Aug 10, 2010

உதவி எனப்படுவது யாதெனில்....

இந்த சம்பவத்தை உங்களிடம் சொல்லப்போகும் நான் நல்லவனா இல்லை கெட்டவனா என எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை முழுமையாக நான் சொன்ன பின் உங்களுக்கு விடை தெரியலாம். அதனால் நான் சொல்ல போகும் விசயத்தை முழுமையாக கேட்டுவிடுங்கள். நான் ரவி. மலேசியாவில் உள்ள மிகப்பெரிய, இல்லை, கொஞ்சம் பெரிய ஒரு பன்னாட்டு கமபனியில் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவன். அனைவராலும் மதிக்கப்படுபவன். நல்ல எண்ணங்கள் கொண்டவன் என்று மற்றவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். அது உண்மையா, இல்லையா என தெரியவில்லை. படிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும். கொஞ்சம் சமூக சேவை செய்பவன். மற்றபடி ஒரு சராசரியான NRI க்கு உள்ள குணங்களே என்னிடமும் உள்ளது. என்ன அது? எப்போதும் பணம், பணம் என்று அலைபவன். ஆனால், சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பவன். கவனிக்கவும். நினைப்பவன். சரி, இப்போது விசயத்திற்கு வருகிறேன். இன்று காலையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

இன்று காலையிலிருந்தே என் அலுவலகம் பரப்பரப்பாக இருந்தது. காரணம் எங்கள் பகுதி மந்திரி இன்று எங்கள் கம்பனியில் ஒரு விழாவில் கலந்துகொள்ள வருகிறார். அதனால் எங்கும் அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்கள் ரொம்ப பிஸியாக இருந்தார்கள். எல்லோருக்கும் அவரை எப்படி வரவேற்கவேண்டும் என்பதில் ஆரம்பித்து, நிகழ்ச்சியை எப்படி நடத்தி முடிப்பது என்பது வரை ஒரு முறை பயிற்சி அளிக்கப்பட்டது. நானும் என் பங்குக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டு மணியை பார்த்தேன். மணி 11.45. நல்ல பசி. அப்போதுதான் நினைவு வந்தது, நான் காலையில் சாப்பிடாமல் வந்தது. இன்று அமாவாசை. இனி, மதியம் போய் விரதம் முடித்துதான் சாப்பிட வேண்டும். கம்பனியில் எதுவும் சாப்பிட முடியாது. எங்கு திரும்பினாலும், சிக்கனும், மீனும் ஆக்கிரமித்து இருந்தன. இன்று என்றும் இல்லாத அளவுக்கு பசி. இன்னும் ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் உள்ளது, வீட்டிற்கு சென்று சாப்பிட. இப்படி நினைக்க கூடாதுதான், என்ன செய்ய அப்படிப்பட்ட பசி? வீட்டிற்கு சென்று அப்பாவுக்கு பூஜை செய்து விட்டு, விரதம் கழித்து விட்டு உடனே திரும்ப வேண்டும். உடனே ஒரு அவசரம் என்னை தொற்றிக்கொண்டது.

மற்ற வேலைகளையும் முடித்தேன். மணி பார்த்தேன். மதியம் 1. 2.15க்குதான் மந்திரி வருகிறார். அதற்குள் வந்துவிடலாம் என்று வீட்டிற்கு விரைந்தேன். எல்லாம் ரெடியாக இருந்தது. ஒன்றும் பேசவில்லை. அவ்வளவு பசி. கொஞ்சம் என்னை ஆசுவாச படுத்திக்கொண்டவுடன், மனைவிதான் பேச்சை ஆரம்பித்தார்,

"ஏங்க, ஊருக்கு போக டிக்கட் புக் பண்ணீட்டிங்களா?"

"இன்னும் இல்லைப்பா''

"இன்னைக்கு அமாவாசைங்க. இன்னைக்கே பண்ணுங்க"

"சரி. மந்திரி மீட்டிங் முடிந்தவுடன் புக் செய்கிறேன்"

"ஏங்க குமார் கார் ஆக்ஸிடண்ட் ஆகி, கடைசில பைன் கட்டி வந்தாங்களாம். அன்னைக்கு நீங்க பேசுனப்போ, குமார் உங்க கிட்ட ஒண்ணும் சொல்ல இல்லை"

"அதனால என்னப்பா? இப்போ ஏன் அதை பத்தி பேசற?"

"ஏன் அவங்க கார் மட்டும் எப்பவும் ஆக்ஸிடண்ட் ஆகுது?"

"தெரியலைப்பா" என்றவன் அதற்குள் சாப்பிட்டு முடித்து எழுந்தேன்.

"சரி, சாயந்திரம் கோயில் போகணும் சீக்கிரம் கிளம்பி இருங்க" என்று சொல்லிவிட்டு காரை கிளப்பினேன். காரில் ஏஸியை அட்ஜஸ்ட் செய்துவிட்டு , "புதிய மனிதா" பாடலை ரசித்துக்கொண்டே மிக மெதுவாக என்றைக்கும் இல்லாமல் மிக மெதுவாக காரை ஓட்டிக்கொண்டு சென்றேன். ஒவ்வொரு காராக என்னை ஓவர்டேக் செய்து போய்க்கொண்டிருந்தார்கள். முன்னே கேஸ் சிலிண்டர் நிரம்பிய லாரி சென்று கொண்டிருந்தது. ஏனோ அதனை முந்தி செல்ல தோன்றவில்லை.

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. என் காரை உரசினால் போல் மூன்று மோட்டார் பைக்குகள் முந்தி சென்றன. என் எதிரில் நிறைய கார்கள் வரவே என் லேனில் மூன்று பைக்கும் நெருங்கவே நான் என் வண்டியின் வேகத்தை குறைத்தேன். இரண்டு பைக்குகள் கேஸ் சிலிண்டர் லாரியை முந்தி சென்றன.

அந்த ஒரு பைக் ஓட்டுனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. லாரியின் வல்ப்பக்கம் செல்லாமல் சடாரென திரும்பி லாரியின் இடப்பக்கம் செல்ல முற்பட, ஏற்கனவே அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேறு ஒரு லாரியின் முனையில் வந்த வேகத்தில் மோதி, தூக்கி எரியப்பட்டு, பைக், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்குள்ளும், ஓட்டி வந்த அந்த நபர் தூக்கி வீசி எரியப்பட்டு அப்படியே என் கார் முன்னால் ஒரு பத்தடி தூரத்தில் விழுந்தார். கைகளையும், கால்களையும் X வைத்துக்கொண்டு தலையை ஒரு முறை தலையை தூக்கி பார்த்துவிட்டு அப்படியே தரையில் 'பொத்' என்று விழுந்து விட்டார். ஒரு துளி ரத்தம் நான் பார்க்கவில்லை. இறந்துவிட்டாரா இல்லை உயிர் இருக்கிறதா தெரியவில்லை.

என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் இருப்பதோ வெளிநாட்டில். இங்கே ஆக்ஸிடண்ட் நடந்தால், பைக் ஓட்டுபவர் இறந்தால் இடித்தவரை கேள்வி கேட்காமல் ஜெயிலில் போட்டு விடுவார்கள். ஆனால், நான் இடிக்கவில்லை. அந்த சம்பவம் ஒரு நிமிடம் லேட்டாக நடந்திருந்தால், என் கார் அவர் மேல் ஏறி இருக்கும். நல்ல வேளை அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. ஆனால், அங்கு நிற்க பயம். மனதில் ஒரு குழப்பம். அவருக்கு முதல் உதவி செய்யலாமா? இல்லை ஏதேனும் பிரச்சனை வர வாய்ப்புண்டா? மந்திரி பங்ஷன் வேறு சரியான நேரத்திற்கு போக வேண்டுமே? என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே ஒரு குழப்பத்துடன் காரை நிறுத்தாமல் கம்பனிக்கு புறப்பட்டேன். பின் கண்ணாடி வழியே பார்த்ததில் தூரத்தில் அனைத்து கார்களும் நிற்பது தெரிந்தது.

ஒரு வித பதட்டத்துடன் கமபனியில் நுழைந்தேன். மந்திரி ஒரு நாற்பது நிமிடம் தாமதமாக வந்தார். நிகழ்ச்சி நல்லபடியாக நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில், எனக்கு நான் செய்த சமூக தொண்டிற்காகவும், ஏகப்பட்ட ஏழைகளின் உயிரை காப்பாற்றியதற்காகவும், என் உதவும் குணத்திற்காகவும் எனக்கு மந்திரி விருது வழங்கி கெளவரவித்தார். எல்லோரும் பயங்கரமாக கைத்தட்டி என்னை பாராட்டினார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு, என் அலுவலக பி ஆர் வோ நண்பரை கேட்டேன்,

"ஏன் மந்திரி லேட்டாக வந்தார்?"

"வழியில யாரோ ஒருத்தர் பைக்ல வந்து அடிப்பட்டு கிடந்திருக்கிறார். அதனால் ஒரே டிராஃபிக் ஜாமாம். உடனே யாராவது முதல் உதவி அளித்திருந்தால் அடிப்பட்டவரை உடனே காப்பாற்றி இருக்கலாமாம். இப்போது அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு மந்திரி வந்திருக்கிறார். அவர் இப்போது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்"

ஒரு நிமிடம் என் தலை சுற்ற ஆரம்பித்தது.

"நான் வாங்கிய விருது என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் இருந்தது"


பின்குறிப்பு: நேற்று என் கண் முன்னே நடந்த ஒரு ஆக்ஸிடண்டையும், அந்த நபருக்கு உதவ முடியாத என் இயலாமையையும் ஒரு புனைவாக எழுதியுள்ளேன்.

7 comments:

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'இனியவன்: உதவி எனப்படுவது யாதெனில்....' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th August 2010 11:56:02 PM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/318264

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் நிகழ்ச்சியை இம்மாதிரி நோக்கலாம். நேரம் தவறாமை மந்திரி விஷயத்தில் அவ்வளவாக வற்புறுத்தப்படுவதில்லை. அதுவும் இம்மாதிரி காரணத்துக்காக அவர் நேரம் தவறுவதும் கிரெடிட்டாக பார்க்கப்பட்டுவிடும்.

ஆனால் ஒரு நிகழ்ச்சியை சரியாக நடத்தவேண்டிய பொறுப்பில் இருக்கும் உங்களுக்கு அது ஒரு லக்சரி. அதுவும் மந்திரி வரும் நிகழ்ச்சி சரியான கோஆர்டினேஷன் இன்றி சொதப்பலாகிப் போயிருந்தால், அப்போது உங்களுக்குத்தான் வசை கிடைத்திருக்கும். நீங்கள் நின்று உதவியதும் பைத்தியக்காரத்தனமாகவே பார்க்கப்பட்டிருக்கும் என்பது கசப்பான உண்மையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ப.கந்தசாமி said...

நீங்கள் செய்தது சரியே. வெளி நாட்டில் (ஏன் இந்தியாவிலேயே கூட)இந்த மாதிரி சமயங்களில் உதவி செய்யப்போனால், பல சமயம் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.

iniyavan said...

//நீங்கள் நின்று உதவியதும் பைத்தியக்காரத்தனமாகவே பார்க்கப்பட்டிருக்கும் என்பது கசப்பான உண்மையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி டோண்டு சார்.

iniyavan said...

//நீங்கள் செய்தது சரியே. வெளி நாட்டில் (ஏன் இந்தியாவிலேயே கூட)இந்த மாதிரி சமயங்களில் உதவி செய்யப்போனால், பல சமயம் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.//

வருகைக்கு நன்றி கந்தசாமி சார்.

Jaya said...

Many times I have felt the same way Ulag - about road accidents, my inability to stop and help, also handicapped by being a women, and have felt guilty too

Filim said...

நண்பரே நான் உதவி கேட்டு வந்துள்ளேன் இணையதளம் ஆரம்பிக்க ஒரு பெயரை தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன், என்னிடம் ஐஓபி வங்கி கணக்கு மட்டும்தான் உள்ளது அந்த பெயரை டாட் காம் என்ற புலத்துடன் பதிவு செய்ய முதலில் நான் என்ன செய்ய வேண்டும் இந்த ஒரே ஒரு உதவியை கேட்க்க please1helpme.plogspot.com என்ற தளத்தையே உருவாக்கியுள்ளேன் எல்லா திட்டங்களையும் வைத்துள்ளேன் ஆனால் வழிகாட்டுவதற்குதான் ஆளில்லை யாராவது உதவி செய்வீர்களா!