Jul 26, 2010

ரவியின் கா.க - 4 (பாகம் 4)

அவர்கள் சென்றவுடன் நானும் நண்பனும் கலந்து பேசி, மற்ற நண்பர்களையும் கூட்டிக்கொண்டு குமாரும் அவளும் இருக்கும் இடத்தை நோக்கி உடனே போனோம். கோபத்தில் குமாரை நோக்கி, அவர்கள் சொன்னதை எல்லாம் சொல்லி, "உண்மையா? ஏற்கனவே அவள் கல்யாணம் ஆகி குழந்தை பெற்றவள் என உனக்கு தெரியுமா?" என்று கேட்டேன்.

அவன் சொன்ன பதில் என் இதயத்தையே உடைத்துவிடும் போல் இருந்தது.

"ஆமாம், எனக்கு முன்பே தெரியும்" என்று சொன்னவுடன் கோபத்தில் அவனை அடிக்க பாய்ந்தேன். எப்படி என்னை ஏமாற்றியிருக்கிறான்? என்று அவன் மேல் கோபம் கோபமாக வந்தது. "24 மணி நேரமும் விபச்சாரியுடன் இருப்பவனுக்கு, ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தியை கல்யாணம் செய்வது ஒன்றும் பிரச்சனை இல்லைதான்" ஆனால், நான்தான் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். இப்படிப்பட்ட ஒருவனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப்போகிறதே? என்று சந்தோசப்பட்டு விட்டேன். அவனின் கல்யாணத்தன்று நண்பர்கள் அவள் உடையை பற்றியும், அனைவருக்கும் முன் தொப்புள் தெரிய கீழே மிக கீழே அவள் புடவை கட்டி வந்ததையும், அனைவரும் பார்க்கும்போதும், எந்தவித சுரணையுமின்றி அவள் புடவையை சரியாமல் இருந்ததை பற்றியும், கூறிய போதே என் மனதிற்குள் சின்ன ஒரு பொறி தட்டியது. ஆனால் நான் நண்பர்களிடம் அப்படி அடுத்தவன் மனைவியை பார்ப்பது தப்பு என அட்வைஸ் செய்தேன். ஆனால், இந்த நாய் அடுத்தவன் மனைவியையே அல்லவா திருமணம் செய்து வந்துள்ளான்.

அனைத்து நண்பர்களுமே அவனுக்கு எடுத்து சொன்னோம். அவன் செய்த தவறையும், அவளின் குழந்தையின் எதிர்காலம் பற்றியும் கூறினோம். ஆனால், குமார் யார் பேச்சையும் கேட்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த நண்பர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அவனை அடிக்க கூட பாய்ந்தார்கள்.

பிறகு ஒரு வழியாக நான் அவனிடம்,

"குமார், நீ செயததிலேயே மிகப் பெரிய பாவம் இதுதான். இந்த பாவம் உன்னை மட்டும் பாதிக்காது. உன் பரம்பரையே பாதிக்கும். அவர்கள் உன் மேல் கேஸ் போட்டால் நீ கம்பி எண்ணவேண்டி இருக்கும். அதனால் எவ்வளவு சீக்கிரம் அவளை அவள் வீட்டிற்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பி விடு. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்ய தயாராய் இருக்கிறோம். தவறுக்கு மேல் தவறு செய்யாதே?. இன்று இரவு முழுவதும் நாங்கள் சொன்னதை யோசித்துப்பார். காலையில் நான் வரும்போது ஒரு நல்ல முடிவுடன் இரு" என்று சொல்லிவிட்டு நாங்கள் அவன் வீட்டிலிருந்து கிளம்பினோம்.

வாசகர்கள், "ஏன் அவர்கள் பெற்றோர்கள் அவனை கண்டிக்க மாட்டார்களா?" என கேட்கலாம். அவனுடைய தங்கைகளை பற்றி நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன், என நினைக்கிறேன். அவன் அப்பாவை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு முழு நாவலே எழுதலாம், அந்த அளவிற்கு விசயம் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு விசயம் சொல்கிறேன். ஒரு முறை குமார் மற்றும் அவனின் சில நண்பர்கள் ஒரு பெண்ணை அழைத்து வந்து, ஒரு இடத்தில் அன்று இரவு முழுவதும் இருந்திருக்கிறார்கள். அன்று இரவு ஒரு மணி போல் அங்கு வந்த அவனின் அப்பா, அவன் நண்பர்களிடம் இப்படி கெஞ்சினாராம், "டேய் குமார் கிட்ட சொல்லுடா, நானும் ஒரு முறை ......." இப்படிப்பட்ட அப்பாவா அவனை கண்டிக்க போகிறார்?

அடுத்த நாள் நானும், சில நண்பர்களும் அவன் வீட்டிற்கு சென்றோம். சென்றே எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. குமாரும் அந்த பெண்ணும் இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடிவிட்டிருந்தார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டால், எதுவுமே எங்களுக்கு தெரியாது என்றார்கள். எங்களுக்குத்தான் வெறுப்பாகவும் கோபமாகவும் வந்தது. முக்கியமாக எனக்கு.

இது நடந்து ஒரு ஆறு மாதம் இருக்கும். என் நண்பன் ஒருவன் வேகமாக என் வீட்டிற்கு வந்தான்,

"மாப்பிள்ள குமார பார்த்தேண்டா?"

"எங்கடா?"

"திருச்சில அந்த ஹோட்டல்ல"

"சட்டையை கோத்து பிடிக்க வேண்டியதுதானே?"

"அதுக்குத்தான் மாப்பிள்ள போனேன். என்னை பார்த்ததும் ஓடி ஒளிஞ்சான்"

"அப்புறம் என்னாச்சு?"

"நான் வேற இடத்துல என் அலுவலக நண்பருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு ஒரே ஷாக்காச்சுடா. என் அலுவலக நண்பர் ஒரு வட நாட்டுக்காரர். திடீருனு பார்த்தா?"

"ம்ம் பார்த்தா?"

"குமார் மனைவி என் அலுவலக நண்பர் ரூமுலேந்து வந்தா. அங்கே வெயிட் பண்ணிட்டிருந்த குமார் அவளை அழைச்சுட்டு ஆட்டோல போனான்"

"யேய், ஏதாவது உளராத. நீ யாரயோ பார்த்துட்டு சொல்ற!"

"சத்தியமா என் இரண்டு கண்ணால பார்த்தேன்"

அன்னைக்கு நான் அடைந்த வேதனைக்கு ஒரு அளவே இல்லை. அழகான ஒரு பெண். ஏற்கனவே திருமணமான ஒரு பெண். ஒரு குழந்தைக்கு தாயானவள். இன்னொரு ஆடவனை மணந்ததே மன்னிக்க முடியாத குற்றம். அப்படிப்பட்ட குற்றம் செய்தவள், எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிந்தாள்? என்ன காரணமாக இருக்கும்? மனம் முழுவதும் இந்த கேள்விகளுடனே சில காலம் வாழ்ந்து வந்தேன்.

சில வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக ஊருக்கு போயிருந்தபோது, என் நண்பனை பார்க்க அவன் வீட்டிற்கு போயிருந்தேன். பல விசயங்களுக்கு பிறகு குமாரை பற்றிய பேச்சு வந்தது.

"மாப்பிள்ள உனக்கு விசயம் தெரியாதா?"

"என்னடா?" இது நான்.

"குமார் செத்து போயிட்டாண்டா?"

"ஏன்?"

"எயிட்ஸ்"

Jul 23, 2010

ரவியின் கா.க - 4 (பாகம் 3)

ஆனால், பிரச்சனை அடுத்த நாள் வேறு வடிவில் வந்தது.

காலை 10 மணி இருக்கும். என் நண்பனின் தம்பி என் வீட்டிற்கு வந்தான்.

"எங்க அண்ணன் உங்களை ரொம்ப அவசரமா பஸ் ஸ்டாண்டுல உள்ள டீ கடைக்கு வரச்சொன்னது"

"என்ன விசயம்?"

"எனக்கு தெரியலை. ஆனா ஏதோ அவசரம்னு சொல்ல சொண்ணுச்சு"

பறந்து கொண்டு ஓடினேன். என்ன பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே என் டிவிஎஸ் 50 யில் வேகமாக சென்றேன். அந்த டீக்கடை உள்ளே நுழைந்த போது ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது. என்னவோ ஒரு விபரீதம் நடக்கப்போவது போல் தோன்றியது. உள்ளே என் நண்பன் சீனி உட்கார்ந்து இருந்தான். அவனை சுற்றி ஒரு நான்கு நபர்கள் அமர்ந்து இருந்தார்கள். பார்ப்பதற்கு ஏதோ ரவுடி போல ஒரு தோற்றம். நானும் சென்று நண்பன் அருகில் அமர்ந்தேன்.

"வாடா உனக்காகத்தான் காத்து இருந்தேன். இவங்க என்னவோ உன்கிட்ட பேசணுமாம்"

"என்ன பேசணும்?" என அவர்களை நோக்கி கேட்டேன்.

அங்கே இருந்தவனில் சற்றே முரடனாக இருந்த ஒருவன் என்னை நோக்கி கோபமாக பேச ஆரம்பித்தான்,

"எங்க ஊரு பொண்ண உங்க நண்பன் கடத்திட்டு வந்துட்டான். இப்போ அவங்க எங்க?"

"இங்க பாருங்க, அவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியாது. அதுவும் இல்லாம நீங்க யார்கிட்ட கேட்கணும். குமார் வீடலயோ இல்லை அவங்க உறவினர்கள் கிட்டேயோ. ஏன் என்கிட்ட கேட்கறீங்க"

"நீங்கதான் அவனுக்கு பண உதவி செய்ததாகவும், எல்லா திட்டமும் போட்டு கொடுத்ததாகவும் கேள்விபட்டோம்"

நான் பணம் கொடுதத் விசயம் இவர்களுக்கு எப்படி தெரிந்தது? என்று எனக்கு ஒரே குழப்பம்.

"பணம் கொடுத்தது உண்மைதான். நான் எந்த ஒரு திட்டமும் அவனுக்கு சொல்லவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் இருவரும் மேஜர்தானே? அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தது?''

"பிரச்சனை எங்களுக்கு இல்லை. ஆனால் இவருக்கு இருக்கு" என்று சொன்னவன் அருகில் இருந்த இன்னொரு நண்பனை காண்பித்தான். என்ன பிரச்சனை என்பதுபோல் அவனை பார்த்து கொண்டிருக்கையிலேயே, எழுந்து வந்தவன், என் கைகளை பிடித்துக்கொண்டு,"ஓஓஒ" என அழ ஆரம்பித்தான்.

"ஏன் அழறீங்க?" என நான் கேட்கும்போதே, இன்னொரு நபர் "அவர் அழாமல் வேறு யார் அழுவார்கள் சார்?" என்றார்.

"ஏன்?" என நான் கேட்க,

"ஏன்னா அவர்தான் உங்கள் நண்பருடன் ஓடி வந்த பெண்ணின் கணவர்"

எனக்கு ஒரு வினாடி என்ன செய்வதென்று புரியவில்லை. சப்த நாடியும் அடங்கிவிட்டது. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. கொஞ்சம் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

"உண்மையாகவா சொல்லறீங்க" என்றேன்.

"சார் இவருக்கும், அவங்களுக்கும் கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. மனைவிமேல் உயிரையே வைத்து உள்ளார். என்ன, சரியான வேலையில் இல்லாமல் இருக்கிறான். மனைவி மேலே படிக்க வேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக கடன் வாங்கி படிக்க வைத்துக்கொண்டிருக்கிறான். அப்படி உங்கள் ஊருக்கு படிக்க வந்தவேளையில் தான் உங்கள் நண்பர் என்னவோ சொல்லி மனதை கலைத்து, காதல் செய்து இழுத்துக்கொண்டு ஓடி வந்து விட்டார்"

எனக்கு அதிர்ச்சியும், அடுத்து என்ன செய்வதென்ற குழப்பமும் வந்து விட்டது. அடுத்து அவர் சொன்ன இன்னொரு விசயம்தான் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"சார், இன்னொரு விசயம் தெரியுமா உங்களுக்கு?"

"என்ன?"

"இவங்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்"

கேள்விமேல் கேள்விகள் என் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

'எப்படி ஒரு கல்யாணமான ஒரு பெண் அடுத்தவன் மேல் காதல் கொண்டாள்?'

'தன் குழந்தையை விட்டு ஓடி வர எப்படி மனசு வந்தது?'

'என்ன காரணமாக இருக்கமுடியும்?'

'இப்படிப்பட்ட காதலுக்கா நான் பண உதவி செய்தேன்?'

அதற்குமேல் அவள் கணவன் 'அவன்தான் அவளின் கணவன்' என்பதை நிரூபிக்க என்னிடம் சொன்ன சிலவிசயங்கள் சென்சார் செய்யபடவேண்டியவைகள். அதனால் அவைகளை இங்கே தவிர்க்கிறேன்.

பிறகு அவர்களிடம், "நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் மற்ற நண்பர்களுடனும், அவர்கள் வீட்டிலும் பேசி உங்கள் மனைவியை அனுப்பி வைக்கிறேன்" என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். அவர்கள் ஏதோ அடிதடி செய்ய வேண்டும் என்று வந்தவர்கள் என் மேல் உள்ள நம்பிக்கையால் எந்த பிரச்சனையும் செய்யாமல் ஊருக்கு திரும்பி சென்றார்கள்.

அவர்கள் சென்றவுடன் நானும் நண்பனும் கலந்து பேசி, மற்ற நண்பர்களையும் கூட்டிக்கொண்டு குமாரும் அவளும் இருக்கும் இடத்தை நோக்கி உடனே போனோம். கோபத்தில் குமாரை நோக்கி, அவர்கள் சொன்னதை எல்லாம் சொல்லி, "உண்மையா? ஏற்கனவே அவள் கல்யாணம் ஆகி குழந்தை பெற்றவள் என உனக்கு தெரியுமா?" என்று கேட்டேன்.

அவன் சொன்ன பதில் என் இதயத்தையே உடைத்துவிடும் போல் இருந்தது.

-தொடரும்.

Jul 21, 2010

ரவியின் கா.க - 4 (பாகம் 2)

ஒரு வழியாக அவர்களை சமாளித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். வந்தவுடன்தான் தெரிந்தது 'அந்த கடிதத்தை நண்பனின் கடையிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம்' என்பது.

சரி, சாயந்திரம் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து வந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு அடுத்த நாள்தான் தெரிந்தது!?

அடுத்த நாள் காலை குமார் அந்த கடிதத்திலிருந்த முகவரியை குறித்துக்கொண்டு நேராக அரியலூர் சென்றிருக்கிறான். அங்கே சொன்ன இடத்தில் அவள் நின்று கொண்டிருந்திருக்கிறாள் என்னை எதிர்பார்த்து! இவன் அங்கே போய், அவளிடம் நான் அனுப்பியதாக சொல்லி பேச்சு கொடுத்து இருக்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை அவன் கடைசி வரை என்னிடம் சொல்லவே இல்லை. அதன் பிறகு ஒரு நாள் அவளிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்று என்ன நடந்தது என்பதை சொல்லாமல், என்னை பற்றி கண்டபடி திட்டி எழுதி இருந்தாள். "என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் என்ன அந்த மாதிரி பெண்ணா?" அப்படி, இப்படி என்று சரியான வசவு. ஒரு வேளை நான் சென்றிருந்தால், அது ஒரு நல்ல நட்பாகவோ இல்லை நல்ல காதலாகவோ தொடர்ந்திருக்கக்கூடும்.

ஆனால் பாருங்கள் இவ்வளவு நடந்தும் குமார் எதுவுமே தவறாக நடக்கவில்லை என்பதுபோலேயே என்னிடம் பேசிக்கொண்டிருந்தான். நீங்கள் கேட்கலாம், அப்படிப்பட்ட அவனை நீ ஒன்றுமே கேட்கவில்லையா? திட்டவில்லையா? என்று. உண்மையில் சொல்லப்போனால், பதில் 'இல்லை' என்பதுதான். ஏன், எல்லாவற்றிருக்கும் காரணம் அவன் தங்கைகள்தான். அவன் தங்கைகள் என் மேல் வைத்திருந்த அன்பு. நாங்கள் அனைவரும் (குமாரும்தான்) சேர்ந்து சினிமா போகும் அளவிற்கு அவன் தங்கைகளின் நட்பு இருந்தது. அந்த கதைகளை பின்னர் பார்ப்போம். என்னுடைய காதல் கதை 4ம் பாகம் இத்துடன் முடிகிறது. ஆனால், குமாரின் கதை இங்கு ஆரம்பிக்கிறது.

அந்த அரியலூர் பெண் லீவு முடிந்து ஊருக்கு போவதாகவும், இனி உங்கள் ஊர் பக்கமே வரவிரும்பவில்லை என்றும் எனக்கு கடிதம் எழுதிவிட்டு சென்று விட்டாள். நானும் அத்துடன் அந்த மேட்டரை விட்டுவிட்டேன். ஒரு நாள் குமார் என்னிடம் வந்து தான் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினான். எனக்கு ஒரே ஆச்சர்யம். விபச்சாரிகளுடனேயே பழகுபவனுக்கு எங்கு இருந்து காதால் வந்தது? என்னை வந்து அந்த பெண்ணை பார்க்கும்படி கூறினான். நானும் சென்றேன்.

பார்த்தவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை அழகு. "என்னடா இது, பார்க்கும் அத்தனை பெண்களையும் அழகு, நல்ல அழகு என்று சொல்கிறானே? என நினைக்க வேண்டாம். என்னை பொறுத்தவரை பெண்கள் எல்லாருமே அழகுதான். எனக்கு ஒரே சந்தோசம். ஒரு வேளை இப்படிப்பட்ட பெண்ணால் அவன் திருந்தலாம் அல்லவா? அதனால் நானும், "பார்க்க நல்ல பெண்ணாய் இருக்கிறாள். இவளிடமாவது உண்மையாக இரு" என்று அறிவுரை கூறினேன். நண்பர்கள் எல்லோரும் குமார் அவள் கூடவே சுற்றிக்கொண்டிருப்பதாய் கூறினார்கள். அவள் வேறு ஊரிலிருந்து வந்து எங்கள் ஊரில் தங்கி படித்துக்கொண்டிருந்தாள்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் மாலை குமாரும் சில நண்பர்களும் என் வீட்டிற்கு வந்தார்கள். குமார்தான் என்னிடம் பேசினான்.

"மாப்பிள்ள, அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறாங்களாம்"

"நீ அவங்க வீட்ல பேசி பார்த்தியா?"

"இல்லை. என்ன அவங்க வீட்டோட பேச விட மாட்டேங்கறா?"

"சரி, இப்போ என்ன பண்ணப்போற?"

"நாங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணீட்டோம். உன் உதவி கேட்டு இப்போ வந்திருக்கேன்"

"ஹேய் இதல்லாம் தப்பு இல்லையா?"

"வேற வழி தெரியலை மாப்பிள்ள"

"நான் எந்த விதத்துல உதவ முடியும்னு நினைக்கற?"

"நாளைக்கு காலைல ஒரு கார் எடுத்துட்டு அவங்க ஊருக்கு போய், அவ கோலம் போட வெளிய வரும்போது, துக்கிட்டு வந்து திருச்சில கல்யாணம் பண்ணிட்டு, ரெண்டு நாள் வெளியூர் போயிட்டு அப்புறம் வரலாம்னு இருக்கோம். நீயும் வந்தா நல்லா இருக்கும்"

"சாரி, மாப்புள்ள, எங்க அப்பாவை பத்தி உனக்கு தெரியும். என்னால வரமுடியாது. என் தோலை உரிச்சுடுவார். வேற எதுனா உதவி கேளு செய்யறேன்"

"கொஞ்சம் செலவுக்கு பணம் இருந்தா குடு"

நான் சேர்த்து வைத்திருந்த பணம் ரூபாய் 1000 கொடுத்து அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் நண்பர்கள் அவர்களுக்கு கல்யாணம் நடந்து முடிந்து விட்டதாகவும், அருண் வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் நண்பர்கள் அவள் அணிந்திருந்த உடையை பற்றியும், அவளின் அழகை பற்றி கூறியதையும் நாகரிகம் கருதி இங்கே தவிர்க்கிறேன்.

நல்ல வேளை, குமார் திருட்டுத்தனமாக கல்யாணம் செய்து கொள்ளும்போது நான் கூட இல்லை. அதனால் நம்மை யாரும் எந்த கேள்வியும் கேட்கமுடியாது? என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், பிரச்சனை அடுத்த நாள் வேறு வடிவில் வந்தது.

-தொடரும்.

Jul 19, 2010

ரவியின் காதல் கதை - 4 (பாகம் 1)

ரவியின் காதல் கதைகளை பற்றி எழுதும்போது அவன் நண்பன் குமாரின் காதல்கதை நினைவுக்கு வருகிறது. அதை எழுதாமல் ரவியின் காதல் கதைகளை எழுதிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ரவியின் கதைகளுக்கிடையில் குமாரின் கதையும்....

இனி ரவி தொடர்வார்....

நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயம். ஒருநாள் லேட்டாகவே பஸ்ஸில் ஊருக்கு வரும்படி ஆனது. நான் தினமும் டிரெயினில் செல்பவன் என்பது என் பழைய கதைகளின் மூலம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். நானும் என் இன்னொரு நண்பரும் திருச்சியிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது மாலை மணி ஆறு இருக்கும். பஸ்ஸில் ஓரளவு கூட்டம். நாங்கள் பஸ்ஸில் ஏறிய சமயத்தில் ஒரு மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை காலியாக இருந்தது. என் நண்பன் ஜன்னலோரத்தில் அமர்ந்தான். நான் நடுவில் அமர்ந்தேன். பஸ் கிளம்பும் நேரத்தில் ஒரு அழகான இளம் பெண் ஏறினாள். வந்தவள் என் அருகில் வந்து, கொஞ்சமும் யோசிக்காமல் என் அருகில் உட்கார்ந்தாள். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. எல்லாமும் இருக்க வேண்டிய இடத்தில் மிகத்தாராளமாக, சரியாக இருந்தது. எனக்கு பிடித்த தாவணியில் வேறு இருந்தாள். உலகத்திலேயே பெண்களுக்கு உரிய கவர்ச்சிகரமான உடை சேலைக்கு அடுத்து தாவணிதான் எனபது என் கணிப்பு. தாவணியில் நீங்கள் எதையும் பார்க்க தேட வேண்டியது இல்லை. கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்தால் தாவணியே எல்லாவற்றையும் காண்பித்துவிடும். அருகில் உட்கார்ந்தவள் என்னிடம் பேச துவங்கினாள்.

"ஏன் ரொம்ப கூச்ச படறீங்க. பொண்ணு நானே சகஜமா இருக்கேன்"

" இல்லை, எல்லோரும் பார்க்கறாங்க அதான்"

"பார்த்தா என்ன? சும்மாதானே உக்கார்ந்து இருக்கோம். ஒன்னும் தப்பு பண்ணலையே?"

அவள் அவ்வாறு ஓப்பனாக பேசியதும் எனக்கு என்னவோ போல் ஆனது. மீண்டும் அவளே தொடர்ந்தாள்,

" அப்படியே தப்பு பண்ணனும்னு நீங்க நினைச்சாலும், உங்களால இத்தனை பேர் முன்னாடி எதுவும் பண்ணமுடியாது. அதனால நார்மலா இருங்க" என்றாள்.

இதற்கிடையில் என் அருகே இருந்த நண்பன், "மாப்பிள்ளை, பிடிக்கலைனா நீ இங்க வந்து உட்காரு நான் வேணா அவங்க பக்கத்துல உட்கார்ந்துக்கிறேன்" என்று நச்சரிக்க ஆரம்பித்தான்.

நானும் ஓரளவு நார்மலாகி அவளுடன் பேச ஆரம்பித்தேன். அவள் மெட்ராஸிலிருந்து லீவிற்கு பாட்டி வீட்டிற்கு போய்க்கொண்டு இருப்பதாகவும், இன்னும் ஒரு மாத காலம் அரியலூரில் அவள் பாட்டி வீட்டில் இருக்கப் போவதாகவும் கூறினாள். அந்த ஒரு மணி நேர பஸ் பயணத்தில் ஒரு நல்ல தோழியாக மாறிவிட்டிருந்தாள். ஆனால், அவள் கைகள்தான் என்னை மிகவும் இம்சித்து கொண்டிருந்தது. அந்த ஒரு மணி நேரமும் அவள் இடது கையை என் தொடையில் வைத்தே பேசிக்கொண்டு வந்தாள். நான் அன்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை. ஒரு ஸ்டேஜில் என் தொடைகள் என்னையறியாமல் நடுங்க ஆரம்பித்து விட்டது. அதற்குள் எங்கள் ஊர் வந்துவிடவே நான் எழுந்தேன். உடனே அவள் என் கைகளில் ஒரு பேப்பரை திணித்தாள். அதில் அவள் பாட்டி வீட்டு விலாசம் இருந்தது.

இந்த சம்பவம் நடந்தபோது எங்கள் வீட்டில் தொலைபேசி இல்லை. இது ஒரு சாதாரண நிகழ்வு என்று நினைத்து நான் மறந்துவிட்டேன். ஆனால் என்னுடன் வந்த நண்பனோ எல்லோரிடமும் போட்டு கொடுத்துவிட்டான். முக்கியமாக குமாரிடம். குமார் ஒரு காமுகன். நாள்தோறும் பெண்களுடனே சுற்றுபவன். பெண்கள் என்றால் காதலிகள் என்று நினைத்து விடவேண்டாம், எல்லோரும் விபச்சாரிகள். அதனால் நான் கொஞ்சம் அவனிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பேன். காரணம், நான் அவன் கூட அந்த இடங்களுக்கு செல்லாவிட்டாலும், நானும் அவன் கூட சேர்ந்து விபச்சாரிகளிடம் செல்பவன் என்று யாரும் கூறி விடக்கூடாது என்று மிக கவனமாக இருப்பேன்.

அப்படிப்பட்ட குமாருக்கு விசயம் தெரிந்தவுடன் சும்மா இருப்பானா? நேராக வீட்டிற்கு வந்தான். வந்தவன், "என்ன மாப்பிள்ளை? யாருடா அது" என்று கேட்க ஆரம்பித்தான். நானும் விசயத்தை சொல்லி அனுப்பி வைத்தேன். அவன் போன பிறகு எனக்கு ஒரு ஆசை. ஒரு வேளை அவள் கொடுத்த முகவரி உண்மையாக இருக்குமா? கடிதம் எழுதினால் பதில் அனுப்புவாளா? என்று யோசித்தவன், முடிவில் கடிதம் எழுதி பார்க்கலாம் என நினைத்து, ஒரு கார்டில் அவளை விசாரித்து கடிதம் எழுதினேன். என்ன ஆச்சர்யம், அவளிடம் இருந்து உடனே பதில் வந்தது. நான் முன்னெச்சரிக்கையாக என் வீட்டு விலாசம் கொடுக்காமல், என் இன்னொரு நண்பரின் வீட்டு விலாசம் கொடுத்து இருந்தேன். ஆனால் அவனிடம் முன்பே, 'அவளிடம் இருந்து கடிதம் வந்தால் என்னிடம் கொடு' என்று. அவனும் என்னிடம் கொடுத்தான்.

அந்த கடிதத்தில் அவள் நண்பர்கள் எல்லோரையும் விசாரித்து எழுதி இருந்தாள். உடனே அவளுக்கு பதில் கடிதம் எழுதினேன். அந்த கடிதத்திற்கு பதில் எழுதியவள், என்னை அவள் சந்திக்க விரும்புவதாகவும், நிறைய பேச விரும்புவதாகவும், அதனால் அவள் ஊருக்கு வரும்படியும் கூறியிருந்தாள். சந்திக்க வேண்டிய இடத்தையும் கொடுத்து இருந்தாள்.

விசயம் தெரிந்த நண்பர்கள், உடனே போகலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அவள் சந்திக்க விரும்பியது என்னை. ஆனால் இவர்கள் எல்லோரும் சந்திக்க ஆசைப்படுகிறார்களே? என எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஒரு வழியாக அவர்களை சமாளித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். வந்தவுடன்தான் தெரிந்தது 'அந்த கடிதத்தை நண்பனின் கடையிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம்' என்பது.

சரி, சாயந்திரம் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து வந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு அடுத்த நாள்தான் தெரிந்தது!?

-தொடரும்.

Jul 15, 2010

வேதனையும் எரிச்சலும்!

இன்று காலை எங்கள் ஊரில் இருந்து கிளம்பி அலுவலக விசயமாக கோலாலம்பூர் வந்தேன். தொடர்ந்து மீட்டிங். மீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு பங்ஸார் என்ற இடத்திலிருந்து ப்ரிக்பீல்ட் வந்து ஆனந்தவிகடன் வாங்கி விட்டு ஹோட்டலை நோக்கி வந்து கொண்டிருந்தேன். நான் எப்போது தமிழ் டிரவர்களுடைய டாக்ஸியில் ஏறுவதுதான் வழக்கம். ஏதோ நம்மால் ஆனது, நமது மக்கள் பிழைக்கட்டுமே என்ற நப்பாசையில். இன்றும் ஒரு தமிழ் டிரைவர்தான் டாக்ஸி ஓட்டி வந்தார். நன்றாக பேசிக்கொண்டு வந்தார்.

நான் மீட்டிங்கிலிருந்த போது நிறைய போன்கால்கள் வந்தன. பொதுவாக மீட்டிங்கில் இருக்கும்போது நான் போன் அட்டண்ட் செய்வதில்லை. மீட்டிங் முடிந்தவுடன் போனை எடுத்து ஒவ்வொரு நம்பராக பார்த்துக்கொண்டு வந்தேன். அதில் அட்ரஸ் புக்கில் இல்லாத ஒரு நம்பர் இருக்கவே அந்த நம்பருக்கு கால் பண்ணினேன். போன் எடுத்தது என் அம்மா. அத்தையின் போனில் இருந்து பேசி இருக்கிறார்கள். பிறகு போன கையில் வைத்துக்கொண்டு வந்தேன்.

எப்போதும் எந்த தமிழ் டிரைவராக இருந்தாலும் அவர்களுடைய விசிட்டிங் கார்டை கொடுத்து அடுத்த முறை வந்தால் கூப்பிடுங்கள் சார், என்பார்கள். இந்த டிரைவர் தரவில்லை. ஹோட்டல் வந்தவுடன் லக்கஜை எடுத்து வைத்துவிட்டு காரை விட்டு இறங்கியதும், ஏதோ தோன்றவே, பையில் செக் செய்தேன். என் போனை காணவில்லை.

உடனே காரை நோக்கி ஓடினேன். நிற்காமல் போய்விட்டது. உடனே நண்பரின் போன் மூலம் என் நம்பருக்கு தொடர்பு கொண்டேன். போன் ரிங் ஆனது, ஆனால் அவர் எடுக்கவில்லை. எஸ் எம் எஸ் மூலம் என் நண்பரின் நம்பர், ரூம் நம்பர் கொடுத்து போனை என்னிடம் சேர்த்துவிடுங்கள் தெரிவித்தேன். டிரைவர் என்னிடம் பேசிய உரையாடல்கள் மூலம் அவர் ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன். போன் ரிங் ஆகும் வரை எனக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் போனில் வாய்ஸ் மெயில் மட்டுமே வந்தது.

அப்படி என்றால் போனை எடுத்து சிம் கார்டை தூக்கி வீசிவிட்டார் என்றுதானே அர்த்தம். ஒரு தமிழ் டிரைவர் தமிழனுக்கே இப்படி செய்யலாமா?

சாதாரணமான போன் என்றால் கவலைப்பட மாட்டேன். போன வாரம்தான் வாங்கினேன்.

BlackBerry 9700 Bold

விலை 25000 ரூபாய்.

சரி, இனி சாதாரண போன் உபயோகிக்கலாம் என என்னால் நினைக்க முடியாது. ஏனென்றால், செல்போன் நிறுவனத்துடன் ஒருவருட காண்ட்ரெக்ட் போட்டுள்ளேன். மாதம் கமிட்மெண்ட் தொகையாக குறைந்தது 2000ரூபாய் இன்னும் ஒரு வருடத்திற்கு கட்ட வேண்டும்.

வேதனையில் இருக்கிறேன்.

போனை என்னிடம் திருப்பி தராத அந்த டாக்ஸி டிரைவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

Jul 13, 2010

ரவியின் காதல் கதை - 3 (பாகம் 2)

"என்ன ரவி? பேச்சையே காணோம்?" மீண்டும் அவள்தான் என்னை வம்புக்கு இழுத்தாள்.

எனக்கு ஒரே பயம். தொடரலாமா? வேண்டாமா?

நான் பயந்ததற்கும் ஒரு காரணம் உள்ளது.

அது என்ன காரணம்?

ஏனென்றால் கவிதா கல்யாணம் ஆனவள். அவளுக்கு இரண்டு அழகான குழந்தைகள் வேறு. கணவனும் நல்ல மாதிரிதான். அப்படிப்பட்ட அவள் ஒரு கல்யாணம் ஆகாத ஆணுடன் ஏன் இவ்வாறு பேச வேண்டும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அன்று நான் இருந்த மனநிலையில் அவளுடன் பேசும் ஆவலே அதிகமாக இருந்தது.

"ம்ம்" சொல்லு என்றேன்.

"நானும் படிப்பேன் ரவி. எனக்கு ரொம்ப புடிக்கும்"

"படிச்சா படிச்சுட்டு போ. அதை ஏன் என்னிடம் சொல்லுற?"

" உன்னை பார்த்தா சொல்லனும் போல இருந்துச்சு அதனால சொல்லுறேன்"

" சரி. வேற பேசலாம் கவிதா"

" ஏண்டா பயப்படுற. நானே பயப்படுலை. இதெல்லாம் ஒரு ஜாலிக்குடா. சும்மா பேசு ஒன்னும் தப்பு இல்லை" என்று என்னை தூண்டிவிட ஆரம்பித்தாள்.

பின்பு எங்கள் பேச்சு செக்ஸை நோக்கியே சென்றது. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த இந்த பழக்கம் ரொம்ப தீவிரமானது. கவிதாவை தினமும் பார்க்காவிட்டாலோ, பேசாவிட்டாலோ என்னவோ மாதிரி இருந்தது. இருவரும் சிறு வயதில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் என்பதால் யாரும் எங்களை தவறாக நினைக்கவில்லை. அவளுக்கு எந்த குறையும் இல்லை. வாழ்க்கையில் எல்லாமே கிடைத்து இருந்தது. அவள் செக்ஸ் வாழ்வும் நன்றாக இருந்ததாக சொல்வாள். அவளிடம் உள்ள பழக்கமே இரவில் அவள் கணவனுடனான அனுபவத்தை என்னிடம் ஒன்று விடாமல் அப்படியே சொல்லுவாள். அதை எல்லாம் இங்கே நான் எழுதினால் இது ஒரு செக்ஸ் கதை போல் ஆகிவிடும். ஆனால் அவள் சந்தோசமாகவே இருந்தாள். நான்தான் அவளுடைய பழக்க வழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தேன். யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ளவும் பயம். காரணம் அனைவரும் நண்பர்கள். ஒரு வேளை அனைவருக்கும் தெரிந்துவிட்டால் மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிடும். ஆனால் யாரிடமும் சொல்லாமல் இருந்தால் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.

ஆழ்ந்த யோசனைக்கு பிறகு சாமுவிடம் சொன்ன்னேன். ஆனால் அவனோ ஒரு செக்ஸ் கதை கேட்கும் எண்ணத்துடன் கேட்டானே ஒழிய ஒரு யோசனையும் சொல்லவில்லை. நீங்கள் கேட்கலாம், பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருக்க வேண்டியதுதானே? ஏன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தீர்கள்? சொல்வது ரொம்ப ஈசி. அந்த வயதில் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், நீங்கள் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். அவள் பச்சை பச்சையாக தன் அனுபவங்களையும், செக்ஸ் பற்றிய அனைத்தையும் பேசுவாளே தவிர வேறு எந்த மாதிரியும் நடந்து கொள்ளவில்லை.

ஆனால் அந்த வயதில் ஏற்பட்ட அனைத்துவிதமான சந்தேகங்களையும் அவள்தான் தீர்த்து வைத்தாள். ஒரு நாள் அவள் வீட்டில் யாரும் இல்லை. என்னை வரச்சொன்னாள். ஒருவித பயத்துடனே அங்கு சென்றேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மிக மோசமான உடையில் இருந்தாள். அவள் உடையையும் உடலையும் பார்த்து ஒரு நிமிடம் சலனப்பட்டேன். என்னை ஒரு ரூமிற்கு கூட்டிச்சென்று ஒரு பை நிறைய அந்த மாதிரி புத்தகங்களை கொடுத்தாள். அதன்பிறகு என்னை ஒரு நிமிடம் கூட அங்கே இருக்க அனுமதிக்கவில்லை. நானும் உடனே என்வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அடுத்த நாள் காலை. அவள் கூப்பிட்டு அனுப்பியதால் போனேன்.

"ரவி புத்த்கம் எல்லாம் படிச்சியா. அந்த மூன்றாவது கதை எப்படி" என்று மீண்டும் கதைகளை பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். நான் ஒன்றும் அவளை தொடவில்லையே தவிர, அவள் உடம்பை பற்றிய அனைத்தையுமே என்னிடம் சொல்லிவிட்டாள். அவளை பார்த்தாலே ஜிவ் என்று ஆகுமளவிற்கு என்னை ஆக்கிவிட்டிருந்தாள்.

ஒரு முறை பம்பு செட்டிற்கு குளிக்க போயிருந்தேன். அவளும் அவள் வீட்டு வேலைக்கார பெண்ணும் குளித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் உடனே திரும்பினேன்.

"ரவி, ஏன் கிளம்புற. நாங்க குளிச்சா என்ன? வா வந்து குளி" என்று என்னை கட்டாயப்படுத்தினாள்.

என்னவெல்லாம் நான் பார்க்கக்கூடாதோ அனைத்தையும் பார்க்கவைத்தாள். ஒரே ஒரு முறை நான் வீட்டில் படித்துக்கொண்டிருந்த போது என் ரூமிற்கு வந்தாள். ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு சென்றாள்.

" என்னடா, இவ்வளவு நேரம் அவ உன் ரூம்ல என்ன பேசிக்கொண்டிருந்தாள்?" என்று அம்மா கேட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.

நல்ல வேளை, அந்த சமயம் எனக்கு வெளியூர் வேலை கிடைத்ததால் ஊரைவிட்டு கிளம்பினேன். பிறகு நான் ஊருக்கு செல்லும்போது எல்லாம் என்னை கூப்பிட்டு அனுப்புவாள். என்னை உட்கார வைத்து சாப்பாடு போடுவாள். நான் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருப்பாள்.

இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்த போது அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவளுடைய பெண்ணிற்கு இப்போது 18 வயது. கவிதா சிறு வயதில் எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள்.

ரொம்ப யோசனைக்கு பிறகு அவளிடம் கேட்டேன்,

" ஏன் முன்பு என்கிட்ட அப்படி நடந்துகிட்ட?"

" ஏன்னா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா!"

இது என்ன மாதிரியான காதல் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.

பின்குறிப்பு: தினமும் ஆயிரக்கணக்கில் நண்பர்கள் படிப்பதாலும், மெயில்கள் வருவதாலும், நுற்றுக்கணக்கில் பின்னூட்டங்களும், ஓட்டுகளும் வாங்குவதாலும், ரவியின் காதல் கதை எபிசோட் இத்துடன் நிறைவு பெறுகிறது.

Jul 12, 2010

ரவியின் காதல் கதை - 3 (பாகம் 1)

நான் அப்போது கல்லூரி விடுமுறையில் இருந்தேன். காலையில் சாப்பிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தால், ஊர் எல்லாம் சுற்றிவிட்டு திரும்ப வீடு செல்ல மதியம் ஆகும். பிறகு சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன். இரவு 10 மணிக்கு மேல்தான் மறுபடியும் தூக்கம். ஒரு நாள் காலை சீக்கிரமே வெளியே கிளம்பிவிட்டேன். அங்கே என் நண்பனின் கடை ஒன்று இருந்தது. அங்கே சென்று பேப்பர் படித்துவிட்டு செல்லலாம் என் நினைத்து அங்கே சென்றேன். அங்கே சென்றால், என் நண்பனின் தங்கை கவிதா உட்கார்ந்து இருந்தாள். சிறு வயதிலே இருந்தே கவிதாவை தெரிந்து இருந்தாலும், அவள் மட்டுமே இருந்ததால், பேப்பர் படிக்காமல் கிளம்பினேன். கிளம்பிய என்னை கவிதா கூப்பிட்டாள்.

"ரவி, எங்க வந்த நீ பாட்டுக்கு போற"

"இல்லை அப்புறம் வரேன். அருணை வேற காணோம். அருண் வந்ததும் வரேனே"

"இரு. இப்போ வந்துடுவான்" என்றவள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.

"ரவி, அப்புறம் என்ன, பரிட்சை எல்லாம் முடிஞ்சுடுச்சா? நல்லா எழுதியிருக்கியா?"

" ம்ம். நல்லா எழுதி இருக்கேன்"

" ஏதாவது கதை புக்ஸ் இருந்தா கொடு ரவி. ரொம்ப போரா இருக்கு"

" என்கிட்ட கைவசம் இல்ல கவிதா. நான் யார் கிட்டயாவது வாங்கித்தான் தரணும்"

" ஆமாம். உன்கிட்ட கைவசம் இருக்காதுதான். உங்க மாதிரி பசங்க 'அந்த' மாதிரி புக்ஸ்தானே நிறைய வச்சுருப்பீங்க"

கவிதா இப்படி கேட்டதும் என்னால ஒரு கணம் நிற்க கூட முடியலை. 'நம்ம கவிதாவா இப்படி?' என்று ஒரே குழப்பம். பதில் சொல்வதா? வேண்டாமா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னுடைய மவுனத்தை பார்த்த அவளே தொடர்ந்தாள்,

" என்ன ரவி! பேச்சையே காணோம்? ஏன் நான் இப்படி பேசினதுனால ரொம்ப அதிர்ச்சியா இருக்கோ? ஏன் ஆம்பளைங்கதான் இப்படி பேசணுமா? பொம்பளைங்க இப்படி பேசினா, தப்பா?"

" இல்லை, அதுக்கு இல்லை" என்று பதில் சொல்லத்தெரியாமல் மவுனமானேன்.

"சரி ரவி, உங்கிட்ட ஓப்பனாவே கேட்கறேன். உன்கிட்ட அந்த மாதிரி புக்ஸ் இருக்கா இல்லையா"

" என்ன கவிதா இப்படி கேட்கற. நான் அப்படி பட்டவன் இல்லை. என்கிட்ட அந்த மாதிரி புத்த்கமும் இல்லை"

" ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதடா. அப்படிபட்டவன்தான் நேற்று அந்த மாதிரி படம் பார்த்தியோ"

எனக்கு ஒரே குழப்பம். இவளுக்கு எப்படி தெரிந்தது? அந்த மேட்டர ரொம்ப ரகசியமா இல்ல வச்சிருந்தோம்?. குழப்பத்தின் உச்சியில் இருந்தேன்.

"சரி ரவி விடு. உன்கிட்ட புக்ஸ் இருக்கா இல்லியா?"

"என் கிட்ட இல்லை"

" உனக்கு வேணும்னா சொல்லு. நான் தரேன்"

" நீ என்ன சொல்ல வர கவிதா?"

" ஆமாம்பா, உனக்கு வேணும்னா சொல்லு. நான் உனக்கு அந்த மாதிரி புக்ஸ் தரேன்"

" நீ அந்த மாதிரி புக்ஸ் எல்லாம் படிப்பியா?"

" ஏன் படிச்சா என்ன தப்பு"

" என்னால நினைச்சே பார்க்க முடியல"

" ஏன்?"

" உனக்கு என்ன அவசியம் வந்தது?"

"புரியலை"

" நீ படிக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்ல வந்தேன்"

" யாருக்கு அவசியம், யாருக்கு அவசியம் இல்லைனு நீ எப்படி முடிவு செய்ய முடியும் ரவி?"

ஒரு நிமிடம் என் இதய துடிப்பே நின்றுவிடும் போல் ஆனது. என்னால் அங்கே நிற்கவும் முடியவில்லை. அந்த இடத்தைவிட்டு நகரவும் முடியவில்லை. உடம்பே சூடானது. மற்றபடி என் உடலில் ஏற்பட்ட வேதியல் மாற்றங்கள் என்னவாக இருந்திருக்கும் என்பதை படிப்பவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். ஏனென்றால், என்னிடம் பேசிக்கொண்டிருந்தவள் ஒரு அழகு தேவதை. என்னுடைய அந்த இளம் வயதில் இப்படி ஒரு அழகுதேவதையிடம் இப்படி பேசுவது என்பது யாருக்கும் கிடைக்காத ஒன்று.

(படிக்கும் வாசகர்கள் யாரும் ரவியை தவறாக எண்ண வேண்டாம். அவனுடைய காதல் கதைகள் எல்லாவற்றிலுமே அவன் எந்த தவறும் செய்ததில்லை. பெண்களாகத்தான் அவனை அணுகினார்கள். அவன் கெட்டுபோனதாக எந்த வரலாற்றுச் சான்றும் என்னிடம் இல்லை. ஆனால் அவனிடம் பழகிய பெண்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் அவனுடைய அருகாமையை விரும்பி இருக்கிறார்கள். ரவி அந்த அனுபவங்கள் எல்லாவற்றையும் நினைத்து ஜொள் விட்டே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறான் என்பது உண்மை. - என். உலகநாதன்)

" என்ன ரவி? பேச்சையே காணோம்?" மீண்டும் அவள்தான் என்னை வம்புக்கு இழுத்தாள்.

எனக்கு ஒரே பயம். தொடரலாமா? வேண்டாமா?

நான் இப்படி எழுதுவதற்கு காரணமே இப்படியும் சில நபர்கள் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு சொல்லத்தான்.

நான் பயந்ததற்கும் ஒரு காரணம் உள்ளது.

அது என்ன காரணம்?

- தொடரும்

Jul 9, 2010

ரவியின் காதல் கதை - 2 (பாகம் 2)

"குட் மார்னிங் ரவி. Wish You A Happy Pongal"

அவள் சாதரணமாகத்தான் கூறினாள். ஆனால் அதற்கு நான் சொன்ன பதில் என்னை அடுத்த நாள் வம்பில் மாட்டிவிடும் என்று நினைக்கவில்லை.

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, "தேங்க்ஸ்டா" என்று சொல்லிவிட்டேன். அவளும் புன்முறுவலுடன் உள்ளே சென்றுவிட்டாள். இதை அவன் தம்பி கவனித்திருப்பான் போல. அன்று மாலையோ அடுத்த நாளோ சரியாக நினைவு இல்லை, ஜிம்மில் சுதாவின் தம்பி என்னைப் பற்றி ஏதோ தவறாக யாரிடமோ பேசப்போக, அதை கவனித்த என் நண்பன் சாமு அவனிடம் சண்டைக்கு போய் அவனை அடித்துவிட்டான், நான் எவ்வளவோ தடுக்க முயற்சித்தும் என்னால் முடியவில்லை. அவன் அப்படியே போய் சுதாவிடம் சொல்ல அவள் என்னிடம் இரண்டு நாட்கள் பேசவில்லை. இத்தனைக்கும் ஒரே பெட்டியில்தான் டிரெயினில் சென்றோம். இருந்தாலும் என்னிடம் பேசவில்லை. எனக்கோ மனசு கேட்கவில்லை. எப்படி இதை சரிபடுத்துவது?

அன்று ஒரு நாள் அவள் பச்சைக்கலரில் சேலையில் இருந்தாள். அவள் சேலை எல்லாம் சாதாரணமாக கட்டுபவள் இல்லை. அவள் அப்போது பதினொன்றாம் வகுப்புதானே படித்துக்கொண்டிருந்தாள். அவளை பச்சைக்கலர் சேலையில் பார்த்தவுடன், கவிதை மாதிரி இப்படி ஒன்று எழுதி அவளிடம் கொடுத்தேன்:

உன்னைப்போல இந்த பச்சைசேலையை
உலகத்தில் அழகாக கட்ட
உண்மையில் சொல்லப்போனால்
உயிருடன் எவருமில்லை.

இதையும் ஒரு கவிதை என்று ஒப்புக்கொண்டு அதற்கு அவள் சிரித்த சிரிப்பு இருக்கே இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. இப்படியாக எங்கள் நட்பு மிகவும் இருக்கமானது. அவள் எங்கள் வீட்டிற்கு வருவதும் நான் அவள் வீட்டிற்கு செல்வதும் மிகவும் சாதாரணமானது.
ஒரு நாள் அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் யாருமில்லை. அவள் மட்டும்தான். அதனால் அங்கே இருக்க பிடிக்காமல் கிளம்ப முயன்றேன். ஆனால் என் கையை பிடித்து அங்கே இருந்த ஷோபாவில் உட்கார வைத்தாள். என் அருகில் உட்கார்ந்தாள். என்னதான் நாங்கள் டிரெயினில் எதிர் எதிரே அமர்ந்து வந்தாலும், அவள் வீட்டில் தனிமையில் அவள் அருகில் உட்கார ஒரு மாதிரி ஆனது. சிறிது நேரத்தில்,

" ரவி, உனக்கு கை ரேகை ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளதா?" என்றாள்.

"ஏன்?" என்றேன்.

"இல்லை, எனக்கு பார்க்கத்தெரியும்" என்றவள், என் ஒரு கையை எடுத்து அவள் மடியில் வைத்துகொண்டு ரேகை பார்க்க ஆரம்பித்தாள். நான் அப்போது இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு 10வது படிக்கும் மாணவனுக்கு இது கொஞ்சம் அதிகம்தானே. இதேபோல் அவள் என்னுடன் எப்போதும் பழக நான் வேறு ஒரு உலகத்தில் அவளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தேன்.

ஆனால், என் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லும் தைரியம் எனக்கு வரவேயில்லை. ஆனால் என்ன என் மனதில் அப்போது இருந்தது என்று எனக்கு அப்போது தெரியுமா? என்று இப்போது நினைவில்லை. நாளுக்கு நாள் எங்களின் நெருக்கம் அதிகம் ஆனது. என்னால் அவளை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை. பத்தாவது பொது தேர்வு வரவே, அவள்தான் என்னை படிப்பில் அதிகம் கவனம் செலுத்துமாறு கூறினாள். தேர்வும் முடிந்தது. மிக நல்ல மதிபெண்கள் எடுத்தேன். நண்பர்கள் அனைவரும் முதல் குரூப் எடுக்க, நான் மட்டும் அவளின் அருகாமைக்காக அவள் படித்த மூன்றாவது குரூப் எடுத்தேன். எவ்வளவு பெரிய தவறை நான் செய்து இருக்கிறேன் என்று அப்போது நான் உணரவில்லை. அந்த தவறை சரிசெய்ய நான் கொடுத்த விலை மிக அதிகம்.

+2 முடிந்து காலேஜ் சென்றேன். அவள் காலேஜும் மிக அருகில் இருந்தது. அடிக்கடி இருவரும் சேர்ந்தே சென்றோம், பஸ்ஸில், இரயிலில் இப்படி. எல்லாவற்றை பற்றியும் பேசுவோம். ஆனாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலை பரிமாறிக்கொள்ளவில்லை. அது ஏன் என்று இன்றுவரை பிடிபடவில்லை.

ஒரு நாள் என் வீட்டிற்கு அவள் அக்காவுடன் வந்தாள். அவள் அக்கா உள்ளே போனவுடன் சுதா என் ரூமிற்கு வந்தாள். எங்கள் வீட்டில் வரவேற்பு அறைக்கு அடுத்து என் அறை உள்ளது. வீட்டில் நுழைந்தவுடன் என் ரூமிற்குள் நுழைந்தவள் என் அருகே அமர்ந்து கொண்டாள். பேச்சு எங்கெங்கோ சென்று கொஞ்சம் "அங்கேயும்" சென்றது.

ஏதோ ஒரு மூடில் என்னையறியாமல் அப்படியே அவளை இறுக்கி கட்டியணைத்து அவள் திமிற திமிற அழுத்தி ஒரு முத்தம் கொடுத்து விட்டேன். அதை எதிர்ப்பார்க்காத சுதா சடாரனெ என்னை விலக்கிவிட்டு, ரூம் கதவை திறந்து வெளியே சென்றுவிட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அவள் கண்கள் கலங்கி இருந்தது.

" நீயுமா உங்க அக்காகூட வந்தே? இவ்வளவு நேரம் எங்கே இருந்தன்னு" எங்க அம்மா வீட்டிலிருந்து கேட்பதும், அதற்கு என் அக்கா, " வேற எங்க ரவி கூட பேசிட்டு இருந்திருப்பா" என்று பதில் அளித்ததும் என் காதில் விழுந்தது. எனக்கு ஒரே பயம் ஆகிவிட்டது. என் அப்பா பயங்கர ஸ்ட்ரிக்ட். அம்மா பரவாயில்லை. இவள் வீட்டில் சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்று ஒரே கவலையாய் இருந்தது. உடம்பே நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று என்னையே நான் நொந்து கொண்டேன்.

உடனே வீட்டை விட்டு வெளியேறி சாமு வீட்டிற்கு சென்றேன். நடந்ததை கூறினேன். அவனோ, "மாப்புள, கிஸ் தானே பண்ணின. என்னவோ மேட்டர முடிச்சுட்டா மாதிரி வருத்தப்படுற. கவலைப்படாத. நடப்பது நடக்கட்டும்" என்றான். கொஞ்ச நேரம் அங்கே இருந்துவிட்டு, இருட்டும் தருவாயில் பயத்துடனே வீட்டிற்கு சென்றேன். ஆனால், வீடே அமைதியாக இருந்தது. யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. பிற்குதான் தெரிந்தது, அவள் ஒன்றும் யாரிடமும் சொல்லவில்லை என்று.

உடனே வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறியது. "வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை என்றால், அவளுக்கு பிடித்திருக்கிறது என்றுதானே அர்த்தம். நாம் ஏன் மேலும் முயற்சிக்கக்கூடாது"

ஆனால் அதற்கப்புறம் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. பல நாட்கள் பஸ்ஸில் போகும் போதும், டிரெயினில் போகும் போதும் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சரியாக அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு வேலை கிடைத்து வெளியூர் சென்று விட்டேன். சில வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றேன்.

நான் வந்ததை அறிந்து கொண்ட சுதா, என் வீட்டிற்கு வந்தாள். வந்தவள், உன்னுடன் "தனியாக பேச வேண்டும்" என்றாள். அந்த முத்தத்திற்கு பிறகு அவள் பேசிய முதல் பேச்சு அது. உடனே என் ரூமிற்கு சென்றோம்.

ஏதோ பேச ஆரம்பித்தவள் பின்பு,

" எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மாப்பிள்ளை ஓரளவு முடிவு செய்துவிட்டார்கள்" என்று சொன்னவள் என்னையே பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். அவள் என்ன சொன்ன வருகிறாள் என எனக்கும் புரியவில்லை. அவள் என்ன பதிலை எதிர்பார்த்தாளோ அது என்னிடமிருந்து வரவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. அவளும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அந்த நேரத்தில் என் அம்மா வரவே எங்கள் பேச்சு அத்துடன் முடிந்தது. அன்று இரவே ஊருக்கு கிளம்ப வேண்டியிருந்தது.

அடுத்த ஆறு மாதம் கழித்து தீபாவளிக்காக ஊருக்கு சென்றிருந்தேன். எதேச்சையாக அன்றைக்கு சாயந்திரம் கோவிலில் சுதாவை பார்க்க நேர்ந்தது. அவளை மட்டும் அல்ல. அவள் கணவனையும் சேர்த்து. என்னை பார்த்தவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வருவதை பார்த்தேன். என் கண்களிலும்தான்.

அந்த கண்ணீர் துளிகளுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது இப்போது புரிகிறது.

Jul 7, 2010

ரவியின் காதல் கதை - 2 (பாகம் 1)

சில விளக்கங்கள்:

01. இந்த கதைகளில் வரும் ரவி, என்.உலகநாதன் ஆகிய நான் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கிறேன்.

02. ஒரு ஆளுக்கு எப்படி இத்தனை காதல்கள் வரும் என்று கேட்க கூடாது. அவனுக்கு வந்தது அவ்வளவுதான். அது எல்லாம் காதலா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

03. ரவியிடம் உள்ள ஒரே குறை அவனிடம் பேசும் பெண்கள் எல்லாம் அவனை காதலிப்பதாக நினைத்துக்கொள்வது. ஆனால், அதுதான் அவனது + பாயிண்டாக அவன் நினைத்துக்கொள்வான்.

04. ரவியின் ஏகப்பட்ட கதைகள் கைவசம் உள்ளது. எல்லாவற்றையும் தொகுத்து நானே புத்தகம் போட்டு நானே வாங்கி நானே படித்துக்கொளவதாக ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்கிறேன்.

இனி ரவி கதையை தொடர்வான்.

நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்த சமயம். அப்போதுதான் எனக்கு மீசை அரும்ப ஆரம்பித்திருந்தது. நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த நேரம். அந்த முதல் காதல் நான் ஒன்பதாவது படிக்கும்போது ஆரம்பித்தது. அது விரிவாக பின்னால் ஒரு கதையில் பார்க்கலாம். ஒரு நாள் பரிட்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பார்த்து யாரோ வீட்டிற்கு வருவது தெரிந்தது. யாரென்று பார்த்தேன். ஒரு அழகான பெண் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

" உங்க அக்கா இருக்காங்களா?"

'' இருக்காங்க. நீங்க யாரு?''

'' உங்க அக்காவோட ப்ரெண்டோட தங்கை. அக்கா இந்த புத்தகத்தை கொடுத்துட்டு வர சொன்னாங்க"

நான் சென்று அக்காவை கூப்பிட்டேன்.

'' உள்ள வா சுதா" அப்பாடா பெயர் தெரிந்துவிட்டது. பிறகு அவள் ஒரு அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு போய்விட்டாள். அதன் பிறகு எனக்கு என்ன ஆனது என தெரியவில்லை. படிக்க முடியவில்லை. மனம் அவள் பின்னே சுத்த ஆரம்பித்தது. என் நண்பன் சாமுவின் வீட்டிற்கு சென்றேன். அவனிடன் விசயத்தை சொன்னேன். " நாளைக்கு காலைல உனக்கு முழு விபரமும் சொல்கிறேன்'' என்றான்.

அடுத்த நாள் காலை முழு விபரத்துடன் வந்தான். அவர்கள் புதிதாக ஊருக்கு வந்துள்ளார்கள். அவளுக்கு ஒரு அக்கா மற்றும் இரண்டு தம்பிகள். எல்லாமே பிடித்து இருந்தாலும், ஒரு விசயம் மட்டும் எனக்கு பிடிக்கவில்லை. சுதாவிற்கு என்னை விட ஒரு வயது அதிகம். அதற்கு என் நண்பன் சாமு கூறினான், " மாப்பிள்ளை, காந்தியடிகள் மனைவி காந்தியவிட ஒரு வயசு அதிகம் தெரியுமா? அதெல்லாம் ஒரு விசயமே இல்லை'' என்று சொல்லி அவன் என் கல்யாணம் வரை சென்று விட்டான்.

நாங்கள் பள்ளிக்கு தினமும் ட்ரெயினில்தான் செல்வோம். எனக்கு ஓரளவு பாட வரும் என்பதால், நண்பர்கள் என்னை தினமும் பாட சொல்வதுண்டு. நான் பாட, நண்பர்கள் எல்லாம் தாளம் போட ஒரே கூத்தும் கும்மாளமுமாக செல்வோம். அன்று ஒரு நாள் பள்ளியிலிருந்து கொஞ்சம் லேட்டாக ரயில்வே ஸ்டேசன் வந்தேன். வந்தால் நான் செல்லும் டிரெயின் ஏற்கனவே போய் விட்டது. என்ன செய்வது? அடுத்த டிரெயினுக்கு இன்னும் ஒரு ஒரு மணி நேரம் காத்து இருக்க வேண்டும்.

ஒரு வழியாக அடுத்த டிரெயினில் ஏறி உட்கார்ந்தேன். 10 நிமிசத்தில் அடுத்த ஸ்டேசனில் வண்டி நின்றது. யாரோ ஓடி வந்து ஏறுவது போல் இருக்க யார்? என்று பார்த்தேன். பார்த்தால் சுதா. எங்கள் பெட்டியில் அவ்வளவு கும்பல் இல்லை. என் எதிர்புறம் அமர்ந்தவள் என்னை பார்த்து மிகவும் சாதாரணமாக கேட்டாள், " ஏன் ரவி லேட்?"

" பசங்க கூட பேசிட்டு இருந்ததுல பர்ஸ்ட் டிரெயின மிஸ் பண்ணிட்டேன். நீங்க ஏண் லேட்?"

" எனக்கு ஸ்பெசல் கிளாஸ் இருந்தது ரவி" என்று பேச்சுக்கு பேச்சு ரவி ரவி என்று பேச ஆரம்பித்தாள். ஆனால், என்னால்தான் சுதா என்று கூப்பிட முடியவில்லை. காரணம் ஏன் என்று தெரியவில்லை. எல்லா விசயங்களையும் பேச ஆரம்பித்தாள். அவள் நல்ல கலர். நல்ல புஷ்டியான உடல் அமைப்பை கொண்டவள். அவள் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், எனக்குத்தான் வேர்த்துக்கொண்டிருந்தது. கண்கள் ஒரு இடத்தில் இருந்தால்தானே?

ஊர் வந்ததும் நாங்கள் இருவரும் சேர்ந்தே நடந்து அவரவர் வீட்டிற்கு சென்றோம். இருட்டிவிட்டிருந்தது. யாராவது பசங்க பார்க்க மாட்டாங்களா? என ஏங்கி ரோடை பார்த்தால், ஒரு பயலை காணோம். அன்றும் என்னால் சரியாக படிக்க முடியவில்லை. அன்றும் சாமுவை பார்க்க ஓடினேன். அவன் தினமும் ஏற்றிவிட அவள்மேல் தீவிரமாக காதல் கொள்ள ஆரம்பித்தேன்.

நான் தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து படிப்பது வழக்கம். எழுந்து பல் விளக்கியதும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு காபி வாங்க ஹோட்டலுக்கு செல்வேன். அந்த ஹோட்டல் முதலாளியின் பையன் என் நண்பர்களுல் ஒருவன். காலையில் ஹோடலுக்கு போனவுடன் அவன் கூட சிறிது நேரம் காபி வரும் வரை பேசிக்கொண்டிருப்பேன். அத்ற்குள் தூக்கம் கலைந்துவிடும். பின்பு படிக்க செல்வேன். முக்கியமான ஒரு விசயத்தை சொல்ல மறந்துவிட்டேன். சுதாவின் வீடு ஹோட்டலுக்கு மிக அருகில் இருந்தது.

அன்று பொங்கல். இருந்தாலும் படிப்பதற்காக காலையில் எழுந்துவிட்டேன். காபி வாங்க செல்கையில் அவள் வீட்டை நெருங்குகையில்தான் கவனித்தேன். அவள் பெரிய கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். என்னை அந்த நேரத்தில் அவள் எதிர்பார்க்கவில்லை. என்னை பார்த்தவள்,

" குட் மார்னிங் ரவி. Wish You A Happy Pongal"

அவள் சாதரணமாகத்தான் கூறினாள். ஆனால் அதற்கு நான் சொன்ன பதில் என்னை அடுத்த நாள் வம்பில் மாட்டிவிடும் என்று நினைக்கவில்லை.

- தொடரும்.

Jul 5, 2010

ரவியின் காதல் கதை - 1

நான் சொல்லப்போகும் என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். நான் என்றால் என்.உலகநாதன் ஆகிய நான் அல்ல. அந்த 'நான்' நானாகவும் இருக்கலாம் அல்லது நீங்களாவும் இருக்கலாம். ஆனால், இந்த நானுக்கும் ஒரு பெயர் தேவைப்படுகிறது. 'நான்' பெயர் ரவி என்று வைத்துக்கொள்வோம்.

நான் ராணிப்பேட்டையில் வசித்த போது நடந்த சம்பவம் இது. அதற்கு முன்பு என்னைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நான் நல்ல உயரம். ஓரளவு குண்டு. கொஞ்சம் கருப்பு. ஆனால் கெட்ட பழக்கம் என்று ஒன்றும் இல்லாத ஒரு நல்ல பையன். இருந்த ஒரே கெட்ட பழக்கம், பார்க்கும் பெண்கள் எல்லாம் என்னையே பார்ப்பதாக நினைத்துகொள்வது. என்னையே காதலிப்பதாக நினைப்பது. ஒருவருக்கு ஒரு காதல்தான் வரும் என்று என்றுமே ஒத்துக்கொள்ளாதவன். நிறைய பெண் நண்பிகள் வைத்திருந்தவர்களை விட நான் அடைந்த சந்தோசம்தான் ரொம்ப அதிகம். அவர்களுக்கு எல்லாம் ஒரு சில பெண்கள்தான். ஆனால், எனக்கு நிறைய பெண்கள். கனவுகள் முழுவதும் பெண்களே நிறைந்திருந்த காலம் அது.

நான் அதிகம் வருத்தப்படுவது நடிகை ஸ்ரீதேவிக்காகவும், நடிகை ரேவதிக்காகவும்தான். ஏனென்றால் அவர்கள்தான் என்னால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அதெல்லாம் மிகவும் பழைய கதைகள். நான் என் கதைக்கு வருகிறேன். அப்படி வாழ்ந்து கொண்டிருந்த என்னிடம், என்னுடைய பாஸ், "ரவி, நாம கம்ப்யூட்டர் க்ளாஸ் சேர்ந்து படிக்கலாமா" என்றார்.

"படிக்கலாம் சார்" என்றேன். அப்போதுதான் 'மைக்ரோஷாப்ட் ஆபிஸ்' வந்திருந்த நேரம். அந்த வாரமே கம்பூட்டர் கிளாஸில் சேர்ந்தோம். நான் வாழ்க்கையில் மிகவும் இழந்த ஒரு விசயம் என்னவென்றால், கோஎஜுகேஷனில் படிக்காமல் முழுக்க முழுக்க பசங்க பள்ளிக்கூடத்தில் படித்ததுதான். கம்ப்யூட்டர் கிளாஸில் சேர்ந்ததும் எனக்கு ஏக மகிழ்ச்சி. காரணம் நிறைய பெண்கள். முதலில் என்னை கவர்ந்தவள் யார் தெரியுமா? கம்ப்யூட்டர் டீச்சர். ஆனால் அவள்தான் அந்த நிறுவன முதலாளியின் தங்கை. அவள் பெயர் ராதா என்று வைத்துக்கொள்வோம். அதனால் எனக்கு என்ன? முதல் நாள் நான் வகுப்பில் கேட்ட கேள்வியிலிருந்தே எங்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

அப்புறம் தினமும் அவளிடம் பேசுவதற்கு என்றே தினமும் கொஞ்சம் முன்பாகவே வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தேன். இதை கவனித்த என் பாஸ், " அது என்ன? உன்னிடம் மட்டும் எல்லா பெண்களும் வந்து பேசுகிறார்கள்" என்று கேட்பார். அவருக்கு ஏற்கனவே மூன்று பெண்கள் குழந்தைகள் இருந்ததை அவர் மறந்த தருணம் அது. ஆனால், ஜொள் எல்லோருக்கும் பொதுவானதுதானே? இப்படி தினமும் எங்கள் நட்போ அல்லது காதலோ ஏதோ ஒன்று வளர்ந்து கொண்டிருந்த போது, புதிதாக ஒரு பெண் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். பெயர் கீதா மிக அழகு. டீச்சரை விட அழகு. பார்த்ததுமே இன்றைக்கு கனவில் இவள்தான் என்று என் மனம் சொன்னது.

அந்த பெண்ணும் என்னுடன் நன்றாக பழக ஆரம்பித்தாள். ஆனால் எல்லாமே பாட சம்பந்தமாகத்தான் இருந்தது. நான் இவளுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தால், ராதாவுக்கு கோபம் வரும். இதை பார்க்கும் என் பாஸுக்கு என் மேல் கோபம் வரும்.

"என்னையா இது. எங்களை எல்லாம் பார்த்தா மனுசனா தெரியலையா அவர்களுக்கு? உன் கிட்டேயே உரசுராளுக" என்று மிகவும் ஆதங்கபடுவார்.

அந்த நிலையில் ஒரு நாள், அந்த கம்பூட்டர் நிறுவனத்தின் ஆண்டுவிழா நடந்தது. அந்த ஆண்டு விழாவை தொகுத்து வழங்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. நானும் டீச்சரும் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். இரவு 12 மணிவரை எல்லாம் ரிகர்சல் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நாள் கொஞ்சம் அதிகப்படியாக நடந்துவிடுவோமோ என்று நினைத்த வேளையில் அவள் அண்ணன் வரவே எதுவும் நடக்காமலே போய் விட்டது.

இந்த நிலையில் கீதாவும் தினமும் வகுப்பில் என் அருகில் உட்கார ஆரம்பித்தாள். டீச்சருக்காவது என் வயது. ஆனால் இவள் சின்னப்பெண். இருந்தாலும் எனக்குத்தேவை கொஞ்சம் ஜாலி அவ்வளவுதான்.

இப்படி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த நான் இப்போது இதை ஏன் உங்களிடம் சொல்லி புலம்பிக்கொண்டிருக்கிறேன்? மேலே படியுங்கள். ஒரு வேளை உங்களுக்கு புரியலாம்.

அப்படி இப்படி என்று இனிமையாக என்னிடம் பழகிக்கொண்டிருந்த ராதா ஒரு நாள் இரவு என்னிடம், " ரவி, ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால் கொடுங்கள். இந்த மாத பீஸில் கழித்துக்கொள்கிறோம்" என்றாள்.

நானும் என்னவோ ஏதோ என்று கொடுத்துவிட்டு வந்தேன். அடுத்த நாள் காலை என் நண்பரிடம் இருந்து ஒரு போன். ராதாவிற்கும் அங்கே அருகில் உள்ள ஒரு கடை ஓனருக்கும் ஏற்கனவே பழக்கம் என்றும், இரவோடு இரவாக இருவரும் எஸ்கேப் என்றும் கூறினார். எனக்கு ஒரு விசயம் மட்டும் விளங்கவே இல்லை. நான் பழகிய அந்த நாட்களில் என்னால் சிறிதளவு கூட ராதாவை சந்தேகப்படவே முடியவில்லை.

பிறகு ஒரு வாரம் கழித்து க்ளாஸ் போனேன். ஆயிரம் ரூபாய் போனது போனதுதான். நான் கொடுத்ததுதான் யாருக்கும் தெரியாதே? மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டேன். என் கூடவே வகுப்பிற்கு வந்த என் பாஸ், " ஏன் கவலைபடற, ராதா போனா என்ன? அதான் உனக்கு கீதா இருக்காளே?" என்றார். 'ஆமாம் இல்லை' என நினைத்து வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். ஆனால், அந்த கீதா என்னிடம் பாடத்தை தவிர வேறு எதையுமே பேசியது இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு இங்கே கூறிக்கொள்கிறேன்.

அப்படிப்பட்ட கீதா, ஒரு நாள் இரவு என்னிடம் அனைவரும் இருக்கும் போதே ஒரு கடிதத்தை கொடுத்தாள். கொடுத்தவள் உடனே திரும்பி பார்க்காமல் ஓடி விட்டாள். அதை என்னவென்று பிரித்து படிக்க கூட விடவில்லை நண்பர்கள். உடனே பார்ட்டி கொடு என்று என்னை அப்படியே பாருக்கு தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். எல்லோருக்கும் டிரிங்க்ஸ், சாப்பாடு வாங்கி கொடுத்ததில் மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் காலி.

இரவு ரூமுக்கு வர மணி 10 ஆனது. அப்போதுதான் நினைவு வந்தது. இன்னும் அந்த கடிதத்தை படிக்கவில்லையே? சரி, இங்கு படித்தால் அனைவரும் கிண்டல் செய்வார்கள். ஏனென்றால் எங்கள் ரூமில் மொத்தம் ஐந்து பேர் தங்கி இருந்தோம். அதனால், கடிதத்தை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றேன். பிரித்தேன். படித்தேன். கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது:

" அன்புள்ள ரவி அண்ணா, நலமா? ஏன் இப்போது எல்லாம் சோகமாக இருக்கின்றீர்கள். ராதா போனால் என்ன? உங்களுக்கு நல்ல ஒரு பெண் கிடைக்காமலா போவார்கள். அதனால், எப்போதும் போல் கலகலப்பாக இருங்கள்.

இப்படிக்கு, உங்கள் அன்பு தங்கை கீதா"

நான் ஏன் அடுத்த நாளிலிருந்து கம்ப்யூட்டர் வகுப்பிற்கு செல்லவில்லை என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. நானும் சொல்லவில்லை.

Jul 1, 2010

சந்தோசமான நாள்!

30.06.2004 மற்றும் 01.07.2004 என்னால் மறக்க முடியாத நாட்கள். 30.06.2004 அன்று எங்கள் கம்பனியில் Inspection and Investigation க்காக Anti Dumping Duty (ADD) Department யிலிருந்து வந்து இருந்தார்கள். ADD - அப்படி என்றால் என்ன? உதராணத்திற்கு எங்கள் கம்பனியையே எடுத்துக்கொள்வோம். நாங்கள் உற்பத்தி செய்யும் ப்ராடக்டை, மலேசியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் வாங்காமல், அதே ப்ராடக்டை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வார்களே ஆனால், நாங்கள் எந்த நாட்டிலிருந்து அந்த ப்ராடக்ட் இறக்குமதி ஆகிறதோ அந்த நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் மீது மலேசியா அரசாங்கம் மூலமாக, அந்த நாடுகளின் அரசாங்கம் உதவியுடன் அவர்களின் மேல் கேஸ் போடலாம். அப்படி கேஸ் போட்டு நாம் ஜெயித்தால், மலேசியா அரசாங்கம், அந்த நாடுகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் பொருட்களின் மேல் இறக்குமதி வரி போடும். அப்படியென்றால், யாராவது மலேசியாவிலிருந்து அந்த பொருட்களை இறக்குமதி செய்தால் வரி கட்டிய பிறகுதான் பொருட்களை யூஸ் செய்ய முடியும். ஆனால் எங்கள் கம்பனியின் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக்காக எங்கள் கம்பனி பொருட்களைத்தான் வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள். ஆனால், அப்படி அந்த வரியை அரசாங்கம் போடுவதற்கு நிறைய ரிக்கார்ட்கள் எல்லாம் காண்பித்து ப்ரூவ் செய்ய வேண்டும். இப்படியே எழுதிக்கொண்டு போனால் இது ஒரு துறை சார்ந்த பதிவு ஆகிவிடும் அபாயம் இருப்பதால், இதை இத்தோடு நிறுத்திவிட்டு விசயத்திற்கு செல்வோம்.


30.06.2004 அன்று அந்த Inspection நல்லபடியாக முடிந்து அனைவரையும் அனுப்பி விட்டு நான் வீட்டிற்கு செல்ல இரவு மணி 7 ஆனது. அன்று ஒரு நண்பரின் மகளின் பிறந்த நாள் விழா இருந்ததால், நானும் என் பெண்ணும் சென்று வந்தோம். வீட்டிற்கு வந்து சேர மணி 10. சரி, படுக்கலாம் என நினைத்து ரூமுக்கு சென்றால், மாமியார் வந்து, என் மனைவிக்கு இடுப்பு வலி வந்து விட்டதாக கூறினார். ஆம், அப்போது என் மனைவி நிறைமாத கர்ப்பம். முதல் குழந்தை இந்தியாவில் பிறந்து, பிறகு அவர்கள் மலேசியா வந்து சேர 9 மாதங்கள் ஆனதால், அடுத்த குழந்தை பிரசவம் மலேசியாவிலேயே பார்த்துக்கொள்ளலாம் என முடிவு எடுத்திருந்தோம். வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லை. அதனால், உதவிக்கு மாமியார் வந்து இருந்தார்கள். அவர்கள் என் மனைவிக்கு இடுப்பு வலி என்று சொன்னதும், நான் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமால், "எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம்" என சொல்லிவிட்டு படுக்க சென்றேன்.

கடுப்பான அவர்கள், "என்னங்க, நான் சொல்லிட்டே இருக்கேன். பயமா இருக்கு. வாங்க ஆஸ்பிட்டல் போகலாம்" என்றார்கள். அங்கு இருந்து நாங்கள் ரெகுலராக பார்க்கும் பிரைவேட் ஹாஸ்பிட்டல் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். பிறகு ஒரு வழியாக தேவையானவைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட இரவு 11 மணி ஆனது. ஹாஸ்பிட்டல் சென்று அடைய இரவு 12 மணி. டாக்டர் யாரும் இல்லை. ஹெட் நர்ஸ்தான் இருந்தார். நல்ல வேளை உடனே செக் செய்துவிட்டு, " இது சாதாரண வலி போல் தான் தெரிகிறது. எதற்கும் இங்கே தங்கிக்கொள்ளுங்கள். காலையில் டாக்டர் வந்ததும் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இரவு முழுவதும் தூங்கவில்லை.


முதன்முறையாக பயம் வந்தது. இந்தியாவிற்கே சென்று இருந்திருக்கலாமோ? எனத் தோன்றியது. காலையில் வந்த டாக்டர், " எதற்கும் ஒரு ஊசி போடுகிறேன். வலி வருகிறதா? என்று பார்ப்போம்" என்று சொல்லி ஊசி போட்டார். முதல் பெண் சுகப்பிரசவம். அடுத்த குழந்தையும் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என வேண்டாத தெய்வமில்லை. சினிமா படத்தில் வருவது போலேயே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தேன். என் பெண் வேறு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள். ஆம்பிளை பிள்ளையாக பிறக்க வேண்டும் என பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். சரியாக 11.35க்கு ஒரு நர்ஸ் வந்து,

" சார், உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவம்" என்று கூறினார். உடனே கையில் இருந்த பணத்தை எடுத்து அந்த நர்ஸிடம் கொடுத்தேன். அப்போது ஏற்பட்ட சந்தோசத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

அதே சந்தோசமும் மகிழ்ச்சியும் இன்றும். ஆம். இன்று என் மகனின் பிறந்த நாள்.

26.06.2010 அன்று 10 வயது முடிந்து 11ம் வயதில் அடி எடுத்து வைத்த என் மகள் தேவதர்ஷினியும், இன்று 6 வயது முடிந்து 7ம் வயதில் அடி எடுத்து வைக்கும் என் மகன் வெங்கடேஷும், வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று, நோய் நொடி இல்லாமல், குடும்பத்துக்கும், இந்த சமுதாயத்திற்கும், இந்திய நாட்டிற்கும் நல்லது செய்பவர்களாக வாழ வேண்டும் என்று, எங்கள் குல தெய்வம் கொப்பாட்டி அம்மனையும், எல்லாம் வல்ல ஏழுமலையானையும், சமயபுரம் மாரியம்மனையும், கெமாமன் மாரியம்மனையும் வேண்டி, வாழ்த்துகிறேன்.

ஐ லவ் யூடா செல்லங்களா.