Oct 10, 2010

சிதைந்து போன நினைவுகள்! (பாகம் 1)

[என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்து என்னை அதிகம் எழுத வைத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

எனக்கு பின்னுட்டுமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்]


"உனக்கென்ன ஒரு பார்வை
ஓசியில் வீசிவிட்டு
செல்கிறாய்.
என் உள்ளமல்லவா வைக்கோலாய்
பற்றி எரிகிறது"

- கவிஞர் சுரதா.


ம். அவளேதான். கேட்டுவிடலாமா? வேண்டாம், அவளாக இல்லாது போகும் பட்சத்தில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. என்ன செய்வது இப்போ? தலையே வெடித்து விடும்போல் இருந்தது. இப்படி புலம்பிக்கொண்டிருக்கும் என் பெயர் ராகவன். நான் ஏன் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிய என் கடந்த கால வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும். இருங்கள், அவள் பஸ்ஸில் ஏறப்போகிறாள். நானும் ஏறிக் கொள்கிறேன். இந்த பஸ் எங்கே போகிறது? அதுவா எனக்கு முக்கியம்? அவள் இந்த பஸ்ஸில் போகிறாள் அதுவல்லவா முக்கியம். ஒரு வழியாக பஸ்ஸில் ஏறி விட்டேன். எங்கே அவள்? தேடுகிறேன். அவளுக்கு எப்படியும் இடம் கிடைத்து விடும். ஆனால் நான் ஆண் அல்லவா? நின்று கொண்டு சென்றால் ஒன்றும் தப்பில்லையே? அவள் ஒரு வாறு இடம் பிடித்து அமரட்டும். அதற்குள் நான் உங்களுக்கு கடந்த காலத்தை சொல்லி விடுகிறேன்.

முதலில் அவளை எங்கே சந்தித்தேன்?. ஆம். இதே போல் ஒரு பஸ் பயணத்தில்தான். ஆனால் ஊர்தான் வேறு வேறு. இப்போது நான் வந்திருப்பது ஒரு வேலை விசயமாக சென்னைக்கு. ஆனால் அன்று எங்கள் ஊர் பஸ்ஸில். இன்னும் அவள் பெயரை உங்களுக்கு சொல்ல வில்லை பாருங்கள். அவள் கீதா. அருமையான பெயர். அப்போது பத்தாவது வகுப்பு பரிட்சை நடந்து கொண்டிருந்தது. பஸ் முழுவதும் கும்பல். எங்கள் ஊரில் இருந்து திருச்சிக்கு நான் படிக்கும் பள்ளி செல்ல ஒரு மணி நேரம் பஸ்ஸில் செல்ல வேண்டும். 8.30 மணி பஸ்ஸை விட்டால் பரிட்சை ஹாலுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாது. இந்த பஸ்ஸில் எப்போதுமே கும்பல்தான். நான் பஸ் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். பஸ் கிளம்பியது. யாரோ ஓடி வருவது போல் தெரிய பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன். ஒரளவு பஸ் மெதுவாக சென்று கொண்டிருக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன். என் கையைக் கொடுத்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன். அவளை மெல்ல படிக்கு மேலே அனுப்பினேன்.

" தேங்ஸ்" என்றாள்.

" ஏங்க இப்படி ஓடற பஸ்ல ஏறீங்க. கீழே விழுந்துட்டிங்கன்னா என்ன செய்யறது. கொஞ்சம் முன்னாடியே கிளம்பி வரக் கூடாது?"

அழுது விடுவாள் போல இருந்தது. அதற்கு மேல் நான் அவளை ஒன்றும் கேட்க வில்லை. எதையும் கேட்டுத் தொந்தரவு படுத்த விரும்பவில்லை. அழகான பெண்களை தொந்தரவுப் படுத்துவது எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. ஆனால் என் கண்கள் மட்டும் அவளை மேய்ந்தது. பச்சைக் கலர் பாவாடை மற்றும் வெளிர் நிற பச்சை சட்டை போட்டிருந்தாள். தலையை சரியாக வாராமல் குதிரை வால் போட்டிருந்தாள். தலை முடி கொஞ்சம் ஈரமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அவள் முடியின் ஈரம் கசிந்து அவள் ப்ளவுஸில் பட்டு அவளுடைய உள்ளாடையின் பட்டை லேசாக முதுகு வழியாக தெரிந்தது. பார்த்ததும் எனக்கு கோபமாக வந்தது. ஏன்? தெரியவில்லை. எனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? யாரோ ஒரு வயசான மாமா அவளையே வெறித்துப் பார்ப்பது போல் இருக்க அவளைக் கூப்பிட்டேன்.

" என்னங்க?" என்று கொஞ்சம் பயத்துடன் என்னைப் பார்த்தாள்.

" நாளையிலிருந்து தலை முடியை நன்றாக காய வைத்து பிறகு சடை பின்னி வா. உன் சட்டை பின்னால் நனைந்து....." அவள் முதுகை பார்வையால் காட்டி அந்த மாமாவையும் கண்களால் காட்டினேன். புத்திசாலி உடனே புரிந்து கொண்டாள். எப்படி முதல் முறை பார்க்கும் ஒரு பெண்ணிடம் இப்படி பேசினேன்? எனக்கே தெரியவில்லை. "ஏங்க" என்று முதலில் பேச ஆரம்பித்த நான், திடீரென "நீ" என ஒருமையில் பேச ஆரம்பித்தேன். ' ஏன் இந்த திடீர் அன்னியோயன்யம்?" எனக்குத் தெரியவில்லை.

பஸ்ஸில் இருந்து இறங்கும் போது சிரித்துக் கொண்டே மீண்டும் ஒரு நன்றி சொன்னாள். அன்று முழுவதும் அவள் முகமே என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

நான் காலை 7.30 மணி பஸ்ஸில் செல்வதுதான் வழக்கம். ஆனால் முதல் நாள் லேட்டானதால்தான் 8.30 மணி பஸ்ஸில் சென்றேன். அடுத்த நாள் காலை என்னையறியாமலே 7.30 மணி பஸ்ஸுக்கு செல்லாமல் லேட்டாக கிளம்பினேன். வீட்டில் என்னை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.

" ஏண்ணா, இவ்வளவு லேட்டா போற? பரிட்சைக்கு லேட்டாகவா போறது" எட்டாவது படிக்கும் என் தங்கை கேட்டாள். அவளும் திருச்சியில்தான் படிக்கிறாள். ஆனால் அவள் டிரெயினில் போகிறாள். நானும்தான். இப்போது பரிட்சை என்பதால் பஸ்.

சரியாக 8.15 மணிக்கு பஸ் ஸ்டாண்டுக்கு சென்றேன். அங்கு சென்றவுடன் திரும்பி திரும்பி பார்த்தேன்.

" குட் மார்னிங். யாரைத் தேடறீங்க?"

திரும்பினால் கீதா. " குட் மார்னிங்" என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தேன். நன்றாக ஷேம்பு போட்டு குளித்த தலையில் அழகாக இரண்டு சடைப் போட்டு மல்லிகைப் பூ வைத்து ஒரு அழகான சின்ன தேவதை போல் இருந்தாள். பஸ் வந்து ஏறியதும்,

" தேங்க்ஸ்" என்றேன்.

" எதுக்கு?"

" நான் சொன்ன அறிவுரையை மதித்து அதன் படி வந்ததற்காக"

ஒரு வெட்கச் சிரிப்புடன் உள்ளே சென்றாள். அன்றுடன் எனக்குப் பரிட்சை முடிந்தது.

அதன் பிறகு எப்போது சந்தித்தேன்? ம்ம். ஞாபகம் வந்து விட்டது. அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. என் தங்கை அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது,

" அம்மா, என் பிரண்ட் ஒருத்தி இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வருகிறாள். அதனால் அவளுக்கும் சேர்த்து சமைத்து விடு"

இந்தக் காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டு வாசலுக்கு கிளம்பியவன் ஆச்சர்யத்தில் அதிர்ந்தேன். வாசலில் கீதா.

" ஹேய் நீ எங்க இங்க?"

" நீங்க எங்க இங்க?"

" இது என் வீடு"

" ஓ அப்ப நீங்க சுதா அண்ணனா?"

" ஓ அப்ப நீ சுதாவத்தான் பார்க்க வந்தியா?"

" பின்ன யாரைன்னு நினைச்சீங்க?" என்று அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே என் தங்கை வந்து,

" வா வா கீதா. ஹேய் அண்ணா இது கீதா. என் கிளாஸ்மேட். என்னமோ முன்னமே தெரிஞ்சா மாதிரி பேசிட்டு இருக்க?"

" எனக்கு உங்க அண்ணாவை ஏற்கனவே தெரியும் சுதா. நான் சொன்னேன் இல்ல. அன்னைக்கு பஸ்சுல..."

" ஓ அது எங்க அண்ணாவா. அவன் எப்பவும் அப்படித்தான். பொண்ணுன்னா அப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு ஏதாவது சொல்லிக் கிட்டே இருப்பான்"

இப்படியாக நானும் கீதாவும் முதலில் நண்பர்கள் ஆனோம். என்னதான் என் மனதை முழுவதுமாக கீதா ஆக்கிரமித்திருந்தாலும் நானும் அவளிடம் காதலிப்பதாகச் சொல்ல வில்லை. அவளும் என்னிடம் எதுவுமே சொல்ல வில்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

- தொடரும்

2 comments:

Ravichandran Somu said...

“Blowing your own trumpet" என்று ஒரு சிலர் நினைத்திருக்க கூடும். ஆனால்... தன்னம்பிக்கை அளிக்க கூடிய பதிவுகள்.
சிறப்பான நட்சத்திர வாரம். வாழ்த்துகள்!

தலைவரே, சொந்தக் கதையா:)?

iniyavan said...

//ரவிச்சந்திரன் said...
தன்னம்பிக்கை அளிக்க கூடிய பதிவுகள்.
சிறப்பான நட்சத்திர வாரம். வாழ்த்துகள்!//

தலைவரே,

உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி.

//ரவிச்சந்திரன் said...
“Blowing your own trumpet" என்று ஒரு சிலர் நினைத்திருக்க கூடும். ஆனால்... தன்னம்பிக்கை அளிக்க கூடிய பதிவுகள்//

முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். என்றோ எழுதலாம் என நினைத்தவைகளை, நட்சத்திர வாரத்தில் எழுதலாமே என நினைத்து கடைசியில் எழுதிவிட்டேன்.

//தலைவரே, சொந்தக் கதையா:)?//

இரண்டு மாதங்களுக்கு முன் எழுதிய ரவியின் காதல்கதைகள் படிக்கவில்லையா?