Sep 13, 2010

முடிவு எப்படியும் இருக்கலாம்!

என் உறவினர் ஒருவர் நன்றாக இருந்தார். எந்தவிதமான நோயும் இல்லை. அவருக்கு மண வாழ்க்கை அப்படி ஒன்றும் சரியாக அமையவில்லை. இருந்த ஒரே பையனும் கல்லூரி படிக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான். கணவனுக்கும், மனைவிக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லை. மிகுந்த சாமி பக்தி உடையவர். அவர் வாழ்க்கையில் அப்படி ஒன்றும் சந்தோசமாக இருந்ததாக நினைவில்லை. ஒரு நாள் மாலை எல்லோருக்கும் வழக்கம் போல காபி போட்டுக்கொடுத்து விட்டு, ஒரு ஆட்டோ பிடித்து டாக்டரிடம் செல்வதாக அனைவரிடமும் சொல்லிவிட்டு சென்றார். எல்லோரும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் டாக்டர் வீட்டிலிருந்து போன் செய்து, "உடனே யாராவது வாருங்கள்" என கேட்டுக்கொண்டார். உடனே இன்னொரு உறவினர் அங்கே சென்றார். அவர் போனதும்தான் தெரிந்தது, அவருக்கு வந்தது கடுமையான ஹார்ட் அட்டாக் என்றும், அவர் உடனடியாக மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதும். பிறகு அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் சேர்க்க விரைந்த போது, போகும் வழியிலேயே இறந்து விட்டார். ஒரு வலி இல்லாமல், யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படுத்தாமல் இறைவனடி சேர்ந்து விட்டார்.

வாழ்க்கையில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காத அவர், சாவில் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காமல் இறைவனை அடைந்தார். எவ்வளவு பெரிய கொடுப்பினை அது!

**************************************************

என் நண்பர் ஒருவரின் உறவினருக்கு 85 வயது ஆகியும் உயிருடன் இருந்தார். திடீரேன அவர் உடல் நிலை மோசமானது. அவரின் தொல்லைகளும் அதிகமானது. எல்லா உறவினர்களையும், பிள்ளைகளையும் வரச் சொன்னார். அனைவரும் வந்தார்கள். ஆனால், இவருக்கு உடல் நிலை சரியாகிவிட்டது. அனைவரும் திரும்ப அவரவர் வீட்டிற்கு செல்லும்படி ஆகிவிட்டது. ஆனால் அவரின் தொல்லைகள் அதிகமானது. வயது அதிகம் ஆகிவிட்டதால் அவரின் சேஷ்டைகள் சிறு குழந்தையின் செய்கை போல் ஆனது. மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மீண்டும் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். சாதாரணமாக உயிர் பிரியவில்லை. ஒரு கட்டத்தில் 'அப்பா எப்போ சாவார்?' என மகன்களும், மகள்களும் நினைக்கும் சூழல் உருவானது. கடைசியில் ஒரு நாள் இறந்து போனார்.

**************************************************

போன வருடம் டிசம்பர் மாதம் சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் முரளியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் திருச்சி செல்ல கிங் பிஷ்சர் விமானத்திற்கு காத்திருக்கும் போது, அவர் வேறு ஒரு விமானத்திற்காக காத்திருந்தார். அவரை பிள்ளைகளிடம் காண்பித்து அவரை பற்றி சொன்னேன். அவரின் இளமையை நினைத்து ஆச்சர்யப்பட்டேன். அவர் அப்படியே பிரிட்ஜிலிருந்து வந்தது போல் அவ்வளவு பிரஷ்சாக இருந்தார். அவரின் முகத்தில் எப்போதும் போல் அந்த சிரிப்பு. பல வருடங்களுக்கு முன் (15 வருடங்களுக்கு முன் இருக்கலாம்), சன் டிவியில் அவருடைய பேட்டி பார்த்தேன். அவரிடம் ஒரு கேள்வி கேட்டார் பேட்டி எடுத்த பெண்மணி, " எப்படி சார் எப்பவுமே இளமையா இருக்கீங்க?'' அதற்கு அவரின் பதில்,

"நான் எப்போதுமே என் மனதை சந்தோசமாக வைத்திருப்பதுதான்"

அப்படிப்பட்ட முரளி மரணம் அடைந்த்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவருடைய பெண்ணுக்கு நிச்சயம் நடந்து சில நாட்கள் ஆகி இருக்கிறது. மகன் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகர் சிவக்குமார் சொன்னது போல, "ஆண்டவன் மேல்தான் கோபம் வருகிறது"

யாருக்கும் எந்த தொந்தரவும் வைக்காமல் தூங்கும்போதே இறந்திருக்கிறார். நல்ல சாவாம்! யாருக்கும் இப்படி அமையாதாம்! அதற்காக 46 வயதிலா? அவருக்கும் வேண்டுமானால் நல்ல சாவாக, வலியில்லா மரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் குடும்பத்திற்கு????

இப்போதெல்லாம் இரவில் தூங்கும் முன்னே முரளியின் நினைவு வருகிறது. தூங்கும் முன்னே ஒரு முறை மனைவியின் முகத்தையும், பிள்ளைகளின் முகத்தையும் அமைதியாக பார்த்துக்கொள்கிறேன்.

காலையில் எழுந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் தூங்க ஆரம்பிக்கிறேன்.

**************************************************

இந்த முறை லால்குடியில் இருந்த ஒரு நாளின் மாலை வேளையில் கடுமையான மழை. ஒரே இடி, மின்னல். ரொம்ப நேரம் மழை அடித்து கொட்டியது. எப்போதும் போல் ஒரு மழை நாள் என நினைத்தேன். பிறகுதான் அந்த செய்தி வந்தது.

என்னுடன் டிரெயினில் தினமும் வந்த நண்பன் ஒருவன். எனக்கு அவனை நன்றாக தெரியும், ஆனால் அவ்வளவு பழக்கம் இல்லை. என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு நெருங்கிய பழக்கம். அவன் அதிகம் படிக்கவில்லை. விவசாயம்தான்.

அந்த மழைநாளில் அவனும், அவனுடைய நண்பன் ஒருவனும் வீட்டின் பின்புறம் தென்னை மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது கடுமையான இடி, மின்னல். கடுமையான இடியின்போது ஏதோ வெளிச்சம் வரவே என் நண்பனின் பக்கத்தில் அமர்ந்து இருந்த நண்பன் கண்களை இருக்க மூடிக் கொண்டு இருந்திருக்கிறான். சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்தால், என் நண்பன் ஒரு பத்தடி தள்ளி தலை குப்புற விழுந்து கிடந்திருக்கிறான். போய் தொட்டு தூக்கியபோதுதான் தெரிந்திருக்கிறது, அவன் இறந்துவிட்டான் என்று. அவனை சோதித்து பார்த்தபோது அவன் நெஞ்சு அருகே கருகி இருந்தது கண்டு பிடித்துள்ளார்கள்.

பக்கத்தில் இருந்தவன் இறக்கவில்லை. இவன் மட்டும் இறந்துவிட்டான். காரணம், அவன் பையில் செல்போன் இருந்திருக்கிறது.

விதி! என்ன செய்ய? அவன் குடும்பம் இப்போது மிகுந்த சோகத்தில்.

முடிவு எப்படியும் இருக்கலாம்!

1 comment:

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'இனியவன்: முடிவு எப்படியும் இருக்கலாம்!' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 13th September 2010 07:35:01 AM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/337148

Thanks for using Indli

Regards,
-Indli

இன்ட்லி வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.