Oct 11, 2010

சிதைந்து போன நினைவுகள்! (பாகம் 2)

[என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்து என்னை அதிகம் எழுத வைத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

எனக்கு பின்னுட்டுமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்]


இப்படியாக நானும் கீதாவும் முதலில் நண்பர்கள் ஆனோம். என்னதான் என் மனதை முழுவதுமாக கீதா ஆக்கிரமித்திருந்தாலும் நானும் அவளிடம் காதலிப்பதாகச் சொல்ல வில்லை. அவளும் என்னிடம் எதுவுமே சொல்ல வில்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

எங்களின் இதயப் பூர்வமான அன்பை இருவருமே பரிமாறிக்கொள்ளாததால் உலகம் இயங்காமல் அப்படியே நின்று விடுமா என்ன?வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது. வருடங்களும் கடந்து சென்றது. பின்பு என்று அவள் என் காதலியானாள்?? ம்ம் நினைவுக்கு வருகிறது. 19 வயதிலேயே என் தங்கைக்கு திருமணம் ஆனது. அவள் முதல் பிரசவத்துக்கு எங்கள் வீட்டிற்கு வந்தாள்.

அவளைப் பார்ப்பதற்காக கீதாவும் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தாள். ஒரு நாள் மாலை அம்மாவும் அப்பாவும் ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், கீதா என் தங்கையை பார்க்க சென்றிருந்த நேரத்தில், தங்கைக்கு பிரசவ வலி எடுக்க, கீதாதான் எனக்கு போன் பண்ணி விசயத்தைச் சொன்னாள். பிறகு அவசர அவசரமாக நான் ஆபிஸிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று, இருவருமாக சேர்ந்து அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்து, பின்பு அனைவருக்கும் தகவல் சொல்லி, அவள் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுக்க, பிரசவ வார்டுக்கு வெளியே நின்றிருந்த என்னிடம் அந்த செய்தியை சொல்ல வந்த அவளை சந்தோசமாக நான் கட்டிபிடிக்க, அவளும் அதை ஏற்க, வீட்டில் அனைவரும் பார்த்து விட வெட்கத்துடன் விலகிச் சென்று விட்டாள்.

எல்லா சந்தோசத்திற்கும் முடிவு எழுதுவதற்காகத் தான் அந்த நாள் வந்தது என நினைக்கிறேன்.

அன்று மாலை நேரம். வீட்டில் எல்லோரும் கோவிலுக்கு சென்று இருந்தார்கள். யாரோ உள்ளே வருவது தெரிய பார்த்தால், கீதா. முதல் முறையாக எனக்குப் பிடித்த நீல நிறப் புடவையில்.

" ஹேய் கீதா, என்ன இந்த நேரத்துல. வீட்டுல யாரும் இல்லை"

" அதானல என்ன? அதான் நீங்க இருக்கீங்க இல்லை?"

இப்படியாக பேச ஆரம்பித்த நாங்கள் எந்த கணத்தில், எந்த நொடியில் "அந்த' தவறை செய்தோம் என எனக்குத் தெரியவில்லை. தனிமை காரணமா? இல்லை எங்கள் மனதில் ஏற்கனவே அந்த ஆசை இருந்ததா? தெரியவில்லை. எல்லாம் முடிந்த பிறகு இருவர் கண்களிலும் குற்ற உணர்ச்சி + கண்ணீர். நாங்கள் எங்களை சரி செய்வதற்குள் வீட்டில் அனைவரும் வந்து விட்டார்கள். அதன் பிறகு ஒரு அரை மணி நேரம் வீட்டில் இருந்து விட்டு சென்று விட்டாள்.

அதன் பின் அவள் என் வீட்டிற்கு வரவே இல்லை. அவள் வீட்டிற்கு செல்ல எனக்குப் பயம். சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு வந்த அந்த செய்தி என் தலையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது. தங்கைதான் அந்த செய்தியை என்னிடம் சொன்னாள். அவள் அப்பாவிற்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்ததால் குடும்பமே ஊரை காலி செய்து விட்டு சென்று விட்டதாம். அந்த செய்தி தந்த பாதிப்பால் மிகவும் மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஏன் என்னிடம் சொல்லாமல் சென்று விட்டாள்? நான் என்ன தவறு செய்தேன்? நான் கல்யாணம் பண்ணும் முடிவில்தானே இருந்தேன்? குழப்பத்தில் தவித்தேன். தேடாத ஊரில்லை. கடைசி வரை அவளைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆனால், நான் ஏன் என்னை அன்று கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை? எப்படி நான் உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாத சராசரி மனிதனானேன்? அந்த குற்ற உணர்ச்சி மட்டும் என் மனதை எப்போதும் அரித்துக் கொண்டே இருந்தது.

அதன் பிறகு இதோ இன்றுதான் அவளைப் பார்க்கிறேன். ஒரு வழியாக பக்கத்தில் சென்று அவளைப் பார்த்தவுடன்,

" நீங்க கீதா தானே"

" ராகவன்" என்றவள் கண்களில் கண்ணீர்த் துளிகள். எனக்கும்தான்.

எத்தனை வருடங்கள் கழித்து சந்திக்கிறோம். அதுவும் அந்த 'சூழலுக்கு' பின்? அவள் பேசிக் கொண்டே வர, நான் இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

பஸ் நின்றதும் என்னை அவள் வீட்டிற்கு கூப்பிட நானும் சென்றேன்,

அவள் வீட்டிற்குள் நுழைந்தவன் ஒரு கணம் திடுக்கிட்டு, என்னென்னவோ அவளைக் கேட்க நினைத்து, வார்த்தைகள் வர மறுத்து, பிறகு ஒரு வழியாக சமாளித்து, சரி பரவாயில்லை கேட்டு விடலாம் என நினைத்து கேட்க ஆரம்பிக்கும் வேலையில், அவள் என்னிடம் பேச ஆரம்பித்தாள்,

" என் கணவர் பேங்க்ல பெரிய மேனஜரா இருக்கார். பிள்ளைங்க எல்லாம் மெட்ராஸ்ல இருக்காங்க. என் கணவர் ரொம்ப நல்லா என்னை பார்த்துக் கொள்கிறார். பிள்ளைகளும் அப்படியே. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேங்க" என்று பேசிக்கொண்டே போனாள். என்னைப் பேசவே அவள் அனுமதிக்க வில்லை. ஏனோ எனக்கு அங்கு இருக்கப் பிடிக்க வில்லை. மனம் எல்லாம் பாரமாக இருந்தது.

"சரி, நான் வறேன்" என கிளம்புகையில் அவள் கேட்டாள்,

" உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?"

" மொத்தம் நான்கு" என்று சொல்லி முடித்து வெளியில் வந்தேன். கல்யாணமே பண்ணாத எனக்கு எப்படி நான்கு குழந்தைகள் இருக்க முடியும்?
உலகமே வெறுத்துப் போய் விட்டது. சரி, நமக்குத்தான் திருமணம் ஆகவில்லை. அவள் கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பாள், அந்தக் காட்சியை கண் குளிர பார்த்து வரலாம் என நினைத்துதான் அங்கே சென்றேன்.
ஆனால், அவள் தங்கியிருக்கும் இல்லம் யாரும் இல்லாதவர்கள் தங்கும் ஒரு ஆதரவற்றோர் இல்லம் என்பது எப்படி எனக்குத் தெரியாமலே போகும் என்று நம்பினாள் என்பதுதான் எனக்கு இன்னும் புரியவில்லை.
அவள் என்னை விட்டு பிரிந்ததற்கு ஏதேனும் காரணம் இருப்பது போலவே, இதற்கும் காரணம் இருக்கக் கூடும். அந்தக் காரணங்களை ஒருவேளை எப்போதுமே நான் தெரிந்துக் கொள்ளாமல் போகலாம்.

1 comment:

கோவி.கண்ணன் said...

சுயசரிதை மற்றும் சிறுகதைன்னு ரொம்ப கவனமாக இரண்டு தலைப்புகளில் வாரத்தை நிறைவு செய்துவிட்டீர்கள், வெளிநாட்டு வாழ்கை, வெளிநாட்டு தமிழ் சமூகம் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.