Aug 9, 2010

மிக்ஸர் - 09.08.2010

"சந்தோசத்துலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்துவது தான்னு " சொல்லுவாங்க. அதை விட பெரிய சந்தோசமா நான் நினைப்பது, நம்மை உதாசீனப்படுத்தியவர்களுக்கு, அவமான படுத்தியவர்களுக்கு, சண்டை போட்டவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவர்களை தேடிச்சென்று அவர்களுக்கு உதவுவதைத்தான்.எனக்கு சமீபத்தில் அது போல் ஒரு வாய்ப்பு அமைந்தது. நாம் அப்படி உதவி செய்யும்போது அவர்கள் நம்மிடம் காட்டும் அன்பு இருக்கிறதே? அதை எழுத்தால் எழுதிவிட முடியாது. இந்த பழக்கத்தை நான் கற்றுக்கொண்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்துதான். அவர்தான் இது போல் நிறைய நபர்களுக்கு உதவி இருக்கிறார். இப்படி உதவுவதை விட்டு விட்டு கடைசி வரை பகைமை பாராட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. இந்த பண்பை நாம் கடைபிடித்தால், நம்மை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதனால்தான் திருவள்ளுவர் அப்போதே எழுதி வைத்துவிட்டு போனார்:

"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்" என்று

நீங்களும் முயற்சித்து பாருங்களேன்!

**********************************

நீண்ட நாட்கள் பார்க்க வேண்டும் என நினைத்து நேற்று முன்தினம்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் பார்த்தேன். அற்புதம். கதை என்று ஒன்றும் இல்லை. அப்படியே ரியல் டீன் ஏஜ் வாழ்க்கையை படம் பிடித்து காண்பித்து உள்ளார் கெளதம் மேனன். முடிவு எனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதுதான் உண்மை. அதுதான் வாழ்க்கை. நம் தமிழ் நாட்டில் எத்தனை பேரின் காதல் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது என்று சொல்லுங்கள். விரல் விட்டு எண்ணி விடலாம். சிம்பு இதுபோல் நடித்தால் பெரிய ஆளாக வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. சிம்பு திரிஷாவின் அழகு இன்னும் என் கண்முன்னே நிற்கிறது. நான் என் பதினாறு வயது இளமைக்கால நினைவுகளுக்கு சென்றுவிட்டு வந்தது போல் உள்ளது. ரகுமானின் இசை மிக அற்புதம். படம் தந்த பிரமிப்பில் நான் அப்படியே உட்கார்ந்திருந்த போது என் பெண் கேட்ட கேள்விதான் என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது:

" ஏன் டாடி ஒரு மாதிரி இருக்கீங்க. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலைனா. இது படம் டாடி"

ஆமால்ல. இனி பிள்ளைகளுடன் படம் பார்க்கும்போது நம் உணர்வுகளை வெளிகாட்டிக்கொள்ளாமல் படம் பார்க்கவேண்டும் போல. இந்த படத்தை பற்றி இப்போ ஏன் எழுதறீங்கன்னு கேட்கறீங்களா? என்ன பண்ணறது? நான் படத்தை பார்க்கும்போது தானே எழுத முடியும்!

**********************************

'எந்திரன்' ஆடியோ ரிலீஸ் நேரில் பார்க்கும் வாய்ப்புகள் இருந்தும் என்னால் போக முடியவில்லை. நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். மொத்தம் 5 மணி நேர நிகழ்ச்சி. இரவு 7.30க்கு எல்லோரும் வருவதையும், அவர்களின் நேர்காணலையும் லைவாக காண்பித்தார்கள். இரவு 12.30க்கு முடிந்தது. அதைப்பற்றி எழுதிவிட்டு தூங்கலாம் என நினைத்து கம்ப்யூட்டரை திறந்தால் அதற்குள் ஏகப்பட்ட பதிவுகள். யூடியுப் காணொளிகள். சரி, என்று எழுதாமல் விட்டு விட்டேன். கடந்த சனியும், ஞாயிறும் சன் டிவியில் காண்பித்தார்கள், அவர்களுக்கே உரிய பாணியில் ஏகப்பட்ட எடிட்டிங்கோடு. விவேக்கை கொஞ்சம் யாராவது கட்டுபடுத்தினால் நல்லது. அவர் கவிதை என்று எதையோ எழுதி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அடிக்கும் கூத்தை பார்க்க சகிக்கவில்லை. ஆனால் எனக்கு பிடித்த ஐஸ்வர்யா மேல் எனக்கு அன்று மிகுந்த கோபம். எல்லாரையும் பற்றி பேசியவர், தலைவரை பற்றி பேச மறந்துவிட்டார். பிறகு என்ன நினைத்தாரோ ஓடி வந்து மீண்டும் பேசினார். ஆனால் அவர் பேசிய ஆங்கிலம் இருக்கிறதே? அப்பப்பா!!!!! அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

**********************************

'எந்திரன்' பாடல் முதல் நாள் கேட்டபோது எனக்கு ரகுமான் மேல் கோபமாக வந்தது. ஏனென்றால் ஒன்றுமே பிடிக்கவில்லை. அதனால் இரண்டு நாள் கேட்காமல் இருந்தேன். இரண்டாவது முறை கேட்டபோது 'புதிய மனிதா' பிடிக்க ஆரம்பித்தது. பின்பு ஒவ்வொரு பாடல்களாக பிடிக்க ஆரம்பித்து, இப்போது எந்திரன் பாடல்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சில பாடல்களின் ஆரம்பம் மற்றும் முடிவு வேறு சில பாடல்களை நினைவு படுத்தினாலும் மொத்தத்தில் எல்லா பாடல்களுமே அருமையாக உள்ளது. உற்று கவனித்தோமானால் வித விதமான சத்தங்கள் கேட்கிறது. என்ன என்ன கருவிகள் பயன்படுத்தி உள்ளார் என்று கண்டு பிடிப்பது மிக சிரமம். எந்திரன் பாடல்களை ஆர்கெஸ்ட்ராவில் எல்லாம் எப்படி பாடபோகிறார்கள்? என்று தெரியவில்லை. அத்தனை கஷ்டம் என்றே நான் நினைக்கிறேன்.

**********************************

ஒரு குழும மெயில் ஐடியிலிருந்து அடிக்கடி எனக்கு மெயில்கள் வரும். அவர்களுக்கு எப்படி என் ஐடி கிடைத்தது என்று எனக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது. ஏனென்றால் பிளாக்கில் என் பெர்சனல் மெயில் ஐடியை மாற்றி வெகு மாதங்கள் ஆகிவிட்டது. மெயில் வருவதோ பெர்சனல் ஐடிக்கு! ஒரு வேளை ஆரம்ப நாட்களில் என் பதிவுகளில் இருந்து ஐடி கிடைத்திருக்கும் போல, இருந்தாலும் கேட்டு விடலாம் என நினைத்து ஒரு மெயிலில் கேட்டேன். அதற்கு "உங்கள் கதையை ஆனந்தவிகடனில் படித்திருக்கிறேன். பிறகு உங்கள் பிளாக்கை படிக்க ஆரம்பித்தேன். நகைச்சுவை பதிவுகள் படித்திருக்கிறேன்" நான் எழுதி இது வரை ஒரே ஒரு கதை, அதுவும் ஒரு பக்கக் கதை, அதுவும் சென்னை பதிப்பில் மட்டுமே ஆவியில் வெளிவந்தது. அதை படித்து, ஞாபகம் வைத்து நம்மை ஒருவர் தொடர்ந்து படிக்கிறார் என்னும் போது உண்மையிலேயே மிக சந்தோசமாக உள்ளது. ஒரு கதைக்கே இப்படி என்றால்? இன்னும் நிறைய எழுதினால்...?

நிறைய எழுதலாம்தான்... ஆனால், ரொம்ப நல்லா எழுதனுமாமே... பார்ப்போம்????

**********************************

யாருக்காவது அவசரமா போன் பண்ணி அவங்க எடுக்கலைனா உங்களுக்கு எப்படி இருக்கும். எரிச்சலா இருக்காது? அந்த கொடுமையை நான் தினமும் அனுபவிக்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி அந்த கொடுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். உதாரணத்திற்கு என்னுடைய தினசரி வேலையில் நிறைய பேருக்கு போன செய்ய வேண்டி உள்ளது. அனைவருமே பெரிய பெரிய பதவியில் உள்ளவர்கள். நான் 10 முறை போன் செய்தால் அவர்கள் ஒரு முறை எடுப்பார்கள். அவர்களிடம் பதில்கள் இருந்தாலோ அல்லது அவர்கள் ஃபிரீயாக இருந்தால் மட்டுமே போனை எடுத்து பேசுவார்கள். அதே போல் நானும் இருக்கலாம் என நினைத்தால் முடியவில்லை. காரணம், "ஐய்யயையோ ஏதாவது முக்கியமான விசயமா இருக்குமோ" என பதறி போய் எடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் அலுவலக வேலை அவ்வளவு முக்கியமாக உள்ளது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெறுத்து போய், என்னதான் அவர்கள் பெரிய பதவியில் இருந்தாலும், ஏன் அவர்கள் போனை அட்டண்ட் செய்வதில்லை என்று கேட்டால் அவர்களின் பதில்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

"மீட்டிங்ல இருந்தேன்''

"போனை சைலண்ட் மோட்ல வைச்சிருந்தேன்"

"ஓஒ நீங்கதானா அது. மிஸ்டு கால் பார்த்தேன். போன் பண்ணலாம்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள நீங்களே பண்ணீட்டிங்க"

"சாரி, சாரி நான் கவனிக்கலை"

"போனை கார்லயே வைச்சுட்டேன்"

இதெல்லாம் விட கொடுமை. சமீபத்தில் ஒருவர் சொன்ன பதில்,

"மசாஜ் பண்ண போயிருந்தேன். அப்ப போய் போனை எடுக்க முடியுமா என்ன?"

நான் என்ன சொல்ல வரேன்னா, ஒருத்தர் நமக்கு போன செய்கிறார் என்றால் ஏதோ முக்கியமான விசயத்திற்குதானே போன் செய்வார், நம்மிடம் ஏதோ பேச நினைக்கிறார் என்றுதானே அர்த்தம். போனை எடுத்து ஓர் வார்த்தை பேசிவிட்டு, பிஸியாக இருந்தால் பிறகு பேசுகிறேன் என சொல்லி வைத்தால் என்ன குறைந்தா போயிடுவோம். இந்த ஒரு basic discipline கூட பெரிய பதவியில் இருப்பவர்களிடம் இல்லை என்றால் என்ன அர்த்தம்?

**********************************

12 comments:

Cable சங்கர் said...

நல்ல மிக்ஸர்..

Anonymous said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

Kumar said...

நல்லா இருக்கு boss.

CS. Mohan Kumar said...

எந்திரன்.. மலேசியா என்றதும் நீங்க போயிருப்பீங்களா என நானும் யோசித்தேன்

iniyavan said...

//நல்ல மிக்ஸர்..//

நன்றி கேபிள்ஜி.

iniyavan said...

க்ளிக்" செய்து படியுங்கள்.

வருகைக்கு நன்றி அனானி நண்பரே!

iniyavan said...

//Nice//

நன்றி சார்!

iniyavan said...

//நல்லா இருக்கு boss.//

வருகைக்கு நன்றி குமார்.

iniyavan said...

//எந்திரன்.. மலேசியா என்றதும் நீங்க போயிருப்பீங்களா என நானும் யோசித்தேன்//

வருகைக்கு நன்றி மோகன்குமார்.

Tirupurvalu said...

Friend in your last para i am not agreed b'coz i am business man .If you called me a time on the same time if i am with some other persons with us we not pick your call b'coz we don't expose our business.You know businessman who investing money not miss anything in calls especially b'coz they know they will loose if they missed calls

அமுதா கிருஷ்ணா said...

மிக்சர் நல்லாயிருக்கு...