Oct 7, 2010

தன்னம்பிக்கையும், லட்சியமும்!

என்னதான் அப்பா நன்றாக படிக்க வைத்தாலும், பிள்ளைக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்றால் என்ன செய்வது? நல்ல வேளை எனக்கு ஆண்டவன் அந்த கஷ்டத்தை கொடுக்கவில்லை. நான் முன்பே சொன்னதைப் போல தயவு செய்து இதை ஒரு தற்பெருமை பதிவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்கள் மத்தியில் தனியார் கம்பனி என்றால் மாடு மாதிரி உழைக்க சொல்வார்கள். ஆனால் அதற்குறிய சம்பளம் தர மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது. தனியார் கம்பனியாக இருந்தாலும் உண்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் நிச்ச்யம் நாம் விரும்பியதை அடையலாம். அதற்காக என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன்.

நான் முன்பே ஏதோ ஒரு இடுகையில் கூறியிருந்தது போல, பத்தாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தும் ஒரு பெண்ணின் மேல் உள்ள மோகத்தால் +2 வில் முதல் குரூப் எடுக்காமல் காமர்ஸ் குரூப் எடுத்தேன். அதனால் என்னால் பிகாம் தான் சேர முடிந்தது. இருந்தாலும் மிக நன்றாகவே படித்து முடித்தேன். எனக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஆனால், அதற்கு ஆர்ட்டிக்கல்ஷிப் பயிற்சிக்காக மூன்று வருடங்கள் யாராவது ஆடிட்டரிடம் வேலை செய்ய வேண்டும். அப்பாவிடம் கேட்டால், "நீ எப்போது ஆர்ட்டிக்கல்ஷிப் முடித்து, எப்போது CA முடித்து வேலைக்கு போவது? ஒரு வேளை CA முடிக்க முடியாமல் போய்விட்டால் மூன்று வருடம் வீணாக போய்விடும். நான் என் மூன்று பெண்களையும் போஸ்ட் கிரேஜுவேட் படிக்க வைத்துவிட்டேன். அதனால் நீயும் எம் காம் படி" என்று சொல்லி, என்னை கேட்காமலே அப்ளிகேஷன் வாங்கி என்னை எம் காம் சேர்த்துவிட்டார்.

வேறு வழி இல்லாமல், எம் காம் படிக்க ஆரம்பித்தேன். நன்றாக படித்து யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கினேன். அனைத்து பாடங்களிலும் யுனிவர்சிடியிலேயே அதிக மார்க் வாங்கி இருந்தாலும், கும்பகோணம் கல்லூரியிலிருந்து வந்த ஆசிரியர்கள் எங்கள் கல்லூரிக்கு மிக குறைந்த மார்க் ப்ராஜக்ட் பேப்பருக்கு வழங்கியதால் கோல்ட் மெடலை 5 மார்க்கில் தவற விட்டேன். ஆனால் யுனிவர்சிட்டி ரேங்க் சர்ட்டிபிகட் கிடைத்தது. படிப்பின் மேல் இருந்த வெறியால் கிடைத்த வேலைகளுக்கு செல்லாமல் ICWA படிக்க ஆரம்பித்தேன். இதற்கு நடுவே அப்பா ரிடையர்ட் ஆகிவிட்டார். அவர் வாங்கி கொடுத்த வேலையையும் ஒரே மாதத்தில் விட்டு விட்டேன். பிறகு மாமாவின் மூலம் பாண்டிச்சேரியில் உள்ள Protchem Industries India Ltd ல் Management Trainee ஆக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு பிடிக்கவில்லை. காரணம் என்னுடைய தேடலே வேறு.

என் இலட்சியமே மிகப்பெரிய வொயிட் காலர் ஜாப் பார்க்க வேண்டும் என்பதுதான். அதனால் அந்த வேலையையும் விட்டேன். அந்த சமயத்தில் அப்பா ரிடையர்ட் ஆகிவிட்டார். வீட்டில் பணக்கஷ்டம் ஆரம்பித்து விட்டது. அந்த சமயத்தில் நான் ICWA Inter முடித்துவிட்டேன். அதை வைத்துக்கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். அப்பவும் அப்பாவோ அம்மாவோ என்னை ஒரு வார்த்தை திட்டியதில்லை. நான் MCOM படிக்க செலவழித்த உழைப்பை CAக்கு கொடுத்து இருந்தால் எப்போதோ முடித்திருப்பேன். என்ன செய்ய? அமையவில்லை. இருந்தாலும் என் குறிக்கோளிலிருந்து நான் சிறிதளவும் விலகவில்லை. அப்பாவிடம் அடிக்கடி சொல்வேன், 'நான் இப்போது தவற விடும் சம்பளத்தை எல்லாம் சேர்த்து வாங்கிவிடுவேன்" அந்த நம்பிக்கையிலிருந்து மட்டும் நான் மாறவே இல்லை.

என்னதான் யுனிவர்சிட்டி ரேங்க் எடுத்திருந்தாலும் அப்படி ஒன்றும் சரியான வேலை கிடைக்கவில்லை. அப்போதுதான் எங்கள் மாவட்ட எம் பியாக இருந்த திரு என்.செல்வராஜ் (தற்போதைய மந்திரி) ஒரு கம்பனி ஆரம்பித்தார். பெயர் RajaSelva Chemicals Pvt Ltd. அதில் Account Officer பதவிக்கு அட்வர்டைஸ்மெண்ட் வந்தது. அந்த பதவிக்கு ஏகப்பட்ட போட்டி. என்னுடைய அனைத்து திமுக நண்பர்களும் அப்ளை செய்தார்கள். எனக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என நினைத்து அப்ளை செய்யாமல் இருந்தேன். பிறகு மற்ற நண்பர்களின் தூண்டுதலின் பெயரில் அப்ளை செய்தேன். என்ன ஆச்சர்யம்? சேர்மன் என். செல்வராஜ் கட்சி ஆட்களை எடுக்காமல் என்னை தேர்வு செய்தார். எல்லோருக்கும் கோபம்.

இப்படியாக நவம்பர் மாதம் 1990ல் Account Officer ஆக ரூபாய் 1000 சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். சின்ன கம்பனியாக இருந்தாலும் கடுமையாக உழைத்தேன். அப்போதுதான் படிப்பு வேறு அனுபவம் வேறு என்பதை புரிந்து கொண்டேன். எப்படி அக்கவுண்ட்ஸ் புத்தகங்களை எழுதவது என்பது கூட எனக்குத் தெரியாது. கம்பனி ஆடிட்டராக திரு கீர்த்திராஜன் என்பவர் இருந்தார். அவர்தான் எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தார். அப்போது எல்லாம் கம்ப்யூட்டர் இல்லை. எல்லாமே கையால்தான் எழுத வேண்டும். தவறு செய்தால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டி இருக்கும். ஆடிட்டரை பார்க்க பல மணி நேரம் அவர் ஆபிஸில் காத்து இருப்பேன். அன்று அவர் எனக்கு சொல்லிக்கொடுத்ததை எல்லாம் இன்றும் என் நினைவில் வைத்திருக்கிறேன். அவர் போல் ஒரு ஆசான் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அந்த கம்பனியில் வேலை பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கஸ்டம்ஸ் ஆபிஸில் ஏதோ ஒரு அப்ரூவல் வாங்குவதற்காக நானும், எங்கள் சேர்மன் என்.செல்வராஜும் அவர் காரில் கஸ்டம்ஸ் அலுவலகம் சென்றோம். அவர் அதற்கு முந்தைய வருடங்ள் வரை பாராளுமன்ற எம்.பியாக இருந்ததால், எல்லா அரசு அலுவலகங்களிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார்.

கஸ்டம்ஸ் அலுவலகம் சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச ஆரம்பித்தோம். ஏற்கனவே அந்த அப்ரூவலுக்கான நடைமுறைகள் எனக்கு தெரிந்து இருந்ததால், நான் இடைமறித்து, சேர்மனை பேசவிடாமல் நானே பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நான் மிகக் குறைந்த வயதுடைய இளைஞன். அவர் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது என்ற அடிப்படை நாகரிகம் கூட எனக்குத்தெரியவில்லை. நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கவே, அவர் கோபமாகி,

"நீயே எல்லாவற்றையும் பேசுவதாக இருந்தால் என்னை எதற்கு கூட்டி வந்தாய்?" என்று கோபத்துடன் வெளியே சென்றுவிட்டார்.

பிறகுதான் என் தவறு எனக்கு புரிந்தது. மிகுந்த செல்வாக்குடன் இருந்தவர் அவர். அவரை பார்க்க கட்சி ஆட்கள் எப்போதும் ஒரு கும்பலாக அவர் வீட்டின் முன்னால் காத்துக் கிடப்பார்கள். ஆனால் நான் சர்வசாதாரணமாக அவர் வீட்டின் உள்ளே செல்வேன். அப்படிப்பட்டவருக்கு என்னால் கோபம் வந்துவிட்டதை நினைத்து வருந்தினேன். அன்றுதான் உணர்ந்தேன், முக்கியமான அலுவலக சந்திப்புகளின் போது.'தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது' என்று.

மாத சம்பளம் வாங்கியவுடன் அப்படியே 1000 ரூபாயை அப்பாவிடம் கொடுத்து விடுவேன். தினமும் 10 ரூபாய் பஸ் செலவுக்கு கொடுப்பார் அப்பா. சந்தோசமாகத்தான் இருந்தேன். ஆனால், என் தேடுதல் அது இல்லையே? அங்கே வேலை பார்த்துக்கொண்டே ICWA Final யும் முடித்துவிட்டேன். பிறகு வேலை தேட ஆரம்பித்தேன். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு கம்பனியை விட்டு வெளியே வருவது என்றால், முதலில் அந்த கம்பனியின் முதலாளியிடம் சொல்வது என் வழக்கம். அந்த அடிப்படையில் சேர்மன் திரு என்.செல்வராஜை அவர் வீட்டில் சந்தித்தேன்,

"வேறு கம்பனிக்கு செல்லலாமா என நினைக்கிறேன். உங்கள் அறிவுரை தேவை" என்றேன்.

உடனே அவர், "நீ சொல்வதுதான் சரி. உன் படிப்புக்கு ஏற்ற வேலை இப்போது என்னிடம் இல்லை. நீ தாரளமாக வேறு கம்பனிக்கு அப்ளை செய்யலாம்" என்றார்.

மிக அருமையாக வந்திருக்க வேண்டிய கம்பனி. அவர் அப்போது திருச்சி மாவட்ட தி மு க செயலாளராக இருந்ததால், அதிக நேரம் கட்சிப்பணியில் ஈடுப்பட்டார். நான் கம்பனியை விட்டு விலகி வந்த சில வருடங்களில் அந்த கம்பனியையே மூடிவிட்டார்கள். எனக்கு அதில் கொஞ்சம் வருத்தம்தான்.

பிறகு என் வேலை தேடும் படலம் ஆரம்பமானது.

16 comments:

thiyaa said...

அருமையா எழுதியிருக்கிங்க

நிகழ்காலத்தில்... said...

படிப்பும் வேலை அனுபவமும் வேறுவேறு என்பதை உறுதி செய்திருக்கிறீர்கள்..

வாழ்த்துகள்

Ravichandran Somu said...

Good...தன்னம்பிக்கை பதிவு...!

CS. Mohan Kumar said...

உங்கள் அனுபவம், இதனை வாசிக்கும் பிறருக்கும் உதவும் என நினைக்கிறேன்

அமுதா கிருஷ்ணா said...

good post...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

Unknown said...

உங்கள் அனுபவம் வாசிக்கபடவேண்டிய ஒன்று.அருமையாக உள்ளது.நான் முதலில் வேலை செய்த நினைவு வருகிறது,உங்கள் இந்த பதிவை படித்தவுடன்.

cheena (சீனா) said...

அன்பின் உலகநாதன்

அருமை அருமை - தன்னம்பிக்கையும் இலட்சியமும் அருமை - இயல்பாக எழுதப்பட்ட இடுகை - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

iniyavan said...

//அருமையா எழுதியிருக்கிங்க//

வருகைக்கு நன்றீ தியா.

iniyavan said...

//படிப்பும் வேலை அனுபவமும் வேறுவேறு என்பதை உறுதி செய்திருக்கிறீர்கள்..

வாழ்த்துகள்//

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சிவா.

iniyavan said...

//ரவிச்சந்திரன் said...
Good...தன்னம்பிக்கை பதிவு...!//

நன்றி தலைவரே.

iniyavan said...

//உங்கள் அனுபவம், இதனை வாசிக்கும் பிறருக்கும் உதவும் என நினைக்கிறேன்//

வருகைக்கு நன்றி மோகன்.

iniyavan said...

//good post...//

நன்றி அமுதா மேடம்.

iniyavan said...

//அருமை//

நன்றி டி வி ஆர் சார்.

iniyavan said...

//உங்கள் அனுபவம் வாசிக்கபடவேண்டிய ஒன்று.அருமையாக உள்ளது.நான் முதலில் வேலை செய்த நினைவு வருகிறது,உங்கள் இந்த பதிவை படித்தவுடன்.//

வருகைக்கு நன்றி நந்தா.

iniyavan said...

//அன்பின் உலகநாதன்

அருமை அருமை - தன்னம்பிக்கையும் இலட்சியமும் அருமை - இயல்பாக எழுதப்பட்ட இடுகை - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//

வருகைக்கிற்கும், வாழ்த்திற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சீனா ஐய்யா.