May 4, 2010

ஏன் இந்த வேறுபாடு?

என் நண்பன் ஒருவன். அவனுக்கு ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாது. அதிர்ந்து பேசமாட்டான். அப்பா மிக சாதாரண வேலையில் இருந்தார். கஷ்டப்பட்டு படித்தான். வங்கியில் நல்ல வேலை கிடைத்தது. எனக்கு முன்னே அவன் வேலைக்கு போனான். நல்ல சம்பளமும் கிடைத்தது. அவன் காதல் கத்திரிக்காயில் எல்லாம் மாட்டவில்லை. அவனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. அப்பா அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். திருமண நாளிலிருந்தே பிரச்சனை ஆரம்பித்தது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் வரவில்லை. அவன் அம்மாவிற்கு என்னவோ அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை. அதனால், அவனின் கல்யாண வாழ்க்கை மிகவும் பாதித்தது.

பொறுத்து பொறுத்து பார்த்து தனிக்குடித்தனம் போனான். அங்கேயும் சென்று அவன் அம்மா பிரச்சனை செய்தார்கள். இவன் யாருக்கு சப்போர்ட் செய்வது என்று குழம்பி தவித்தான். முடிவில் ஒரு நாள் பிரச்சனை முற்றி, அந்த பெண் மண் எண்ணையை தன் மேல் ஊற்றி கொளுத்திக்கொண்டாள். இவன் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு துக்கிக் கொண்டு ஓடினான். மரண வாக்குமூலத்தில் அந்த பெண் வசமாக இவன் அம்மாவையும், அப்பாவையும் மாட்டி விட்டு, தன் கணவர் நல்லவர் என்று சொல்லி இறந்து போனாள். போலீஸார் இவனிடம் "25000 ரூபாய் பணம் கொடு உன்னை விட்டுவிடுகிறேன்" என்று கூறினர். அதற்கு இவன், "நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் ஒரு பைசா தரமுடியாது" என்று கூறிவிட்டான். மரண வாக்குமூலத்தில் இவன் பெயர் இல்லாவிட்டாலும் கூட இவனை முதல் குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது போலீஸ். கேஸ் நடந்தது. மிக விரைவாக தீர்ப்பு வழங்கியது கோர்ட். நண்பன், அவன் அம்மா, அவன் அப்பாவை உடனே ஜெயிலில் தள்ளியது போலீஸ்.

**********************************

நவம்பர் 26, 2008. மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.​ இந்த சம்பவத்தில் 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்புப் படை வீரர்களுடன் 60 மணி நேரம் நடந்த சண்டையின் முடிவில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.​ அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.​ ​ சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தனது சகா இஸ்மாயிலுடன் சேர்ந்து பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி வெளியேறியபோது போலீஸார் கசாப்பைப் பிடித்தனர்.​

டிவியில் அந்த காட்சியை பார்க்கும் சிறு குழந்தை கூட, பார்த்த உடனே அவன் குற்றவாளி என்று கூறும். ஆனால், நமது நீதிமன்றமோ 17 மாதங்களுக்குப் பிறகு கசாப் குற்றவாளி என அறிவித்துள்ளது.​அவனுக்கு வழங்கப்போகும் தண்டனையைப் பற்றி பின்னர் அறிவிப்பார்களாம். என்ன கொடுமை இது?

166 பேரின் உயிர் இழப்புக்கு காரணமானவனில் முக்கியமான ஒருவன் கசாப். அவன்தான் டுயூட்டியில் இருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளை கொன்றான் என்பதற்கு நிறைய சாட்சியங்கள் உள்ளன. 35 பேர் அவன் சுட்டதை நேரில் பார்த்ததாக சாட்சி கூறியுள்ளார்கள். பிறகு ஏன் தண்டனை வழங்க இவ்வளவு தாமதம்?

குற்றவாளி என தீர்ப்பு வழங்கவே 17 மாதம் ஆகியுள்ளது. இன்னும் தண்டனையை எத்தனை மாதங்கள் கழித்து வழங்குவார்களோ? அதன் பிறகு அவன் மேல் முறையீடு செய்வான். அப்படியே கேஸ் இழுத்துக்கொண்டே போகும். நாமும் மறந்து விடுவோம்.

இந்த லட்சணத்தில் சிதம்பரத்தின் பேட்டியை பாருங்கள்:

“அஜ்மல் கசாப் முறையான ​ விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இந்த விசாரணையின் போது தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க கசாப்புக்கு சட்ட பூர்வமாக முழு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.​ ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.​

​ ​ கிரிமினல் வழக்கில் ஒவ்வொரு கட்டமாகத்தான் விசாரணை நடத்தப்படும்.​ இந்த வழக்கு மிகவும் சிக்கலான வழக்கு.​ இதில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இது எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது.​ முறையான விசாரணைக்குப் பின் கசாப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ அடுத்து அவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து அறிவிக்கப்படும்.​ அதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

​இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை இந்தத் தீர்ப்பு எடுத்துக் கூறுகிறது.​ இது பாகிஸ்தானுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கைத் தகவல்.​ இது போன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்தால்,​​ தாக்குதலில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை வழங்குவோம்.​ ​

​ கசாப் குற்றவாளி என நிரூபிக்க உறுதியான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அமைப்புகளுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".


கண்ணுக்கு முன்னால நடந்த கொலைக்கு எதற்கு சட்டபூர்வமான விசாரணை? அப்படியே தேவை என்றாலும், ஏன் இத்தனை நாட்கள் தேவை?

" ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாதுதான்". இந்த வழக்குல நிரபராதி என்ற பேச்சுக்கு இடமில்லையே? பின்ன எதற்கு இவ்வளவு விசாரணை? இவ்வளவு தாமதம்? எல்லா வழக்குகளும், இதுவும் ஒன்றா? ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவனுக்கு என்ன தண்டனை வழங்களாம் என்று இன்றிலிருந்து விவாதம் தொடங்குமாம்???
ரத்தம் கொதிக்கிறது.

**********************************

ஒன்றுமே செய்யாமல் தண்டனையை அனுபவிக்கும் என் நண்பனுக்கு ஒரு நியாயம், இவ்வளவு நபர்களை கொன்று குவித்து இந்தியாவுக்கே மிரட்டலாக விளங்கிய கசாப்புக்கு ஒரு நியாயமா? கொடுமைடா சாமி!!!!

4 comments:

வரதராஜலு .பூ said...

//ஒன்றுமே செய்யாமல் தண்டனையை அனுபவிக்கும் என் நண்பனுக்கு ஒரு நியாயம், இவ்வளவு நபர்களை கொன்று குவித்து இந்தியாவுக்கே மிரட்டலாக விளங்கிய கசாப்புக்கு ஒரு நியாயமா? //

இதற்கு பெயர்தான் ஜனநாயகம். உங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள்.

CS. Mohan Kumar said...

முதல் சம்பவம் மிக வருந்த வைக்கிறது. நம் நாடு இந்த லட்சணத்தில் தான் உள்ளது

iniyavan said...

//இதற்கு பெயர்தான் ஜனநாயகம். உங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள்.//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வரதராஜுலு.

iniyavan said...

//முதல் சம்பவம் மிக வருந்த வைக்கிறது. நம் நாடு இந்த லட்சணத்தில் தான் உள்ளது//

வருகைக்கு நன்றி மோகன்.