Oct 2, 2010

எந்திரன் - ஷங்கருக்கு நன்றி!ஏகப்பட்ட விமர்சனங்களை இது வரை நீங்கள் படித்திருப்பீர்கள். எனக்கு சினிமா விமர்சனம் எழுதும் பழக்கம் இல்லை. இருந்தாலும் படத்தைப் பற்றி என்னுடைய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் நேற்று எழுதி இருந்தது போல ஒரே காம்ப்ளக்ஸில் உள்ள ஐந்து தியேட்டர்களில், நான்கில் எந்திரன் ஓடுகிறது.

முன்பு திருச்சியில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் வெவ்வேறு இடங்களில் ஓடும்போது, ஆட்டோவோவில் முதல் தியேட்டரில் ஓடிய படச்சுருளை எடுத்துக்கொண்டு வேகமாக அடுத்த தியேட்டரை நோக்கி செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்த தியேட்டரில் ஓடும். இங்கு ஒரே காம்பளக்ஸில் ஓடுவதால், அப்படி ஓட மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், இங்கும் படச்சுருளை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடியதை ஆச்சர்யமாக பார்த்தேன். படம் ஆரம்பிக்கும்போது மொத்தம் 20 பேர்கள்தான் இருந்தார்கள். மனம் மிகவும் கஷ்டப்பட்டது. ரஜினி படத்தை 20 பேருடன் பார்த்த அனுபவமே கிடையாது. ஆனால், கொஞ்ச நேரத்தில் மக்கள் அதிகமாக வர ஆரம்பித்தார்கள். இதில் ஆச்சர்யமான விசயம் என்ன என்றால் நிறைய மலேய மக்களை தியேட்டரில் பார்த்ததுதான்.

படத்தைப் பற்றி ஷங்கர் பேசியது, சன் பிக்ஸர்ஸின் அளவுக்கதிகமான ஆர்ப்பாட்டம், அதை எல்லாம் நினைத்து கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால், அவர்கள் பேசியதின் நியாயத்தை படம் பார்க்கும்போதுதான் உணர்ந்தேன். அத்தனை உழைப்பு. ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு தமிழன் படம் எடுத்திருக்கான் என்பதை நினைத்து நாம் எல்லாம் பெருமை கொள்ளலாம். இந்த படத்தை பார்த்தவுடன் வருத்தப்படக்கூடிய ஒரே நபர்........ யார் என்பதை கடைசியில் சொல்கிறேன்.

ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து எடுத்து இருக்கிறார் ஷங்கர். 60 வயது ரஜினி மிக அழகாத் தெரிகிறார். ஆனால் 35 வயது ஐஸ்வர்யா? வயது முதிர்ச்சி உடம்பில் அங்கங்கே தெரிகிறது. ஆனால், ஐஸ்வர்யாவை, வடிவேல் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், 'எவ்வளவு உரிச்சு காமிக்க முடியுமோ அவ்வளவு உரிச்சு காண்பிச்சிருக்கிறார்" ஷங்கர்.

பாடல்கள் எடுத்திருக்கும் விதம் அற்புதம், "காதல் அணுக்கள்" பாடல் எடுத்திருக்கும் இடம் இதுவரை யாரும் பார்த்திருக்காத இடமாகத்தான் இருக்கும். அதே போல் 'அரிமா அரிமா' பாட்லும் அருமையாக உள்ளது. ஏ ஆர் ரகுமான் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட். பின்னனி இசை சான்ஸே இல்லை. அவ்வளவு இனிமை. அதுவும் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் மிக அற்புதம். அதற்கு மட்டுமே 65 லட்சம் செலவு ஆகியதாக தகவல்.

வசனங்கள் சுஜாதா, ஷங்கர், கார்க்கி என்று இருந்தாலும், சுஜாதாவின் சாயல்தான் அதிகம் தெரிகிறது. ஆனால், அந்த ஷேவிங் ரேசர் வசனத்தை தவிர்த்து இருக்கலாம். ரஜினி படத்தில் இப்படி ஒரு வசனமா?

ஒளிப்பதிவு மிகத்தெளிவு. கொசுக்களை வைத்தும் காமடி செய்ய ஷங்கரால் மட்டுமே முடியும்.

கடைசி கிளைமாக்ஸ் காட்சிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பிள்ளைகள் இருவரும் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்த்ததே அதற்கு சாட்சி. படம் ஆரம்பித்து இடைவெளி வரை போனதே தெரியவில்லை. ஆனால், இடவேளைக்கு அடுத்து கொஞ்சம் திரைக்கதை தடுமாறி, பின்பு கடைசியில் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. வில்லனாக ஒருவரை காட்டிவிட்டு, இடையிலேயே அவரை சாக வைத்து பின் ரோபோ ரஜினியே வில்லனாவது புது முயற்சி.

விஞ்ஞானி ரஜினியின் நடிப்பை விட ரோபோ சிட்டியின் நடிப்பு அமர்க்களம். இண்டர்வெல் முடியும்வரை சிரித்து சிரித்து வயிரே புண்ணாகிவிட்டது. அந்த அளவிற்கு நகைச்சுவை அருமையாக வந்துள்ளது. கருணாஸும், சந்தானமும்தான் அதற்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சிட்டியால்தான் தியேட்டரே அதிகம் குலுங்குகிறது. கருணாஸையும், சந்தானத்தையும் ஷங்கர் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும், இது ஒரு சையின்ஸ் ஃபிக்ஸன் படம் என்பதால் தாரளமாக எல்லாவற்றையும் மன்னித்துவிட்டு படத்தை ரசிக்கலாம். ஆனால், என்னதான் லாஜிக் மீறலை ஒத்துக்கொண்டாலும் படத்தில் வரும் ஒரு காட்சியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவ்வளவு பெரிய விஞ்ஞானி, ரோபோ சிட்டியை இனி வேண்டாம் என்று முடிவு செய்து, அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து எடுத்து விட்டு, அதை கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போடுவது கொஞ்சம் நெருடலாய் உள்ளது. அவ்வளவு முக்கியமான ரோபோவை அழிக்கும் போது அதனுடைய அனைத்து புரோக்ராமையும் ஏன் அழிக்காமல் விட்டார்? என்பது யோசிக்க வைக்கிறது. அதே போல் வில்லன் போனதும் அவன் காரில் ரோபோ வந்து அதாக உட்காருவதும், கொஞ்சம் நம்ப முடியவில்லை.

படத்தில் நிறைய கேரக்டர்கள் ஒரு சில சீன்கள் மட்டுமே வந்து போகிறார்கள். ஒரு 5 நபர்களை மட்டும் வைத்தே படம் நகர்கிறது. ஆனால், அந்த கடைசி ஸீன், என்னதான் சிட்டி ஒரு ரோபோ என்றாலும், மனமும் என் கண்களும் கொஞ்சம் கலங்கியது. அது ஏன் என்பதை தியேட்டரில் போய் பாருங்களேன்!

இந்த காலத்தில் குடும்பத்தோடு அமர்ந்து அழாமல் சிரித்து சந்தோசமாக பார்க்கும்படி படம் வருவது மிக அபூர்வம். எந்திரன் அப்படிப்பட்ட படம். தயவு செய்து யாரும் மிஸ் செய்யாமல் பாருங்கள்.

விடை: வருத்தப்படக்கூடிய ஒரே நபர் ஷாருக்கான்.

8 comments:

பரிசல்காரன் said...

அந்த விடை மூலமாகவே படத்தைப் பற்றிச் சொல்லிவிட்டீர்கள். நல்ல உத்தி!!

iniyavan said...

//அந்த விடை மூலமாகவே படத்தைப் பற்றிச் சொல்லிவிட்டீர்கள். நல்ல உத்தி!!//

வருகைக்கு நன்றி பரிசல்!

Anonymous said...

தயவு செய்து யாரும் மிஸ் செய்யாமல் பாருங்கள்.

மிஸ்ஸுன்னா என்னாங்க?

தமிழ்க்கட்டுரையைத் தமிழிலே எழுதிப்பழகுங்கையா. இல்லை ஆங்கிலத்துல விளாசுங்க.

Anonymous said...

Thanks for pointing out sujatha.Most of the reviews and speeches people forgot sujatha.He added value to this movie.

iniyavan said...

//மிஸ்ஸுன்னா என்னாங்க?

தமிழ்க்கட்டுரையைத் தமிழிலே எழுதிப்பழகுங்கையா. இல்லை ஆங்கிலத்துல விளாசுங்க.//

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

iniyavan said...

//Thanks for pointing out sujatha.Most of the reviews and speeches people forgot sujatha.He added value to this movie.//

வருகைக்கு நன்றி நண்பா!

sanjay said...

ஷாருக்கானுக்கு பின்பு கமலிடமும் ஷங்கர் கேட்டதாக ஒரு செய்தி...
இருவருமே வருத்தப்படலாம்...!

iniyavan said...

//ஷாருக்கானுக்கு பின்பு கமலிடமும் ஷங்கர் கேட்டதாக ஒரு செய்தி...
இருவருமே வருத்தப்படலாம்...!//

வருகைக்கு நன்றி சஞ்சய்