Aug 29, 2010

நல்லா இருக்கு தமிழ் நாடு!

விடுமுறைக்காக ஊருக்கு வந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது. வேறு விசயங்களை பற்றி சொல்வதற்கு முன் இந்த விசயத்தை சொல்லி விடுகிறேன்.

ஏர்போர்ட்டை விட்டு வந்ததும் முதலில் நான் செய்த காரியம் BSNL ஒரு இன்டெர்நெட் கார்டு வாங்கியதுதான். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். நானும் வந்ததில் இருந்து மெயில் பார்க்க முயர்சிக்கிறேன். ஒரு மெயில் பார்க்க ஒரு மணி நேரம் ஆகிறது. மெயில் பார்க்கவே இப்படி என்றால், எப்படி எழுதுவது? Broad Band Connection வாங்கி இருக்கலாம்தான். பதினைந்து நாட்களுக்கு அவ்வளவு செலவு ஏன் என நினைத்து வாங்காமல் விட்டதன் பயனை இப்போது அனுபவிக்கிறேன்.

ஜிம்பாவேயில் ஒரு பர்கர் விலை ஒரு மில்லியன் டாலர் என்ற விசயம் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். எப்படி அவ்வளவு பணத்தை எண்ணுவது? அதனால் எடை மிஷினில்தான் பணத்தை கணக்கிடுகிறார்களாம். அப்படி இந்தியாவிலும் ஆகிவிடுமோ என பயமாக உள்ளது. யாரை எதை கேட்டாலும் எல்லோருமே லட்சத்தில்தான் பேசுகிறார்கள்.நான் என் வீடு 2002ல் கட்டும் போது, ஒரு சதுர அடி 151 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது பக்கத்து மனை விலைக்கு வந்ததால் விலை கேட்டேன். ஒரு சதுர அடி 750 ரூபாயாம். எட்டு வருடத்தில் இந்த மாற்றம். எப்படி இது நடந்தது?

முன்பெல்லாம் NRI ஆல்தான் இப்படி விலை ஏறுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இப்போது அது தலை கீழாக மாறியுள்ளதாக நினைக்கிறேன். லோக்கல் புள்ளிகளே அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். முன்பெல்லாம் டாக்ஸி டிரைவருக்கு நாள் படியாக 100 ரூபாய் கொடுப்பேன். மூன்று வேளை சாப்பாடும் வாங்கி தருவேன். இப்போது 250 ரூபாய் கேட்கிறார்கள். எல்லோரிடமும் பணம் அதிக அளவில் விளையாடுகிறது.

நேற்று முன் தினம் வங்கி மேலாளார் அறையில் இருந்த போது நான் கேட்ட சுவாரசியமான உரையாடல்:

" சார், உங்க Branch க்கு அனுப்பவா?"

" வேணாம் சார். எங்க கிட்டயே நிறைய சேர்ந்துடுச்சு. நாங்களே எங்கே அனுப்பறதுனு தெரியாம முழிக்கிறோம்"

அவர்கள் பேசிக்கொண்டது எதைப் பற்றி தெரியுமா? அவர்களிடம் உள்ள பணத்தை பற்றி. அவர் ஏறக்குறைய ஐந்து Branch க்கு தொடர்பு கொண்டார். அந்த அளவிற்கு பேங்க் வசம் பணம் கையிறுப்பு உள்ளது. நம் பணத்தை அவர்கள் பாதுகாக்க நம்மிடம் அவர்கள் பணம் வாங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே எனக்கு படுகிறது.

நகைகள் எப்போதும் நான் மலேசியாவில்தான் வாங்குவது வழக்கம். அங்கு நகையின் qualitiy யும் நன்றாக இருக்கும். செய் கூலி ரெகுலர் கஸ்டமருக்கு மிக குறைந்த வகையில் வாங்குவார்கள். சேதாரம் என்பது சுத்தமாக இல்லை. இந்த முறையும் உறவினருக்கு அப்படித்தான் வாங்கி வந்தேன். திடிரேன என் வீட்டில் ஒரு பங்ஷன் வரவே ஒரு ஐந்து பவுன் செயின் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 40 கிராம் செயினுக்கு செய்கூலிக்காகவும், சேதாரத்திற்க்காகவும் அவர்கள் வசூலித்த தொகை மட்டும் 9000 ரூபாய். ஏறக்குறைய 5 கிராம் பவுனின் விலை. ஏன் மலேசியாவிற்கும், திருச்சிக்கும் இந்த அளவு வேறுபாடு என்று இன்று வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மிக குறைவாக படித்த என் நண்பன் ஒருவன் ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு பதவியில் இருக்கிறான். அவன் இன்று ஒரு சவேரா கார், வீடு மற்றும் சில ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளனாகிவிட்டான். இவ்வளவு படித்து கஷ்டப்பட்டு வேலையில் இருப்பதற்கு பதில் அரசியலில் சேர்ந்து இருக்கலாம். என்ன செய்வது? இனி அது முடியாத காரியம். நான் இருப்பதோ வெளிநாட்டில். அதை விட முக்கியமான காரணம், வாக்காளர் லிஸ்டில் என் பெயர் இல்லை. ஆனால், ரேஷன் கார்டில் என் பெயர் உள்ளது.

எங்கு பார்த்தாலும் புது புது சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள் என தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சந்தோசமாக உள்ளது. இன்னொரு பக்கம் வருத்தமாக உள்ளது, இருந்து அனுபவிக்க முடியவில்லெயே என்று!

நிறைய எழுதுவதற்காக அனுபவங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். சுஜாதா சொன்னது போல் ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு சிறுகதையாக பார்க்க முயற்சிக்கிறேன். ஆனால், என்ன பிரச்சனை என்றால் நான் ஒரு தொடர்கதையாக பார்த்து விடுகிறேன்.

மீண்டும் முடிந்தால் நாளை சந்திக்கலாம்.

1 comment:

CS. Mohan Kumar said...

ஊருக்கு வந்துள்ளீர்களா? மகிழ்ச்சி !!