Oct 29, 2010

காணாமல் போன சந்தோசங்கள்?

பள்ளி, கல்லூரி நாட்களில் அனுபவித்த சந்தோச பண்டிகை தினங்கள் தினமும் மனதில் வந்து போகின்றன. மிக அதிக சந்தோசத்துடன் தீபாவளியை கொண்டாடிய நாட்கள் இன்றும் என் நினைவில். நான் ஏன் 'கொண்டாடிய நாட்கள்' நாட்கள் என்கிறேன் என்றால், எங்களை பொறுத்தவரை தீபாவளி என்பது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாது. ஏறக்குறைய ஒரு மாதம் கொண்டாடுவோம். எங்களை என்று இங்கே நான் சொல்வது என் பால்ய நண்பர்களையும் சேர்த்து.

தீபாவளிக்கு புதுத்துணிகள் வாங்குவது என்பது சாதாரண விசயமாக கருதாமல் அதை எதையோ மிகப்பெரிய புராஜக்ட் அளவிற்கு பேசி முடிவு எடுப்போம். ஒரு பேண்ட் வாங்குவதற்கு ஊரில் உள்ள கடைகள் எல்லாம் ஏறி இறங்குவோம். திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் யாரும் நுழையக்கூட முடியாது. அப்படி ஒரு கூட்டம் இருக்கும். துணி வாங்க செல்வதைவிட துணி வாங்க வருபவர்களை வேடிக்கை பார்க்க சென்ற நாட்கள் அதிகம்.

எங்கள் தெருவில் என் வயது ஒத்த பதினைந்து நண்பர்கள் இருந்தோம். தீபாவளிக்கு முந்தைய ஒரு மாதமும் எங்கள் பேச்சு தீபாவளியை பற்றி மட்டுமே இருக்கும். எல்லோரும் அவரவர் வாங்கிய துணிகளைப் பற்றியும், லேட்டஸ்ட் மாடல் டிரெஸ்களை பற்றியும் பேசிக்கொண்டு இருப்போம்.

எப்படியாவது அப்பாவிடம் பேசி பேசி இரண்டு செட் பேண்ட், சர்ட் வாங்கிவிடுவேன். அதை போட்டு எல்லோரிடமும் காண்பிக்க எப்போது தீபாவளி வரும் என்று ஏங்கிக் கொண்டு இருப்பேன். எங்கள் குடும்பம் மிகப்பெரியது என்பதால், நிறைய ஸ்வீட் வகைகள் செய்வார்கள். தினமும் இரவில் அந்த ஸ்வீட் செய்யும் நிகழ்ச்சியை அவர்கள் ஒருவித சந்தோசத்துடன் செய்யும் போது, எனக்கும் அந்த சந்தோசம் பற்றிக்கொள்ளும்.

எவ்வளவு செலவு செய்தாலும் அப்பா வெடி வாங்க மட்டும் அதிக காசு தர மாட்டார். எப்படியோ அங்கே இங்கே தேத்தி ஒரு 500 ரூபாய்க்கு வெடி வாங்கிவிடுவேன். இப்போது 500ரூபாய்க்கு ஒரு வெடிக்கட்டு கிடைப்பதே பெரிய விசயம் போல் உள்ளது. வாங்கிய வெடிகளை வெடிக்க வேண்டும், அதுவும் அப்பாவுக்கு தெரியாமல் வெடிக்க வேண்டும். அப்படி வெடிப்பது சந்தோசம் கலந்த ஒரு திரில்லாகவே இருக்கும். அப்படி ஒரு முறை கலசம் வைக்கும்போது வெடித்து, கைகளில் சுட்டுக்கொண்டு அப்பாவுக்கு தெரியாமல் உப்பில் கை வைத்து சரி செய்ய முயற்சித்து முடியாமல், பின் அப்பாவுக்கு தெரிந்து, அவரிடம் திட்டு வாங்கியதை எல்லாம் இன்று நினைத்தாலும், ஒரு வித சந்தோசம் தோன்றுகிறது.

தீபாவளிக்கு முதல்நாள்தான் மிக அதிக சந்தோசமாக இருக்கும். ஒரு மாதமாகவே ஊரே தீபாவளியை பற்றி பேசி பேசி எல்லோருமே ஒரு வித சந்தோசத்தில் இருப்பார்கள். அதுவும் முதல் நாள் பார்த்தீர்கள் என்றால், ஒரே சொந்தக்காரர்கள் கூட்டமாக இருக்கும். தூரத்தில் வேலையில் இருக்கும் அண்ணாவோ, அக்காவோ அல்லது அத்தையோ வருவார்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் வருவார்கள். வீட்டில், "இந்த மாவை வாங்கி வா? அவங்க வீட்டுல முறுக்கு சுடுறது வாங்கிவா" "வெறகு தீர்ந்துட போவுது நாளும் கிழமையுமா விறகு இல்லாம அல்லாட முடியாது, போய் நல்ல காஞ்ச விறகா வாங்கிவா" என்று வீட்டில் துரத்தி அடிப்பார்கள். ஒருவித முணுமுணுப்புடன் அனைத்தையும் செய்வது வழக்கம்.

முதல் நாள் சாப்பாடு தூக்கம் இல்லாமல் நண்பர்கள் அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். அப்போதுதான் ஊருக்கு கல்யாணம் ஆகி முதல் முறை வந்திருக்கும் புது மணப்பெண்கள், நண்பனின் அக்காவாகவோ, தங்கையாகவோ இருப்பார்கள். முன்பு தோழிகள் போல் விரசம் இல்லாமல் பழகியவர்களாக இருப்பார்கள். கல்யாணம் ஆகி முதல்முறை வரும்போது நம்மை பார்க்கும்போது ஒரு வித நாணத்துடன் அவர்கள் நம்மிடம் பேசும் அழகே ஒரு வித சந்தோசத்தை கொடுக்கும். தவறாகவும் நினைக்க முடியாது அதே சமயத்தில் அப்படி அவர்களிடம் பேச வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

தீபாவளி முதல் நாள் இரவுதான், ரவா உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை, சோமாசா செய்வார்கள். ஏன் அன்றைய இரவுதான் செய்கிறார்கள் என்பது எனக்கு இன்று வரை விளங்கிக் கொள்ள முடியவில்லை. பொதுவாக அம்மாவோ, அக்காக்களோ, தங்கைகளோ அன்று இரவுதான் மருதாணி போட்டுவிடுவார்கள். அவர்களும் போட்டுக்கொள்வார்கள். இரண்டு கைகளும் மருதாணி இருக்கும். அப்போது பார்த்து கொசு கடிக்கும். அப்போது ஒவ்வொருவரும் நெளியும் நெளியும் அம்மாவிடம் கொசுவை அடிக்க சொல்ல ஓடியதும் இன்றும் என் மனதில்.

அதிகாலையில் எழுந்து எல்லோருக்கும் முன்னே ஒரு சரம் வெடியாவது வைத்துவிட துடிப்பேன். ஆனாலும், யாராவது ஒருத்தர் வீட்டில் வைத்துவிடுவார்கள். பிறகு சாமி கும்பிட்டு, அப்பா எல்லோரையும் கூப்பிட்டு தலையில் எண்ணைய் வைத்து, சீக்கிரம் குளிக்க சொல்வார்கள். எல்லோரும் சுடு தண்ணிக்கு அடித்துக்கொள்வோம். எல்லாரும் குளித்து முடித்து புது டிரஸ் போட்டு, சாமி கும்பிட்டு உடனே வீட்டை விட்டு வெளியே ஓடுவேன் இரண்டு விசயத்திற்காக, ஒன்று, தீபாவளி காலை சாப்பாடு எப்போதும் என் நண்பன் வீட்டில்தான், அதற்காக. பிறகுதான் வீட்டிற்கு வந்து சாப்பிடுவேன். நண்பனின் அம்மா ஒரு தீபாவளி லேகியம் தருவார்கள். அதை சாப்பிட்டால் எவ்வளவு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு ஒரு கெடுதலும் வராது.

இரண்டாவது விசயம் புது டிரஸை போட்டுக்கொண்டு நம்ம ஆளிடம் காமிப்பதற்கு!. அவங்க பார்க்கிறாங்களோ இல்லையோ அவங்க வீட்டு பக்கம் சைக்கிளிலோ அல்லது பைக்கிலோ...........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... எல்லாம் ஒரு கனவா போச்சு.

இன்னும் தீபாவளிக்கு ஒரு வாரம்தான் இருக்கு. இன்று காலை வீட்டைவிட்டு வெளியே வருகிறேன். ஒரு ஈ காக்கா இல்லை. தீபாவளி வருவதற்கான ஒரு அறிகுறி இல்லை. என்ன செய்வது இருப்பது தமிழ் நாட்டில் இல்லையே? மனதிற்குள் ஒருவித சோகம். காணாமல் போன அந்த சந்தோச நாட்கள் வந்து வந்து போகின்றன.

இத்தனை வருசமா எப்படியாவது தீபாவளிக்கு வீட்டிற்கு போய் விடுவேன். இந்த முறை போக முடியாத சூழல். அதனால்தான் இந்த புலம்பல். அப்படியே போனாலும், பழைய சந்தோசம் வருவதில்லை. சந்தோசத்தை மட்டுமே அள்ளிக்கொடுக்கும் அப்பா இல்லை. அக்காக்களும், தம்பிகளும், சொந்தங்களும் - ஏதாவது பிரச்சனைகளில் சந்தோச நாட்களை சந்தோசமாக ஏற்பதில்லை.

நான் அப்படி இல்லை.

சந்தோசப்பிரியன். பிள்ளைகள் சந்தோசத்திற்காகவாவது நாம் சந்தோசமாக இருக்க வேண்டும் இல்லையா?

5 comments:

Packirisamy N said...

After reading, I felt like I have gone through one more Deepavali.

Enjoyed. Thanks.

துளசி கோபால் said...

மலேசியாவிலே தீபாவளிக் கொண்டாட்டம் இன்னும் ஆரம்பிக்க லைன்னா.... நியூஸியிலே எப்படி இருக்கும் பாருங்க:(

ஆமாம்..... தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி வருமே! உள்ளூர் தயாரிப்பு. (RTM) நம்ம ஜாக் நடராஜன் தயாரிக்கும் நிகழ்ச்சி. அதுலே ஆட்டம் பாட்டம் நகைச்சுவைன்னு கலந்துகட்டி அடிப்பாரே........

பி.கு: நம்ம நண்பர்தான் அவர்.

இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

iniyavan said...

//After reading, I felt like I have gone through one more Deepavali.

Enjoyed. Thanks.//

வருகைக்கு நன்றி சாமி.

iniyavan said...

//மலேசியாவிலே தீபாவளிக் கொண்டாட்டம் இன்னும் ஆரம்பிக்க லைன்னா.... நியூஸியிலே எப்படி இருக்கும் பாருங்க:(

ஆமாம்..... தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி வருமே! உள்ளூர் தயாரிப்பு. (RTM) நம்ம ஜாக் நடராஜன் தயாரிக்கும் நிகழ்ச்சி. அதுலே ஆட்டம் பாட்டம் நகைச்சுவைன்னு கலந்துகட்டி அடிப்பாரே........

பி.கு: நம்ம நண்பர்தான் அவர்.

இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.//

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி மேடம்.

உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

தினேஷ் ப said...

அது என்னமோ உண்மைதான் உலகநாதன் சார். உங்களடோ பதிப்ப படிச்சதுல இருந்து எனக்கு என்னோட பழைய நாட்கள் நினைவுக்கு வருது.. சே எவ்வளவு சந்தோஷமான நாட்கள்!!!!!! கோடி ரூபா கொடுத்தாலும் அந்த சதோஷம் இனி கிடைக்குமா தெரியல...
தீபாவளி நல வாழ்த்துக்கள் சார்...

அன்புடன்
தினேஷ் பன்னீர் செல்வம்