Oct 19, 2010

காதலித்தே ஆக வேண்டும்?

"அம்மா விசயம் தெரியுமா? அந்த கோடிவீட்டு கோமளா இல்ல. அவ பக்கத்துவீட்டு ராமுவ இழுத்துட்டு ஓடிட்டாளாம்" - பக்கத்துவீட்டு அம்மா.

"என்னைக்கு அக்கா?" - எங்கள் வீட்டில்.

"நேத்து ராத்திரி"

அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஊருக்கு வந்த அவர்கள் இருவரையும் ஊரில் சேர்க்கவே இல்லை. அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

இது நடந்தது 20 வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்தில்.

நான் கல்லூரி படிக்கையில் இது போல் சிலர் ஓடிப்போனார்கள். வெகு சிலரே குடும்பத்துடன் சேர்ந்து வாழந்தார். ஓடிபோய் திருமணம் செய்து கொண்ட நிறைய நண்பர்களின் வாழ்க்கை சரியாக அமையவில்லை. சொந்த குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் அவர்கள் பட்ட வேதனையை நான் கண்கூட பார்த்திருக்கிறேன்.

அதில் ஒரு நண்பனின் தங்கை கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம். அதனால் அவர்கள் பட்ட அவமானம் நிறைய. நல்ல வேளை காதலித்தவனே அவளை கல்யாணம் செய்து கொண்டான். என்னதான் ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே காதல் இருந்தாலும், நாங்கள் படிக்கும் காலங்களில் நம் தமிழ்நாட்டில் காதல் கல்யாணம் என்பது கனவில் மட்டுமே சாத்தியாமாயிருந்தது.

காதலித்தவர்களையும், காதல் கல்யாணம் செய்தவர்களையும் எதிரிகளாகவே அந்த குடும்பத்தினர் பார்த்தனர். ஏகப்பட்ட வெட்டு குத்து காதல் கல்யாணங்களில் பார்த்திருக்கிறேன்.

அந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்த்ததினாலேயே, "யாரையும் இழுத்துக்கொண்டு ஓடக்கூடாது" என்று முடிவு எடுத்திருந்தேன். இழுத்துக்கொண்டு ஓடும் அளவிற்கு யாரும் என்னிடம் இருந்திருக்கவில்லை என்பது வேறு விசயம்.

காதல் திருமணம் தப்பு என்றோ இல்லை அம்மா அப்பா பார்த்து ஏற்படுத்தி தரும் குடும்ப வாழ்க்கைத்தான் சிறந்தது என்றோ நான் வாதிட விரும்பவில்லை. அது அவரவர்கள் மன நிலையை பொறுத்தது.

நான் இங்க சொல்ல வந்த விசயம் என்னவென்றால், அப்போது எல்லாம் காதலர்கள் ஒரு வித பயத்துடனும், குடும்பத்தாருக்கு பயந்தும் காதலித்து வந்தார்கள். அதுவும் அனைத்து பெண்களும் ஆண்களும் காதலித்தே ஆக வேண்டிய கட்டாயத்திலும் வாழ்ந்ததாக நினைவில்லை.

சிறுவயதில் இருக்கும் ஒருவித இனக்கவர்ச்சி அனைவருக்குமே இருந்திருக்கும். அதிலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. இங்கு மலேசியாவில் 95% காதல் கல்யாணம் தான். அதனால் இங்கு எதுவுமே எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் நம் மக்கள் தெளிவாக இருந்தாலும் இந்த டிவி சேனல்கள் அவர்களை சும்மா இருக்க விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சன் மியூசிக் சேனலின் 'அன்பே அன்பே' நிகழ்ச்சியை பார்த்தால் வேதனையும் கவலையுமே அதிகரிக்கிறது, அது காதலர்களுக்கான நிகழ்ச்சியாம். அனைத்து காதலர்களுக்கும் கேள்வி என்ற பெயரில் ஏதாவது ஒரு கண்றாவியை தினமும் கேட்கிறார்கள். அதற்கு ஆண்களும் பெண்களும் சொல்லும் பதில்கள் அதைவிட கொடுமை.

ஏதோ எல்லோரும் காதலித்துத்தான் ஆக வேண்டும் என்பது போல் இருக்கிறது அந்த நிகழ்ச்சி. காதல் தவறு என்று சொல்லவில்லை. சரியான வயதில் சரியான நபர்களை காதலித்து கல்யாணம் செய்தால் பரவாயில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பேசுவதெல்லாம் அந்த அளவு ஒரு புரிதலுடன் பேசுவதாக தெரியவில்லை.

சிறு பெண்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்த்து கெட்டு போவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உண்டு. காதலைப் பற்றி பேச பயந்த காலம் போய் இப்போது பொது ஊடகத்தில் தன் காதலைப் பற்றி பெண்கள் தைரியமாக பேசுவதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

'சுறா' படத்தின் ஒரு காட்சி அன்று சன் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் தமன்னா விஜயை பார்த்து (விஜயை பார்க்கும் இரண்டாவது காட்சியிலெயே) தன் காதலை சொல்லுவார்.

அந்த காட்சியைப் பார்த்த என் ஆறு வயது பையன் கேட்ட கேள்வி,

"என்ன டாடி இவ்வளவு சீக்கிரம் " I Love You" சொல்லிட்டாங்க?

பதில் சொல்ல முடியாமல் குழம்பிப்போனேன்.

4 comments:

தணா said...

"சிறு பெண்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்த்து கெட்டு போவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உண்டு."

"சிறு குழந்தைகள் கூட இந்த நிகழ்ச்சியை பார்த்து கெட்டு போவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உண்டு."

"காதலைப் பற்றி பேச பயந்த காலம் போய் இப்போது பொது ஊடகத்தில் தன் காதலைப் பற்றி பெண்கள் தைரியமாக பேசுவதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது."

iniyavan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தணா.

அன்புடன் அருணா said...

ஊடகங்கள் கவலைக்கிடமாக ஆகிவிட்டன என்பது 100% உண்மை.

மாதேவி said...

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

எல்லாம் செவிடன் காதில்......