முதலில் இந்த 200வது பதிவில் கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்களுக்கு, திரட்டிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
01. என்னை பதிவுகள் எழுத தூண்டிய பரிசல்காரனின் எழுத்துக்களுக்கு.
02. இதுவரை என் எழுத்துக்களை பார்வையிட்டுச் சென்ற 93,284 பேர்களுக்கு.
03. என்னை பின் தொடரும் 97 நண்பர்களுக்கு.
04. இதுவரை என்னை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு.
05. என்னுடைய பதிவுகளை அதிகம் பேர் படிக்க உதவிடும் தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10,மற்றும் திரட்டி நிர்வாகிகளுக்கு.
********************************************
இந்த முறை ஊரில் இருந்த போது ஒரு நண்பர் ஒரு இடம் விலைக்கு வருகிறது வாங்கிக்கொள்கின்றீர்களா? எனக் கேட்டார். சென்று பார்த்தேன். இடம் அருமையான இடம். என் வீட்டிற்கும், என் உறவினர்களின் வீடுகளுக்கு மிக அருகே ஒரு காலி இடம். இடத்தை பார்த்தவுடன் வாங்கலாம் என நினைத்து விலையை கேட்டேன். அவர் சொன்ன விலையை கேட்டு அதிர்ந்து போனேன். என்னை அழைத்து சென்றது என் நண்பரும், இரண்டு புரோக்கர்களும். அதிக விலை சொன்னதால் வேண்டாம் என்று விட்டு விட்டேன். அந்த இடத்தின் முதலாளி அவரின் பெண் குழந்தையின் மருத்துவ படிப்பின் டொனேஷனுக்காக விற்பதாக கூறினார். புரோக்கர்களும், படிப்பிற்கு உதவுமாறு என்னிடம் கெஞ்சினர். படிப்பிற்காக பல லட்சம் எப்படி அதிகமாக கொடுத்து வாங்க முடியும் என நினைத்து வேண்டாம் என சொல்லிவிட்டேன்.
அடுத்த நாள் என் வீட்டிற்கு வந்த இடத்தின் முதலாளி, "சார், நாம புரோக்கர் இல்லாம முடிச்சுக்கலாம். என்ன சொல்றிங்க?" எனக் கேட்டார்.
நான், "எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், அந்த இடத்திற்காக நீங்கள் கேட்கும் விலை ரொம்ப அதிகம்" என்றேன்.
அவர் விடாப்பிடியாக அதிக விலை சொல்லவே, எனக்கு வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனால், அவரோ, "உங்களுக்கு கொடுக்கவே விருப்பம்" என்று கூறிக்கொண்டே இருந்தார். நான் ஒத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் அவர் அடுத்து ஒரு நபரிடம் இடத்தை காண்பித்து பேசி முடிக்கும் தருவாயில், என்னை அழைத்து, "நான் அவருக்கு கொடுக்கவா, இல்லை நீங்கள் வாங்கி கொள்கின்றீர்களா?" எனக்கேட்டார்.
நான், "அவர் அதிகமாக பணம் கொடுக்கும் பட்சத்தில் அவரிடமே கொடுத்துவிடுங்கள்" என கூறிவிட்டேன். பின்பு இரண்டு நாள் சென்று எனக்கு போன் செய்தார் இப்படி,
"சார், வாங்க்கிக்கறீங்களா?"
"நீங்கதான் பேசி முடிச்சீங்களே?"
"உண்மைதான். ஆனால், உங்களுக்கு கொடுக்கவே எனக்கு விருப்பம்"
"அப்படியானால் நான் சொன்ன விலைக்கு கொடுங்கள்"
"இல்லை சார். இடம் நல்ல இடம். அவர் கொடுப்பதைவிட அதிகம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்"
"இது என்னங்க நியாயம். நான் ஏன் அதிகம் கொடுக்க வேண்டும். நீங்கள் அவருக்கு கொடுத்து விடுங்கள்"
"ப்ளீஸ் சார்"
நான் மறுத்துவிட்டேன். நான் ஊருக்கு கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு, என் நண்பன் அவரிடம் பேச, அவர் என்னை மீண்டும் என்னை வாங்கிக்கொள்ள சொல்லி இருக்கிறார். பின்புதான் விசயம் தெரிந்தது. அவருக்கு உடனடியாக பெரிய தொகை வேண்டும். ஆனால் அவரிடம் பேசி முடித்தவரிடம் பணம் அன்று இல்லை. பணம் உடனே கட்டாவிட்டால், மருத்துவ கல்லூரி அட்மிஷன் கிடைக்காது. என்னிடம் உடனே பணம் வாங்கிவிடலாம் என்பது அவரின் எண்ணம். நான் இன்ஜினியர் நண்பரிடம் கேட்டேன். அவரோ, "கொஞ்சம் நல்ல இடமா இருக்கு. விலை முன்னே பின்னே இருந்தாலும் வாங்கிவிடுங்கள்" என்றார்.
உடனே நண்பரின் மூலம் அவரை வரச்சொன்னேன். வீட்டிற்கு வந்தார். வாங்கிக்கொள்ள சொல்லி வற்புறுத்தினார். விலை அவர் பேசி வைத்திருந்ததை விட அதிகமாக கேட்டார். நியாயமாக, நான் செய்யும் உதவிக்கு அவர் எனக்கு குறைத்து தர வேண்டும். ஆனால் அதிகம் கேட்டார். அதோடு இல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய குடும்பத்தில் ஒருவர் மருத்துவர் ஆவது என்பது நடைபெறாத காரியம். அவர் அழ ஆரம்பிக்கவே, மிக அதிக விலை கொடுத்து, அவர் பெண்ணின் மருத்துவ படிப்பிற்கு உதவட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் வாங்க ஒப்புக்கொண்டேன். அவர் ஏற்கனவே பேசி வைத்தவரிடம் அட்வான்ஸ் வாங்கவில்லை. இருந்தாலும் நான் அவரிடம், "நீங்கள் அவரிடம் சென்று தெரிவியுங்கள். அதுதான் முறை. அவர் வேண்டாம் என சொன்னால் மட்டுமே நான் வாங்குவேன்" என சொல்லி அனுப்பிவிட்டேன்.
சென்றவர் மூன்று மணி நேரம் கழித்து வந்தார். ஏற்கனவே பேசி வைத்த நபர் அவரை திட்டி அனுப்பியதாகவும், அதனால் நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி மீண்டும் ஒரு முறை அழுதார். மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக கேட்டார். அடுத்த நாள் தருவதாக கூறி அனுப்பிவைத்தேன். 4 மணிக்கு போன் செய்து, "அடுத்த நாள் கோகுலாஷ்டமி, பேங்க் விடுமுறை. இப்போதே பணம் வேண்டும்" என மீண்டும் அழுதார். உடனே பேங்கிற்கு ஓடி, மேனேஜரிடம் பேசி பணத்தை வாங்கி கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு சென்னை சென்று விட்டார்.
ரெஜிஸ்ட்ரேஷன் அன்று முதலில் இடத்தை காட்டிய புரோக்கர்கள் என் நண்பனிடம் சென்று பணம் கேட்டிருக்கிறார்கள். என் அனைத்து நண்பர்களும், புரோக்கர்கள் கூறியதால்தான் அந்த இடம் உனக்கு கிடைத்தது. அதனால் அவர்களுக்கு கமிஷன் கொடுப்பதுதான் முறை. அவர்களுக்கு வருமானமே இதுதான் என கூறவே, ஏற்கனவே அதிக விலை கொடுத்து வாங்கும் நான் புரோக்கர் கமிஷனையும் கொடுக்க ஒப்புக்கொண்டேன். இதோடு முடிந்திருந்தால், இந்த பதிவு எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு இருக்காது. ஆனால், அந்த லேண்ட் ஓனர், அவர் கொடுக்க வேண்டிய கமிஷனையும் என்னை கொடுக்க சொல்லவே பிர்ச்சனை ஆரம்பமானது.
வாங்குபவர் எப்படி விற்பவர் தரவேண்டிய கமிஷனையும் தர முடியும் என கேட்டதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், சரி, நானே அதையும் கொடுக்கலாம் என முடிவெடுத்து அதை புரோக்கர்களிடம் சொன்னால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள்.
"நீங்கள் ஏற்கனவே கொடுத்துவிட்டீர்கள். அவர் கமிஷனை அவர் தருவதுதான் முறை" என்று கூறிவிட்டார்கள். எனக்கு அடுத்த நாள் காலை மலேசியா வர வேண்டியதால் கிளம்ப ஆரம்பித்தேன்.
அப்போது என்னை பார்த்து அந்த லேண்ட் ஓனர் சொன்னவைகளை இங்கே கீழே தருகிறேன்:
"நல்லா இருங்க உலகநாதன். என்னை ஏமாத்திட்டீங்க. வம்பில மாட்டிவிட்டீங்க. சொத்து வாங்கிட்டீங்கள்ள. அதான் போறீங்க. ஒரு வாரம் லேட்டானாலும் அவர்கிட்டயே வித்து இருக்கலாம். ரொம்ப மனசு கஷ்டப்பட்டு சொல்றேன். நல்லா இருங்க"
நான் அன்று செய்த உதவியை மிகச்சுலபத்தில் மறந்து போனார். மிக அதிக விலை கொடுத்து, அவரின் பெண்ணின் படிப்பிற்கு உதவுவதற்காக வாங்கியதற்கு, என்னை பார்த்து அவர் உதிர்த்த வார்த்தைகள் அவை.
மலேசியாவில் விமானம் தரை இறங்கும் வரை மனம் நிம்மதி இல்லாமலே இருந்தது.
********************************
ஏற்போட்டிற்கு கிளம்பும்போது பெரிய அக்கா, நாங்கள் ஏற்போட்டில் சாப்பிடுவதற்காக நான்கு பொட்டலங்கள் இட்லி கொடுத்தார். நான் "இவ்வளவு வேண்டாம். எங்களால் சாப்பிட முடியாது. என்னால் வீணாக்கவும் முடியாது" என்று சொல்லி ஒரு பாக்கட்டை திருப்பி கொடுத்தேன்.
பின்பு ஏற்போட்டில் பார்க்கும் போது, அந்த நாலாவது பாக்கட்டும் சேர்ந்தே இருந்தது. எனக்கு கோபம். வீட்டிற்கு போன் செய்து சத்தம் போடலாம் என நினைத்து அக்காவிற்கு போன் போட்டேன். மனைவி தடுத்துவிட்டார். என் சுவாபம் அப்படி. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த எக்ஸ்ட்ரா பாக்கட்டை என் மனைவி அங்கே வேலை செய்யும் ஒரு வயதான் பெண்மணியிடம் கொடுத்தார். அவர் சந்தோசமாக வாங்கிகொண்டார். விமானத்தில் ஏற சொல்லி அறிவிப்பு வரும்போது, அந்த வயதான பெண்மணி ஓடி வந்து என் மனைவியின் கையை பிடித்துக்கொண்டு,
"சாப்பிட்டு ஒரு நாள் ஆச்சும்மா. வயிறார சாப்பிட்டேன். மகராசியா இரு"
ஏனோ அந்த லேண்ட் ஓனர் என் நினைவிற்கு வந்து போனார்.
20 comments:
மனிதர்களில் பலவகை அதில் அந்த லேன்ட் ஓனரும் ஒருவகை நண்பரே.இதை நாம்தான் சகித்துக்கொள்ளவேண்டும்
//"நல்லா இருங்க உலகநாதன். என்னை ஏமாத்திட்டீங்க. வம்பில மாட்டிவிட்டீங்க. சொத்து வாங்கிட்டீங்கள்ள. அதான் போறீங்க. ஒரு வாரம் லேட்டானாலும் அவர்கிட்டயே வித்து இருக்கலாம். ரொம்ப மனசு கஷ்டப்பட்டு சொல்றேன். நல்லா இருங்க"//
சொத்து விற்கிறவங்க பெரும்பாலும் இந்த மனநிலையில்தான் இருக்கின்றனர். சொத்து போகுதே என்கிற அங்கலாய்ப்புதான் :) பணம் வாங்குவது கணக்கிலேயே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்..
200-வது பதிவிற்கு வாழ்த்துகள்!
மனிதர்கள் பலவிதம்!!
நல்லா இருங்க சாமியோவ்....
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா!
சில மனித மனங்கள் அவசரத்தில் பிறர் செய்த உதவிகளை எந்த குறுகுறுப்பும் இன்றி மறந்துவிடும் :(
200வது இடுகைக்கு வாழ்த்துகள்.
200-வது பதிவிற்கு வாழ்த்துகள்
200 padivukku waltukkal
200 padivukku waltukkal
200 padivukku valtukkal
kariyam mudiyervarayil narayana,narayana mudinja udaneye poorayana, pooryana.
200 க்கு வாழ்த்துகள்.
இப்படி உதவி செய்பவர்களை இளிச்சவாயர்களாக நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
200 வாழ்த்துகள்! :)
சொத்தாவது வில்லங்கம் இல்லாம கிடைச்சிதேன்னு சந்தோசப் பட்டுக்கவேண்டியதுதான் போல! :(
நன்றிக்கு நன்றி இனியவன்!
இரண்டு சம்பவங்களை ஒன்றோடொன்று கோர்த்திருந்த விதம் அருமை...
200 க்கு வாழ்த்துகள்.
Pl. dont take these words to heart.
" உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி" பாடலை நினைவில் கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் இனியவன்.
நெற்றியில் ஏமாளி என பச்சை குத்திக் கொண்டிருக்கிறீர்களா என்ன? அது என்ன உங்களுக்கென்று அனுபவங்கள் இவ்வாறு அமைகின்றன?
இப்படித்தான் சாமான்களை தெரிந்தவர்களுக்காக வாங்கி வரும் விஷயம் அடங்கிய பதிவிலும் நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தார்கள்.
நிலத்தையாவது வில்லங்கம் இல்லாமல் வாங்கினீர்களா இல்லையா?
அது அப்படித்தான் அழுவார்கள் காரியம் ஆவதற்காக, அதற்காகவெல்லாம் அலட்டிக்க்லாமா? உங்கள் விலையில்தான் நின்றிருக்க வேண்டும் நீங்கள்.
இம்மாதிரி நிகழ்வுகளில் என் கோபமெல்லாம் உங்களைப் போல ஏமாளிகள் மேல்தான்.
எமோஷனல் பிளாக்மெயிலுக்கு ஒருபோதும் இடமளிக்கலாகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்திய அன்பு நண்பர்கள்,
நந்தா ஆண்டாள்மகன்
நிகழ்காலத்தில்
ரவிச்சந்திரன்
கோவி. கண்ணன்
பாலாஜி சரவணா
இராகவன் நைஜிரியா
டி வி ராதாகிருஷ்ணன்
ரஸின் நிசாம்
அசிம் பாஷா
அறிவிலி
ஷங்கர்
பரிசல்காரன்
மோகன்குமார்
அதிபிரதாபன்
பாலராஜன் கீதா
டோண்டு ஐய்யா
ஆகியோருக்கு என் இதயம் கனிந்த நன்றி.
very good message
Post a Comment