May 7, 2010

ஆச்சர்யம் அடைந்தேன்!(அமைச்சரும், நானும்)

ஒரு முறை நம் ஊர் அமைச்சர் ஒருவரை பார்ப்பதற்காக அவர் தங்கியிருக்கும் பங்களாவிற்கு சென்று வந்த என் நண்பன் என்னிடம் இவ்வாறு கூறினான்:

" என்னடா இது. இந்த ஆள் இப்படி திட்டறான். மரியாதையே இல்லாம பேசறான். நான் பயந்துட்டு பார்க்காமலே வந்து விட்டேன்"

நம் ஊரில் ஒரு அமைச்சர் வருகிறார் என்றால், முன்னாடி ஒரு 10 கார், பின்னாடி ஒரு 10 கார் வரும். போலீஸ் பைக் வேறு முன்னால் செல்லும். அவ்வளவு கெடுபிடி இருக்கும். சாதரணமாக கட்சி தொண்டர்களைத் தவிர அவரை சந்தித்து பேசுவது அவ்வளவு கஷ்டம்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதை ஏன் இப்போது நான் கூறுகிறேன் என்றால் நேற்று எனக்கு ஏற்பட்ட ஒரு ஆனந்த அனுபவம்தான் காரணம்.

நேற்று எங்கள் கம்பனிக்கு எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு அமைச்சர் கம்பனியை பார்வையிட வந்தார். அதற்கு முன்பு அவருடன் ஒரு லன்ச் மீட்டிங், பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தோம். லன்ச் முடிந்தவுடன் கம்பனிக்கு வருவதாக ஏற்பாடு. நாங்கள் சென்று அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தோம். சம்பந்தமில்லாமல் நம் ஊரின் அமைச்சர்கள் பற்றிய நினைவு என் மனதிற்குள் வந்து வந்து சென்றது.

எங்களுடன் இருந்த ஒருவர் ஏற்கனவே அமைச்சரை பற்றி தெரிந்து வைத்திருந்தார். அதனால் தப்பித்தோம். ஏனென்றால் எங்களுக்கு அமைச்சரை தெரியாது. சரியாக மதியம் ஒரு மணி அளவில் அந்த ஹோட்டலின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. நாங்கள் யாரோ? என நினைத்து ஒதுங்கி நின்றோம். எங்களுடன் இருந்த அந்த நபர் மெதுவாக (ஓடி எல்லாம் அல்ல) சென்று அவரிடம் கை குலுக்கினார். பிறகுதான் தெரிந்தது அவர்தான் அமைச்சர் என்று. நன்றாக கவனியுங்கள், முன்னால் போலீஸ் பைக்குகள் இல்லை, பின்னாடியும் இல்லை. முன்னாடியும், பின்னாடியும் எந்த காரும் வரவில்லை. ஒரே கார் அதில் இவர் மட்டுமே. நல்ல வேளை காரை ஓட்டி வந்தது டிரைவர். எனக்கு முதல் ஆச்சரியம் ஏற்பட்டது.

அவரை வரவேற்க டையுடன் சென்ற நான், அவரின் டிரஸ் கோடை பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டு போய் உடனே டையை கழட்டிவிட்டேன்.

பிறகு லன்ச் ஹாலில் சாப்பிட ஆரம்பித்ததும், பேச ஆரம்பித்தோம். பேசிக்கொண்டிருக்கும்போதே என் தட்டில் ஒரு வெஜிடபிள் இல்லாததை கவனித்து அவர் எடுத்து பரிமாறினார். இங்கு மதிய உணவிற்கு பிறகு காபி சாப்பிடும் பழக்கம் உண்டு. அவர் என்னுடைய கப்பில் காபி கலந்து கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. ஏதோ நீண்ட நாள் பழகியதைப்போல பேசினார். எந்த ஒரு பந்தாவும் இல்லை. தான் ஒரு பெரிய அமைச்சர் என்ற நினைப்பே இல்லாமல் பேசியதை நினைத்து நினைத்து இன்னும் அந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறேன்.

பிறகு கம்பனிக்கு வந்தோம். ஒவ்வொரு தொழிலாளியுடனும் அவர் பேசிய விதம் அனைவரையும் நெகிழச் செய்தது. அத்தனை அன்பு. அவ்வளவு அன்னியொன்யமாக பழகினார். மீண்டும் நம் அமைச்சர்கள் என் மனதில் வந்து தொலைத்தார்கள். கம்பனியை சுற்றிப் பார்த்த பிறகு மீட்டிங் ரூமுக்கு வந்தோம். அங்கே இருந்த சில உணவுப் பண்டங்களை பார்த்து விட்டு, " ஏன் அநாவசியமாக செலவு செய்கிறீர்கள். இப்போது தானே லஞ்ச் சாப்பிட்டு முடித்தோம். காபியும், தண்ணீர் மட்டும் போதும். இதை வீணாக்காமல் கேண்டினில் கொடுத்துவிடுங்கள். மற்றவர்கள் சாப்பிடட்டும். எதையும் வீணாக்க வேண்டாம்" என்று கூறி மீண்டும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அதைவிட கடைசியில் ஒன்று சொன்னார் பாருங்கள்! அதுதான் ரொம்ப முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. பொதுவாக மீட்டிங் ஹாலில் அனைவருக்கும் ஒரு மினரல் பாட்டில் வைப்பதுண்டு. மீட்டிங் முடிந்தவுடன் பார்த்தீர்களானால், சில பேர் பேருக்கு தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு போவார்கள்.

மீட்டிங் முடிந்து கிளம்பும்போது, அமைச்சர் பாதி தண்ணீர் இருந்த வாட்டர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு, என்ன சொன்னார் தெரியுமா?

" ஜெண்டில்மேன், மினரல் பாட்டிலில் உள்ள தண்ணீரை முடிந்தால் முழுவதும் குடித்துவிடுங்கள். உங்களால் முடியாத பட்சத்தில், பாதி தண்ணீர் உள்ள அந்த பாட்டிலை உங்களுடனே எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது குடியுங்கள். அதை எடுத்து செல்லாமல் இங்கேயே விட்டு விட்டு சென்றீர்களானால், நீங்கள் பாதி குடித்துவிட்டு வைத்துவிட்டு போன தண்ணீரை யாரும் குடிக்கப்போவதில்லை. அதை தூக்கி எரியத்தான் போகிறார்கள். அது யாருக்கும் பயன்படமால் வீணாகத்தான் போகும். அதனால் கையில் எடுத்து செல்லுங்கள்"

எத்தனை உண்மை பாருங்கள். அவர் சொன்னவுடன் அனைவரும் வாட்டர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டோம். நேற்றிலிருந்து அந்த நல்ல பழக்கத்தையும் கற்றுக்கொண்டேன்.

இதுபோல நம் ஊர் அமைச்சர்களும் நடந்து கொண்டால் எப்படி இருக்கும்?

நான் அதிகம் ஆசைப்படுகிறேனோ?

15 comments:

Venkatesh said...

//நான் அதிகம் ஆசைப்படுகிறேனோ?//

:)

anujanya said...

இவ்வளவு எளிமை எவ்வளவு இனிமை! கனிம நீர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான். (என்ன! நம்ம ஊரில் 'அல்பம்' என்பார்கள்!).

Good post Ulags.

அனுஜன்யா

Beski said...

தண்ணீர் பற்றிய தகவல் மிகவும் தேவையான ஒன்று.

நாங்க கூட மிச்சமிருந்தா கைலயே எடுத்துட்டுப் போயிருவோம்.

CS. Mohan Kumar said...

அமைச்சர் பேரே சொல்லலயே நண்பா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மிக வித்தியாசமான அனுபவம்தான்..
சிங்கையில் பிரதமரேயே அவ்வப்போது நடைபெறும் வட்டார வருகையின் போது சந்தித்துப் பேசலாம்,நமது வீட்டு வட்டாரங்களுக்கு வருகை அளித்து விசாரிப்பார்கள்..

மேலும் தண்ணீர் விதயம் சிங்கை நிறுவனங்களில் சாதாரணமாகக் காணக்கிடைப்பதுதான்,தண்ணீரை வீணாக்குவதை எவரும் அனுமத்திப்பதில்லை.

இந்தியாவில்...!?

iniyavan said...

//நான் அதிகம் ஆசைப்படுகிறேனோ?//

:)//

தங்கள் வருகைக்கு நன்றி வெங்கடேஷ்.

iniyavan said...

//Good post Ulags.

அனுஜன்யா//

நன்றி சார். நீங்கள் என் கட்டுரைகளை படிப்பதை நினைக்கும்போது மிகுந்த சந்தோசம் வருகிறது சார்.

iniyavan said...

//தண்ணீர் பற்றிய தகவல் மிகவும் தேவையான ஒன்று.

நாங்க கூட மிச்சமிருந்தா கைலயே எடுத்துட்டுப் போயிருவோம்.//

என்ன நண்பா ஆளையே காணோம்.

iniyavan said...

வருகைக்கு நன்றி மோகன்.

iniyavan said...

//மேலும் தண்ணீர் விதயம் சிங்கை நிறுவனங்களில் சாதாரணமாகக் காணக்கிடைப்பதுதான்,தண்ணீரை வீணாக்குவதை எவரும் அனுமத்திப்பதில்லை.//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி அறிவன்.

தேவன் மாயம் said...

அமைச்சரின் தண்ணீர்- விழிப்புணர்வு அருமை! 80% தண்ணீர் பாட்டிலும் தூக்கி எறியப்பட்டு சுற்றுச்சூழலை பாதிக்கிறதாம்!!

Beski said...

//என்ன நண்பா ஆளையே காணோம்.//

அலுவலக வேலைகள் மற்றும் சொந்த வேலைகள் அதிகமாக இருப்பதால் எழுத முடிவதில்லை. படிப்பதும் குறைவே... நேரம் கிடைக்கும்போது மட்டும் வாசிக்கிறேன்.

iniyavan said...

//அமைச்சரின் தண்ணீர்- விழிப்புணர்வு அருமை! 80% தண்ணீர் பாட்டிலும் தூக்கி எறியப்பட்டு சுற்றுச்சூழலை பாதிக்கிறதாம்!!
//

வருகைக்கு நன்றி டாக்டர்.

iniyavan said...

//அமைச்சர் பேரே சொல்லலயே நண்பா//

Mohan,

His name is " TOH CHIN YAW" - Industry Minister, Terengganu State, Malaysia

யாசவி said...

உங்களுக்கே இது பேராசையாக தெரியவில்லை?

இந்தியாவில் இப்படி எதிர்பார்ப்பது அவர்களை அவமானப்படுத்துவது போல

:)

அமைச்சர்களுடைய அடிப்பொடிகளே இப்படி இருக்கமாட்டார்கள் :)