என் நண்பர்களில் ஒருவன் மிகுந்த செலவாளி. அவன் அப்படி ஒன்றும் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் ஒரு வழியாக எம் காம் வரை படித்து முடித்தான். அவன் எப்படி படித்து முடித்தான் என்பது இந்த கட்டுரைக்கு தேவை இல்லாத ஒன்று.பந்தாவுக்கு என்றே காலேஜ் போய் வருவான். அவன் அப்பா மிகுந்த கஷ்டமான தொழிலில் இருந்தவர். அவ்வளவு கஷ்டப்படுவார். அவரின் சொத்துக்களை எல்லாம் படிக்கிறேன் பேர்வழி என்று தண்ணியாய் கரைத்தான். தினமும் தண்ணி அடிப்பான். நிறைய பெண்கள் பழக்கம். பெண்களுக்காக அவ்வளவு செலவு செய்வான். அவ்வளவும் அப்பாவின் காசு. அவனுக்கு ஒரு தம்பியும், தங்கையும் உண்டு. இவன் செய்த செலவுகளினால் அவன் குடும்பம் தெருவுக்கு வந்தது. அவன் அப்பாவிற்கும் வயதானது. அவரால் அந்த அளவிற்கு உழைக்க முடியவில்லை. இவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை. அப்பாவை ஒதுக்கிவிட்டு அவர் தொழிலை எடுத்துக்கொண்டான். அதுமட்டும் இல்லாமல், அதே கடையில் அப்பாவை ஒரு வேலை ஆள் போல் நடத்தினான்.
நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் திருந்தவே இல்லை. ஒரு முறை நாங்கள் எல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அவன் அப்பா செலவுக்கு பணம் கேட்டார் என்பதற்காக, எங்கள் முன்பே அவன் அப்பாவை ஓங்கி அறைந்து விட்டான். என்னால் அங்கே இருக்கமுடியவில்லை. உடனே வீட்டிற்கு சென்று விட்டேன். அன்று இரவு அவனுக்கு எடுத்து சொன்னேன். அவன் என்னதான் முரட்டு சுபாவம் உள்ளவனாக இருந்தாலும் எனக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்பவன். என் பேச்சை கொஞ்சம் காது கொடுத்து கேட்பவன். அதனால் அவனுக்கு சில அறிவுரைகள் கூறினேன்,
"அம்மா அப்பாவை கவனிக்காமல் இருப்பது தவறு. அவர்கள் கண்ணீர் சிந்துவது நல்லதல்ல. அது உன் பரம்பரையே பாதிக்கும். அம்மா அப்பாவை கண்ணீர் சிந்த வைத்து விட்டு, எந்த மகனும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதனால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய். அப்பாவிடம் கை நீட்டும் வேலை வைத்துக்கொள்ளாதே. அவருக்கு வயதாகிவிட்டது. அவரால் திருப்பி அடிக்க முடியாது என்பதானால் நீ கை நீட்டுவது சரியல்ல " என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவன் திருந்தவில்லை. அதனால் நான் அவனிடம் இருந்து மெல்ல விலகிக்கொண்டேன்.
பின்னாளில் அவனுக்கும் திருமணம் நடந்தது. இப்போது குழந்தை குட்டிகளுடன் இருக்கிறான். மிக சாதாரண நிலையில்தான் உள்ளான். நல்ல வேளை அவனுக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை வளர்ந்து, பெரியவனாகி, என் நண்பனை ஓங்கி அறையப் போகும் அந்த நல்ல நாளை எதிர்நோக்கி நான் காத்துக்கொண்டிருக்கிறேன். இதை நான் இங்கே எழுதுவதற்கு ஒரு காரணம் உள்ளது.
சென்ற வாரத்தில் ஒரு நாள் சன் டிவி செய்தியில் ஒரு காட்சி. நீங்களும் அதனை பார்த்து இருக்கலாம்.ஒரு வயதான தாத்தா. அவருக்கு மூன்று மகன்கள். ஒரு மகன் இவரின் மாத வாடகைக்காக 200 ரூபாய் தருகிறாராம். இன்னொருவர் கொஞ்சம் அவ்வப்போது சாப்பாடுக்காக பணம் கொடுப்பாராம். ஒரு மகன் எதுவும் தருவதில்லை. அவரிடம் போய் கேட்டால் "ஒன்றும் தர முடியாது" என்றிருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த தாத்தா போலிஸில் தன் மகன் மேல் புகார் ஒன்றை கொடுத்து விட்டார். போலிஸ் அவர் மகனை பிடித்து வந்து விசாரித்தும் கூட, பணம் தர முடியாது என்று சொல்லி இருக்கிறார். கடுப்பான போலிஸ் அவரை கைது பண்ணி விட்டது. முதியோர் நல சட்டத்தின் படி (என்ன சட்டம் என்று சரியாக நினைவில்லை) குற்றம் நிரூபிக்க பட்டால் அவரின் மகனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை கிடைக்குமாம். அந்த தாத்தாவின் பேச்சை கேட்க நேர்ந்தது. மனம் சங்கடமாகிப்போனது. " நான் இன்னும் ஒரு ஆறுமாதம் இருப்பேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு இறந்துவிடுவேன். ஒரு ஆறு மாதத்திற்கு எனக்கு கஞ்சி ஊத்த சொல்லுங்க சார்" என நிறுபரிடம் அவர் கூறியது என் மனதை பிசைந்து விட்டது.
என்ன கொடுமை இது? பொறுக்காமல் ஒரு தந்தை, தன் சொந்த மகன் மேலேயே போலிஸில் புகார் தர முன் வந்திருக்கிறார் என்றால் அவர் எந்த அளவிற்கு மனத்தால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்? சொந்த அப்பா அம்மாவை வைத்து காப்பாற்ற முடியாதவர்கள் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன்? இதே நிலை தனக்கும் பின் ஒரு நாளில் வரலாம் என ஏன் இவர்களுக்கு எல்லாம் புரிவதில்லை. என்னதான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும், தன் சொந்த அப்பா அம்மா பட்டினியால் வாடும் போது எப்படி இவர்களால் நன்றாக சாப்பிட முடிகிறது?
இந்த செய்தியை பார்த்ததும் நான் மேலே குறிப்பிட்ட என் நண்பனின் அப்பாவிடம் பேசி அவனுக்கும் இதே போல் தண்டனை வாங்கித்தரலாம் என நினைத்து என்னுடைய இன்னொரு நண்பனை தொடர்பு கொண்டேன். அவனின் நல்ல நேரம், "என் நண்பனின் அப்பா ஏற்கனவே இறந்து விட்டாராம்" . அவர் மட்டும் உயிரோடு இருந்து இருந்தால் அவனையும் நான் உள்ளே தள்ள ஏற்பாடு செய்து இருப்பேன். அவன் நல்ல நேரம், அவர் இறந்துவிட்டார். பிழைத்தான் என் நண்பன்!
6 comments:
அப்பனை அறைந்தவன் கண்டிப்பா ஒரு நாள் வருத்த படுவான் சார் . என்ன பொறப்பு அது ச்சே .. அந்த ஆளு முகத்துல காரி துப்பனும் போல இருக்கு .
நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். மிகவும் வருந்தத்தக்க நிலை.
அடுத்த வருந்தத்தக்க நிலை. இந்த மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வராதது.
மனம் கனக்கும் பகிர்வுங்க.வேதனையா இருக்கு.
//அப்பனை அறைந்தவன் கண்டிப்பா ஒரு நாள் வருத்த படுவான் சார் . என்ன பொறப்பு அது ச்சே .. அந்த ஆளு முகத்துல காரி துப்பனும் போல இருக்கு .//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரோமியோ.
//நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். மிகவும் வருந்தத்தக்க நிலை. //
வருகைக்கு நன்றி சார்.
//அடுத்த வருந்தத்தக்க நிலை. இந்த மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வராதது.//
நான் தற்போதெல்லாம் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதில்லை சார்.
//மனம் கனக்கும் பகிர்வுங்க.வேதனையா இருக்கு//
வருகைக்கு நன்றி கருணாகரசு.
Post a Comment