May 26, 2010

ஒரு இனிமையான பயணம் - 7

" சார், இந்த பக்கமா போகாதீங்க"

"ஏன்?''

"இது ஒரு மோசமான தெரு. இங்கே ரவுடிகள் அதிகம். உங்கள் பணம், நகைகளை பறித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். சண்டை போட்டீர்கள் என்றால், கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுவார்கள்" என்று பயமுறுத்தினார். எதுக்கு வம்பு என்று நினைத்து வந்த வழியே திரும்பி, வேறு வழியாக ஹோட்டலை சென்று அடைந்தோம். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரண்டு நாட்களாக லோக்கல் உணவு சாப்பிட்டு நொந்து போயிருந்த எங்களுக்கு, நம் நாட்டு உணவு கிடைக்கவே ஒரு வெட்டு வெட்டினோம். பிறகு ஆனந்த விகடன், குமுதம் எங்கே கிடைக்கும் என்று தேடி அலைந்து, வாங்கி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் காலை, காலை உணவினை முடித்துவிட்டு மலாக்கா Zoo சென்றோம். அன்று மே 1 ஆம் தேதியாக இருந்ததால் நல்ல கூட்டம். ஒவ்வொரு இடத்தையாக பார்த்தோம். எல்லா இடத்திலும் இருக்கும் அதே மிருகங்கள் தான். அங்கேயும் Bird Show, Elephant show பார்த்தோம். ஆனால், இங்கு எல்லா நிகழ்ச்சியுமே மலாய் மொழியில் நடத்துகிறார்கள். எங்களுக்கு மொழி புரியாததால் எங்களால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. Zooவிலேயே அரை நாள் ஓடிவிட்டது.

பிறகு அருகில் இருந்த மெக்டனால்ஸில் மதிய உணவை முடித்துவிட்டு Crocodile Park சென்றோம். எங்கு பார்த்தாலும் விதவிதமான முதலைகள். பிள்ளைகள் நிறைய சந்தோசம் அடைந்தார்கள். நான் பல இடங்களில் பார்த்து இருந்தாலும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியினை பற்றி குறிப்பிட நினைக்கிறேன். என்னவென்றால் ஒரு முதலையையும், ஒரு பாம்பையும் வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். என்னால் இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. அந்த அளவிற்கு மிகவும் திரில்லிங்காக இருந்தது.

முதலில் ஒருவர் ஒரு சாக்கு மூட்டையை தூக்கி வந்தார். நாங்கள் என்னவென்று ஆச்சர்யமாக பார்த்தோம். மூட்டையை திறந்தால் ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு. நல்ல நீளமும் அகலமும் கொண்டது. அதை மேடையில் விட்டார். மிக மெதுவாக அதன் அருகில் சென்று அதன் வாயை மிக இருக்கமாக பிடித்தார். பிறகு அந்த பாம்பை தன் உடலில் சுற்றிக்கொண்டார். அப்படியே அசையாமல் அதன் வாயை பிடித்துக்கொண்டே நின்றார். சிறிது நேரத்தில் பார்த்தால், அந்த பாம்பு அப்படியே அவரை இருக்குகிறது. சிறிது மூச்சு விட முடியாமல் திணருகிறார். அப்படியே சில நிமிடங்கள் நான் ஆடி போய் விட்டேன். பிறகு மற்றவர்களின் துணையுடன் அந்த பாம்பை அவரிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தார்கள். பிறகு அந்த பாம்பை அதே சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வைத்தார்கள். ஏன் இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என தெரியவில்லை.

அதைவிட பயங்கரமானது முதலையை வைத்து செய்த ஒரு செயல். மிகப்பெரிய முதலை அங்கே உள்ள சிறிய தண்ணீரில் இருந்தது. ஒருவர் மிக மெதுவாக அதன் அருகே சென்றார். அப்படியே மிக மெதுவாக அதன் வாலை பிடித்தார். அது திமிறியது. அது திமிர திமிர அப்படியே அதை மேடையை நோக்கி இழுத்து வந்தார். பிறகு ஒரு குச்சியால் அதன் வாயை தொட்டார். அது மெல்ல வாயை திறந்தது. சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு மெதுவாக அதன் அருகே போய் தன் ஒரு கையை அதன் வாயின் உள்ளே செலுத்தி மிக கவனமாக வெளியே எடுத்தார். அதன் பல்லின் மீதோ, இல்லை வாயின் மீதோ அவர் கை பட்டிருந்தால் அவ்வளவுதான். அவர் காலி. பின்பு அவர் செய்த ஒரு காரியம் தான் என்னை மிகவும் பயப்பட வைத்தது.

அங்கே உள்ளவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கினார். நான் கூட அவருக்குத்தான் கேட்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த பணத்தை வைத்து என்ன செய்தார் தெரியுமா? அந்த பணத்தை அப்படியே சுருட்டினார். சுருட்டிய பணத்தை கையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்தார். அப்படியே மிக மெதுவாக படுத்தபடியே உடம்பை நகர்த்தி நகர்த்தி முதலையின் அருகே சென்றார். அப்படியே சிறுது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், அந்த பணத்தை முதலையின் வாயில் வைத்தார். பின்பு நகர்ந்து கொஞ்ச தூரம் சென்றார். முதலை திறந்த வாயை மூடவே இல்லை. பின்பு மீண்டு நகர்ந்து சென்று அதன் வாயிலிருந்து அப்படியே மிக மெதுவாக பணத்தை எடுத்தார். பிறகு படுத்தபடியே நகர்ந்து சென்று எழுந்தார். என்னால் இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏன் உயிரை பணயம் வைத்து இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

பின்பு சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு, ButterFly Garden நோக்கி சென்றோம். வழித் தெரியாமல் இரண்டு மூன்று ரவுண்டு சுற்றி அங்கே போவதற்குள் மாலை ஆனது. பட்டர்ப்ளை அதைகம் இல்லாத ButterFly Garden அங்கேதான் பார்த்தேன். ஆனால், அங்கே நிறைய பாம்பு வகைகள் வைத்து இருக்கிறார்கள். கல்ர் கலரான, வித விதமான பாம்புகள். சில அழகாக இருந்தது, சில அருவெறுப்பாக இருந்தது. அங்கே சில மணி நேரம் செலவழித்துவிட்டு, மீண்டும் 40 நிமிட கார் பயணத்திற்கு பிறகு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 8.30 வரை ரெஸ்ட் எடுத்து விட்டு, வேறு எங்காவது செல்லலாம் என நினைத்தால் ஒரே டிராபிக். அதனால் முடிவை மாற்றிக்கொண்டு, நடந்து சென்று சாப்பிட்டு விட்டு, ஹோட்டலுக்கு வந்தோம்.

அடுத்த நாள் காலை சாப்பிட்டு முடித்தவுடன், என் நண்பருக்கு போன் செய்து கேட்டேன், " இன்னும் ஏதாவது பார்க்க வேண்டிய இடம் உள்ளதா?" என்று. அவர் கூறினார், " சார் நீங்க மேக்ஸிமம் எல்லாம் பார்த்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸ் இருக்கு. அது உங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்குமா என தெரியவில்லை?" என்றார். பிள்ளைகளை கேட்டேன், " போதும் டாடி, நாளை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கிறார்கள். நாம் இரவிற்குள் நம் வீட்டிற்கு சென்று விடலாமே?" என்றனர். எனக்கும் நல்ல யோசனையாக படவே, காலை 10.20 க்கு மலாக்காவை விட்டு கிளம்பினோம். இரண்டு மணி நேர கார் பயணத்திற்கு பிறகு செகாமட் என்ற இடம் வந்து சேர்ந்தோம்.

அங்கே செல்வம் ரெஸ்டாரண்ட் என்று ஒரு கடை உள்ளது. போகும் போது அங்குதான் டிபன் சாப்பிட்டோம். அதே இடத்தில் மதிய உணவிற்காக காரை நிறுத்தினேன். நம்ப மாட்டீர்கள். சின்னக்கடைதான். ஆனால், 9 விதமான காய்கறிகள், 3 விதமான சிக்கன், இரண்டுவிதமான மீன் வகைகள், சாதம், பிரியாணி, சாம்பார், ரசம், மீன் குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் சிக்கன் குழம்பு. திடீரென இவ்வளவு நம்ம ஊர் சாப்பாட்டு வகைகளை பார்த்ததும் தலை கால் புரியவில்லை. வேண்டியதை நன்றாக சாப்பிட்டு விட்டு, துக்க கலக்கத்தில் பயணத்தை தொடர்ந்தோம். மீண்டும் 3 மணி நேர கார் பயணத்திற்கு பிறகு சரியாக மாலை 6 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த நான்கு நாட்களும், எந்த விதமான அலுவலக கவலை இல்லாமல், குடுமப்த்துடன் செலவிட்டது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது. நீங்களும் சமயம் கிடைக்கும்போது, அலுவல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்காவது டூர் செல்லுங்கள். அப்போதுதான் நான் சொல்லும் உண்மைகள் உங்களுக்கு விளங்கும்.

பின் குறிப்பு:

ஏற்கனவே சொன்னதுப்போல பயணத்தின் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். அதனால் தான் இவ்வாறு எழுதினேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.

7 comments:

Romeoboy said...

ஒரு பயணம் முடிவுற்றது... தல இந்த ஏழு பார்ட்டும் அருமையா இருக்கு.

Kumar said...

Nice one!.

பாலாஜி சங்கர் said...

பயணம் நல்லபடியாக முடித்தது

iniyavan said...

//ஒரு பயணம் முடிவுற்றது... தல இந்த ஏழு பார்ட்டும் அருமையா இருக்கு.//

நன்றி ரோமியோ.

iniyavan said...

Nice one!.

நன்றி குமார்.

iniyavan said...

//பயணம் நல்லபடியாக முடித்தது//

வருகைக்கு நன்றி பாலாஜி.

Anonymous said...

Enna sir ivalavu sikeerama mudichitinga. Neengal senra places nerial parka mudiyavitalum ungal katturai via partha thirupthi. Thanks sir. Aduthathu eppo????????