Jul 23, 2010

ரவியின் கா.க - 4 (பாகம் 3)

ஆனால், பிரச்சனை அடுத்த நாள் வேறு வடிவில் வந்தது.

காலை 10 மணி இருக்கும். என் நண்பனின் தம்பி என் வீட்டிற்கு வந்தான்.

"எங்க அண்ணன் உங்களை ரொம்ப அவசரமா பஸ் ஸ்டாண்டுல உள்ள டீ கடைக்கு வரச்சொன்னது"

"என்ன விசயம்?"

"எனக்கு தெரியலை. ஆனா ஏதோ அவசரம்னு சொல்ல சொண்ணுச்சு"

பறந்து கொண்டு ஓடினேன். என்ன பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே என் டிவிஎஸ் 50 யில் வேகமாக சென்றேன். அந்த டீக்கடை உள்ளே நுழைந்த போது ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது. என்னவோ ஒரு விபரீதம் நடக்கப்போவது போல் தோன்றியது. உள்ளே என் நண்பன் சீனி உட்கார்ந்து இருந்தான். அவனை சுற்றி ஒரு நான்கு நபர்கள் அமர்ந்து இருந்தார்கள். பார்ப்பதற்கு ஏதோ ரவுடி போல ஒரு தோற்றம். நானும் சென்று நண்பன் அருகில் அமர்ந்தேன்.

"வாடா உனக்காகத்தான் காத்து இருந்தேன். இவங்க என்னவோ உன்கிட்ட பேசணுமாம்"

"என்ன பேசணும்?" என அவர்களை நோக்கி கேட்டேன்.

அங்கே இருந்தவனில் சற்றே முரடனாக இருந்த ஒருவன் என்னை நோக்கி கோபமாக பேச ஆரம்பித்தான்,

"எங்க ஊரு பொண்ண உங்க நண்பன் கடத்திட்டு வந்துட்டான். இப்போ அவங்க எங்க?"

"இங்க பாருங்க, அவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியாது. அதுவும் இல்லாம நீங்க யார்கிட்ட கேட்கணும். குமார் வீடலயோ இல்லை அவங்க உறவினர்கள் கிட்டேயோ. ஏன் என்கிட்ட கேட்கறீங்க"

"நீங்கதான் அவனுக்கு பண உதவி செய்ததாகவும், எல்லா திட்டமும் போட்டு கொடுத்ததாகவும் கேள்விபட்டோம்"

நான் பணம் கொடுதத் விசயம் இவர்களுக்கு எப்படி தெரிந்தது? என்று எனக்கு ஒரே குழப்பம்.

"பணம் கொடுத்தது உண்மைதான். நான் எந்த ஒரு திட்டமும் அவனுக்கு சொல்லவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் இருவரும் மேஜர்தானே? அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தது?''

"பிரச்சனை எங்களுக்கு இல்லை. ஆனால் இவருக்கு இருக்கு" என்று சொன்னவன் அருகில் இருந்த இன்னொரு நண்பனை காண்பித்தான். என்ன பிரச்சனை என்பதுபோல் அவனை பார்த்து கொண்டிருக்கையிலேயே, எழுந்து வந்தவன், என் கைகளை பிடித்துக்கொண்டு,"ஓஓஒ" என அழ ஆரம்பித்தான்.

"ஏன் அழறீங்க?" என நான் கேட்கும்போதே, இன்னொரு நபர் "அவர் அழாமல் வேறு யார் அழுவார்கள் சார்?" என்றார்.

"ஏன்?" என நான் கேட்க,

"ஏன்னா அவர்தான் உங்கள் நண்பருடன் ஓடி வந்த பெண்ணின் கணவர்"

எனக்கு ஒரு வினாடி என்ன செய்வதென்று புரியவில்லை. சப்த நாடியும் அடங்கிவிட்டது. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. கொஞ்சம் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

"உண்மையாகவா சொல்லறீங்க" என்றேன்.

"சார் இவருக்கும், அவங்களுக்கும் கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. மனைவிமேல் உயிரையே வைத்து உள்ளார். என்ன, சரியான வேலையில் இல்லாமல் இருக்கிறான். மனைவி மேலே படிக்க வேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக கடன் வாங்கி படிக்க வைத்துக்கொண்டிருக்கிறான். அப்படி உங்கள் ஊருக்கு படிக்க வந்தவேளையில் தான் உங்கள் நண்பர் என்னவோ சொல்லி மனதை கலைத்து, காதல் செய்து இழுத்துக்கொண்டு ஓடி வந்து விட்டார்"

எனக்கு அதிர்ச்சியும், அடுத்து என்ன செய்வதென்ற குழப்பமும் வந்து விட்டது. அடுத்து அவர் சொன்ன இன்னொரு விசயம்தான் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"சார், இன்னொரு விசயம் தெரியுமா உங்களுக்கு?"

"என்ன?"

"இவங்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்"

கேள்விமேல் கேள்விகள் என் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

'எப்படி ஒரு கல்யாணமான ஒரு பெண் அடுத்தவன் மேல் காதல் கொண்டாள்?'

'தன் குழந்தையை விட்டு ஓடி வர எப்படி மனசு வந்தது?'

'என்ன காரணமாக இருக்கமுடியும்?'

'இப்படிப்பட்ட காதலுக்கா நான் பண உதவி செய்தேன்?'

அதற்குமேல் அவள் கணவன் 'அவன்தான் அவளின் கணவன்' என்பதை நிரூபிக்க என்னிடம் சொன்ன சிலவிசயங்கள் சென்சார் செய்யபடவேண்டியவைகள். அதனால் அவைகளை இங்கே தவிர்க்கிறேன்.

பிறகு அவர்களிடம், "நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் மற்ற நண்பர்களுடனும், அவர்கள் வீட்டிலும் பேசி உங்கள் மனைவியை அனுப்பி வைக்கிறேன்" என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். அவர்கள் ஏதோ அடிதடி செய்ய வேண்டும் என்று வந்தவர்கள் என் மேல் உள்ள நம்பிக்கையால் எந்த பிரச்சனையும் செய்யாமல் ஊருக்கு திரும்பி சென்றார்கள்.

அவர்கள் சென்றவுடன் நானும் நண்பனும் கலந்து பேசி, மற்ற நண்பர்களையும் கூட்டிக்கொண்டு குமாரும் அவளும் இருக்கும் இடத்தை நோக்கி உடனே போனோம். கோபத்தில் குமாரை நோக்கி, அவர்கள் சொன்னதை எல்லாம் சொல்லி, "உண்மையா? ஏற்கனவே அவள் கல்யாணம் ஆகி குழந்தை பெற்றவள் என உனக்கு தெரியுமா?" என்று கேட்டேன்.

அவன் சொன்ன பதில் என் இதயத்தையே உடைத்துவிடும் போல் இருந்தது.

-தொடரும்.

No comments: