஊரிலும் இதுபோல இருக்கலாம். ஆனால், அங்கே எல்லாம் காணக்கிடைக்காத காட்சிகளை இங்கே நீங்கள் தாராளமாக மிக தாராளமாக காணாலாம். எல்லோருமே ரொம்ப டேக் இட் ஈஸியாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் மிக அருகிலேயே பார்க்கலாம். அப்படியே பார்த்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆடைகள் அணிவதே தேவையில்லை என்ற அளவில் அவர்களின் ஆடைகள். பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பார்க்க முடியாதா? எப்படி இருக்கும்? என்று ஏங்கிய அனைத்தையும் மிகவும் சாதாரணமாக பார்க்கலாம். அதுவும் தண்ணீரில்.... மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

அங்கே ஒரு இடத்தில் செயற்கையான அலையினை ஏற்படுத்துகிறார்கள். அதில் டுயூபுடன் சென்று அமர்ந்தால் மிகவும் சுகமாக உள்ளது. அப்படியே நம்மை தாலாட்டுவதுபோல் உள்ளது. அதில் சில நேரங்கள் அமர்ந்து இருந்தோம். பிறகு அனைத்து விளையாட்டுகளையும் பார்த்து, ரசிக்க வேண்டியவைகளை ரசித்துவிட்டு, உடைகளை மாற்றிகொண்டு, அங்கேயே சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். உடனடியாக அங்கே இருந்து மலாக்கா செல்வதாக திட்டம். செக் இன் டைம் மதியம் 2. ஆனால் நாங்கள் போய் சேர 4 ஆகலாம். அதனால் ஹோட்டலுக்கு போன் செய்து, நாங்கள் வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு, காரை திறப்பதற்கு ரிமோட்டை ஆன் செய்தால், ரிமோட் வேலை செய்யவில்லை. சரி, சாவியை வைத்து திறக்கலாம் என நினைத்து திறந்தால், கீஈ கீஈ என்று கார் அலறுகிறது. ரிமோட்டில் காரை க்ளோஸ் செயததால் ரிமோட்டில்தான் ஆன் செய்ய வேண்டும்.

என்ன செய்வது?

- தொடரும்

May 21, 2010

ஒரு இனிமையான பயணம் - 4

Elephant show வில் சில சுவாரஸ்யங்கள் என்று சொன்னேன் அல்லவா?. என்னவென்றால், முதலில் யானைகளை வைத்து நிறைய வித்தைகள் செய்து காட்டினார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. அங்கே இருந்த அத்தனை யானைகளும் அந்த யானைப்பாகன்கள் சொல்வதை கேட்ட்கிறது. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஒரு குச்சியை வைத்து அதனை குத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் குச்சியால் குத்த குத்தத்தான் அது சொல் பேச்சு கேட்கிறது. ஆனால், அதை பார்க்கையில் நமக்கு வேதனைதான் வருகிறது. அதனால்தானோ என்னவோ பெரும்பாலான யானைப்பாகன்கள் சாவது யானை மிதித்துத்தான். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து பழி வாங்கும் போல!.

நான் சொல்ல வந்த சுவாரஸ்யம் இதுவல்ல. நிகழ்ச்சியின் நடுவே, வழி நடத்துபவர் பார்வையாளர்களிம் இருந்து இருவரை அழைத்தார்கள். ஒரு ஆண் ஒரு பெண். முதலில் ஒரு பெண்ணைக்கூப்பிட்டு அந்த மைதானத்தில் குப்புற படுக்க வைத்தார்கள். அந்த பெண்ணின் அழகான அந்த பின் பகுதியில் ஒரு துண்டை போட்டு மூடினார்கள். பிறகு ஒரு யானையை அழைத்தார்கள். அந்த யானை வந்து அந்த பெண்ணின் பின் பகுதியில் தன் காலை வைத்து அழகாக, மிக அழகாக, மெதுவாக மஜாஜ் செய்தது. அந்த பெண்ணுக்கு என்ன உணர்வு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த பெண் அப்படி இப்படி என்று கொஞ்சம் நெளிந்ததை வைத்து என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

பிறகு அந்த ஆண் நபர் படுத்தார். ஆனால் இந்த முறை அவரை குப்புறப் படுக்க வைக்கவில்லை. நேராக படுக்க வைத்து 'அங்கே' துண்டை போட்டு மூடினார்கள். பிறகு யானையை அழைத்தார்கள். அந்த யானை வந்து அதன் காலை தூக்கி அந்த நபரின் "அந்த" இடத்தில் வைத்து மஜாஜ் செய்ய, அந்த நபர் அப்படி இப்படி என்று நெளிய, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஒரே கூச்சல். ஆனால், அவர் என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது? ஆனால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அந்த யானை உணர்ச்சி அதிகமாகி அங்கே மிதித்து ஏதோ ஒன்று ஆகிவிட்டால், அவர் மனைவி அல்லவா பாவம்? சரி, சரி இதை இத்தோடு விட்டு விடுவோம்.

யூடுபில் நிறைய வீடியோ கொட்டிக்கிடக்கிறது. யானை மஜாஜ் செய்வதை நீங்கள் அங்கே பார்க்கலாம்.Elephant show முடிந்தவுடன் ஒரு மினி பஸ்ஸில் Animal safari சென்றோம். அந்த வேன் முழுவதும் நன்றாக ஜன்னல் போல் கம்பிகள் வைத்து மூடி இருக்கிறார்கள். அதன் நடுவே தான் நாம் பார்க்க முடியும். ஒரு திரில்லுக்காக என்று நினைக்கிறேன். உள்ளே பாதைகள் ஒரே ஏற்ற இறக்கமாக இருக்கிறது. அந்த வேனில் அப்படி பலத்த சத்தத்துடன் போவதே ஒரு அலாதியான அனுபவமாக உள்ளது. ஏறக்குறைய எல்லா விலங்குகளும் உள்ளே இருக்கிறது. நான் பல மிருக காட்சிக்கு போயிருக்கிறேன். ஆனால், என்னால் எப்பவும் ரசிக்க முடிந்ததே இல்லை. சிங்கப்பூர் சென்றிருந்த போது நைட் சபாரி சென்றிருந்தேன். அதை ரசித்தேன். இதெல்லாம் பிடிக்காததற்கு காரணம், அந்த விலங்குகளை பார்த்தால் பாவமாக இருக்கும். காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டிய விலங்குகளை, ஒரு கூண்டுக்குள்ளோ அல்லது இது போன்ற செயறகையான காடுகளிலோ விடுவதை என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பிள்ளைகள் ரசித்தார்கள். அதுதானே நமக்கு வேண்டும்.

சிங்கமும்,புலியும் சேர்ந்து இருப்பதால் இந்த இரண்டு போட்டாக்கள்:

ஒரு வழியாக வெளியே வந்தோம். மணி 6.10. சரி இப்போது ஹோட்டல் போய் செக் இன் செய்து விட்டு ஒரு குளியல் போட்டு விட்டு ஒரு 7 மணிக்கு Cow Boy Town க்கு போனால் சரியாக இருக்கும் என நினைத்து காரை எடுத்துக்கொண்டு ஹோட்டல் சென்றோம். ஹோட்டலில் இருந்து 6 நிமிட பயணத்தில்தான் Cow Boy Town இருந்தது. அங்கே போய் டிக்கட் கவுண்டர் போனோம். எல்லோருடைய மலேசியன் ஐடி கார்ட் காண்பித்தால் மிக குறைந்த விலையில் டிக்கட் இல்லை என்றால், வெளிநாட்டினருக்கான டிக்கட் எடுக்க வேண்டும் என்று அங்கே இருந்த அந்த அழகிய பெண் கூறினார். பின்புதான் தெரிந்தது, மற்றவர்களின் ஐடி கார்டை ஹோட்டலில் வைத்து விட்டு வந்து விட்டேன் என்று. பிறகு அவர்களை அங்கே நிற்க வைத்து விட்டு ஹோட்டலுக்கு ஓடினேன்.

ஒருவழியாக குறைந்த கட்டணத்தில் (ரொம்ப குறைந்த டிக்கட் என நினைக்க வேண்டாம். ஓரளவு?) டிக்கட் வாங்கி விட்டு உள்ளே சென்றோம். அதன் உள்ளே நுழைந்தவுடன் மெயின் ப்ரோக்ராம் நடக்கும் இடத்திற்கு முன்பு ஏகப்பட்ட ரைடுகள் நம் காசை பிடுங்குவதற்காக உள்ளன். ஒரு வழியாக பிள்ளைகளிடம் சமாளித்துவிட்டு, அங்கே உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம்.

சரியாக 8.30க்கு உள்ளே சென்றோம். அங்கே முதலில் ரெட் இந்தியன் ஷோ என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆதி வாசிகள் போல் வேடமிட்டவர்கள் நெருப்பில் வித்தைகள் செய்தார்கள். பிறகு பார்வையாளர்களை அழைத்து அவர்களையும் பங்கு பெறச் செய்து விளையாட்டு காட்டினார்கள். அதில் ஒரு பெண்ணை ஆதிவாசி போல் கத்த சொல்ல அந்த பெண் மிகவும் செக்ஸியாக கத்திவிட ஒரே கூச்சல்.

ரெட் இந்தியன் ஷோ முடிந்தவுடன் கார்னிவல் நடந்தது. பலவிதமான அணிவகுப்புகள். அது ஒன்றும் என்னை அதிகமாக கவரவில்லை. அதில் அருவெறுப்பான ஒன்றை காண நேர்ந்தது. இரண்டு பெண்களுக்கு மிகப்பெரிய மார்பு (56D?) இருப்பது போல் செட் செய்து, மார்பை மட்டும் ஆட்டிக்கொண்டே அவர்கள் வலம் வந்தது, கேவலமாக இருந்தது.

கார்னிவல் முடிந்தவுடன் Fireworks Show நடந்தது. மிக மிக ரசித்து பார்த்த நிகழ்ச்சி அது. அவ்வளவு அற்புதம். எல்லாம் முடிந்து வெளியே வர மணி 9.55. அப்போதுதான் நினைவு வந்தது டிக்கட்டிலே 4D சினிமா காட்சியும் இருக்கிறது என்று.

4D சினிமா திரில்லிங் அனுபவும், Water Worldல் நடந்த கிளுகிளு அனுபவமும் நாளை...

- தொடரும்

May 20, 2010

ஒரு இனிமையான பயணம் - 3

அவர்,

" யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்?'' என்றார்.

" சாப்பிட்டு அப்படியே நேரா போனோம்"

" ஏன் சார், நான் உங்களை சாப்பிடத்தான் யூ டேர்ன் எடுக்க சொன்னேன். மலாக்கா போக இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன் திரும்பவும் யூ டேர்ன் எடுத்து வந்த வழியா போனா மூன்றாவது சிக்னல ரைட் சைடு போனா நான் சொன்ன வழி வரும். முதல்ல திரும்பி சாப்பிட்ட இடத்துக்கு போங்க. அங்கே இருந்து போன் பண்ணுங்க" என்று சற்று கோபமாக பேசினார்.

அவர் சொன்னபடியே சென்று, போன் செய்து சரியான, வழியை கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தோம். இந்த அனுபவமும் ஒரு வித சந்தோசத்தையே கொடுத்தது. எங்கேயோ பிறந்து, வளர்ந்து வேறு ஒரு நாட்டில் வந்து வழி தெரியாமல் கையில் மேப்பை வைத்துக்கொண்டு காரில் பயணம் செய்வது கொஞ்சம் திரில் கலந்த சந்தோசமாக இருந்தது. பிறகு இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு Alor Kaja என்ற இடத்தை அடைந்தோம். அங்கே சென்று A Famosa Resort ஐ கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை.அருமையான ரிசார்ட். மொத்தம் 525 ஹெக்டேர் நிலத்தை தனி ஒரு மனிதர் வாங்கி நிர்வகித்து வருகிறார். அங்கே ரிசார்ட் ஹோட்டலும் உள்ளது. அப்பார்ட்மெண்டும் உள்ளது. நாங்கள் ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டலின் செக் இன் டைம் மாலை நான்கு மணி. நாங்கள் சரியாக 1 மணிக்கு சென்று விட்டோம். சரி, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அங்கே என்ன என்ன பார்க்கலாம் என்று ஆரோய்ந்தோம்.

அங்கே பார்த்து அனுபவிக்க வேண்டியவை:

01. Animal World
02. Water World
03. Cowboy Town
04. Fishing
05. Golf Resort
06. Micro Light & Sports Center

நாங்கள் முதலில் Animal World செல்லலாம் என்று நேராக அங்கே சென்றோம். எல்லோமே காஸ்ட்லி டிக்கட்ஸ். நாங்கள் மலேசியா ஐடி கார்ட் வைத்து இருந்ததால் எங்களுக்கு கொஞ்சம் டிஸ்கவுண்ட் உண்டு. அங்கே தனிப்பட்ட ஹோட்டல்களோ, உணவகமோ, காபி ஷாப்போ கிடையாது. எங்கே சாப்பிடுவது என்று குழம்பிபோய் அருகே இருந்த நபரிடம் கேட்டேன்.

" சார் ஏன் கவலை படறீங்க. டிக்கட்ல சாப்பாடும் உண்டு சார்"

அப்புறம் எந்த இடம்னு கேட்டு தெரிஞ்சுட்டு சாப்பிட போனோம். அருமையான சாப்பாடு. தவறுதலா ஒரு டிக்கட் எனக்கு கூட கொடுத்துட்டாங்க. அதுக்காக இன்னொரு சாப்பாடு சாப்பிடமிடியாது இல்லையா. அதனால ஒரு டிரிங்ஸ் மட்டும் அதிகமா வாங்கிட்டு முதல் இடத்துக்கு போனோம். அருகிலேயே ஒரு போட் பார்த்தோம்.

அங்கே இருந்தவரிடம், "இந்த போட் எங்கே போகுது?" என்றேன்.

" மங்கி ஐலேண்ட் போகுது வறீங்களா?" என்றார். சரி, என்று ஏறி உட்கார்ந்தோம். அப்போது மணி 2.10.

அந்த படகோட்டி, " சார் நான் சொல்றா மாதிரி Animal Worldல டைம் செலவிடுங்க. 2.30க்கு Cow Boy Show, 3.00 Bird Show, 3.45 Multi Animal Show and 4.30 Elephant show. அதுக்கு அப்புறம் 5.00க்கு வேன்ல Animal Safari போங்க" என்றார். எனக்கு ரொம்ப சந்தோசம். ஏனென்றால் பல இடங்களில் சரியான புரோக்ராம் தெரியாமல், சில நிகழ்ச்சி பார்த்தும், சில நிகழ்ச்சிகள் பார்க்காமலும் வந்ததுண்டு. இப்போது எல்லாமே தெரிந்ததால் எதையும் மிஸ் பண்ண வேண்டியதில்லை. ஆனாலும் எனக்கு ஒரு குழப்பம். இப்போது மணி 2.10. Cow Boy Show 2.30க்கு. நாம் செல்வதோ மங்கி ஐலேண்டுக்கு. எப்படி 2.30க்குல் வருவது?

அப்படி குழம்பிக்கொண்டிருந்த நிலையிலே படகு நின்றது. ஏன் என்றால் ஐலேண்ட் வந்துவிட்டது. மொத்தமே 2 நிமிட பயணம்தான். நான் ஏதோ ரொம்ப தூரம் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருகில் இருக்கும் என நினைக்கவில்லை. கடைசிவரை நானும் என் பிள்ளைகளும் ஏதாவது ஒரு குரங்கு தென்படுமா? என்று தேடினோம். கிடைக்கவே இல்லை. ஒரு குரங்கு கூட இல்லாத இடத்திற்கு ஏன் மங்கி ஐலேண்ட் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை. மொத்தம் 5 நிமிடம் மட்டுமே அங்கே இருந்து விட்டு மீண்டும் படகில் வந்து சேர்ந்தோம்.

சரியாக Cow Boy Show நடக்கும் இடத்திற்கு வந்தோம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஷோ நான் பார்த்ததே இல்லை. நமக்கு முன்னால் தத்ரூபமாக ஒரு நாடகம் போல நடிக்கிறார்கள். நல்ல மியூஸிக் சிஸ்டம். சண்டை போடுகிறார்கள். நிஜ துப்பாகியால் சுடுவதை போல ஒருத்தருக்கு ஒருத்தர் சுட்டுக் கொள்கிறார்கள். ரத்தம் கொட்டுகிறது. ஒரிஜினல் சண்டை போல் டைமிங் மிஸ் செய்யாமல் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். இவர்கள் சுடுவதால் வரும் நெருப்பில் அங்கங்கே தீப்பிடித்து எரிகிறது.
கடைசியில் நடந்த சீன் புல்லரிக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட 50 அடி உயரத்தில் ஒருத்தர் நிற்கிறார். கீழே நின்ற ஒருவர் சுடுகிறார். துப்பாக்கி குண்டு அவரை துளைக்கிறது. அவர் தலை கீழாக 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறார். சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, நேரில் பார்க்கும்போது அவ்வளவு திரில்லிங்காக இருந்தது.

பிறகு Bird Show,Multi Animal Show பார்த்து விட்டு Elephant show வந்தோம்.

அங்கே சில சுவாரஸ்யங்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். அப்படி என்ன சுவாரஸ்யம்?

- தொடரும்

May 17, 2010

ஒரு இனிமையான பயணம் - 2

ஏற்கனவே பாதி தூரம் கடந்துவிட்டோம். இப்போ என்ன செய்வது? சாவி வீட்டில் இருக்கும்போல. இப்போது போல அப்போது எல்லாம் கோபம் கொள்ள முடியாது. அப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பித்த சமயம். தனிப்பட்ட பயணம் என்றால் கேன்சல் செய்துவிடலாம். நான் அடுத்த நாள் மீட்டிங்கிற்கு இருந்தாக வேண்டும். என்ன செய்வது?

பிறகு யோசித்து டிரைவரிடம் ஆலோசனை கேட்டேன். அப்பொழுது எல்லாம் என்னிடம் கார் கிடையாது. வாடகை கார்தான். டிரைவர் கூறினார், " சார் நாம வேண்டுமானால் திரும்பி உங்கள் வீட்டிற்கு போய் சாவியை எடுத்து வரலாம். ஆனால் நான் காரை வேகமாக ஓட்ட வேண்டி வரும். அதற்கு நீங்கள் என்னை திட்டக்கூடாது. அப்படியே வீட்டிற்கு போய் சாவியை எடுத்து வந்தாலும் பஸ்ஸை பிடிப்போம் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது"

" பரவாயில்லை. முயற்சி செய்யலாம்" என்றேன். என்னிடம் அப்போதெல்லாம் செல்போன் இல்லாததால் டிரைவரின் போனை வாங்கி பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நண்பருக்கு போன் செய்து பஸ்ஸை கொஞ்சம் நிறுத்தி வைக்க முடியுமா? என கேட்க சொன்னேன். அவர் முயற்சி செய்கிறேன் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து போன் செய்த நண்பர் பத்து நிமிடம் மட்டுமே பஸ் வெயிட் செய்யும் என்று கூறி விட்டார்.

வேகமாக வீட்டிற்கு வந்து சாவியை எடுத்துக்கொண்டு, அதே வேகத்துடன் பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பிறகு தான் மூச்சு விட முடிந்தது. அவ்வளவு டென்ஷன் அன்று. அதன் பிறகு செக் லிஸ்ட் விசயத்தில் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க ஆரம்பித்து விட்டேன். மலாக்கா கிளம்பும் அன்றைய இரவு செக் லிஸ்டை சரிபார்த்த போது, என் பெண் 'நான் இன்று செக் லிஸ்டில் டிக் செய்கிறேன் டாடி' என்று அவள்தான் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். அன்றைக்கு விநாயகர் சதூர்த்தி. அதனால் சாமி கும்பிட்டு விட்டு கொழுக்கட்டை சாப்பிட்டு விட்டு, சூட்கேஸை எல்லாம் சரி பார்த்து விட்டு, இரவு 10 மணிக்கு தூங்க சென்றோம். ஏனென்றால், அப்போதுதான் காலை 3.30க்கு எழ முடியும். காலை 5 மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு.

சரியாக இரவு 1 மணி. யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் என் பெண். சரி, இது சாதாரண வாந்திதான் என நினைத்து படுத்து விட்டோம். பிறகு 1.30க்கு, அப்புறம் 2 மணிக்கு என்று தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டாள். இரவு சாப்பிட்ட கொழுக்கட்டை செரிக்கவில்லை போலும். சரி, காலையில் சரியாக போய்விடும் என நினைத்தேன். காலையில் 3.30க்கு எழுந்து கிளம்ப ஆரம்பித்தோம். இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை. நான்தான் காரை டிரைவ் செய்யவேண்டும். பரவாயில்லை. ஓட்டலாம் என நினைத்து கிளம்பினேன். காரில் ஏறுவதற்கு முன் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். சரி, இனி கிளம்புவது சரி அல்ல என நினைத்து, ப்ரோக்ராமை கேன்சல் செய்து விட்டேன். எல்லோருக்கும் மூட் அவுட்.

பிறகு 2009ல் மலாக்கா கிளம்பலாம் என முடிவு செய்தபோது H1N1 பிரச்சனை ஆரம்பமானது. அதுவும் மலாக்கா ஹை அலர்ட் பகுதியாக அரசாங்கம் அறிவித்தது. அதனால் 2009லும் கிளம்ப முடியவில்லை. அதன் பிறகு 6 முறை இந்தியா சென்று வந்தாயிற்று. பல முறை கோலாலம்பூர் சென்று வந்தாகிவிட்டது. சிங்கப்பூர் சென்று வந்தாகிவிட்டது. ஆனால், மலாக்கா மட்டும் செல்ல முடியாமலே இருந்தது. அதனால் இந்த முறை மலாக்கா செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நானும் கொஞ்சம் அலுவலக வேலையாக பிஸியாகவே இருந்து வந்தேன்.

திடீரென்று இரண்டு நாட்கள் லீவு கிடைக்கவே கூட இரண்டு நாட்கள் லீவு போட்டு, மலாக்காவும், மலாக்காவிற்கு அருகே இருக்கும் Afamosa Resort க்கும் செல்ல முடிவு எடுத்து ஹோட்டல் எல்லாம் புக் செய்து விட்டு என் காரில் கிளம்பினோம். இரண்டு முறை செல்ல முடியாமல் போனதால் இந்த முறை எப்படியும் செல்ல வேண்டும் என உறுதியுடன் இருந்தேன். நீங்கள் நினைக்கலாம், அப்படி என்ன இது ஒரு பெரிய விசயமா? என்று. அப்படியல்ல. ஏன் நம்மால் செல்ல முடியவில்லை என்ற குழப்பமே போயே தீர வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே சென்று வந்த நண்பர் மூலம் ரூட் எல்லாம் கேட்டு வாங்கி எழுதி வைத்துக்கொண்டேன். ஒரு வழியாக அடுத்த நாள் காலை 6 மணிக்கு கிளம்பினோம். அவர் கொடுத்த ரூட்டில் எந்த இடம் எத்தனை மணி நேரத்தில் வரும் என்பதில் தொடங்கி, எங்கே காலை உணவு சாப்பிட வேண்டும் என்பது வரை எழுதிக்கொடுத்திருந்தார். அவர் கூறிய படி 3 மணி நேர பயணத்திற்கு பிறகு அந்த சாப்பாடுக்கடையை அடைந்தோம். காலை உணவு திருப்தியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். அவர் எழுதிக் கொடுத்திருந்தபடி, குறிப்பிட்ட அந்த டவுனை அடைந்த பிறகு ஒரு இடத்தில் யூ டேர்ன் போட்டு, அந்த ஹோட்டலை அடைந்து சாப்பிட்டுவிட்டு, அந்த ஹோட்டலில் இருந்து மூன்று டிராபிக் சிக்னல் கடந்து வலது புறம் செல்ல வேண்டும்.

அதே போல் சென்றால், மலாக்கா என்ற போர்டே எங்கும் இல்லை. இரண்டு இடத்தில் கேட்டாயிற்று. ஒரு இந்திய பேக்டரி ஒன்று இருந்தது. அவர்களிடம் கேட்டால், இடதுபுறம் செல்லுங்கள், ஆனால் ரொம்ப தூரம் என்கிறார். நண்பர் ரூட்டின் படி வலது புறம் செல்ல வேண்டும். குழப்பமாகி நண்பருக்கு போன் செய்து கேட்டேன். அவரிடம் எதுவரை வந்துள்ளோம் என்பதை கூறி, அருகில் ஒரு மேம்பாலம் உள்ளது, என்றேன். அதைத் தாண்டியவுடன் வலதுபுறம் செல்லுங்கள் என்றார். அதை தாண்டியவுடன் பார்த்தால், வலதுபுறம் ரோடே இல்லை. செரம்பான் 65 கிலோ மீட்டர் என்று உள்ளது. செரம்பான் கோலாலம்பூரில் உள்ளது. ஏதோ தவறு நடந்திருப்பது தெரிந்து விட்டது. நண்பருக்கு மீண்டும் போன் செய்தேன்.

அவர்,

" யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்?'' என்றார்.

- தொடரும்

May 13, 2010

ஒரு இனிமையான பயணம் - 1

வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள், டென்ஷன்கள், சோகங்கள் வந்து போய் கொண்டிருக்கின்றன. நானோ எப்போதும் சந்தோசமாக இருப்பவன். ஆனால், எனக்குத்தான் பிரச்சனைகள் அதிகமாக வருகின்றன. எனக்கு என்றால் எனக்கு அல்ல. என்னைச் சார்ந்தவர்கள் மூலம் வரும் பிரச்சனைகள். கொஞ்சம் அதிகம்தான். ஆனால், இப்போது அதையெல்லாம் கடந்து போக பழகிக்கொண்டேன். கிடைத்திருக்கும் இந்த மனித வாழ்வு மிக அற்புதமான ஒன்று. மீண்டும் மனிதப்பிறவி கிடைக்குமா? என்றெல்லாம் எனக்குத்தெரியாது. அதைப்பற்றிய கவலையும் எனக்கு கிடையாது. அதனால் கிடைத்திருக்கும் இந்த வாழ்வை எப்படி எல்லாம் அனுபவிக்க முடியுமோ அப்படி எல்லாம் அனுபவிக்க நினைப்பவன், அனுபவித்துக்கொண்டிருப்பவன் நான். நீங்கள் வேறு மாதிரி அனுபவங்கள் என்று நினைத்துவிட வேண்டாம். எனக்கு புகை பிடிக்கும் பழக்கமோ அல்லது மது அருந்தும் நல்ல பழக்கமோ கிடையாது. இதை எல்லாம் தாண்டி அனுபவிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது. என்னுடைய சந்தோசம் எப்படிப்பட்டது என்று ஒரு சின்ன உதாரணம் மூலம் விளக்க ஆசைப்படுகிறேன்.

ஒரு நாள் என் மகன் கடையில் புரோட்டா வாங்கி வருமாறு கூறினான். "எத்தனை வேண்டும்?" என்றேன். "எனக்கு ஒன்று அக்காவுக்கு ஒன்று" என்றான். நான் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு புரோட்டா அதிகமாக வாங்கிப்போனேன். பிறகு வீட்டிற்கு வந்து சாப்பிட கொடுத்தேன். என் பிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். " அப்பா, இன்னொன்று எடுத்துக்கொள்ளவா?" எனக் கேட்டு அவர்கள் எங்கள் பங்கையும் எடுத்து, சாப்பிடும் அழகை பார்த்துக்கொண்டிருக்கும் போது, எனக்கு ஏற்பட்ட ஒருவிதமான சந்தோசத்தில் எனக்கு பசிக்கவே இல்லை. அனுபவித்து பார்த்தவர்களுக்கு அந்த சந்தோசம் புரியும். நான் திருச்சியில் படிக்கும்போது, நிறைய நாள் அப்பா என்னை ஹோட்டலுக்கு கூட்டிச்சென்று, எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்துவிட்டு, அவர் காபி மட்டும் சாப்பிட்டுக்கொண்டே, நான் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கு அப்போது புரியாத சில விசயங்கள் இப்போது புரிகிறது.

தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் பிள்ளைகள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருப்பேன். சில விசயங்கள் நமக்கு மிக சாதாரணமாக இருக்கும். ஆனால், நான் அவர்கள் நிலைக்கு கீழே இறங்கி சென்று அவர்களுடன் உரையாடுவேன். ஆபிஸிலிருந்து பல பிரச்சனைகளுடன் வீட்டுக்கு செல்லும் நான், என் பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்கும்போது என் மனம் லேசாவதை உணர்கிறேன்..

இதை எதற்கு இங்கே சொல்கிறேன்? ஏனென்றால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க ஏகப்பட்ட விசயங்கள் உள்ளது. நான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசிக்கிறேன். ஏனென்றால் இந்த மனித வாழ்க்கை அவ்வளவு அற்புதமானது. நானும் செக்ஸ்தான் அதிக பட்ச சந்தோசம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதை எல்லாவற்றையும் விட அதிக சந்தோசம் கொடுக்கக்கூடிய விசயங்கள் வாழ்க்கையில் நிறைய உள்ளது. ஏனென்றால் இந்த உலகம் அவ்வளவு சந்தோசங்கள் நிறைந்தது. அதை தேடிப்பிடித்து அனுபவிக்க வேண்டும். அதற்கு இயற்கையை ரசிக்க அனுபவிக்க பழகிக்கொள்ள வேண்டும். நான் ரொம்ப சந்தோசமாக இருப்பது என் குடும்பத்துடன் எங்காவது டூர் செல்லும் போதுதான். அதுவும் பஸ்ஸிலோ, பிளைட்டிலோ செல்லுவது எனக்கு அதிகம் பிடிக்காது. காரில் அதுவும் நான் ஓட்டிச்செல்வது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரில் செல்லும் போது ஏற்படும் சந்தோசம் மிக அற்புதமாக இருக்கும்.

நான் பல விசயங்களை பற்றி அவ்வப்போது எழுதினாலும், ஒரு நல்ல பயண அனுபவத்தைப் பற்றி அப்படியே பதிய வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. அதற்கு மிக முக்கியமான காரணம் "இதயம் பேசுகிறது" மணியன்தான். நான் சிறு வயதில் அவருடைய அனைத்து பயணக்கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். அவருடன் சேர்ந்தே பல நாடுகள் அவரின் கட்டுரைகள் மூலம் பயணித்திருக்கிறேன். அதே போல் நான் அனுபவித்த ஒரு சின்ன பயணத்தை பற்றி ஒரு மூன்று பாகமாக எழுதப்போகிறேன். உங்களுக்கும் ஒரு வேளை பிடிக்கலாம் இல்லை பிடிக்காமலும் போகலாம். இனி..

மலேசியாவில் அனைத்து இடங்களையும் கல்யாணத்துக்கு முன்பே பார்த்திருக்கிறேன். கல்யாணத்திற்கு பிறகு இரண்டாவது முறையாகவும் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்து விட்டேன். இருந்தாலும் "மலாக்கா" என்ற ஒரு ஊருக்கு மட்டும் செல்லாமல் இருந்தது வருத்தமாக இருந்தது. காரணம், ஒவ்வொரு முறையும் பயணம் பற்றி பேசும்போதெல்லாம் நண்பர்கள், " மலாக்காவா? அது ஒரு ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸாச்சே? அங்கேயா போகப்போறீங்க" அப்படினு சொல்லி, போக விடாம செஞ்சுடுவாங்க. எப்படியும் போயே தீர வேண்டும்னு முடிவு பண்ணி 2008 ஆகஸ்ட் மாதம் கிளம்ப முடிவு பண்ணினோம். இரண்டு வருட முந்தைய பயண அனுபவம் என்று நினைக்க வேண்டாம். பொறுமை.

எங்கு சென்றாலும் நான் கிளம்புவதற்கு முன் ஒரு செக் லிஸ்ட் போட்டு வீட்டில் கொடுப்பதுண்டு. அதில் எல்லாவற்றையும் எழுதியிருப்பேன். ஒன்று கூட மறக்கமாட்டேன். இந்த செக் லிஸ்ட் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்தாலும், இதை மிக மிக கடுமையாக பாலோ பண்ணுவதற்கு ஒரு காரணம் உள்ளது. கல்யாணமாகி மூன்றாவது மாதத்தில் ஆபிஸ் விசயமாக சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்தது. எனக்கு மட்டுமே பிளைட் டிக்கட் கமபனியில் தருவார்கள் என்பதால் பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தோம். முதல் முறை சிங்கப்பூர் பயணம். அதுவும் கல்யாணமான மூன்றாவது மாதத்தில். அதனால் ஏகப்பட்ட டென்ஷன். எல்லாவற்றையும் செக் லிஸ்ட் போட்டு மனைவியிடம் கொடுத்தேன். எங்கள் ஊரிலிருந்து காரில் சென்று பக்கத்து ஊரிலிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டும். எல்லாம் செக் செய்து கிளம்பும் நேரம், என் மாமனாரிடம் இருந்து போன் வந்தது. நான் பேசிவிட்டு, மனைவியிடம் பேச சொல்லி போனை கொடுத்து விட்டு, நான் காரில் அனைத்தையும் எடுத்து வைத்தேன்.

பிறகு கிளம்பினோம். எனது நண்பர் ஒருவர் சிங்கப்பூர் விசா வாங்கி பாஸ்போர்ட்டுடன் பக்கத்து ஊர் பஸ் ஸ்டாண்டில் காத்து இருப்பதாக கூறினார். போகும் வழியில் எதற்கும் பஸ் டிக்கட் இருக்கிறதா? என பார்க்கலாம் நினைத்து, மனைவியிடம் சூட்கேஸ் சாவியை கேட்டேன்.

" சூட்கேஸ் சாவியா, உங்கள் கிட்ட இல்லை"

" இல்லையே. உன் கிட்டத்தானே கொடுத்தேன்"

" சாமி படத்துக்கு முன்னாடி வைச்சு கும்பிட்டபுறம் உங்களை எடுத்துக்க சொன்னேனே எடுத்துக்கலையா நீங்க?"

ஏற்கனவே பாதி தூரம் கடந்துவிட்டோம். இப்போ என்ன செய்வது? சாவி வீட்டில் இருக்கும்போல. இப்போது போல அப்போது எல்லாம் கோபம் கொள்ள முடியாது. அப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பித்த சமயம். தனிப்பட்ட பயணம் என்றால் கேன்சல் செய்துவிடலாம். நான் அடுத்த நாள் மீட்டிங்கிற்கு இருந்தாக வேண்டும். என்ன செய்வது?

- தொடரும்

May 10, 2010

அன்புள்ள உங்களுக்கு...

அன்புள்ள உங்களுக்கு,

நலமா? நானும் என் குடும்பமும் இங்கு நலம். உங்கள் நலனையும், உங்கள் மனைவி, பிள்ளைகள் நலனையும் அறிய ஆவல்.

உங்களுக்கே தெரியும், நான் பதிவுலகமே கதி என்று கிடப்பவன் என்று. நான் நிறைய எழுதிகிறேனோ இல்லையோ, நிறைய படிக்கிறேன். எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. பதிவுலகத்துக்கு வருவதற்கு முன்னால் நான் எப்படி என் பொழுதினை போக்கினேன் என்று? நான் உண்மையை சொல்லலாம்தான். சொன்னால், என் மேல் நீங்கள் வைத்து இருக்கும் மதிப்பு குறைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த அளவிற்கு கணனியை வேறுமாதிரி உபயோகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இப்போது அப்படி இல்லை. கணனியை உபயோகமாக பயன்படுத்துகிறேன். இப்போது உலகத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் பதிவுலகின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறேன்.

அந்த அளவிற்கு என்னை பதிவுலகம் கவர்ந்து விட்டது. தமிழ்மணமும், தமிழிஷும் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. சன் டிவியில் 'சித்தி' தொடர் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த நேரம் (எனக்கு மிகவும் பிடித்த நான் பார்த்த ஒரே சீரியல் 'சித்தி'). அப்போது நான் அடிக்கடி சொல்வதுண்டு. 'என் வாழ்க்கையில் இருந்து சித்தி தொடரை பிரிக்க முடியாது போல் உள்ளது. என் சுகம் துக்கம் அனைத்தும் சித்தி நாடகம் பகிர்ந்து கொள்கிறது' என்று. எனக்கு ராதிகா மேடத்தை பிடிக்க ஆரம்பித்ததும் அப்போதுதான். அதே போல் பதிவுலகமும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

இதை ஏன் இப்போது சொல்கிறேன்? ஏனென்றால், நீங்கள் இப்போது முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை? அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் புதிய பதிவர்கள் வருகிறார்கள். சிலர் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் விரைவில் சென்று விடுகிறார்கள். ஆனால், உங்கள் எழுத்து அப்படி அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய எழுத்து உங்களுடையது. தினமும் உங்களை படித்து வந்தேன். இப்போது நீங்கள் அவ்வளவாக எழுதாததால் எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் முன்பு போல் பதிவுலகத்தை விட்டு போய்விடுவேனோ? என்று பயமாக உள்ளது.

அப்படி நான் போனால், பதிவுலகத்துக்கு நஷ்டம் இல்லை. எனக்குத்தான் நஷ்டம். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறினால் போல் மட்டமான பக்கங்களை படிக்க போய்விடுவேனோ? என பயமாக உள்ளது. நான் எழுதினால் 100 பேர் படிக்கிறார்கள். நீங்கள் எழுதினால் குறைந்தது 1000 பேர் படிக்கிறார்கள். நான் எழுதினால் என் ஓட்டே எனக்கு விழமாட்டேன் என்கிறது. நீங்கள் எழுதினால், எல்லோரும் ஓட்டு போடுகிறார்கள்.

எனக்குத்தெரியும், 100 பேர் படித்தாலும், 1000 பேர் படித்தாலும் அதனால் பைனான்சியலாக ஒரு பயனும் இல்லை என்று. என்ன, ஒரு ஆத்மதிருப்தி உங்களுக்கு கிடைக்கும். அவ்வளவே! ஆனால், எங்களைப்போல வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உங்கள் எழுத்துக்கள்தான் சந்தோசத்தை கொடுக்கிறது.

எங்கள் சந்தோசத்திற்காகவாவது நீங்கள் தினமும் எழுத வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை ஒன்றுமே எழுதாமல் இருக்கும் அல்லது தினமும் எழுதாமல் இருக்கும் எனக்குப்பிடித்த என் பதிவுலக நண்பர்களுக்கு போஸ்ட் செய்கிறேன்.

பின் குறிப்பு:

'அன்புள்ள உங்களுக்கு' என்று ஒருவர் அடிக்கடி மெயில் எழுதுவார். அவர் மெயிலிலிருந்து தலைப்பை எடுத்துக்கொண்டேன்.

தினமும் எழுதாத எனக்கு பிடித்த நண்பர்கள் லிஸ்ட் நிறைய இருப்பதால், பெயர்களை தவிர்த்து விட்டேன்.

May 7, 2010

ஆச்சர்யம் அடைந்தேன்!(அமைச்சரும், நானும்)

ஒரு முறை நம் ஊர் அமைச்சர் ஒருவரை பார்ப்பதற்காக அவர் தங்கியிருக்கும் பங்களாவிற்கு சென்று வந்த என் நண்பன் என்னிடம் இவ்வாறு கூறினான்:

" என்னடா இது. இந்த ஆள் இப்படி திட்டறான். மரியாதையே இல்லாம பேசறான். நான் பயந்துட்டு பார்க்காமலே வந்து விட்டேன்"

நம் ஊரில் ஒரு அமைச்சர் வருகிறார் என்றால், முன்னாடி ஒரு 10 கார், பின்னாடி ஒரு 10 கார் வரும். போலீஸ் பைக் வேறு முன்னால் செல்லும். அவ்வளவு கெடுபிடி இருக்கும். சாதரணமாக கட்சி தொண்டர்களைத் தவிர அவரை சந்தித்து பேசுவது அவ்வளவு கஷ்டம்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதை ஏன் இப்போது நான் கூறுகிறேன் என்றால் நேற்று எனக்கு ஏற்பட்ட ஒரு ஆனந்த அனுபவம்தான் காரணம்.

நேற்று எங்கள் கம்பனிக்கு எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு அமைச்சர் கம்பனியை பார்வையிட வந்தார். அதற்கு முன்பு அவருடன் ஒரு லன்ச் மீட்டிங், பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தோம். லன்ச் முடிந்தவுடன் கம்பனிக்கு வருவதாக ஏற்பாடு. நாங்கள் சென்று அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தோம். சம்பந்தமில்லாமல் நம் ஊரின் அமைச்சர்கள் பற்றிய நினைவு என் மனதிற்குள் வந்து வந்து சென்றது.

எங்களுடன் இருந்த ஒருவர் ஏற்கனவே அமைச்சரை பற்றி தெரிந்து வைத்திருந்தார். அதனால் தப்பித்தோம். ஏனென்றால் எங்களுக்கு அமைச்சரை தெரியாது. சரியாக மதியம் ஒரு மணி அளவில் அந்த ஹோட்டலின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. நாங்கள் யாரோ? என நினைத்து ஒதுங்கி நின்றோம். எங்களுடன் இருந்த அந்த நபர் மெதுவாக (ஓடி எல்லாம் அல்ல) சென்று அவரிடம் கை குலுக்கினார். பிறகுதான் தெரிந்தது அவர்தான் அமைச்சர் என்று. நன்றாக கவனியுங்கள், முன்னால் போலீஸ் பைக்குகள் இல்லை, பின்னாடியும் இல்லை. முன்னாடியும், பின்னாடியும் எந்த காரும் வரவில்லை. ஒரே கார் அதில் இவர் மட்டுமே. நல்ல வேளை காரை ஓட்டி வந்தது டிரைவர். எனக்கு முதல் ஆச்சரியம் ஏற்பட்டது.

அவரை வரவேற்க டையுடன் சென்ற நான், அவரின் டிரஸ் கோடை பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டு போய் உடனே டையை கழட்டிவிட்டேன்.

பிறகு லன்ச் ஹாலில் சாப்பிட ஆரம்பித்ததும், பேச ஆரம்பித்தோம். பேசிக்கொண்டிருக்கும்போதே என் தட்டில் ஒரு வெஜிடபிள் இல்லாததை கவனித்து அவர் எடுத்து பரிமாறினார். இங்கு மதிய உணவிற்கு பிறகு காபி சாப்பிடும் பழக்கம் உண்டு. அவர் என்னுடைய கப்பில் காபி கலந்து கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. ஏதோ நீண்ட நாள் பழகியதைப்போல பேசினார். எந்த ஒரு பந்தாவும் இல்லை. தான் ஒரு பெரிய அமைச்சர் என்ற நினைப்பே இல்லாமல் பேசியதை நினைத்து நினைத்து இன்னும் அந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறேன்.

பிறகு கம்பனிக்கு வந்தோம். ஒவ்வொரு தொழிலாளியுடனும் அவர் பேசிய விதம் அனைவரையும் நெகிழச் செய்தது. அத்தனை அன்பு. அவ்வளவு அன்னியொன்யமாக பழகினார். மீண்டும் நம் அமைச்சர்கள் என் மனதில் வந்து தொலைத்தார்கள். கம்பனியை சுற்றிப் பார்த்த பிறகு மீட்டிங் ரூமுக்கு வந்தோம். அங்கே இருந்த சில உணவுப் பண்டங்களை பார்த்து விட்டு, " ஏன் அநாவசியமாக செலவு செய்கிறீர்கள். இப்போது தானே லஞ்ச் சாப்பிட்டு முடித்தோம். காபியும், தண்ணீர் மட்டும் போதும். இதை வீணாக்காமல் கேண்டினில் கொடுத்துவிடுங்கள். மற்றவர்கள் சாப்பிடட்டும். எதையும் வீணாக்க வேண்டாம்" என்று கூறி மீண்டும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அதைவிட கடைசியில் ஒன்று சொன்னார் பாருங்கள்! அதுதான் ரொம்ப முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. பொதுவாக மீட்டிங் ஹாலில் அனைவருக்கும் ஒரு மினரல் பாட்டில் வைப்பதுண்டு. மீட்டிங் முடிந்தவுடன் பார்த்தீர்களானால், சில பேர் பேருக்கு தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு போவார்கள்.

மீட்டிங் முடிந்து கிளம்பும்போது, அமைச்சர் பாதி தண்ணீர் இருந்த வாட்டர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு, என்ன சொன்னார் தெரியுமா?

" ஜெண்டில்மேன், மினரல் பாட்டிலில் உள்ள தண்ணீரை முடிந்தால் முழுவதும் குடித்துவிடுங்கள். உங்களால் முடியாத பட்சத்தில், பாதி தண்ணீர் உள்ள அந்த பாட்டிலை உங்களுடனே எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது குடியுங்கள். அதை எடுத்து செல்லாமல் இங்கேயே விட்டு விட்டு சென்றீர்களானால், நீங்கள் பாதி குடித்துவிட்டு வைத்துவிட்டு போன தண்ணீரை யாரும் குடிக்கப்போவதில்லை. அதை தூக்கி எரியத்தான் போகிறார்கள். அது யாருக்கும் பயன்படமால் வீணாகத்தான் போகும். அதனால் கையில் எடுத்து செல்லுங்கள்"

எத்தனை உண்மை பாருங்கள். அவர் சொன்னவுடன் அனைவரும் வாட்டர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டோம். நேற்றிலிருந்து அந்த நல்ல பழக்கத்தையும் கற்றுக்கொண்டேன்.

இதுபோல நம் ஊர் அமைச்சர்களும் நடந்து கொண்டால் எப்படி இருக்கும்?

நான் அதிகம் ஆசைப்படுகிறேனோ?

May 4, 2010

ஏன் இந்த வேறுபாடு?

என் நண்பன் ஒருவன். அவனுக்கு ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாது. அதிர்ந்து பேசமாட்டான். அப்பா மிக சாதாரண வேலையில் இருந்தார். கஷ்டப்பட்டு படித்தான். வங்கியில் நல்ல வேலை கிடைத்தது. எனக்கு முன்னே அவன் வேலைக்கு போனான். நல்ல சம்பளமும் கிடைத்தது. அவன் காதல் கத்திரிக்காயில் எல்லாம் மாட்டவில்லை. அவனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. அப்பா அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். திருமண நாளிலிருந்தே பிரச்சனை ஆரம்பித்தது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் வரவில்லை. அவன் அம்மாவிற்கு என்னவோ அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை. அதனால், அவனின் கல்யாண வாழ்க்கை மிகவும் பாதித்தது.

பொறுத்து பொறுத்து பார்த்து தனிக்குடித்தனம் போனான். அங்கேயும் சென்று அவன் அம்மா பிரச்சனை செய்தார்கள். இவன் யாருக்கு சப்போர்ட் செய்வது என்று குழம்பி தவித்தான். முடிவில் ஒரு நாள் பிரச்சனை முற்றி, அந்த பெண் மண் எண்ணையை தன் மேல் ஊற்றி கொளுத்திக்கொண்டாள். இவன் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு துக்கிக் கொண்டு ஓடினான். மரண வாக்குமூலத்தில் அந்த பெண் வசமாக இவன் அம்மாவையும், அப்பாவையும் மாட்டி விட்டு, தன் கணவர் நல்லவர் என்று சொல்லி இறந்து போனாள். போலீஸார் இவனிடம் "25000 ரூபாய் பணம் கொடு உன்னை விட்டுவிடுகிறேன்" என்று கூறினர். அதற்கு இவன், "நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் ஒரு பைசா தரமுடியாது" என்று கூறிவிட்டான். மரண வாக்குமூலத்தில் இவன் பெயர் இல்லாவிட்டாலும் கூட இவனை முதல் குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது போலீஸ். கேஸ் நடந்தது. மிக விரைவாக தீர்ப்பு வழங்கியது கோர்ட். நண்பன், அவன் அம்மா, அவன் அப்பாவை உடனே ஜெயிலில் தள்ளியது போலீஸ்.

**********************************

நவம்பர் 26, 2008. மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.​ இந்த சம்பவத்தில் 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்புப் படை வீரர்களுடன் 60 மணி நேரம் நடந்த சண்டையின் முடிவில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.​ அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.​ ​ சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தனது சகா இஸ்மாயிலுடன் சேர்ந்து பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி வெளியேறியபோது போலீஸார் கசாப்பைப் பிடித்தனர்.​

டிவியில் அந்த காட்சியை பார்க்கும் சிறு குழந்தை கூட, பார்த்த உடனே அவன் குற்றவாளி என்று கூறும். ஆனால், நமது நீதிமன்றமோ 17 மாதங்களுக்குப் பிறகு கசாப் குற்றவாளி என அறிவித்துள்ளது.​அவனுக்கு வழங்கப்போகும் தண்டனையைப் பற்றி பின்னர் அறிவிப்பார்களாம். என்ன கொடுமை இது?

166 பேரின் உயிர் இழப்புக்கு காரணமானவனில் முக்கியமான ஒருவன் கசாப். அவன்தான் டுயூட்டியில் இருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளை கொன்றான் என்பதற்கு நிறைய சாட்சியங்கள் உள்ளன. 35 பேர் அவன் சுட்டதை நேரில் பார்த்ததாக சாட்சி கூறியுள்ளார்கள். பிறகு ஏன் தண்டனை வழங்க இவ்வளவு தாமதம்?

குற்றவாளி என தீர்ப்பு வழங்கவே 17 மாதம் ஆகியுள்ளது. இன்னும் தண்டனையை எத்தனை மாதங்கள் கழித்து வழங்குவார்களோ? அதன் பிறகு அவன் மேல் முறையீடு செய்வான். அப்படியே கேஸ் இழுத்துக்கொண்டே போகும். நாமும் மறந்து விடுவோம்.

இந்த லட்சணத்தில் சிதம்பரத்தின் பேட்டியை பாருங்கள்:

“அஜ்மல் கசாப் முறையான ​ விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இந்த விசாரணையின் போது தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க கசாப்புக்கு சட்ட பூர்வமாக முழு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.​ ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.​

​ ​ கிரிமினல் வழக்கில் ஒவ்வொரு கட்டமாகத்தான் விசாரணை நடத்தப்படும்.​ இந்த வழக்கு மிகவும் சிக்கலான வழக்கு.​ இதில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இது எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது.​ முறையான விசாரணைக்குப் பின் கசாப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ அடுத்து அவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து அறிவிக்கப்படும்.​ அதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

​இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை இந்தத் தீர்ப்பு எடுத்துக் கூறுகிறது.​ இது பாகிஸ்தானுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கைத் தகவல்.​ இது போன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்தால்,​​ தாக்குதலில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை வழங்குவோம்.​ ​

​ கசாப் குற்றவாளி என நிரூபிக்க உறுதியான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அமைப்புகளுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".


கண்ணுக்கு முன்னால நடந்த கொலைக்கு எதற்கு சட்டபூர்வமான விசாரணை? அப்படியே தேவை என்றாலும், ஏன் இத்தனை நாட்கள் தேவை?

" ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாதுதான்". இந்த வழக்குல நிரபராதி என்ற பேச்சுக்கு இடமில்லையே? பின்ன எதற்கு இவ்வளவு விசாரணை? இவ்வளவு தாமதம்? எல்லா வழக்குகளும், இதுவும் ஒன்றா? ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவனுக்கு என்ன தண்டனை வழங்களாம் என்று இன்றிலிருந்து விவாதம் தொடங்குமாம்???
ரத்தம் கொதிக்கிறது.

**********************************

ஒன்றுமே செய்யாமல் தண்டனையை அனுபவிக்கும் என் நண்பனுக்கு ஒரு நியாயம், இவ்வளவு நபர்களை கொன்று குவித்து இந்தியாவுக்கே மிரட்டலாக விளங்கிய கசாப்புக்கு ஒரு நியாயமா? கொடுமைடா சாமி!!!!