Sep 29, 2010

பிரிந்தவர் மீண்டும் சேரும் போது....

இந்த பாடல் உங்களுக்கு நினைவு உள்ளதா?

"பிரிந்தவர் மீண்டும் சேரும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி"

இந்த பாடல் காதலன்-காதலிக்காகவோ, இல்லை தலைவன் -தலைவிக்காகவோ எழுதப்பட்டு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை காதலன் காதலிக்காக எழுதப்பட்டு இருப்பதாக நினைக்க முடியவில்லை. ரொம்ப வருடங்கள் கழித்து காதலியை சந்திக்க நேர்ந்தால் அழுகை வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. மாறாக கோபமே வரும். ஏன்? அவர்களை அடுத்தவரின் மனைவியாக பார்க்கும் போது, நமக்கு என்ன அழுகையா வரும்.

இந்த வார ஆனந்த விகடனில் வந்த சிறுகதை படித்தீர்களா? அரவிந்தன் அவர்கள் எழுதிய "மார்கழிப்பூ" என்று நினைக்கிறேன். அது கதை அல்ல ஒரு கவிதை. பல நண்பர்களின் வாழ்க்கையில் நடந்தவையாக இருக்கலாம். அப்படி ஒரு கதை. படித்து சில நிமிடங்கள் என் வாழ்க்கையின் பின் பகுதிக்கு சென்று விட்டேன். சரி, இப்போ நான் சொல்ல வந்தது வேறு.

நான் என் கல்லூரி படிப்பை திருச்சி St. Joseph கல்லூரியில் முடித்தேன். எங்கள் கல்லூரியில் இரண்டு வகுப்புகள். A மற்றும் B. நான் B வகுப்பில் படித்தேன். இரண்டு வகுப்பிலும் சேர்த்து ஏறக்குறைய 120 மாணவர்கள். சந்தோசமான நாட்கள் அவை. என்னைச் சுற்றி எப்போதுமே நண்பர்கள் இருப்பார்கள். அது என் இயல்பு. சிறு வயதில் இருந்து இன்று வரை அது தொடர்கிறது.

பால்ய சிநேகிதர்கள் ஒரு வகை. என்னுடன் இன்னும் நெருக்கத்தில் இருக்கும் என் ஊர் நண்பர்கள் ஒரு வகை. அதன் பிறகு நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில், குடியிருக்கும் தெருவில், என்று பல வகையான நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் விட என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் அனைவரும் இன்னும் என் மனதை விட்டு விலகாமல் இருக்கிறார்கள். காரணம் அப்போது இருந்த சந்தோசம், இன்று என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு எங்கள் கல்லூரி நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு குழும மெயில் ஐடி ஆரம்பித்தார்கள். நண்பர்கள் கொஞ்சம் கொஞசமாக சேர ஆரம்பித்தார்கள். அவ்வப்போது மெயில்கள் வரும். சிலரை நேரில் சந்தித்து இருக்கிறேன். சிலரை மெயிலில் மட்டுமே. இப்போது ஒவ்வொருவராக குழுமத்தில் சேர ஆரம்பிக்கிறார்கள்.

எங்கள் பேட்சிச்சின் xxxx வருட விழாவினை அடுத்த வருடம் கொண்டாட இருக்கிறோம். எத்தனையாவது வருடம் என்பது இங்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். என் வயது உங்களுக்கு தெரிந்து என்ன ஆகப் போகிறது? .

ஒவ்வொருவரும் இருக்கும் இடத்தை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. மிகச்சிறந்தவர்களாக நண்பர்கள் இருப்பதில் எனக்கு சந்தோசம். எல்லா நண்பர்களின் முகமும் ஏறக்குறைய நினைவில் உள்ளது.

ஒரு நண்பரின் பெயர் சுபான். அவர் படித்தது A வகுப்பில் ஆனால் நான் படித்ததோ B வகுப்பில். அவர் நேற்று முன் தினம் குழுமத்தில் சேர்ந்தார். அவர் சேர்ந்ததுமே நான் ஒரு மெயிலில் அனுப்பினேன்,

"தினமும் காரில் வருவீர்களே? நீங்கள் தானே அவர்"

"ஆமாம்" என்று என் கேள்வியால் வியந்து போனார். விசயம் ஒன்றும் இல்லை. அந்த வயதில் கார் என்பது கனவில் மட்டுமே. ஏன் இன்னும் சொல்லப் போனால் கனவில் கூட கார் வராது. டிவிஎஸ் 50தான் வரும். இன்று 15 வருடமாக கார் ஓட்டிக்கொண்டிருந்தாலும் அன்று கார் இல்லைதானே?

வெங்கடாஜலபதி என்று ஒரு நண்பன். பதி என அழைப்போம். அவன் ஒருநாள் போட்ட சட்டையை அடுத்த நாள் போட்டதாக நினைவு இல்லை. 60 நாளுக்கு ஒரு முறைதான் அந்த சட்டை வரும். அத்தனை விதாமான உடைகள் அணிவான். நான் இரண்டு பனியன் ஜட்டிகளுடன் வாரம் முழுக்க கழித்த நாட்கள் அவை. அவனை எப்போதும் ஒரு ஏக்கத்துடனேயே பார்ப்பேன்.

அனந்த நாரயணன் என்று ஒரு நண்பன். தினமும் சேர்ந்துதான் டிரெயினில் போவோம். தினமும் டிரெயினில் பாட்டு பாடிக்கொண்டே போவோம். தினமும் அவன் கொண்டு வரும் சப்பாத்தியையும் உருளைக்கிழங்கு வறுவலையும் வாங்கி சாப்பிடுவோம். சில நாட்கள் அவனுக்கு கோபம் வரும். "நான் சாப்பிட என்ன செயவது?" என்று கேட்பான். எத்தனையோ வருடங்கள் ஆன பின்னும் அவன் என் நினைவிலேயே இருந்தான். ஆனால் தொடர்பு இல்லை.

சம்பந்தம் இல்லாமல் அடிக்கடி கனவில் வருவான். என்றாவது ஒரு நாள் சந்திக்க மாட்டோமா? என ஏங்கியதுண்டு. ஏன் முதல் காதலியின் நினைவு மட்டும்தான் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன? இப்படி பல நண்பர்களையும் அந்தந்த நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு வந்து நினைத்துக்கொள்வேன்.

கல்லூரி போட்டோ எடுத்த தினத்தில் நானும், அவனும் "அந்தர்தாகம்' என்ற மலையாட பிட்டு படத்துக்கு போய் வந்து எண்ணைய் வழிய போட்டோவில் நின்றது நினைவுக்கு வருகிறது.

இப்படி என் நினைவுகளில் இருந்து கொண்டிருந்த அவன் நேற்று கோயம்புத்தூரில் இருந்து போன் செய்தான். ஒரு நிமிடம் சந்தோசத்தின் உச்சிக்கு போய் வந்தேன். 30 நிமிடம் பேசினான். ஒவ்வொரு நிகழ்ச்சியாக சொல்லி சொல்லி நினைவு படுத்தினான். நேற்று முழுவதும் அதே நினைவு. கண்கள் பனித்தது. இன்னும் அனைவரையும் சந்தித்தால் எப்படி இருக்கும்? பழைய நண்பர்களுடன் நீண்ட நாட்கள் கழித்து பேசும்போது ஏற்படும் சந்தோசத்தை எந்த ஒரு சந்தோசத்துடனும் ஒப்பிட முடியாது.

அடுத்த வருடத்தில் அனைவரும் எங்கள் கல்லூரியில் சந்திக்க இருக்கிறோம். கொஞ்சம் பயமாகவும் டென்ஷனாகவும் இருக்கிறது.

எப்படியாவது அந்த சந்திப்பின் போது நான் அழாமல் இருக்க வேண்டும்.

No comments: