Sep 7, 2010

ஊருக்கு உபதேசம்!

என் ஒவ்வொரு பயணங்களின் போதும், குறிப்பாக என் இந்திய பயணங்களின்போது நிறைய வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறேன். ஒவ்வொருவரிடமும் விதவிதமான வித்தியாசமான அனுபவங்களை பெறுகிறேன். நிறைய வாழ்க்கை பாடங்களை நான் அவர்கள் மூலம் கற்றுக்கொள்கிறேன். சில நல்லவைகளும், பல கெட்டவைகளும் அதில் அடக்கம். அதில் சில சுவாரசியமான அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

என் நண்பனின் தம்பி ஒருவன். அகராதியாக பேசுபவன். வாய் கொஞ்சம் அதிகம். அதனால், நான் அவனிடம் அதிகம் பேசுவதில்லை. அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான். சாதாரண, மிக சாதாரண வேலைதான். ஆனால், அந்த கம்பனியின் சேர்மன் போல பேசுவான். அதை கேட்கவும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். அது எல்லாம் அதிகம் படிக்காதவர்கள் கூட்டம். எப்பொதுமே தன்னை ஒரு ஹீரோ போல நினைத்து அடுத்தவர்களிடம் பேசுவதே அவன் வேலை. அது அவனின் குணம். அதனால் எனக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. இருந்தாலும் சமீபத்தில் அவனோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுவதற்காக அவனைப்பற்றி சிறிது சொல்லும்படி ஆகிவிட்டது.

இந்த முறை என் இந்திய பயணத்தின்போது அவனை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளானேன். நான் தினமும் சந்திக்கும் என் நண்பனின் கடைக்கு அவன் வருவதால், வேறு வழி இல்லாமல் அவனை சந்திக்க நேர்ந்தது. இனி, அவனுக்கும், எனக்கும் நடந்த உரையாடலை கீழே தருகிறேன்:

"உலக்ஸ், என்னோட ஒரு பக்கக் கதை ஒன்னு குமுதத்தில வந்தது தெரியுமா?"

"அப்படியா! குட்"

"ரேடியோ FMல கூட பேசினேன்"

"வெரி குட்"

"என்னை தினமும் 'இன்று ஒரு தகவல்' பகுதில பேச சொல்றாங்க. தென்கச்சி சாமிநாதன் இல்லாததுனால என்னை பேச சொல்றாங்க''

"அப்படியா? நல்ல விசயமாச்சே. பேச வேண்டியதுதானே?"

"பணம் ஒன்னும் கொடுப்பதில்லை. ப்ரீயா பேச முடியாதுல்ல"

"ம்ம்ம்ம்"

அப்போது ஒரு கல்லூரி மாணவன் வரவே, பேச்சு அவன் பக்கம் திரும்பியது. அவன் போனவுடன், திரும்பவும் உரையாடல் தொடர்ந்தது.

"இப்போ வந்துட்டு போனல்ல உலக்ஸ். அவன் கிட்ட என் MBA எக்ஸாமுக்காக மேத்ஸ்ல ஒரு டவுட் கேட்டேன். அவன் 'இது கஷ்டம். உங்களுக்கு புரியாது'ன்னு சொன்னான்.

'அப்புறம்?"

"அவன் கிட்ட புத்தகம் வாங்கி நானே படிச்சு தெரிஞ்சுட்டு அடுத்த நாள் பரிட்சைல 80 மார்க் வாங்கினேன் (அந்த மாணவன் வயது 20. இவன் வயது 35. 20 வயதுல 80 மார்க் வாங்கி இருந்தா ஒத்துக்கலாம். 35 வயசுல?)

"ம்ம்ம்ம்"

"மொத்தம் 25 கதைகள் எழுதி வைச்சிருக்கேன். குறும்படம் தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடிட்டு இருக்கேன்"

"நல்ல விசயம்தான்"

"சினிமா ஸ்டோரி டிஸ்கஷனுக்கு என்ன கூப்பிடுறாங்க. நான் தான் போகாம இருக்கேன்"

"அப்படியா?"

"நான் இண்டர்நெட்ல ரொம்ப பேமஸ் தெரியுமா?"

"அப்படியா?"

"என் பெயரை கூகிளில் போட்டா, நிறைய பக்கங்கள் வரும். வந்து குவியும். பார்த்திருக்கியா?" (பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்னும் குவியலை)

"நான் கூட பிளாக்ல எழுதுறேன் தெரியுமா? படிச்சிருக்கியா" என்றேன்.

"நான் பிளாக் எல்லாம் படிக்கறது இல்லை. அது என்ன சொந்த டைரி மாதிரி எழுதுறாங்க. அதெல்லாம் குப்பை"

என் கோபம் தலைக்கு மேலே ஏற என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். தலை எழுத்தே என கேட்டுக்கொண்டிருந்தேன்.

"இன்னொரு விசயம் உலக்ஸ். நான் இரண்டு புத்தகம் எழுதி இருக்கேன்"

"அப்படியா! சந்தோசம்"

"இதுவரை இரண்டு பதிப்புகள் வந்துடுச்சு"

"ம்ம்ம்"

"ஒரு கல்லூரி நிறுவனம் மொத்தம் 200 புத்தகம் வாங்கினாங்க"

"அப்படியா? அப்படி என்ன எழுதின, அந்த புத்தகத்துல?"

"ஆபிஸ்ல எப்படி நல்ல பெயர் எடுக்கறது. எப்படி வேலை செய்தால் விரைவில் புரோமோசன் கிடைக்கும். எப்படி மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பது? என்பதை எல்லாம் அந்த புத்தகத்துல விரிவா எழுதியிருக்கேன்"

"சரி. உன் அலுவலக வேலை எப்படி உள்ளது? ஏதேனும் புரோமோசன் கிடைச்சுதா?"

"இல்லை. நான் வேலையை விட்டு நின்னுட்டேன்"

"ஏன்? என்னாச்சு?"


"எனக்கும், எங்க பாஸுக்கும் ஒத்து வரலை. அதனால போடானு ரிஸைன் பண்ணீட்டேன்"

"இப்போ என்ன பண்ணற?"

"வேலை தேடிட்டு இருக்கேன்"

"நீ எழுதுன புத்தகத்தை முதல்ல நீ ஒழுங்கா படி" என சொல்ல நினைத்து சொல்லாமல் வந்துவிட்டேன்.

2 comments:

Unknown said...

எல்லா ஊர்லயும் நிறையபேர் இப்படி திரியிறாங்க!!!

iniyavan said...

//எல்லா ஊர்லயும் நிறையபேர் இப்படி திரியிறாங்க!!!/

வருகைக்கு நன்றி நண்பா!