May 27, 2010

மனதை உலுக்கிய ஒரு சம்பவம்???

ஒரு வாரமாக மனதில் அடக்கி வைத்திருந்த ஒரு விசயம். இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து ஏறக்குறைய 18 வருடங்கள் முடியப்போகிறது. என்னைப்பார்ப்பவர்கள் எல்லோருமே, "எப்படி உன்னால் ஒரே கம்பனியில் இவ்வளவு வருடங்களாக இருக்க முடிகிறது? வெளியில் போனால் இன்னும் பெரிய இடத்தை அடைய முடியுமே?" என்று கேட்பதுண்டு. இது உண்மையாக இருக்கலாம். ஆனால், நான் 1992லிருந்து இன்று வரை எந்த கம்பனிக்கும் வேலைக்காக அணுகியது இல்லை. காரணம், என் MDதான். என்னை தேர்வு செய்தது என் MD திரு ஆர். பார்த்தசாரதி. அவரை நாங்கள் RPS என்று அழைப்போம். என்னை செதுக்கிய சிற்பி அவர். நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். என் நிறுவனத்தை நான் ஒரு கோவிலாகத்தான் பார்க்கிறேன். இது கொஞ்சம் மிகையாக தெரியும். ஆனால் உண்மை அதுதான். என் இன்னொரு MD திரு S. Sridhar அவரும் என்மேல் அதிகம் அன்பு செலுத்துபவர். நான் எங்கள் MDக்களின் குடும்ப உறுப்பினர் அனைவருடனும் வேலை பார்த்திருக்கிறேன்.

எல்லோருமே என் மேல் அதிகம் அன்பு கொண்டவர்கள். ஒரு குடும்ப உறுப்பினர் போல்தான் என்னை நடத்துகிறார்கள். நான் நிறுவனத்தில் சேரும் போதே ஒரு ஆபிஸர் அளவில்தான் சேர்ந்தேன். பிறகு படிப்படியாக முன்னேறினேன். என்னதான் ஓரளவு பெரிய போஸ்டில் இருந்தாலும், என் இலக்கு வேறு. நான் அடைய நினைத்த உயரத்தை இன்னும் அடையாமல் இருப்பதாகவே நினைக்கிறேன். நண்பர்கள் கேட்பதுண்டு, " அவர்களாக வேலையில் இருந்து துரத்தினால்தான் வேறு வேலைக்கு போவியா?" என்று. உண்மையாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை நான் பணத்திற்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை. அதே சமயம் எனக்கு சேர வேண்டிய பணம் சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். பணம் மட்டுமா? வாழ்க்கை. இல்லை, செய்யும் தொழிலில் ஒரு சந்தோசம் கிடைக்க வேண்டும். அது எனக்கு என் நிறுவனத்தில் கிடைக்கிறது. அதனால், நான் வெளியில் செல்ல முயற்சிக்க வில்லை.

இப்போது இதை ஏன் இங்கு சொல்கிறேன். காரணம் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

சென்ற வருடத்தில் ஒரு நாள். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனத்தின் பாம்பே கிளையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த நிறுவனத்தின் முதலாளி உலக பணக்காரர்களில் ஒருவர். என் பயோடேட்டாவை எப்படியோ பெற்று என்னை தொலைபேசியில் நேர்காணல் நடத்தினார் அந்த நிறுவனத்தின் HR Manager. நான் கேட்காமலே என்னை தேர்வு செய்து விட்டதாகவும், நான் தான் கோலாலம்பூரின் அவர்கள் கிளையின் CFO ஆகவும் ஆகப் போவதாகவும் தெரிவித்தார். அவர்கள் எனக்கு தர இருப்பதாக சொன்ன சம்பளம், நான் தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு அதிகம். ஜென்மத்திற்கு அவ்வளவு சம்பளம் என்னால் எங்கள் கம்பனியில் வாங்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்கள் கொடுத்த மற்ற Benefits எல்லாம் மிக அதிகம். அவர்கள் கொடுப்பதாக சொன்ன ஆடம்பர சொகுசு அப்பார்மெண்ட் மிகப் பெரியது. பிள்ளைகளுக்கு இண்டர்நேஷனல் பள்ளியில் இலவச படிப்பு. இந்தியாவுக்கு இரண்டு முறை குடும்பத்துடன் செல்ல டிக்கட். இன்னும் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனாலும், நான் ஒப்புக்கொள்ளவில்லை.

காரணம், அப்போதுதான் எங்கள் கம்பனியில் ஒரு மிகப்பெரிய புராஜக்ட்டை எடுத்து இருந்தேன். அதை விட்டு போக எனக்கு மனமில்லை. நான் எதிர்பார்க்காமலே வாய்ப்பு வந்ததால், என்னால் அந்த ஷாக்கை உடனே எதிர்கொள்ள முடியவில்லை. யாராக இருந்தாலும் நன்றாக செட்டிலாகிவிட்ட ஒரு நிலையில், எதிர்பார்க்காமல் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடி முடிவு எடுப்பது என்பது ரொம்ப கஷ்டம். அதுவும் இல்லாமல் என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட என் கம்பனி ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கும் போது, கம்பனியை நட்டாற்றில் விட்டு விட்டு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. அதனால், முடிவை சொல்லாமல் இருந்தேன்.

தெரிந்த நண்பர்கள் எல்லோருமே, " நீ என்ன பைத்தியமா? யாராவது இப்படி இருப்பார்களா?" என்றார்கள். உண்மையில் இந்த விசயத்தில் பைத்தியமாகிப்போனேன். என்னை கேட்டு பார்த்து, மெயில் எல்லாம் அனுப்பியும் நான் சரியான முடிவு சொல்லாததால், அவர்கள் என்னிடம் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார்கள்.

ரொம்ப நாட்கள் காத்திருந்து போன மாதம், மும்பையிலிருந்து ஒருவருக்கு அதே வேலையை கொடுத்தார்கள். அவரும், அவர் மனைவியும், இரண்டு வயது குழந்தையும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மலேசியா வந்து சேர்ந்தார்கள். எனக்கு கொடுப்பதாக சொன்ன அந்த மிகப்பெரிய அப்பார்ட்மெண்டில் தங்கினர். அவருக்கு வயது 34, மனைவிக்கு வயது 29. அவர்கள் இருந்த அப்பர்ட்மெண்டில் இன்னும் நிறைய தளங்கள் காலியாக உள்ளன. இவர்கள் இருந்த 14வது மாடியில் இருக்கும் 5 ப்ளாட்டில் இவர்கள் ப்ளாட்டை தவிர மீதி நான்கும் காலியாகவே இருந்திருக்கிறது.

ஒரு மாதத்தில் என்ன ஆனது தெரியவில்லை. சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை. கணவரும், மனைவியும் சேர்ந்து, விஷம் கொடுத்து தங்களது இரண்டு வயது பையனை கொன்று விட்டு, அவன் சாகும்வரை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, செத்ததும் அவனை நன்றாக வெள்ளைத்துணியில் மூடி கட்டி வைத்து விட்டு, காது மூக்கு எல்லாம் பஞ்சை வைத்து அடைத்து விட்டு, பொறுமையாக இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். பின்பு பொறுமையாக 14வது மாடியில் இருந்து 25வது மாடிக்கு சென்று, அங்கே இருந்து கீழே குதித்து இறந்து விட்டார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. ஏன் இந்த கொடூர முடிவு? அந்த 2 வயது குழந்தை என்ன பாவம் செய்தான்?

இந்த விசயத்தை கேள்விபட்ட நான், சென்ற வெள்ளிக்கிழமை முழுவதும் ஒரு வித பதட்டத்துடனே இருந்தேன். என்னால் அவர்கள் சாவை ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ எனக்கே ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வு.

ஒரு பஸ்ஸில் போக டிக்கட் புக் செய்து வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் ஏதோ ஒரு காரணமாக நம்மால் அந்த பஸ்ஸில் செல்ல முடியவில்லை. அந்த பஸ் விபத்துக்குள்ளாகி, அனைவரும் இறந்துவிட்ட செய்தி வந்தால் எப்படி இருக்கும்????

அந்த மன நிலையில் நான்....

20 comments:

CS. Mohan Kumar said...

தங்கள் வழியை உணர முடிகிறது உலக்ஸ். அவருக்கு இருந்தது personal problem ஆக கூட இருக்கலாம்; Time will heal your wound...

துளசி கோபால் said...

படிக்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு:(

என்னதான் ப்ரச்சனை என்றாலும் நின்னு ஜெயிக்க முடியுமே.....

பாவம்.

உங்கள் வலி புரிகிறது:(

J.P Josephine Baba said...

Dear Ulaganathan
You are fortunate to have such a employer. But in reality private employees treated by their owners as mere slaves. They gave wonderful promises but never fulfill. We never ask because of our dignity . They treate the human being as premises in their concern . It is my own experience. My husband working last 10 yeare under various private company.
He once find a good M.D, but his colleque compell him to out of company. It is a greate stuggle to having in pvt companies.

நர்சிம் said...

;(

Kumar said...

படிக்கவே கஷ்டமா இருக்கு உலக்ஸ்.நாம் பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டும். இது போன்ற முடிவுகள் வரவேற்கத்தக்கது அல்ல.

மணிஜி said...

உலக்ஸ் நீங்கள் கொஞ்சம் வித்தியாசமான ஆளுதான்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அவர்கள் அதை நிறுவனத்தின் வேலைக்குத்தான் வந்தார்கள் என்று எப்படி உறுதிப்படுத்தினீர்கள்?

iniyavan said...

//தங்கள் வழியை உணர முடிகிறது உலக்ஸ். அவருக்கு இருந்தது personal problem ஆக கூட இருக்கலாம்; Time will heal your wound...//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மோகன்.

iniyavan said...

//படிக்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு:(//

வருகைக்கு நன்றி மேடம்.

iniyavan said...

//You are fortunate to have such a employer. But in reality private employees treated by their owners as mere slaves//

நீங்கள் சொலவ்து உண்மைதான் மேடம். ஆனால் நான் அதிர்ஷ்டசாலி. வருகைக்கு நன்றி.

iniyavan said...

;(

வருகைக்கு நன்றி நர்சிம். ஆனால் உண்மையிலேயே இந்த சிமபலுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது.

iniyavan said...

//படிக்கவே கஷ்டமா இருக்கு உலக்ஸ்.நாம் பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டும். இது போன்ற முடிவுகள் வரவேற்கத்தக்கது அல்ல.//

நீங்கள் சொல்வது சரிதான் குமார்.

iniyavan said...

//உலக்ஸ் நீங்கள் கொஞ்சம் வித்தியாசமான ஆளுதான்//

தலைவரே, ஏன் இப்படி சொல்லறீங்க!

iniyavan said...

//அவர்கள் அதை நிறுவனத்தின் வேலைக்குத்தான் வந்தார்கள் என்று எப்படி உறுதிப்படுத்தினீர்கள்?//

மலேசியா மிகச்சிறிய நாடு. அனைத்து விசயங்களும் அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்துவிடும்.

News Strait Times
The Star

onlineல் சென்ற வெள்ளிக்கிழமை பேப்பர் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

That compnay is reliance.

அ.முத்து பிரகாஷ் said...

சிக்கலான சிலந்தி வலைப் பின்னலாக உலகம் , நம் வாழ்க்கை ,அனைத்தும்...
புரிந்து கொள்ள முடியாத ஒன்று தான்...
என்ன செய்வது ...
எதுவும் சொல்லத் தெரியவில்லை ...
நம் தவறேதும் இதில் இல்லையே ...
கொஞ்சம் இளைப்பாறுங்கள் தோழர் ...

பத்மா said...

நெஜமாவே வித்யாசமானவர் தான் நீங்கள் . உங்கள் நிறுவனத்திற்கு தெரியுமா இப்படி நீங்கள் விட்டுக்கொடுத்தது. ?they have a gem .ன்னு கூட?

Unknown said...

எனக்கே மனம் பதறச் செய்கிறது ...

உங்களுக்கு ...

sriram said...

உங்க நிலைமை புரிகிற்து உலக்ஸ், இதுவும் கடந்து போகும்...

அப்புறம், அவர்களின் முடிவுக்கும் அந்த கம்பெனிக்கும் முடிச்சு போட்டு முடிவுக்கு வரவேண்டாம்.. வேறொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் வேலையை மாற்ற எண்ணினால் அந்த நிறுவனத்தை அணுக அது தடையாக இருக்கும்.

வேலையைப் பொருத்த வரை என் தாரக மந்திரங்கள் சில

1. The Organization is bigger than any employee
2. No Employee is INDISPENSABLE. If Reliance Exists after Dhirubai your / my company will be as usual as ever after you / me.
3. Loyalty, Sincerity , Copper T - have a thing in common. They don't produce expected results all the time.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..

Anonymous said...

Nice dispatch and this fill someone in on helped me alot in my college assignement. Say thank you you as your information.