Jul 7, 2010

ரவியின் காதல் கதை - 2 (பாகம் 1)

சில விளக்கங்கள்:

01. இந்த கதைகளில் வரும் ரவி, என்.உலகநாதன் ஆகிய நான் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கிறேன்.

02. ஒரு ஆளுக்கு எப்படி இத்தனை காதல்கள் வரும் என்று கேட்க கூடாது. அவனுக்கு வந்தது அவ்வளவுதான். அது எல்லாம் காதலா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

03. ரவியிடம் உள்ள ஒரே குறை அவனிடம் பேசும் பெண்கள் எல்லாம் அவனை காதலிப்பதாக நினைத்துக்கொள்வது. ஆனால், அதுதான் அவனது + பாயிண்டாக அவன் நினைத்துக்கொள்வான்.

04. ரவியின் ஏகப்பட்ட கதைகள் கைவசம் உள்ளது. எல்லாவற்றையும் தொகுத்து நானே புத்தகம் போட்டு நானே வாங்கி நானே படித்துக்கொளவதாக ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்கிறேன்.

இனி ரவி கதையை தொடர்வான்.

நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்த சமயம். அப்போதுதான் எனக்கு மீசை அரும்ப ஆரம்பித்திருந்தது. நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த நேரம். அந்த முதல் காதல் நான் ஒன்பதாவது படிக்கும்போது ஆரம்பித்தது. அது விரிவாக பின்னால் ஒரு கதையில் பார்க்கலாம். ஒரு நாள் பரிட்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பார்த்து யாரோ வீட்டிற்கு வருவது தெரிந்தது. யாரென்று பார்த்தேன். ஒரு அழகான பெண் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

" உங்க அக்கா இருக்காங்களா?"

'' இருக்காங்க. நீங்க யாரு?''

'' உங்க அக்காவோட ப்ரெண்டோட தங்கை. அக்கா இந்த புத்தகத்தை கொடுத்துட்டு வர சொன்னாங்க"

நான் சென்று அக்காவை கூப்பிட்டேன்.

'' உள்ள வா சுதா" அப்பாடா பெயர் தெரிந்துவிட்டது. பிறகு அவள் ஒரு அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு போய்விட்டாள். அதன் பிறகு எனக்கு என்ன ஆனது என தெரியவில்லை. படிக்க முடியவில்லை. மனம் அவள் பின்னே சுத்த ஆரம்பித்தது. என் நண்பன் சாமுவின் வீட்டிற்கு சென்றேன். அவனிடன் விசயத்தை சொன்னேன். " நாளைக்கு காலைல உனக்கு முழு விபரமும் சொல்கிறேன்'' என்றான்.

அடுத்த நாள் காலை முழு விபரத்துடன் வந்தான். அவர்கள் புதிதாக ஊருக்கு வந்துள்ளார்கள். அவளுக்கு ஒரு அக்கா மற்றும் இரண்டு தம்பிகள். எல்லாமே பிடித்து இருந்தாலும், ஒரு விசயம் மட்டும் எனக்கு பிடிக்கவில்லை. சுதாவிற்கு என்னை விட ஒரு வயது அதிகம். அதற்கு என் நண்பன் சாமு கூறினான், " மாப்பிள்ளை, காந்தியடிகள் மனைவி காந்தியவிட ஒரு வயசு அதிகம் தெரியுமா? அதெல்லாம் ஒரு விசயமே இல்லை'' என்று சொல்லி அவன் என் கல்யாணம் வரை சென்று விட்டான்.

நாங்கள் பள்ளிக்கு தினமும் ட்ரெயினில்தான் செல்வோம். எனக்கு ஓரளவு பாட வரும் என்பதால், நண்பர்கள் என்னை தினமும் பாட சொல்வதுண்டு. நான் பாட, நண்பர்கள் எல்லாம் தாளம் போட ஒரே கூத்தும் கும்மாளமுமாக செல்வோம். அன்று ஒரு நாள் பள்ளியிலிருந்து கொஞ்சம் லேட்டாக ரயில்வே ஸ்டேசன் வந்தேன். வந்தால் நான் செல்லும் டிரெயின் ஏற்கனவே போய் விட்டது. என்ன செய்வது? அடுத்த டிரெயினுக்கு இன்னும் ஒரு ஒரு மணி நேரம் காத்து இருக்க வேண்டும்.

ஒரு வழியாக அடுத்த டிரெயினில் ஏறி உட்கார்ந்தேன். 10 நிமிசத்தில் அடுத்த ஸ்டேசனில் வண்டி நின்றது. யாரோ ஓடி வந்து ஏறுவது போல் இருக்க யார்? என்று பார்த்தேன். பார்த்தால் சுதா. எங்கள் பெட்டியில் அவ்வளவு கும்பல் இல்லை. என் எதிர்புறம் அமர்ந்தவள் என்னை பார்த்து மிகவும் சாதாரணமாக கேட்டாள், " ஏன் ரவி லேட்?"

" பசங்க கூட பேசிட்டு இருந்ததுல பர்ஸ்ட் டிரெயின மிஸ் பண்ணிட்டேன். நீங்க ஏண் லேட்?"

" எனக்கு ஸ்பெசல் கிளாஸ் இருந்தது ரவி" என்று பேச்சுக்கு பேச்சு ரவி ரவி என்று பேச ஆரம்பித்தாள். ஆனால், என்னால்தான் சுதா என்று கூப்பிட முடியவில்லை. காரணம் ஏன் என்று தெரியவில்லை. எல்லா விசயங்களையும் பேச ஆரம்பித்தாள். அவள் நல்ல கலர். நல்ல புஷ்டியான உடல் அமைப்பை கொண்டவள். அவள் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், எனக்குத்தான் வேர்த்துக்கொண்டிருந்தது. கண்கள் ஒரு இடத்தில் இருந்தால்தானே?

ஊர் வந்ததும் நாங்கள் இருவரும் சேர்ந்தே நடந்து அவரவர் வீட்டிற்கு சென்றோம். இருட்டிவிட்டிருந்தது. யாராவது பசங்க பார்க்க மாட்டாங்களா? என ஏங்கி ரோடை பார்த்தால், ஒரு பயலை காணோம். அன்றும் என்னால் சரியாக படிக்க முடியவில்லை. அன்றும் சாமுவை பார்க்க ஓடினேன். அவன் தினமும் ஏற்றிவிட அவள்மேல் தீவிரமாக காதல் கொள்ள ஆரம்பித்தேன்.

நான் தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து படிப்பது வழக்கம். எழுந்து பல் விளக்கியதும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு காபி வாங்க ஹோட்டலுக்கு செல்வேன். அந்த ஹோட்டல் முதலாளியின் பையன் என் நண்பர்களுல் ஒருவன். காலையில் ஹோடலுக்கு போனவுடன் அவன் கூட சிறிது நேரம் காபி வரும் வரை பேசிக்கொண்டிருப்பேன். அத்ற்குள் தூக்கம் கலைந்துவிடும். பின்பு படிக்க செல்வேன். முக்கியமான ஒரு விசயத்தை சொல்ல மறந்துவிட்டேன். சுதாவின் வீடு ஹோட்டலுக்கு மிக அருகில் இருந்தது.

அன்று பொங்கல். இருந்தாலும் படிப்பதற்காக காலையில் எழுந்துவிட்டேன். காபி வாங்க செல்கையில் அவள் வீட்டை நெருங்குகையில்தான் கவனித்தேன். அவள் பெரிய கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். என்னை அந்த நேரத்தில் அவள் எதிர்பார்க்கவில்லை. என்னை பார்த்தவள்,

" குட் மார்னிங் ரவி. Wish You A Happy Pongal"

அவள் சாதரணமாகத்தான் கூறினாள். ஆனால் அதற்கு நான் சொன்ன பதில் என்னை அடுத்த நாள் வம்பில் மாட்டிவிடும் என்று நினைக்கவில்லை.

- தொடரும்.

3 comments: