Oct 27, 2010

நானும் சிக்ஸ் பேக்ஸ் ABSம்!!!நான் சிறு வயதிலிருந்தே உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துபவன். நிறைய கிரிக்கட் விளையாடியதாலும், எப்போதுமே விளையாட்டு மைதானத்திலேயே இருந்ததாலும் கல்லூரி காலம் வரை 'சுள்ளான்' பட தனுஷ் போல ரொம்ப சிலிம் ஆக இருந்தேன். எப்போது வேலை கிடைத்து, வீட்டை விட்டு வெளியில் வந்து 'அந்த' பேச்சுலர் வாழ்க்கை ஆரம்பித்ததோ அப்போது ஆரம்பித்தது பிரச்சனை. அதிக சந்தோசம் காரணமா இல்லை அதிக சாப்பாடு காரணமா இல்லை அதிக பேச்சிலருக்கே உரித்தான பழக்க வழக்கம் காரணமா தெரியவில்லை (என்ன பழக்க வழக்கம் என்பது படிப்பவர்களின் சாய்ஸுக்கு விட்டுவிடுகிறேன்) வயிற்றின் அளவு மட்டும் 29லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி 34 ஆகிவிட்டது. இது ஒன்றும் அதிகம் இல்லைதான்.

ஆனாலும், ரஜினி, விஜய் மற்றும் சூர்யாவை பார்க்கும்போது எல்லாம் பொறாமையாக இருக்கும். நாம் ஏன் நம் வயிற்றை கவனிக்கவில்லை என்று தோன்றும். இந்த வயதில் நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா போய் உடலை அழகாக்கி சிக்ஸ் பேக்ஸுடன் வந்தவுடன், என் ஆவலும் அதிகரித்தது. 14 வருடமாக ஜிம் சென்று வந்தாலும், உடம்பின் அனைத்து பாகங்களும் சரியாக ஒரு அளவோடு இருந்தாலும், வயிறு மட்டும் ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை. பல முறை முயற்சி செய்தேன். அதிகமாக சிட் அப்ஸ் மற்றும் அனைத்துவிதமான பயிற்சிகளும் செய்தாலும், வயிற்றை மட்டும் குறைக்கவே முடியவில்லை.

இரவு உணவை குறைக்கச் சொன்னார்கள். ஐந்து இட்லியிலிருந்து மூன்றாக குறைத்தேன். வெள்ளை முட்டை சாப்பிட சொன்னார்கள். தினமும் காலையில் இரண்டு, இரவில் இரண்டு சாப்பிட ஆரம்பித்தேன். அவர்கள் சொன்ன அனைத்தையும் செய்து பார்த்தேன். சிக்ஸ் பேக் வருவதற்கு பதில் ஒரே பேக் சற்று பெரிதானது. இதற்கு இடையில் என் பெண் வேறு,

"என்ன டாடி இது? தினமும் ஜிம்முக்கு போறீங்க. வயிறு மட்டும் அப்படியே இருக்கிறது?" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

இந்த நிலையில் என் மலேசிய நண்பன் ஒருவன், என்னுடன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவன், மாலை ஜிம் செய்வதற்கு பதில் இரவில் செய்ய ஆரம்பித்தான். ஏனென்றால், அவன் ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பவன். அவன் சமீபத்தில் ஒரு நாள் மாலையில் ஜிம்முக்கு வந்தான். அவனை பார்த்தவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. 34 இன்ச் இருந்த அவன் இடுப்பு இப்போது 30க்கு வந்துவிட்டது. நெஞ்சுக்கு கீழ் இடுப்பு உள்ளதா இல்லையா என்றே தெரியவில்லை. ஆறு மாதத்தில் எப்படி இந்த மாற்றம்? அவனிடம் கேட்டேன். அவன் சொன்னது என்னவென்றால், சிக்ஸ் பேக் அவ்வளவு சாதாரணம் அல்ல. அதற்கு கீழ் கண்ட முறையை தினமும் கடை பிடிக்க வேண்டும்:

01. காலையில் வேகமான நடை பயிற்சி அல்லது ஜாகிங் அல்லது ட்ரெட் மில்லில் கார்டியோ நடை பயிற்சி.

02. மாலையில் ஜிம்மில் முதலில் அனைத்து பாகங்களுக்கும் வொர்க் அவுட் (தினமும் ஒரு பாகத்திற்கும் செய்யலாம். ஒரு நாள் பைசப், ஒரு நாள் ட்ரைசப், ஒரு நாள் செஸ்ட் என்று)

03. கடைசியில் ABS

04. ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக ஆறு முறை சாப்பிட வேண்டும்.

05. காலையில் இரண்டு வெள்ளை முட்டை + ஒரு இட்லியோ அல்லது கோதுமை கலந்த பிரட்டோ + சாலட்

06. மதியம் கொஞ்சம் அரிசி சாதம் + கோழியின் நெஞ்சு கறி + ஒரு பீஸ் மீன்+ சாலட்

07. இரவில் அரிசி உணவு அதாவது கார்போ ஹைட்ரேட் உணவு சாப்பிடக்கூடாது. தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

08. மற்ற இடைப்பட்ட நேரங்களில் பழங்களோ அல்லது காய்கறிகளோ சாப்பிடலாம்.

09. தேவை என்றால் ப்ரோட்டின் சப்ளிமெண்ட் சாப்பிடலாம். இல்லை வெள்ளை முட்டை எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம்.

10. எண்ணையில் வறுத்த பொறித்த எதையுமே சாப்பிடக்கூடாது.

அவன் சொன்னதை கேட்டதிலிருந்து எனக்கும் ஆசை வந்து தினமும் கடை பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் மீன் சாப்பிடுவது கிடையாது. தினமும் கோழிக்கறியும் சாப்பிட முடியாது.

முடிந்த வரை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்ன ஒன்று,

எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அது எதையும் சாப்பிட முடியவில்லை.
எனக்கு என்னவெல்லாம் பிடிக்காதோ அதை சாப்பிட வேண்டியுள்ளது.

இப்படி நான் கஷ்டப்படுவதை பார்த்து என் வீட்டில் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி:

" அப்படி சிக்ஸ் பேக் வந்து என்னத்தை சாதிக்க போறீங்க?"

ஆமால்ல, என்னத்தை சாதிக்கப்போறேன்!!!

பின் குறிப்பு:

01. சிக்ஸ் பேக் வந்தவுடன் இப்போ இருக்கும் அனைத்து பேண்ட்களையும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

02. நான் கூடிய விரைவில் சிக்ஸ் பேக் பெற நண்பர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

8 comments:

Ravichandran Somu said...

தலைவரே,

எனக்கும் இதே பிரச்சினைதான்:(((

நானும் கடந்த மூனு வருசமாக ஜிம் + ஜாக்கிங் ரெகுலரா போறேன். ஜிம்ல பர்சனல் டிரையினர் வைச்சிருக்கேன். ஆனால்... இடுப்பு சைஸ் மட்டும் 35-க்கு கீழே குறையவே மாட்டேங்குது!!

கடந்த ஒரு மாதமா காலையில் வாக்கிங் + யோகா ஆரம்பிச்சிருக்கேன்.. பார்க்கலாம் சிக்ஸ் பேக் வருதான்னு:)))

iniyavan said...

தலைவரே,

சாப்பாடு என்ன என்ன சாப்புடுறீங்க.

என்ன உடற்பயிற்சி செய்யறீங்கன்னு விரிவா எழுதுங்க.

அப்பாவி தமிழன் said...

தலிவா சிக்ஸ் பக்ஸ் எடுகர்துக்கு எல்லாத்தயும் விட முக்கியமா முறையான diet இருக்கணும் , உங்களோட fat percentage கண்டிப்பா 9% க்கு கீழே இருந்தா தான் சிக்ஸ் பாக் கொண்டு வர முடியும் . பால் , எண்ணை , கொழுப்பு , மாச் சாப்பாடு இதை எதையும் உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது . நடிகர் சூர்யா 6 .5 % வரைக்கும் தனது fat percentage ஐ குறைத்ததாகவும் பின்பு அவர் பற்கள் ஆட தொடங்கிய பின்பே diet ஐ நிறுத்தியதாகவும் ஓர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் . நான் என் fat percentage 9 .2 percentage இல் வைத்துள்ளேன் ( 8 மாதம் முன்பு 22 percentage இல் இருந்தது )ஓர் அளவு ட்ரை பண்ணி 4பக்ஸ் வர வைத்து விட்டேன் . ஆனால் என் trainer இதற்கு மேல் என்னை முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறி விட்டார். உண்மையை சொல்ல போனால் சிக்ஸ் பக்ஸ் பார்பதற்கு நன்றாய் இருக்கும் அனால் உண்மையில் நம் உடம்பு இதானால் வீக் ஆகும் எனபதே உண்மை . உங்கள் வயது நாற்பது ஐந்து வயதிருக்கு மேலே இருந்தால்
சிக்ஸ் பாக் கொண்டு வரும் எண்ணத்தை தவிர்க்கலாம் . ( sorry if am discourage you , but if you have a passion abt it try for four packs )

Anonymous said...

"வெள்ளை முட்டை சாப்பிட சொன்னார்கள்."

ஏன் சார், மலேய்சியாவில் முட்டை மற்ற கலரில் கிடைக்குமா... மஞ்சள் கரு தவிர்த்து வெள்ளை கரு மட்டும் சாப்பிட வேண்டும்?. அப்படிதானே.....

Ravichandran Somu said...

//சாப்பாடு என்ன என்ன சாப்புடுறீங்க.//

ஹி...ஹி... சாப்பாடுதான் பிரச்சினை தலைவரே... டயட்னா ஒரு வாரம்தான் தாக்கு பிடிக்க முடிகிறது:(((

இப்போ நான் வெச் விட்டுட்டேன். அதனால் கொஞ்சம் மன உறுதி வந்திருக்கிறது:)

iniyavan said...

//உண்மையை சொல்ல போனால் சிக்ஸ் பக்ஸ் பார்பதற்கு நன்றாய் இருக்கும் அனால் உண்மையில் நம் உடம்பு இதானால் வீக் ஆகும் எனபதே உண்மை . உங்கள் வயது நாற்பது ஐந்து வயதிருக்கு மேலே இருந்தால்
சிக்ஸ் பாக் கொண்டு வரும் எண்ணத்தை தவிர்க்கலாம் . ( sorry if am discourage you , but if you have a passion abt it try for four packs )//

வருகைக்கு நன்றி அப்பாவி தமிழன்.

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். எனக்கு சிக்ஸ் பேக் கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.

வயிற்றின் அளவு 31 க்கு கொண்டு வரவேண்டும் என்பதே என் தற்போதைய நோக்கம்.

iniyavan said...

//ஏன் சார், மலேய்சியாவில் முட்டை மற்ற கலரில் கிடைக்குமா... மஞ்சள் கரு தவிர்த்து வெள்ளை கரு மட்டும் சாப்பிட வேண்டும்?. அப்படிதானே.....//

ஆமாம் நண்பரே!,

தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.

iniyavan said...

//ஹி...ஹி... சாப்பாடுதான் பிரச்சினை தலைவரே... டயட்னா ஒரு வாரம்தான் தாக்கு பிடிக்க முடிகிறது:(((

இப்போ நான் வெச் விட்டுட்டேன். அதனால் கொஞ்சம் மன உறுதி வந்திருக்கிறது:)//

தலைவரே,

முடிந்தால் ரொட்டின் உடற்பயிற்சி முறையை பற்றி மெயிலில் எழுதுங்கள்.