Jul 9, 2010

ரவியின் காதல் கதை - 2 (பாகம் 2)

"குட் மார்னிங் ரவி. Wish You A Happy Pongal"

அவள் சாதரணமாகத்தான் கூறினாள். ஆனால் அதற்கு நான் சொன்ன பதில் என்னை அடுத்த நாள் வம்பில் மாட்டிவிடும் என்று நினைக்கவில்லை.

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, "தேங்க்ஸ்டா" என்று சொல்லிவிட்டேன். அவளும் புன்முறுவலுடன் உள்ளே சென்றுவிட்டாள். இதை அவன் தம்பி கவனித்திருப்பான் போல. அன்று மாலையோ அடுத்த நாளோ சரியாக நினைவு இல்லை, ஜிம்மில் சுதாவின் தம்பி என்னைப் பற்றி ஏதோ தவறாக யாரிடமோ பேசப்போக, அதை கவனித்த என் நண்பன் சாமு அவனிடம் சண்டைக்கு போய் அவனை அடித்துவிட்டான், நான் எவ்வளவோ தடுக்க முயற்சித்தும் என்னால் முடியவில்லை. அவன் அப்படியே போய் சுதாவிடம் சொல்ல அவள் என்னிடம் இரண்டு நாட்கள் பேசவில்லை. இத்தனைக்கும் ஒரே பெட்டியில்தான் டிரெயினில் சென்றோம். இருந்தாலும் என்னிடம் பேசவில்லை. எனக்கோ மனசு கேட்கவில்லை. எப்படி இதை சரிபடுத்துவது?

அன்று ஒரு நாள் அவள் பச்சைக்கலரில் சேலையில் இருந்தாள். அவள் சேலை எல்லாம் சாதாரணமாக கட்டுபவள் இல்லை. அவள் அப்போது பதினொன்றாம் வகுப்புதானே படித்துக்கொண்டிருந்தாள். அவளை பச்சைக்கலர் சேலையில் பார்த்தவுடன், கவிதை மாதிரி இப்படி ஒன்று எழுதி அவளிடம் கொடுத்தேன்:

உன்னைப்போல இந்த பச்சைசேலையை
உலகத்தில் அழகாக கட்ட
உண்மையில் சொல்லப்போனால்
உயிருடன் எவருமில்லை.

இதையும் ஒரு கவிதை என்று ஒப்புக்கொண்டு அதற்கு அவள் சிரித்த சிரிப்பு இருக்கே இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. இப்படியாக எங்கள் நட்பு மிகவும் இருக்கமானது. அவள் எங்கள் வீட்டிற்கு வருவதும் நான் அவள் வீட்டிற்கு செல்வதும் மிகவும் சாதாரணமானது.
ஒரு நாள் அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் யாருமில்லை. அவள் மட்டும்தான். அதனால் அங்கே இருக்க பிடிக்காமல் கிளம்ப முயன்றேன். ஆனால் என் கையை பிடித்து அங்கே இருந்த ஷோபாவில் உட்கார வைத்தாள். என் அருகில் உட்கார்ந்தாள். என்னதான் நாங்கள் டிரெயினில் எதிர் எதிரே அமர்ந்து வந்தாலும், அவள் வீட்டில் தனிமையில் அவள் அருகில் உட்கார ஒரு மாதிரி ஆனது. சிறிது நேரத்தில்,

" ரவி, உனக்கு கை ரேகை ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளதா?" என்றாள்.

"ஏன்?" என்றேன்.

"இல்லை, எனக்கு பார்க்கத்தெரியும்" என்றவள், என் ஒரு கையை எடுத்து அவள் மடியில் வைத்துகொண்டு ரேகை பார்க்க ஆரம்பித்தாள். நான் அப்போது இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு 10வது படிக்கும் மாணவனுக்கு இது கொஞ்சம் அதிகம்தானே. இதேபோல் அவள் என்னுடன் எப்போதும் பழக நான் வேறு ஒரு உலகத்தில் அவளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தேன்.

ஆனால், என் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லும் தைரியம் எனக்கு வரவேயில்லை. ஆனால் என்ன என் மனதில் அப்போது இருந்தது என்று எனக்கு அப்போது தெரியுமா? என்று இப்போது நினைவில்லை. நாளுக்கு நாள் எங்களின் நெருக்கம் அதிகம் ஆனது. என்னால் அவளை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை. பத்தாவது பொது தேர்வு வரவே, அவள்தான் என்னை படிப்பில் அதிகம் கவனம் செலுத்துமாறு கூறினாள். தேர்வும் முடிந்தது. மிக நல்ல மதிபெண்கள் எடுத்தேன். நண்பர்கள் அனைவரும் முதல் குரூப் எடுக்க, நான் மட்டும் அவளின் அருகாமைக்காக அவள் படித்த மூன்றாவது குரூப் எடுத்தேன். எவ்வளவு பெரிய தவறை நான் செய்து இருக்கிறேன் என்று அப்போது நான் உணரவில்லை. அந்த தவறை சரிசெய்ய நான் கொடுத்த விலை மிக அதிகம்.

+2 முடிந்து காலேஜ் சென்றேன். அவள் காலேஜும் மிக அருகில் இருந்தது. அடிக்கடி இருவரும் சேர்ந்தே சென்றோம், பஸ்ஸில், இரயிலில் இப்படி. எல்லாவற்றை பற்றியும் பேசுவோம். ஆனாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலை பரிமாறிக்கொள்ளவில்லை. அது ஏன் என்று இன்றுவரை பிடிபடவில்லை.

ஒரு நாள் என் வீட்டிற்கு அவள் அக்காவுடன் வந்தாள். அவள் அக்கா உள்ளே போனவுடன் சுதா என் ரூமிற்கு வந்தாள். எங்கள் வீட்டில் வரவேற்பு அறைக்கு அடுத்து என் அறை உள்ளது. வீட்டில் நுழைந்தவுடன் என் ரூமிற்குள் நுழைந்தவள் என் அருகே அமர்ந்து கொண்டாள். பேச்சு எங்கெங்கோ சென்று கொஞ்சம் "அங்கேயும்" சென்றது.

ஏதோ ஒரு மூடில் என்னையறியாமல் அப்படியே அவளை இறுக்கி கட்டியணைத்து அவள் திமிற திமிற அழுத்தி ஒரு முத்தம் கொடுத்து விட்டேன். அதை எதிர்ப்பார்க்காத சுதா சடாரனெ என்னை விலக்கிவிட்டு, ரூம் கதவை திறந்து வெளியே சென்றுவிட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அவள் கண்கள் கலங்கி இருந்தது.

" நீயுமா உங்க அக்காகூட வந்தே? இவ்வளவு நேரம் எங்கே இருந்தன்னு" எங்க அம்மா வீட்டிலிருந்து கேட்பதும், அதற்கு என் அக்கா, " வேற எங்க ரவி கூட பேசிட்டு இருந்திருப்பா" என்று பதில் அளித்ததும் என் காதில் விழுந்தது. எனக்கு ஒரே பயம் ஆகிவிட்டது. என் அப்பா பயங்கர ஸ்ட்ரிக்ட். அம்மா பரவாயில்லை. இவள் வீட்டில் சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்று ஒரே கவலையாய் இருந்தது. உடம்பே நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று என்னையே நான் நொந்து கொண்டேன்.

உடனே வீட்டை விட்டு வெளியேறி சாமு வீட்டிற்கு சென்றேன். நடந்ததை கூறினேன். அவனோ, "மாப்புள, கிஸ் தானே பண்ணின. என்னவோ மேட்டர முடிச்சுட்டா மாதிரி வருத்தப்படுற. கவலைப்படாத. நடப்பது நடக்கட்டும்" என்றான். கொஞ்ச நேரம் அங்கே இருந்துவிட்டு, இருட்டும் தருவாயில் பயத்துடனே வீட்டிற்கு சென்றேன். ஆனால், வீடே அமைதியாக இருந்தது. யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. பிற்குதான் தெரிந்தது, அவள் ஒன்றும் யாரிடமும் சொல்லவில்லை என்று.

உடனே வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறியது. "வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை என்றால், அவளுக்கு பிடித்திருக்கிறது என்றுதானே அர்த்தம். நாம் ஏன் மேலும் முயற்சிக்கக்கூடாது"

ஆனால் அதற்கப்புறம் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. பல நாட்கள் பஸ்ஸில் போகும் போதும், டிரெயினில் போகும் போதும் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சரியாக அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு வேலை கிடைத்து வெளியூர் சென்று விட்டேன். சில வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றேன்.

நான் வந்ததை அறிந்து கொண்ட சுதா, என் வீட்டிற்கு வந்தாள். வந்தவள், உன்னுடன் "தனியாக பேச வேண்டும்" என்றாள். அந்த முத்தத்திற்கு பிறகு அவள் பேசிய முதல் பேச்சு அது. உடனே என் ரூமிற்கு சென்றோம்.

ஏதோ பேச ஆரம்பித்தவள் பின்பு,

" எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மாப்பிள்ளை ஓரளவு முடிவு செய்துவிட்டார்கள்" என்று சொன்னவள் என்னையே பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். அவள் என்ன சொன்ன வருகிறாள் என எனக்கும் புரியவில்லை. அவள் என்ன பதிலை எதிர்பார்த்தாளோ அது என்னிடமிருந்து வரவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. அவளும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அந்த நேரத்தில் என் அம்மா வரவே எங்கள் பேச்சு அத்துடன் முடிந்தது. அன்று இரவே ஊருக்கு கிளம்ப வேண்டியிருந்தது.

அடுத்த ஆறு மாதம் கழித்து தீபாவளிக்காக ஊருக்கு சென்றிருந்தேன். எதேச்சையாக அன்றைக்கு சாயந்திரம் கோவிலில் சுதாவை பார்க்க நேர்ந்தது. அவளை மட்டும் அல்ல. அவள் கணவனையும் சேர்த்து. என்னை பார்த்தவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வருவதை பார்த்தேன். என் கண்களிலும்தான்.

அந்த கண்ணீர் துளிகளுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது இப்போது புரிகிறது.

2 comments:

தனி காட்டு ராஜா said...

உங்க பீலிங்க்ஸ் புரியுது தல ...

iniyavan said...

//உங்க பீலிங்க்ஸ் புரியுது தல ...//

வருகைக்கு நன்றி ராஜா.