Jul 19, 2010

ரவியின் காதல் கதை - 4 (பாகம் 1)

ரவியின் காதல் கதைகளை பற்றி எழுதும்போது அவன் நண்பன் குமாரின் காதல்கதை நினைவுக்கு வருகிறது. அதை எழுதாமல் ரவியின் காதல் கதைகளை எழுதிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ரவியின் கதைகளுக்கிடையில் குமாரின் கதையும்....

இனி ரவி தொடர்வார்....

நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயம். ஒருநாள் லேட்டாகவே பஸ்ஸில் ஊருக்கு வரும்படி ஆனது. நான் தினமும் டிரெயினில் செல்பவன் என்பது என் பழைய கதைகளின் மூலம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். நானும் என் இன்னொரு நண்பரும் திருச்சியிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது மாலை மணி ஆறு இருக்கும். பஸ்ஸில் ஓரளவு கூட்டம். நாங்கள் பஸ்ஸில் ஏறிய சமயத்தில் ஒரு மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை காலியாக இருந்தது. என் நண்பன் ஜன்னலோரத்தில் அமர்ந்தான். நான் நடுவில் அமர்ந்தேன். பஸ் கிளம்பும் நேரத்தில் ஒரு அழகான இளம் பெண் ஏறினாள். வந்தவள் என் அருகில் வந்து, கொஞ்சமும் யோசிக்காமல் என் அருகில் உட்கார்ந்தாள். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. எல்லாமும் இருக்க வேண்டிய இடத்தில் மிகத்தாராளமாக, சரியாக இருந்தது. எனக்கு பிடித்த தாவணியில் வேறு இருந்தாள். உலகத்திலேயே பெண்களுக்கு உரிய கவர்ச்சிகரமான உடை சேலைக்கு அடுத்து தாவணிதான் எனபது என் கணிப்பு. தாவணியில் நீங்கள் எதையும் பார்க்க தேட வேண்டியது இல்லை. கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்தால் தாவணியே எல்லாவற்றையும் காண்பித்துவிடும். அருகில் உட்கார்ந்தவள் என்னிடம் பேச துவங்கினாள்.

"ஏன் ரொம்ப கூச்ச படறீங்க. பொண்ணு நானே சகஜமா இருக்கேன்"

" இல்லை, எல்லோரும் பார்க்கறாங்க அதான்"

"பார்த்தா என்ன? சும்மாதானே உக்கார்ந்து இருக்கோம். ஒன்னும் தப்பு பண்ணலையே?"

அவள் அவ்வாறு ஓப்பனாக பேசியதும் எனக்கு என்னவோ போல் ஆனது. மீண்டும் அவளே தொடர்ந்தாள்,

" அப்படியே தப்பு பண்ணனும்னு நீங்க நினைச்சாலும், உங்களால இத்தனை பேர் முன்னாடி எதுவும் பண்ணமுடியாது. அதனால நார்மலா இருங்க" என்றாள்.

இதற்கிடையில் என் அருகே இருந்த நண்பன், "மாப்பிள்ளை, பிடிக்கலைனா நீ இங்க வந்து உட்காரு நான் வேணா அவங்க பக்கத்துல உட்கார்ந்துக்கிறேன்" என்று நச்சரிக்க ஆரம்பித்தான்.

நானும் ஓரளவு நார்மலாகி அவளுடன் பேச ஆரம்பித்தேன். அவள் மெட்ராஸிலிருந்து லீவிற்கு பாட்டி வீட்டிற்கு போய்க்கொண்டு இருப்பதாகவும், இன்னும் ஒரு மாத காலம் அரியலூரில் அவள் பாட்டி வீட்டில் இருக்கப் போவதாகவும் கூறினாள். அந்த ஒரு மணி நேர பஸ் பயணத்தில் ஒரு நல்ல தோழியாக மாறிவிட்டிருந்தாள். ஆனால், அவள் கைகள்தான் என்னை மிகவும் இம்சித்து கொண்டிருந்தது. அந்த ஒரு மணி நேரமும் அவள் இடது கையை என் தொடையில் வைத்தே பேசிக்கொண்டு வந்தாள். நான் அன்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை. ஒரு ஸ்டேஜில் என் தொடைகள் என்னையறியாமல் நடுங்க ஆரம்பித்து விட்டது. அதற்குள் எங்கள் ஊர் வந்துவிடவே நான் எழுந்தேன். உடனே அவள் என் கைகளில் ஒரு பேப்பரை திணித்தாள். அதில் அவள் பாட்டி வீட்டு விலாசம் இருந்தது.

இந்த சம்பவம் நடந்தபோது எங்கள் வீட்டில் தொலைபேசி இல்லை. இது ஒரு சாதாரண நிகழ்வு என்று நினைத்து நான் மறந்துவிட்டேன். ஆனால் என்னுடன் வந்த நண்பனோ எல்லோரிடமும் போட்டு கொடுத்துவிட்டான். முக்கியமாக குமாரிடம். குமார் ஒரு காமுகன். நாள்தோறும் பெண்களுடனே சுற்றுபவன். பெண்கள் என்றால் காதலிகள் என்று நினைத்து விடவேண்டாம், எல்லோரும் விபச்சாரிகள். அதனால் நான் கொஞ்சம் அவனிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பேன். காரணம், நான் அவன் கூட அந்த இடங்களுக்கு செல்லாவிட்டாலும், நானும் அவன் கூட சேர்ந்து விபச்சாரிகளிடம் செல்பவன் என்று யாரும் கூறி விடக்கூடாது என்று மிக கவனமாக இருப்பேன்.

அப்படிப்பட்ட குமாருக்கு விசயம் தெரிந்தவுடன் சும்மா இருப்பானா? நேராக வீட்டிற்கு வந்தான். வந்தவன், "என்ன மாப்பிள்ளை? யாருடா அது" என்று கேட்க ஆரம்பித்தான். நானும் விசயத்தை சொல்லி அனுப்பி வைத்தேன். அவன் போன பிறகு எனக்கு ஒரு ஆசை. ஒரு வேளை அவள் கொடுத்த முகவரி உண்மையாக இருக்குமா? கடிதம் எழுதினால் பதில் அனுப்புவாளா? என்று யோசித்தவன், முடிவில் கடிதம் எழுதி பார்க்கலாம் என நினைத்து, ஒரு கார்டில் அவளை விசாரித்து கடிதம் எழுதினேன். என்ன ஆச்சர்யம், அவளிடம் இருந்து உடனே பதில் வந்தது. நான் முன்னெச்சரிக்கையாக என் வீட்டு விலாசம் கொடுக்காமல், என் இன்னொரு நண்பரின் வீட்டு விலாசம் கொடுத்து இருந்தேன். ஆனால் அவனிடம் முன்பே, 'அவளிடம் இருந்து கடிதம் வந்தால் என்னிடம் கொடு' என்று. அவனும் என்னிடம் கொடுத்தான்.

அந்த கடிதத்தில் அவள் நண்பர்கள் எல்லோரையும் விசாரித்து எழுதி இருந்தாள். உடனே அவளுக்கு பதில் கடிதம் எழுதினேன். அந்த கடிதத்திற்கு பதில் எழுதியவள், என்னை அவள் சந்திக்க விரும்புவதாகவும், நிறைய பேச விரும்புவதாகவும், அதனால் அவள் ஊருக்கு வரும்படியும் கூறியிருந்தாள். சந்திக்க வேண்டிய இடத்தையும் கொடுத்து இருந்தாள்.

விசயம் தெரிந்த நண்பர்கள், உடனே போகலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அவள் சந்திக்க விரும்பியது என்னை. ஆனால் இவர்கள் எல்லோரும் சந்திக்க ஆசைப்படுகிறார்களே? என எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஒரு வழியாக அவர்களை சமாளித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். வந்தவுடன்தான் தெரிந்தது 'அந்த கடிதத்தை நண்பனின் கடையிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம்' என்பது.

சரி, சாயந்திரம் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து வந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு அடுத்த நாள்தான் தெரிந்தது!?

-தொடரும்.

2 comments:

தனி காட்டு ராஜா said...

//உலகத்திலேயே பெண்களுக்கு உரிய கவர்ச்சிகரமான உடை சேலைக்கு அடுத்து தாவணிதான் எனபது என் கணிப்பு//

தாவணிக்கு அடுத்து சேலை என்பது என் கணிப்பு ......

iniyavan said...

//தாவணிக்கு அடுத்து சேலை என்பது என் கணிப்பு ......//

வருகைக்கு நன்றி தனிக்காட்டு ராஜா.