Jul 5, 2010

ரவியின் காதல் கதை - 1

நான் சொல்லப்போகும் என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். நான் என்றால் என்.உலகநாதன் ஆகிய நான் அல்ல. அந்த 'நான்' நானாகவும் இருக்கலாம் அல்லது நீங்களாவும் இருக்கலாம். ஆனால், இந்த நானுக்கும் ஒரு பெயர் தேவைப்படுகிறது. 'நான்' பெயர் ரவி என்று வைத்துக்கொள்வோம்.

நான் ராணிப்பேட்டையில் வசித்த போது நடந்த சம்பவம் இது. அதற்கு முன்பு என்னைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நான் நல்ல உயரம். ஓரளவு குண்டு. கொஞ்சம் கருப்பு. ஆனால் கெட்ட பழக்கம் என்று ஒன்றும் இல்லாத ஒரு நல்ல பையன். இருந்த ஒரே கெட்ட பழக்கம், பார்க்கும் பெண்கள் எல்லாம் என்னையே பார்ப்பதாக நினைத்துகொள்வது. என்னையே காதலிப்பதாக நினைப்பது. ஒருவருக்கு ஒரு காதல்தான் வரும் என்று என்றுமே ஒத்துக்கொள்ளாதவன். நிறைய பெண் நண்பிகள் வைத்திருந்தவர்களை விட நான் அடைந்த சந்தோசம்தான் ரொம்ப அதிகம். அவர்களுக்கு எல்லாம் ஒரு சில பெண்கள்தான். ஆனால், எனக்கு நிறைய பெண்கள். கனவுகள் முழுவதும் பெண்களே நிறைந்திருந்த காலம் அது.

நான் அதிகம் வருத்தப்படுவது நடிகை ஸ்ரீதேவிக்காகவும், நடிகை ரேவதிக்காகவும்தான். ஏனென்றால் அவர்கள்தான் என்னால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அதெல்லாம் மிகவும் பழைய கதைகள். நான் என் கதைக்கு வருகிறேன். அப்படி வாழ்ந்து கொண்டிருந்த என்னிடம், என்னுடைய பாஸ், "ரவி, நாம கம்ப்யூட்டர் க்ளாஸ் சேர்ந்து படிக்கலாமா" என்றார்.

"படிக்கலாம் சார்" என்றேன். அப்போதுதான் 'மைக்ரோஷாப்ட் ஆபிஸ்' வந்திருந்த நேரம். அந்த வாரமே கம்பூட்டர் கிளாஸில் சேர்ந்தோம். நான் வாழ்க்கையில் மிகவும் இழந்த ஒரு விசயம் என்னவென்றால், கோஎஜுகேஷனில் படிக்காமல் முழுக்க முழுக்க பசங்க பள்ளிக்கூடத்தில் படித்ததுதான். கம்ப்யூட்டர் கிளாஸில் சேர்ந்ததும் எனக்கு ஏக மகிழ்ச்சி. காரணம் நிறைய பெண்கள். முதலில் என்னை கவர்ந்தவள் யார் தெரியுமா? கம்ப்யூட்டர் டீச்சர். ஆனால் அவள்தான் அந்த நிறுவன முதலாளியின் தங்கை. அவள் பெயர் ராதா என்று வைத்துக்கொள்வோம். அதனால் எனக்கு என்ன? முதல் நாள் நான் வகுப்பில் கேட்ட கேள்வியிலிருந்தே எங்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

அப்புறம் தினமும் அவளிடம் பேசுவதற்கு என்றே தினமும் கொஞ்சம் முன்பாகவே வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தேன். இதை கவனித்த என் பாஸ், " அது என்ன? உன்னிடம் மட்டும் எல்லா பெண்களும் வந்து பேசுகிறார்கள்" என்று கேட்பார். அவருக்கு ஏற்கனவே மூன்று பெண்கள் குழந்தைகள் இருந்ததை அவர் மறந்த தருணம் அது. ஆனால், ஜொள் எல்லோருக்கும் பொதுவானதுதானே? இப்படி தினமும் எங்கள் நட்போ அல்லது காதலோ ஏதோ ஒன்று வளர்ந்து கொண்டிருந்த போது, புதிதாக ஒரு பெண் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். பெயர் கீதா மிக அழகு. டீச்சரை விட அழகு. பார்த்ததுமே இன்றைக்கு கனவில் இவள்தான் என்று என் மனம் சொன்னது.

அந்த பெண்ணும் என்னுடன் நன்றாக பழக ஆரம்பித்தாள். ஆனால் எல்லாமே பாட சம்பந்தமாகத்தான் இருந்தது. நான் இவளுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தால், ராதாவுக்கு கோபம் வரும். இதை பார்க்கும் என் பாஸுக்கு என் மேல் கோபம் வரும்.

"என்னையா இது. எங்களை எல்லாம் பார்த்தா மனுசனா தெரியலையா அவர்களுக்கு? உன் கிட்டேயே உரசுராளுக" என்று மிகவும் ஆதங்கபடுவார்.

அந்த நிலையில் ஒரு நாள், அந்த கம்பூட்டர் நிறுவனத்தின் ஆண்டுவிழா நடந்தது. அந்த ஆண்டு விழாவை தொகுத்து வழங்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. நானும் டீச்சரும் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். இரவு 12 மணிவரை எல்லாம் ரிகர்சல் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நாள் கொஞ்சம் அதிகப்படியாக நடந்துவிடுவோமோ என்று நினைத்த வேளையில் அவள் அண்ணன் வரவே எதுவும் நடக்காமலே போய் விட்டது.

இந்த நிலையில் கீதாவும் தினமும் வகுப்பில் என் அருகில் உட்கார ஆரம்பித்தாள். டீச்சருக்காவது என் வயது. ஆனால் இவள் சின்னப்பெண். இருந்தாலும் எனக்குத்தேவை கொஞ்சம் ஜாலி அவ்வளவுதான்.

இப்படி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த நான் இப்போது இதை ஏன் உங்களிடம் சொல்லி புலம்பிக்கொண்டிருக்கிறேன்? மேலே படியுங்கள். ஒரு வேளை உங்களுக்கு புரியலாம்.

அப்படி இப்படி என்று இனிமையாக என்னிடம் பழகிக்கொண்டிருந்த ராதா ஒரு நாள் இரவு என்னிடம், " ரவி, ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால் கொடுங்கள். இந்த மாத பீஸில் கழித்துக்கொள்கிறோம்" என்றாள்.

நானும் என்னவோ ஏதோ என்று கொடுத்துவிட்டு வந்தேன். அடுத்த நாள் காலை என் நண்பரிடம் இருந்து ஒரு போன். ராதாவிற்கும் அங்கே அருகில் உள்ள ஒரு கடை ஓனருக்கும் ஏற்கனவே பழக்கம் என்றும், இரவோடு இரவாக இருவரும் எஸ்கேப் என்றும் கூறினார். எனக்கு ஒரு விசயம் மட்டும் விளங்கவே இல்லை. நான் பழகிய அந்த நாட்களில் என்னால் சிறிதளவு கூட ராதாவை சந்தேகப்படவே முடியவில்லை.

பிறகு ஒரு வாரம் கழித்து க்ளாஸ் போனேன். ஆயிரம் ரூபாய் போனது போனதுதான். நான் கொடுத்ததுதான் யாருக்கும் தெரியாதே? மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டேன். என் கூடவே வகுப்பிற்கு வந்த என் பாஸ், " ஏன் கவலைபடற, ராதா போனா என்ன? அதான் உனக்கு கீதா இருக்காளே?" என்றார். 'ஆமாம் இல்லை' என நினைத்து வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். ஆனால், அந்த கீதா என்னிடம் பாடத்தை தவிர வேறு எதையுமே பேசியது இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு இங்கே கூறிக்கொள்கிறேன்.

அப்படிப்பட்ட கீதா, ஒரு நாள் இரவு என்னிடம் அனைவரும் இருக்கும் போதே ஒரு கடிதத்தை கொடுத்தாள். கொடுத்தவள் உடனே திரும்பி பார்க்காமல் ஓடி விட்டாள். அதை என்னவென்று பிரித்து படிக்க கூட விடவில்லை நண்பர்கள். உடனே பார்ட்டி கொடு என்று என்னை அப்படியே பாருக்கு தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். எல்லோருக்கும் டிரிங்க்ஸ், சாப்பாடு வாங்கி கொடுத்ததில் மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் காலி.

இரவு ரூமுக்கு வர மணி 10 ஆனது. அப்போதுதான் நினைவு வந்தது. இன்னும் அந்த கடிதத்தை படிக்கவில்லையே? சரி, இங்கு படித்தால் அனைவரும் கிண்டல் செய்வார்கள். ஏனென்றால் எங்கள் ரூமில் மொத்தம் ஐந்து பேர் தங்கி இருந்தோம். அதனால், கடிதத்தை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றேன். பிரித்தேன். படித்தேன். கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது:

" அன்புள்ள ரவி அண்ணா, நலமா? ஏன் இப்போது எல்லாம் சோகமாக இருக்கின்றீர்கள். ராதா போனால் என்ன? உங்களுக்கு நல்ல ஒரு பெண் கிடைக்காமலா போவார்கள். அதனால், எப்போதும் போல் கலகலப்பாக இருங்கள்.

இப்படிக்கு, உங்கள் அன்பு தங்கை கீதா"

நான் ஏன் அடுத்த நாளிலிருந்து கம்ப்யூட்டர் வகுப்பிற்கு செல்லவில்லை என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. நானும் சொல்லவில்லை.

5 comments:

தனி காட்டு ராஜா said...

பொண்ணுக கிட்ட ரொம்ப உஷாரா இருக்கனும் தல ...
பொதுவா பொண்ணுகளுக்கு தேவை ஒரு உணர்வுரீதியான சப்போர்ட் ....
அது அண்ணனாகவும் இருக்கலாம்...தம்பியாகவும் இருக்கலாம்.....காதலனாக தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை ...
இம் ...உங்களுக்கு தெரியாதா என்ன? ...அனுபவஸ்தர் ஆயிற்றே...

அப்படியே உங்க கதை மாதிரியே இருக்கிற என் கதையையும் வந்து படித்து பாருங்க ....
http://thanikaatturaja.blogspot.com

iniyavan said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராஜா. உங்கள் பதிவையும் படித்தேன்.

நல்ல தொடக்கம். நான் எழுதிய பின்னூட்டம் என்ன காரணத்தினாலோ போஸ்ட் பண்ண முடியவில்லை. error என்று வருகிறது. Wordpressல் நான் அடிக்கடி பார்க்கும் பிரச்சனை இது.

தனி காட்டு ராஜா said...

//நல்ல தொடக்கம். நான் எழுதிய பின்னூட்டம் என்ன காரணத்தினாலோ போஸ்ட் பண்ண முடியவில்லை. error என்று வருகிறது. Wordpressல் நான் அடிக்கடி பார்க்கும் பிரச்சனை இது.//

நன்றி தல ...

Kumar said...

nalla iruku ulags!.

Anonymous said...

Ulaks... I know ur another name is Ravi :))))