May 17, 2010

ஒரு இனிமையான பயணம் - 2

ஏற்கனவே பாதி தூரம் கடந்துவிட்டோம். இப்போ என்ன செய்வது? சாவி வீட்டில் இருக்கும்போல. இப்போது போல அப்போது எல்லாம் கோபம் கொள்ள முடியாது. அப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பித்த சமயம். தனிப்பட்ட பயணம் என்றால் கேன்சல் செய்துவிடலாம். நான் அடுத்த நாள் மீட்டிங்கிற்கு இருந்தாக வேண்டும். என்ன செய்வது?

பிறகு யோசித்து டிரைவரிடம் ஆலோசனை கேட்டேன். அப்பொழுது எல்லாம் என்னிடம் கார் கிடையாது. வாடகை கார்தான். டிரைவர் கூறினார், " சார் நாம வேண்டுமானால் திரும்பி உங்கள் வீட்டிற்கு போய் சாவியை எடுத்து வரலாம். ஆனால் நான் காரை வேகமாக ஓட்ட வேண்டி வரும். அதற்கு நீங்கள் என்னை திட்டக்கூடாது. அப்படியே வீட்டிற்கு போய் சாவியை எடுத்து வந்தாலும் பஸ்ஸை பிடிப்போம் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது"

" பரவாயில்லை. முயற்சி செய்யலாம்" என்றேன். என்னிடம் அப்போதெல்லாம் செல்போன் இல்லாததால் டிரைவரின் போனை வாங்கி பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நண்பருக்கு போன் செய்து பஸ்ஸை கொஞ்சம் நிறுத்தி வைக்க முடியுமா? என கேட்க சொன்னேன். அவர் முயற்சி செய்கிறேன் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து போன் செய்த நண்பர் பத்து நிமிடம் மட்டுமே பஸ் வெயிட் செய்யும் என்று கூறி விட்டார்.

வேகமாக வீட்டிற்கு வந்து சாவியை எடுத்துக்கொண்டு, அதே வேகத்துடன் பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பிறகு தான் மூச்சு விட முடிந்தது. அவ்வளவு டென்ஷன் அன்று. அதன் பிறகு செக் லிஸ்ட் விசயத்தில் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க ஆரம்பித்து விட்டேன். மலாக்கா கிளம்பும் அன்றைய இரவு செக் லிஸ்டை சரிபார்த்த போது, என் பெண் 'நான் இன்று செக் லிஸ்டில் டிக் செய்கிறேன் டாடி' என்று அவள்தான் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். அன்றைக்கு விநாயகர் சதூர்த்தி. அதனால் சாமி கும்பிட்டு விட்டு கொழுக்கட்டை சாப்பிட்டு விட்டு, சூட்கேஸை எல்லாம் சரி பார்த்து விட்டு, இரவு 10 மணிக்கு தூங்க சென்றோம். ஏனென்றால், அப்போதுதான் காலை 3.30க்கு எழ முடியும். காலை 5 மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு.

சரியாக இரவு 1 மணி. யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் என் பெண். சரி, இது சாதாரண வாந்திதான் என நினைத்து படுத்து விட்டோம். பிறகு 1.30க்கு, அப்புறம் 2 மணிக்கு என்று தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டாள். இரவு சாப்பிட்ட கொழுக்கட்டை செரிக்கவில்லை போலும். சரி, காலையில் சரியாக போய்விடும் என நினைத்தேன். காலையில் 3.30க்கு எழுந்து கிளம்ப ஆரம்பித்தோம். இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை. நான்தான் காரை டிரைவ் செய்யவேண்டும். பரவாயில்லை. ஓட்டலாம் என நினைத்து கிளம்பினேன். காரில் ஏறுவதற்கு முன் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். சரி, இனி கிளம்புவது சரி அல்ல என நினைத்து, ப்ரோக்ராமை கேன்சல் செய்து விட்டேன். எல்லோருக்கும் மூட் அவுட்.

பிறகு 2009ல் மலாக்கா கிளம்பலாம் என முடிவு செய்தபோது H1N1 பிரச்சனை ஆரம்பமானது. அதுவும் மலாக்கா ஹை அலர்ட் பகுதியாக அரசாங்கம் அறிவித்தது. அதனால் 2009லும் கிளம்ப முடியவில்லை. அதன் பிறகு 6 முறை இந்தியா சென்று வந்தாயிற்று. பல முறை கோலாலம்பூர் சென்று வந்தாகிவிட்டது. சிங்கப்பூர் சென்று வந்தாகிவிட்டது. ஆனால், மலாக்கா மட்டும் செல்ல முடியாமலே இருந்தது. அதனால் இந்த முறை மலாக்கா செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நானும் கொஞ்சம் அலுவலக வேலையாக பிஸியாகவே இருந்து வந்தேன்.

திடீரென்று இரண்டு நாட்கள் லீவு கிடைக்கவே கூட இரண்டு நாட்கள் லீவு போட்டு, மலாக்காவும், மலாக்காவிற்கு அருகே இருக்கும் Afamosa Resort க்கும் செல்ல முடிவு எடுத்து ஹோட்டல் எல்லாம் புக் செய்து விட்டு என் காரில் கிளம்பினோம். இரண்டு முறை செல்ல முடியாமல் போனதால் இந்த முறை எப்படியும் செல்ல வேண்டும் என உறுதியுடன் இருந்தேன். நீங்கள் நினைக்கலாம், அப்படி என்ன இது ஒரு பெரிய விசயமா? என்று. அப்படியல்ல. ஏன் நம்மால் செல்ல முடியவில்லை என்ற குழப்பமே போயே தீர வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே சென்று வந்த நண்பர் மூலம் ரூட் எல்லாம் கேட்டு வாங்கி எழுதி வைத்துக்கொண்டேன். ஒரு வழியாக அடுத்த நாள் காலை 6 மணிக்கு கிளம்பினோம். அவர் கொடுத்த ரூட்டில் எந்த இடம் எத்தனை மணி நேரத்தில் வரும் என்பதில் தொடங்கி, எங்கே காலை உணவு சாப்பிட வேண்டும் என்பது வரை எழுதிக்கொடுத்திருந்தார். அவர் கூறிய படி 3 மணி நேர பயணத்திற்கு பிறகு அந்த சாப்பாடுக்கடையை அடைந்தோம். காலை உணவு திருப்தியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். அவர் எழுதிக் கொடுத்திருந்தபடி, குறிப்பிட்ட அந்த டவுனை அடைந்த பிறகு ஒரு இடத்தில் யூ டேர்ன் போட்டு, அந்த ஹோட்டலை அடைந்து சாப்பிட்டுவிட்டு, அந்த ஹோட்டலில் இருந்து மூன்று டிராபிக் சிக்னல் கடந்து வலது புறம் செல்ல வேண்டும்.

அதே போல் சென்றால், மலாக்கா என்ற போர்டே எங்கும் இல்லை. இரண்டு இடத்தில் கேட்டாயிற்று. ஒரு இந்திய பேக்டரி ஒன்று இருந்தது. அவர்களிடம் கேட்டால், இடதுபுறம் செல்லுங்கள், ஆனால் ரொம்ப தூரம் என்கிறார். நண்பர் ரூட்டின் படி வலது புறம் செல்ல வேண்டும். குழப்பமாகி நண்பருக்கு போன் செய்து கேட்டேன். அவரிடம் எதுவரை வந்துள்ளோம் என்பதை கூறி, அருகில் ஒரு மேம்பாலம் உள்ளது, என்றேன். அதைத் தாண்டியவுடன் வலதுபுறம் செல்லுங்கள் என்றார். அதை தாண்டியவுடன் பார்த்தால், வலதுபுறம் ரோடே இல்லை. செரம்பான் 65 கிலோ மீட்டர் என்று உள்ளது. செரம்பான் கோலாலம்பூரில் உள்ளது. ஏதோ தவறு நடந்திருப்பது தெரிந்து விட்டது. நண்பருக்கு மீண்டும் போன் செய்தேன்.

அவர்,

" யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்?'' என்றார்.

- தொடரும்

7 comments:

பத்மா said...

ஒரே சஸ்பென்ஸ் ஆக இருக்கே .நல்ல எழுதுறீங்க சார்

iniyavan said...

padma has left a new comment on your post "ஒரு இனிமையான பயணம் - 2":

ஒரே சஸ்பென்ஸ் ஆக இருக்கே .நல்ல எழுதுறீங்க சார்

iniyavan said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி பத்மா.

நேசமித்ரன் said...

அருமையான Flow Boss

iniyavan said...

//அருமையான Flow Boss//

நன்றி பாஸ்.

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப அருமையாக போகுது பயணத் தொடர்...

iniyavan said...

//ரொம்ப அருமையாக போகுது பயணத் தொடர்...//

ரொம்ப நன்றி மேடம்.