Oct 1, 2010

எங்கள் ஊரில் 'எந்திரன்'

நேற்று நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன்.

''சார், தெரியுமா? தமிழ்நாடு முழுவதும் ஒரே ஃபீவராம். ஏறக்குறைய எல்லோருக்குமாம்"

அவர் என்னவோ ஏதோ என நினைத்து, "அப்படியா? எனக்குத்தெரியாதே, நான் இன்னும் நியூஸ் பார்க்கலே. ஏதாவது பன்றிக்காய்ச்சல் மாதிரியா?" என்றார்.

நான் கொஞ்ச நேரம் கழித்து, "இல்லை சார். சாதாரண ஃபீவர் இல்லை. எந்திரன் ஃபீவர்" என்றேன். அவர் சபா என்ற ஊரில் இருப்பதால் அவரிடமிருந்து அடி வாங்காமல் தப்பித்தேன்.

நேற்று வரை மலேசியா முழுவதும் எந்த தியேட்டரிலும் ஆன் லைன் புக்கிங் ஆரம்பிக்கவில்லை. ஒரே கவலை ஆனது. இன்று காலை ஆபிஸ் வந்ததுமே, ஒரே போன்கால்கள், "சார், புக்கிங் ஆரம்பிச்சாச்சு"

இதுவரை எல்லா ரஜினி படங்களையும் முதல் நாளிலேயே பார்த்துவிடுவது என் வழக்கம். ஆனால், என்ன செய்ய? இந்த முறை இரண்டாம் நாள் பார்க்கும்படி ஆகிவிட்டது.

ராணிப்பேட்டையில் இருந்த போது அருணாச்சலம் படம் ரிலீஸான தினம் இன்றும் என் நினைவில பசுமையாக உள்ளது. எல்லா ஊர்களிலும் அடுத்த நாள் ரிலீஸ் என்றால், ஆற்காட்டில் முதல் நாள் இரவு 12 மணிக்கு படம் ரிலீஸானது. அன்று இரவு 9 மணி அளவில் தியேட்டர் சென்றோம். உள்ளே வரிசையில் நின்றோம். அது போல் வேதனையை என் வாழ்நாளில் அனுபவித்தது கிடையாது. அப்படி ஒரு கூட்டம். மொத்தம் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்றேன். வேர்த்து கொட்டி சைட்டை எல்லாம் கழட்டிவிட்டு படம் பார்த்தோம்.

ரொம்ப நேரம் நின்றதாலோ என்னவோ எனக்கு அன்று இரவு அருணாச்சலம் படம் பிடிக்கவே இல்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் ரூமிற்கு திரும்பினேன். ஆனால், அடுத்து வந்த நாட்களில் மீண்டும் பார்த்தபோது படம் ரொம்பவும் பிடித்துவிட்டது. இன்று வரை பலமுறை அந்த படத்தை பார்த்துவிட்டேன். சமீபத்தில் கூட ஊரில் இருந்த போது 'கே' டிவியில் அருணாச்சலம் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் சந்தோசமாக இருக்கும். அதுதான் ரஜினி.

இன்று என் பிள்ளைகளும் ரஜினியின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். நானும்தான். அதற்காக கமல், விஜய், சூர்யா, அஜித் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்று சொல்வதில் என்றுமே வெட்கப்பட்டது இல்லை.

லால்குடியில் என் நண்பர்கள் அனைவருமே ரஜினியின் ரசிகர்கள். ராகவேந்திரா படம் ரிலீஸானபோது என் நண்பன் ராகவேந்திரர் போல வேடம் இட்டு படம் பார்க்க வந்தான். இன்று அவன் மிகப்பெரிய வக்கீலாக இருக்கிறான். எதற்காக இதை சொல்கிறேன் என்றால், தீவிர ரசிகராய் இருந்தாலும், நம் சொந்த முன்னேற்றத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ர்ஜினியும் அதைத்தான் எப்போதும் சொல்வார்.

எந்திரன் படத்தின் மார்க்கெட்டிங் டெக்னிக் ரொம்ப பயங்கரமா இருக்கு. 15 நாட்களிலேயே போட்ட பணம் எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் ஊருக்கு பக்கத்தில் இரு காம்ப்ளக்ஸில் எந்திரன் படம் இன்று மதியம் வெளியாகிறது. ஒவ்வொரு காம்ப்ளெக்ஸிலும் சின்ன சின்னதாக நான்கு தியேட்டர்கள் உண்டு. சாதாரண நாட்களில் ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் மட்டுமே தமிழ் படம் ஓடும். மற்ற தியேட்டரில் ஆங்கிலம் மற்றும் சீனப் படங்கள் ஓடும்.

முதல்முறையாக ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் எந்திரன் படம்
ரிலீஸாகிறது. என்று நினைக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு காம்ப்ளக்ஸிலும் உள்ள தியேட்டர்களை சேர்த்து மொத்தம் 15 காட்சிகள். இருக்கும் மக்கள் தொகையோ மிக குறைவு. இங்கு ரஜினி படம் மற்றும் விஜய் படம் மட்டுமே அதிக நாட்கள் ஓடி உள்ளது. ஆனால் இந்த முறை இத்தனை காட்சிகள் ஓடுவதால், எப்படி அதிக நாட்கள் ஓடும் என தெரியவில்லை. அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை.

எப்போதும் குழந்தைகளுக்கு டிக்கட் விலை குறைவாக இருக்கும். இந்தப் படத்திற்கு எல்லோருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே விலைதான். படம் பார்க்க டிக்கட் புக் செய்தவுடந்தான் நிம்மதி. எனக்கு ஆச்சர்யம் என்ன என்றால், பிள்ளைகள் ஏதோ தீபாவளி பொங்கல் போல் சந்தோசமாக நாளை மதியத்தை நினைத்து காத்திருக்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால் நானும்தான்.

கலாநிதிமாறன் இவ்வளவு சம்பாதிக்க போகிறார், ரஜினியின் சம்பளம் அவ்வளவாமே? இதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இருக்கும் வேலைப் பளுவில், குடும்பத்துடன் ரஜினி படம் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அந்த சந்தோசம்தான் எனக்கு வேண்டும்.

அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். என்ன ஒன்று எப்படியாவது படம் பார்க்கும் வரை எந்த விமர்சனத்தையும் படிக்காமல் இன்றைய தினத்தை ஓட்ட வேண்டும். அதுதான் என் இப்போதைய கவலை.

எப்போதுமே சீரியஸாகத்தான் இடுகை இருக்க வேண்டுமா என்ன? கொஞ்சம் மனசையும் லேசாக்கிக்கொள்ளவே இந்த இடுகை. அதனால் தொடர்ந்து என்னைப் படித்து வரும் நண்பர்கள் கோபம் கொள்ளவேண்டாம்.

4 comments:

Rosee said...

ஏலம் விடப்பட்ட எந்திரன் டிக்கெட்

http://tamil-cinema-pages.blogspot.com/2010/09/blog-post_2677.html

முரசொலி மாறன்.V said...

//தமிழ்நாடு முழுவதும் ஒரே ஃபீவராம். //
//சாதாரண ஃபீவர் இல்லை. எந்திரன் ஃபீவர்"//
மிக்க நன்றி இனியவன்.இதை விட மோசமாக எமை கேவலப்படுத்த முடியாது.

iniyavan said...

//ஏலம் விடப்பட்ட எந்திரன் டிக்கெட்//

வருகைக்கு நன்றி ரோஸி.

iniyavan said...

//மிக்க நன்றி இனியவன்.இதை விட மோசமாக எமை கேவலப்படுத்த முடியாது.//

நண்பரே!,

நன்றாகத்தானே சொல்லி இருக்கிறேன். இதில் எங்கே உங்களை கேவலப்படுத்தி இருக்கிறேன். நானே ஒரு ரஜினி ரசிகன். நான் போய் தலைவர் படத்தை கேவலப்படுத்துவேனா?

என் விமர்சனம் படிக்கவில்லையா நீங்கள்?