Jul 21, 2010

ரவியின் கா.க - 4 (பாகம் 2)

ஒரு வழியாக அவர்களை சமாளித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். வந்தவுடன்தான் தெரிந்தது 'அந்த கடிதத்தை நண்பனின் கடையிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம்' என்பது.

சரி, சாயந்திரம் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து வந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு அடுத்த நாள்தான் தெரிந்தது!?

அடுத்த நாள் காலை குமார் அந்த கடிதத்திலிருந்த முகவரியை குறித்துக்கொண்டு நேராக அரியலூர் சென்றிருக்கிறான். அங்கே சொன்ன இடத்தில் அவள் நின்று கொண்டிருந்திருக்கிறாள் என்னை எதிர்பார்த்து! இவன் அங்கே போய், அவளிடம் நான் அனுப்பியதாக சொல்லி பேச்சு கொடுத்து இருக்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை அவன் கடைசி வரை என்னிடம் சொல்லவே இல்லை. அதன் பிறகு ஒரு நாள் அவளிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்று என்ன நடந்தது என்பதை சொல்லாமல், என்னை பற்றி கண்டபடி திட்டி எழுதி இருந்தாள். "என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் என்ன அந்த மாதிரி பெண்ணா?" அப்படி, இப்படி என்று சரியான வசவு. ஒரு வேளை நான் சென்றிருந்தால், அது ஒரு நல்ல நட்பாகவோ இல்லை நல்ல காதலாகவோ தொடர்ந்திருக்கக்கூடும்.

ஆனால் பாருங்கள் இவ்வளவு நடந்தும் குமார் எதுவுமே தவறாக நடக்கவில்லை என்பதுபோலேயே என்னிடம் பேசிக்கொண்டிருந்தான். நீங்கள் கேட்கலாம், அப்படிப்பட்ட அவனை நீ ஒன்றுமே கேட்கவில்லையா? திட்டவில்லையா? என்று. உண்மையில் சொல்லப்போனால், பதில் 'இல்லை' என்பதுதான். ஏன், எல்லாவற்றிருக்கும் காரணம் அவன் தங்கைகள்தான். அவன் தங்கைகள் என் மேல் வைத்திருந்த அன்பு. நாங்கள் அனைவரும் (குமாரும்தான்) சேர்ந்து சினிமா போகும் அளவிற்கு அவன் தங்கைகளின் நட்பு இருந்தது. அந்த கதைகளை பின்னர் பார்ப்போம். என்னுடைய காதல் கதை 4ம் பாகம் இத்துடன் முடிகிறது. ஆனால், குமாரின் கதை இங்கு ஆரம்பிக்கிறது.

அந்த அரியலூர் பெண் லீவு முடிந்து ஊருக்கு போவதாகவும், இனி உங்கள் ஊர் பக்கமே வரவிரும்பவில்லை என்றும் எனக்கு கடிதம் எழுதிவிட்டு சென்று விட்டாள். நானும் அத்துடன் அந்த மேட்டரை விட்டுவிட்டேன். ஒரு நாள் குமார் என்னிடம் வந்து தான் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினான். எனக்கு ஒரே ஆச்சர்யம். விபச்சாரிகளுடனேயே பழகுபவனுக்கு எங்கு இருந்து காதால் வந்தது? என்னை வந்து அந்த பெண்ணை பார்க்கும்படி கூறினான். நானும் சென்றேன்.

பார்த்தவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை அழகு. "என்னடா இது, பார்க்கும் அத்தனை பெண்களையும் அழகு, நல்ல அழகு என்று சொல்கிறானே? என நினைக்க வேண்டாம். என்னை பொறுத்தவரை பெண்கள் எல்லாருமே அழகுதான். எனக்கு ஒரே சந்தோசம். ஒரு வேளை இப்படிப்பட்ட பெண்ணால் அவன் திருந்தலாம் அல்லவா? அதனால் நானும், "பார்க்க நல்ல பெண்ணாய் இருக்கிறாள். இவளிடமாவது உண்மையாக இரு" என்று அறிவுரை கூறினேன். நண்பர்கள் எல்லோரும் குமார் அவள் கூடவே சுற்றிக்கொண்டிருப்பதாய் கூறினார்கள். அவள் வேறு ஊரிலிருந்து வந்து எங்கள் ஊரில் தங்கி படித்துக்கொண்டிருந்தாள்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் மாலை குமாரும் சில நண்பர்களும் என் வீட்டிற்கு வந்தார்கள். குமார்தான் என்னிடம் பேசினான்.

"மாப்பிள்ள, அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறாங்களாம்"

"நீ அவங்க வீட்ல பேசி பார்த்தியா?"

"இல்லை. என்ன அவங்க வீட்டோட பேச விட மாட்டேங்கறா?"

"சரி, இப்போ என்ன பண்ணப்போற?"

"நாங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணீட்டோம். உன் உதவி கேட்டு இப்போ வந்திருக்கேன்"

"ஹேய் இதல்லாம் தப்பு இல்லையா?"

"வேற வழி தெரியலை மாப்பிள்ள"

"நான் எந்த விதத்துல உதவ முடியும்னு நினைக்கற?"

"நாளைக்கு காலைல ஒரு கார் எடுத்துட்டு அவங்க ஊருக்கு போய், அவ கோலம் போட வெளிய வரும்போது, துக்கிட்டு வந்து திருச்சில கல்யாணம் பண்ணிட்டு, ரெண்டு நாள் வெளியூர் போயிட்டு அப்புறம் வரலாம்னு இருக்கோம். நீயும் வந்தா நல்லா இருக்கும்"

"சாரி, மாப்புள்ள, எங்க அப்பாவை பத்தி உனக்கு தெரியும். என்னால வரமுடியாது. என் தோலை உரிச்சுடுவார். வேற எதுனா உதவி கேளு செய்யறேன்"

"கொஞ்சம் செலவுக்கு பணம் இருந்தா குடு"

நான் சேர்த்து வைத்திருந்த பணம் ரூபாய் 1000 கொடுத்து அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் நண்பர்கள் அவர்களுக்கு கல்யாணம் நடந்து முடிந்து விட்டதாகவும், அருண் வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் நண்பர்கள் அவள் அணிந்திருந்த உடையை பற்றியும், அவளின் அழகை பற்றி கூறியதையும் நாகரிகம் கருதி இங்கே தவிர்க்கிறேன்.

நல்ல வேளை, குமார் திருட்டுத்தனமாக கல்யாணம் செய்து கொள்ளும்போது நான் கூட இல்லை. அதனால் நம்மை யாரும் எந்த கேள்வியும் கேட்கமுடியாது? என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், பிரச்சனை அடுத்த நாள் வேறு வடிவில் வந்தது.

-தொடரும்.

No comments: