Jul 26, 2010

ரவியின் கா.க - 4 (பாகம் 4)

அவர்கள் சென்றவுடன் நானும் நண்பனும் கலந்து பேசி, மற்ற நண்பர்களையும் கூட்டிக்கொண்டு குமாரும் அவளும் இருக்கும் இடத்தை நோக்கி உடனே போனோம். கோபத்தில் குமாரை நோக்கி, அவர்கள் சொன்னதை எல்லாம் சொல்லி, "உண்மையா? ஏற்கனவே அவள் கல்யாணம் ஆகி குழந்தை பெற்றவள் என உனக்கு தெரியுமா?" என்று கேட்டேன்.

அவன் சொன்ன பதில் என் இதயத்தையே உடைத்துவிடும் போல் இருந்தது.

"ஆமாம், எனக்கு முன்பே தெரியும்" என்று சொன்னவுடன் கோபத்தில் அவனை அடிக்க பாய்ந்தேன். எப்படி என்னை ஏமாற்றியிருக்கிறான்? என்று அவன் மேல் கோபம் கோபமாக வந்தது. "24 மணி நேரமும் விபச்சாரியுடன் இருப்பவனுக்கு, ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தியை கல்யாணம் செய்வது ஒன்றும் பிரச்சனை இல்லைதான்" ஆனால், நான்தான் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். இப்படிப்பட்ட ஒருவனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப்போகிறதே? என்று சந்தோசப்பட்டு விட்டேன். அவனின் கல்யாணத்தன்று நண்பர்கள் அவள் உடையை பற்றியும், அனைவருக்கும் முன் தொப்புள் தெரிய கீழே மிக கீழே அவள் புடவை கட்டி வந்ததையும், அனைவரும் பார்க்கும்போதும், எந்தவித சுரணையுமின்றி அவள் புடவையை சரியாமல் இருந்ததை பற்றியும், கூறிய போதே என் மனதிற்குள் சின்ன ஒரு பொறி தட்டியது. ஆனால் நான் நண்பர்களிடம் அப்படி அடுத்தவன் மனைவியை பார்ப்பது தப்பு என அட்வைஸ் செய்தேன். ஆனால், இந்த நாய் அடுத்தவன் மனைவியையே அல்லவா திருமணம் செய்து வந்துள்ளான்.

அனைத்து நண்பர்களுமே அவனுக்கு எடுத்து சொன்னோம். அவன் செய்த தவறையும், அவளின் குழந்தையின் எதிர்காலம் பற்றியும் கூறினோம். ஆனால், குமார் யார் பேச்சையும் கேட்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த நண்பர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அவனை அடிக்க கூட பாய்ந்தார்கள்.

பிறகு ஒரு வழியாக நான் அவனிடம்,

"குமார், நீ செயததிலேயே மிகப் பெரிய பாவம் இதுதான். இந்த பாவம் உன்னை மட்டும் பாதிக்காது. உன் பரம்பரையே பாதிக்கும். அவர்கள் உன் மேல் கேஸ் போட்டால் நீ கம்பி எண்ணவேண்டி இருக்கும். அதனால் எவ்வளவு சீக்கிரம் அவளை அவள் வீட்டிற்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பி விடு. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்ய தயாராய் இருக்கிறோம். தவறுக்கு மேல் தவறு செய்யாதே?. இன்று இரவு முழுவதும் நாங்கள் சொன்னதை யோசித்துப்பார். காலையில் நான் வரும்போது ஒரு நல்ல முடிவுடன் இரு" என்று சொல்லிவிட்டு நாங்கள் அவன் வீட்டிலிருந்து கிளம்பினோம்.

வாசகர்கள், "ஏன் அவர்கள் பெற்றோர்கள் அவனை கண்டிக்க மாட்டார்களா?" என கேட்கலாம். அவனுடைய தங்கைகளை பற்றி நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன், என நினைக்கிறேன். அவன் அப்பாவை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு முழு நாவலே எழுதலாம், அந்த அளவிற்கு விசயம் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு விசயம் சொல்கிறேன். ஒரு முறை குமார் மற்றும் அவனின் சில நண்பர்கள் ஒரு பெண்ணை அழைத்து வந்து, ஒரு இடத்தில் அன்று இரவு முழுவதும் இருந்திருக்கிறார்கள். அன்று இரவு ஒரு மணி போல் அங்கு வந்த அவனின் அப்பா, அவன் நண்பர்களிடம் இப்படி கெஞ்சினாராம், "டேய் குமார் கிட்ட சொல்லுடா, நானும் ஒரு முறை ......." இப்படிப்பட்ட அப்பாவா அவனை கண்டிக்க போகிறார்?

அடுத்த நாள் நானும், சில நண்பர்களும் அவன் வீட்டிற்கு சென்றோம். சென்றே எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. குமாரும் அந்த பெண்ணும் இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடிவிட்டிருந்தார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டால், எதுவுமே எங்களுக்கு தெரியாது என்றார்கள். எங்களுக்குத்தான் வெறுப்பாகவும் கோபமாகவும் வந்தது. முக்கியமாக எனக்கு.

இது நடந்து ஒரு ஆறு மாதம் இருக்கும். என் நண்பன் ஒருவன் வேகமாக என் வீட்டிற்கு வந்தான்,

"மாப்பிள்ள குமார பார்த்தேண்டா?"

"எங்கடா?"

"திருச்சில அந்த ஹோட்டல்ல"

"சட்டையை கோத்து பிடிக்க வேண்டியதுதானே?"

"அதுக்குத்தான் மாப்பிள்ள போனேன். என்னை பார்த்ததும் ஓடி ஒளிஞ்சான்"

"அப்புறம் என்னாச்சு?"

"நான் வேற இடத்துல என் அலுவலக நண்பருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு ஒரே ஷாக்காச்சுடா. என் அலுவலக நண்பர் ஒரு வட நாட்டுக்காரர். திடீருனு பார்த்தா?"

"ம்ம் பார்த்தா?"

"குமார் மனைவி என் அலுவலக நண்பர் ரூமுலேந்து வந்தா. அங்கே வெயிட் பண்ணிட்டிருந்த குமார் அவளை அழைச்சுட்டு ஆட்டோல போனான்"

"யேய், ஏதாவது உளராத. நீ யாரயோ பார்த்துட்டு சொல்ற!"

"சத்தியமா என் இரண்டு கண்ணால பார்த்தேன்"

அன்னைக்கு நான் அடைந்த வேதனைக்கு ஒரு அளவே இல்லை. அழகான ஒரு பெண். ஏற்கனவே திருமணமான ஒரு பெண். ஒரு குழந்தைக்கு தாயானவள். இன்னொரு ஆடவனை மணந்ததே மன்னிக்க முடியாத குற்றம். அப்படிப்பட்ட குற்றம் செய்தவள், எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிந்தாள்? என்ன காரணமாக இருக்கும்? மனம் முழுவதும் இந்த கேள்விகளுடனே சில காலம் வாழ்ந்து வந்தேன்.

சில வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக ஊருக்கு போயிருந்தபோது, என் நண்பனை பார்க்க அவன் வீட்டிற்கு போயிருந்தேன். பல விசயங்களுக்கு பிறகு குமாரை பற்றிய பேச்சு வந்தது.

"மாப்பிள்ள உனக்கு விசயம் தெரியாதா?"

"என்னடா?" இது நான்.

"குமார் செத்து போயிட்டாண்டா?"

"ஏன்?"

"எயிட்ஸ்"

2 comments:

Anonymous said...

Nachhuu...

iniyavan said...

Nachhuu...

நன்றி நண்பரே!