Jun 30, 2010

மிக்ஸர் - 30.06.2010

ஒரு காலத்தில் நிறைய புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன். கையில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். பாத்ரூமில் கூட புத்தகங்கள் உண்டு. ஓரளவு பெரிய பதவி வந்தவுடன் புத்தகங்கள் படிப்பது கொஞ்சம் குறைந்தது. நிறைய நேரம் அலுவலகத்திற்கு செலவிட வேண்டியதாகிவிட்டது. காலையில் வாக்கிங்கிலும், மாலையில் ஜிம்மிலும் நேரம் கழிவதால் ஓய்வு நேரம் என்பதே இல்லாமல் போனது. மீண்டும் படிக்க ஆரம்பிக்கலாம் என நினைத்த சமயத்தில் வலைப்பூ அறிமுகமானது. அதற்காக டிவி பார்க்கும் நேரங்களை எல்லாம் வலைப்பூவில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் பயன்படுத்த ஆரம்பித்தேன். எப்போவாவது சன் மியூஸிக்கில் பாடல்கள் பார்ப்பதுண்டு. ஆனால், புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் இல்லாமலே போனது. வலைப்பூ ஆரம்பித்த பொழுதில் நிறைய கதைகள் எழுத ஆரம்பித்தேன். ஒரு கதை ஆவியிலும் வந்தது. அடுத்த வருடத்திற்குள் நிறைய கதைகள் எழுத வேண்டும் என முடிவு எடுத்தேன். நிறைய கருக்கள் கைவசம் இருந்தும் எழுத முடியாமலே இருக்கிறது. காரணம் எப்போதும் அலுவலக வேலையிலேயே மனம் ஈடுபடுகிறது. நிறைய புத்தகங்கள் வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால், என்னால் தொடர்ந்து 30 நிமிடம் படிக்க முடிவதில்லை. ஆனால், நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது. ஆனால் என்னால் செயல்படுத்த முடியவில்லை. வீட்டிலும் அலுவலக வேலை சம்பந்தமான சிந்தனைகளே வருகிறது. எனக்கு மட்டும்தான் இப்படியா? இல்லை மற்றவர்களும் இதே போல் உணர்ந்திருக்கின்றீர்களா? படிப்பவர்கள் உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

********************************************************

இன்று காலை வாக்கிங் சென்றபோது நடந்த சம்பவம் இது. அதிகாலையில் செல்வதால் நான் எப்போதும் கையில் குடை எடுத்துக்கொண்டு செல்வதுண்டு. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மலேசியாவில் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும். இன்னொன்று ஒரு பாதுகாப்பிற்காக. இங்கே கார் வைத்திருப்பவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டையோ அல்லது ஏதாவது ஒரு பொருளோ பாதுகாப்பிற்காக காரில் வைத்திருப்பார்கள். சில சமயங்களில் மோட்டார் சைக்கிளில் போகும் இளவட்டங்கள் வம்புக்கு இழுப்பதுண்டு. பத்து அல்லது பதினைந்து பைக்குகளில் வேகமாக போவார்கள். ஏதேனும் வம்பு இழுத்தால் அவ்வளவுதான் ஆளை அடி பின்னி எடுத்து விடுவார்கள். கோலாலம்பூர் பக்கத்து ஊரில் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது, பைக் ரேஸ்காரர்கள் வேகமாக உரசி செல்ல, காரில் உள்ளவர் ஏதோ அவர்களை திட்ட, உடனே அடுத்த 20 நிமிடத்தில் காரை வழிமறித்து அவரை அடித்தே கொன்றுவிட்டார்கள். அதனால் எப்போதும் ஒருவித ஜாக்கிரதையுடனே எங்கும் செலவதுண்டு. அதற்காக நாடே இப்படி என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். மலேசியா போல அமைதியான நாடு வேறு எங்கும் இல்லை. நான் குறிபிட்டது போன்ற சம்பவங்கள் அங்கு ஒன்று இங்கு ஒன்று நடப்பதுண்டு. அதனால் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே? அதற்காகத்தான் குடையுடன் வாக்கிங் செல்வேன். இன்று காலை ஒரு 5.40 க்கு நான் சென்று கொண்டிருந்த போது பைக்கில் அமர்ந்திருந்த ஒரு ஆள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆள் பார்ப்பதற்கே பயங்கரமாக தெரிந்தார். தலை முழுவதும் முடி. முரட்டுத்தோற்றம். பைக் அருகே செல்ல செல்ல பயமாக இருந்தது. இன்று ஏதோ நடக்கப் போகின்றது என்று உள்ளுணர்வு சொல்லியது. குடைக்கும் இன்று வேலை இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டே, அவரை பார்த்துக்கொண்டே அருகில் சென்றேன்.

நான் அருகில் சென்றதுதான் தாமதம், பைக்கிலிருந்து இறங்கியவர் வேகமாக ஓட ஆரம்பித்தார். எனக்கு ஒரு நிமிடம் பயங்கர அதிர்ச்சி. பின்னங்கால பிடறியில் அடிபட அவர் ஓடியதைக்கண்டு எனக்கு உள்ள பயம் போய் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் அவரை பார்த்து பயந்து கொண்டு நடந்தால், அவர் என்னை பார்த்து பயந்து ஓடியதைக்கண்டு நான் என்ன சொல்ல?

********************************************************

குடும்பத்துடன் ராவணன் படம் சென்றேன். முதல்நாள் நெட்டில் டிக்கட் செய்யலாம் என்று பார்த்தால் படமே இல்லை. சரி, ஒரு வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள் போல என நினைத்து படம் பார்க்கும் எண்ணத்தை விட்டு விட்டேன். அடுத்த நாள் எதேச்சையாக ஒரு நாள் லீவு கிடைக்கவே, ஒரு இரண்டரை மணி நேர பயணத்தில் உள்ள மாரன் முருகன் கோவில் சென்றோம். வரும் வழியில் தியேட்டரில் பார்த்தால் படம் இருந்தது. மாலை நேரக்காட்சிக்கு டிக்கட் புக் செய்துவிட்டு, ஷாப்பிங் முடித்துவிட்டு சென்றால், எப்போதும் போல் பத்து பேர் தான் தியேட்டரில் இருந்தார்கள். படம் பற்றிய விமர்சனத்துக்கோ, ராவணன் கதை பற்றிய விவாதத்துக்கோ செல்ல விரும்பவில்லை. ஆனால் நான் படத்தை ரசித்து பார்த்தேன். காரணம் படத்தை எடுத்த விதம். அழகான ஒளிப்பதிவு. அம்சமான காட்சி அமைப்பு. எது ஒரிஜினல் எது செட் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போனதற்கு இன்னொரு காரணம், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இங்கே நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், ஐஸ்வர்யா.

********************************************************

வெளிநாட்டில் இருப்பதால் கொஞ்சம் நான் முட்டாளாகிப்போன சம்பவம் போன வாரம் நடந்தது. அத்ற்கு முன்னே கொஞ்சம் பிளாஷ்பேக். கோயில் இல்லாத ஊரில் இருப்பது பாவம் என்பார்கள். நான் சிறு வயதில் இருந்து வளர்ந்தது எல்லாம் லால்குடியில். ஊரைச்சுற்றி கோயில். எல்லா தெருக்களிலும் கோவில்கள் உண்டு. பக்கத்திலேயே சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் கோவில், சீரங்கம், மலைக்கோட்டை என்று திரும்பிய பக்கம் எல்லாம் கோவில்கள். அதனால் எப்போதும் கோவில்களுக்கு செல்வதுண்டு. ஒவ்வொரு நாளும் என்ன என்ன விசேசங்கள் என்று நன்றாகத் தெரியும். ஆனால், இன்று? விசயத்திற்கு வருகிறேன்.

இந்தியாவில் இருந்த வரை, அப்பா இருந்தவரை, என் பிறந்த நாள் அன்று அர்ச்சனை செய்வதை விட, நான் பிறந்த மாதத்தில் என் நட்சத்திரம் என்று வருகிறது என்று பார்த்து, அன்று புது டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்து கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதையே விரும்புவார். மலேசியா வந்த பிறகு பிறந்த நாள் அன்றே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது வழக்கம். போன சனிக்கிழமை என் பெண்ணின் பிறந்த நாள். இந்த வருடம் வீட்டிலேயே கொண்டாடினோம். மாலையில் கோவில் சென்று அர்ச்சனை செய்யலாம் என்று நினைத்து, மதியம் வெளியே சென்று சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தோம். மாலையில் கோவில் சென்றோம். பார்த்தால் கோவில் பூட்டி இருந்தது. கோவில் பூட்டி நான் என்றுமே பார்த்தது இல்லை. இரவில் பூட்டுவார்கள் அது தெரியும். ஆனால், மாலை வேலைகளில்? நல்ல வேலை, குருக்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்?

" என்ன சாமி, கோவில் பூட்டி இருக்கு?"

" தெரியாதா உங்களுக்கு. இன்றைக்கு சந்திர கிரகணம். அதனால சாத்தி இருக்கோம். நீங்க வேணா வெளியில் இருந்தே கும்பிடுங்க"

வெட்கமாக போய் விட்டது எனக்கு. அத்தனை கோவில்கள் இருக்கும் ஊரில் வாழ்ந்த எனக்கு இந்த விசயம் கூட தெரியவில்லையே என மனம் நொந்து போனேன். நல்ல வேளை அவளின் நட்சத்திரம் இன்னும் போகவில்லை. நட்சத்திரம் அன்று அர்ச்சனை செய்ய வேண்டியதுதான்.

வெளிநாட்டில் இருப்பதால் இழக்கும் நிறைய விசயங்களில் இதுவும் ஒன்று. ஒரு நாளின் முக்கியத்துவம் கூட தெரியாமல் வாழ்வது எல்லாம் ஒரு வாழ்க்கையா?

********************************************************

காலையில் சன் மியூசிக்கில், " கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு" என்ற பாட்டுக்கு மாளவிகா ஆடிக்கொண்டிருந்தார். அதில் கடைசி வரியில், " நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்புத்தான்" ஒரு வரி வரும். அதைக் கேட்ட என் பையன், " அப்பா கூட கருப்புதான்"ன்னான்.

உடனே என் பெண் கூறினாள், " டாடி, சிகப்புன்னா ஒரு கலர்தான். பல கலர்கள் சேர்ந்ததுதான் கருப்பு. அதனால உங்க கலர்தான் பெஸ்ட்"

இது எப்படி இருக்கு?

********************************************************

6 comments:

Ravichandran Somu said...

//உடனே என் பெண் கூறினாள், " டாடி, சிகப்புன்னா ஒரு கலர்தான். பல கலர்கள் சேர்ந்ததுதான் கருப்பு. அதனால உங்க கலர்தான் பெஸ்ட்"//

Super........!!

(Read in Rajini Style)

Anpudan,
-Ravichandran

Kumar said...

unga ponnu sonnathu thaan correct.

தனி காட்டு ராஜா said...

//நான் அருகில் சென்றதுதான் தாமதம், பைக்கிலிருந்து இறங்கியவர் வேகமாக ஓட ஆரம்பித்தார். எனக்கு ஒரு நிமிடம் பயங்கர அதிர்ச்சி. பின்னங்கால பிடறியில் அடிபட அவர் ஓடியதைக்கண்டு எனக்கு உள்ள பயம் போய் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் அவரை பார்த்து பயந்து கொண்டு நடந்தால், அவர் என்னை பார்த்து பயந்து ஓடியதைக்கண்டு நான் என்ன சொல்ல?//

//அதைக் கேட்ட என் பையன், " அப்பா கூட கருப்புதான்"ன்னான்.//

இந்த இரண்டுக்கும் ஏதவாது link இருக்கா?

iniyavan said...

//Super........!!

(Read in Rajini Style)//

வருகைக்கு நன்றி ரவிச்சந்திரன்.

iniyavan said...

//unga ponnu sonnathu thaan correct.//

வருகைக்கு நன்றி குமார்.

iniyavan said...

//அதைக் கேட்ட என் பையன், " அப்பா கூட கருப்புதான்"ன்னான்.//

இந்த இரண்டுக்கும் ஏதவாது link இருக்கா?//

இரண்டிற்கும் லிங்க் ஏற்படுத்தி சந்தோசப்படுவதுதான் உங்கள் விருப்பம் என்றால் சந்தோசப்பட்டு போங்களேன்.

வருகைக்கு நன்றி சார்.