Nov 26, 2010

விவசாயி ஆக ஆசை


எங்கள் கொள்ளு தாத்தா ஒரு நாலு ஏக்கர் நிலம் வைத்திருந்தாராம். அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நிலம் என்ன ஆனது? என்று தெரியவில்லை. அது உண்மையான செய்தியா என்றும் சரிவர தெரியவில்லை. அப்பா ரிடையர்மெண்ட் ஆன போது வந்த பணத்தில் குத்தகைக்கு நிலத்தை எடுத்தார். ஆனால், அவர் சாகுபடி பண்ணாமல், ஒரு சொந்தக்காரரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவரோ அப்பாவை நன்றாக ஏமாற்றிவிட்டார். இதையெல்லாம் பார்த்த போது எனக்கும் நிலம் வாங்கி அதில் நெல், கரும்பு, உளுந்து என்று பயிரிடவேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்போது படித்துக்கொண்டிருந்தேன். சிங்கிள் டீ வாங்கவே அப்பாவின் தயவை நாடிய காலம் அது.
ஒரு வழியாக நானும் ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினேன். நான் அந்த வயலை பார்க்கும் போது ரெண்டு ஏக்கரில் வாழை இருந்தது. நான் ரெஜிட்ரேஷன் செய்து முடித்ததும் வாழையை முழுவதும் வெட்டிவிட்டு, நிலத்தை உழுது கொடுத்துவிட்டார்கள். நானும் வாழை போட வேண்டும் என்ற ஆசையில் ஏற்கனவே குத்தகை எடுத்து இருந்தவரை அணுகினேன். வருடத்து எவ்வளவு கிடைக்கும்? என்றேன். ஒரு ஏக்கருக்கு 21,000 ரூபாய் கிடைக்கும் என்றார். என் பைனான்ஸ் மூளை நிலத்தை வாங்கிய பணத்துக்கு ஒரு வருடத்து வட்டியை சரி பார்க்க, வருமானம் வட்டியை விட மிகக்குறைவாக இருக்கிறதே என்று நினைத்து, வாழை போடாமல் நிலத்தை அப்படியே விட்டு வைத்துவிட்டு மலேசியா வந்துவிட்டேன். என்னுடைய விவசாயி ஆகும் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

இந்த முறை செல்லும் போது ஏதாவது விவசாயம் செய்யலாம் என்று நினைத்தால் பக்கத்தில் உள்ள 100 ஏக்கரையும் ஒருவர் வாங்கி பிளாட் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார். என்னுடைய நிலத்தையும் வாங்கி கொள்வதாகவும், நான் வாங்கிய விலையைவிட மூன்று மடங்கு தருவதாகவும் சொன்னார். நான் வேண்டாம் என்று சொல்லி வந்துவிட்டேன். இப்போது அந்த நிலம் யாருக்கும் பயன்படாமல் அப்படியே இருக்கிறது.மலேசியாவில் உள்ள வீட்டில் கார்டன் வைக்க மிகப்பெரிய இடம் வீட்டை சுற்றிலும் இருக்கிறது. எனக்கு நிறைய காய்கறிகள் பயிரிட வெண்டும் என்று நிறைய ஆசை. நானும் என்ன என்னவோ செய்து பார்த்துவிட்டேன், ஒரு செடியும் வர மாட்டேன் என்கிறது. காரணம் வீடு ரோடிலிருந்து மிக உயரம். வீட்டை உயர்த்துவதற்கு நிறைய கல்லும், அரளை கற்களும் போட்டு மேடு ஆக்கி இருக்கிறார்கள். அதனால் என்னால் அதிக ஆழம் வெட்டி பயிரிட முடியவில்லை.


வீட்டில் ஒரு ஐந்து வாழை மரம் உள்ளது. ஒவ்வொரு தாரிலும் சுமார் 135 வாழக்காய்கள் வருகின்றது. அதை சாப்பிடவோ, வாங்கவோ இங்கே ஆள் கிடையாது. வீட்டை சுற்றிலும் பூச்செடிகள் வைத்திருக்கிறேன். இது என்னுடைய விவசாய ஆசையை ஓரளவு பூர்த்தி செய்கிறது.

எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மலாய்க்காரர். அவரை நான் அடிக்கடி கவனிப்பதுண்டு. அதிகம் பேச மாட்டார். இயற்கையை மிகவும் நேசிப்பவர் என்பதை சில நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். வீட்டின் ஒரு பகுதியில் ஒரு குடில் மாதிரி அமைத்து அதில் ஊஞ்சல் கட்டி வைத்துள்ளார். நான் வீட்டிற்கு சென்றவுடன் கதவை சாத்தினால், காலையில்தான் வெளியில் வருவது வழக்கம். பிறகுதான் அவரை கவனித்தேன். மாலை வேளைகளில் அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பார். தெருவையும், வானத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பார்.

அவர் ஆடிக்கொண்டிருக்கும் போது ஒருசில குருவி மாதிரி பறவைகள் அங்கே வரும். ஒரு நாள் அந்த குடிலின் மேலே ஒரு நெட் வைத்து கட்டிக்கொண்டிருந்தார். எதற்கு என்று யோசித்தேன், பிறகுதான் தெரிந்தது, அந்த குருவிகள் உட்கார இடம் இல்லாமல் சிரமப்பட்டதால், அந்த வலையை கட்டினார் என்று. அந்த குருவிகளிடம் என்ன பேசுவார் என்று தெரியாது. ஆனால், அவைகளை பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார். இரவு வெளிக்கதவை பூட்ட எந்த நேரத்தில் வந்தாலும் அங்கு இருப்பார். காலையில் வாக்கிங் செல்ல போகும் போதும் ஏதாவது அங்கே வேலை செய்து கொண்டு இருப்பார். எப்போது தூங்குவார் என்று தெரியாது.

பெரிய பெரிய சட்டிகள் வாங்கி நிறைய செடிகள், பூச்செடிகள் பயிருகிறார். வெற்றிலை கொடி கூட வைத்திருக்கிறார். தீவாவளி அன்று கூட வெற்றிலை கிடைக்காமல் அவர் வீட்டில்தான் வாங்கினேன். காலையில் தொழுகை முடிந்து வந்தார் என்றால் ஒரு இரண்டு மணி நேரம் செடிகளை பராமரிப்பார். அடிக்கடி சுத்தம் செய்வார். மாலை வேளைகளிலும் அப்படியே. அவர் மனிதர்களிடம் அதிகம் பேசி பார்த்ததில்லை. இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். அவர் மனைவிடம் கூட அதிகம் பேசி நான் பார்த்ததில்லை.

எப்போதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு, அவைகளை சரி செய்து இருப்பதை பார்த்து, நேற்று அவரிடம் கேட்டேன்,

"சார், எப்போதும் கார்டனில் அதிக நேரம் செலவிடுகின்றீர்களே? எப்போதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டும், அவைகளை பராமரித்துக்கொண்டும் இருக்கின்றீர்களே? ஏன்?"

அதற்கு அவர் சொன்ன பதில்,

"நமக்கு பசிக்குதுன்னா, வாய்விட்டு கேட்கிறோம். நமக்கு உடம்பு சரியில்லனா டாக்டர் கிட்ட போறோம். இதுங்க எல்லாம் என்ன பண்ணும். நாமதான் அவைகளை புரிந்து கொண்டு அவைகளுக்கு வேண்டியவைகளை செய்யணும்"

நல்ல குணம், மனம் படைத்த மனிதர்கள், இயற்கையை நேசிக்கும் மனிதர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதர் என் பக்கத்து வீட்டுக்காரராக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இனி, கிடைக்கும் நேரத்தில் நானும் என் கார்டனில் நேரத்தை செலவழிக்கப் போகிறேன்.
Nov 24, 2010

மிக்ஸர் - 24.11.2010

எங்கள் பகுதிக்கு நேற்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வந்திருந்தார். அவரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக: அவர்தான் மலேசியாவை உலக அளவிற்கு உயர்த்தியவர். அவர் ஒரு மருத்துவர். லங்காவியில் பிறந்தவர் படிப்படியாக முன்னேறி பிரதமரானவர். மலேசியாவை 22 வருடம் தன் பிடியில் வைத்திருந்தவர். தான் உச்சத்தில், நல்ல புகழில் இருக்கும்போதே பிரதமர் பதவியையும், கட்சியின் தலைமை பொறுப்பையும் விட்டுக்கொடுத்தவர். அவர் 2003 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். இப்போது அவருக்கு வயது 86. மூன்று முறை ஹார்ட் சர்ஜரி செய்தவர். இப்பொது பார்த்தாலும் ஒரு கல்லூரி மாணவனைப் போல காட்சியளிப்பவர். 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குபவர். இன்னமும் அவருடைய பேச்சுக்கள், கருத்துகள் மலேசியாவில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. அவர் பிரதமராக இருந்த போது அமெரிக்கா போன பொழுது, அமெரிக்காவில் இருந்து கொண்டே அமெரிக்காவை பற்றி விளாசித்தள்ளியவர். அவரைப்பற்றி எழுதவேண்டுமானால், தொடர் கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். எனக்குப் பிடித்த உலகத் தலைவர்களில் ஒருவர். அவருக்கு வந்த பரிசுப்பொருட்களை மட்டும் வைத்து மிகப் பெரிய பங்களா (Galeria Perdana) லங்காவியில் இருக்கிறது. அதை சுற்றிப்பார்க்கவே பல மணிநேரம் ஆகும்.

அப்படிப்பட்ட மனிதர்தான் நேற்று எங்கள் பகுதிக்கு வந்தார். காலை 8.30க்கு ஒரு அரசாங்க ஹாலில் சொற்பொழிவு, பிறகு சில இடங்களுக்கு விஜயம் செய்தார். நான் வாக்கிங் செல்லும் பகுதியில்தான் அந்த ஹால் உள்ளது. நான் அந்த இடத்தை கடக்கையில் காலை மணி ஆறு. ஒரு போலிஸ் இல்லை. எந்தவிதமான சோதனையும் இல்லை. ரோட்டில் யாருமே இல்லை.அந்த ஹாலை ஒட்டியுள்ள ஒரு சில எலக்ட்ரிக் கம்பங்களில் ஒரு மூன்று அடி அளவில் உள்ள போஸ்டர் தொங்கிக்கொண்டு இருந்தது. எங்கும் ஒரு கட் அவுட் கூட இல்லை. யாரும் அவருக்கு கருப்புக்கொடியோ இல்லை எந்த ஒரு எதிர்ப்பும் காட்டவில்லை. மக்கள் மிகச்சாதாரணமாக அவர்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். அவர் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.

நான் ஒரு ஒருமுறை ஒரு முக்கியமான வேலை விசயமாக சென்னை சென்றிருந்த போது அப்போதைய முதல்வர் எங்கோ செல்வதற்காக சாலையில் போலிஸ்காரர்கள் ஒரு மணி நேரம் யாரையும் போக அனுமதிக்காமல் நிறுத்தி வைத்திருந்தார்கள். திருச்சிக்கோ அல்லது அருகில் உள்ள ஊருக்கோ முதல்வரோ அல்லது பெரும்தலைகளோ வரும் பட்சத்தில் நாங்கள் எல்லாம்.....சரி, வேண்டாம் விடுங்கள்!!!!

இந்தியாவைப் பற்றி சொல்ல எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கிறது.

**************************************************

சந்தோசத்தை அடைய குஷ்வந்த் சிங் என்ன சொல்கிறார் பாருங்கள்:

EIGHT CLUES TO HAPPINESS

By- KHUSHWANT SINGH

Having lived a reasonably contented life, I was musing over what a person should

strive for to achieve happiness. I drew up a list of a few essentials which I

put forward for the readers' appraisal.

1. முதலில் தேவையான முக்கியமான விசயம் நல்ல உடல்நிலை. நல்ல உடல்நிலை இல்லை என்றால் உங்களால் சந்தோசமாகவே இருக்கமுடியாது. ஒரு சின்ன தலைவலி கூட உங்கள் சந்தோசத்தை கெடுக்கலாம்.

2. இரண்டாவது, உங்களின் பேங்க் பேலன்ஸ். அதற்காக கோடிக்கணக்கில் உங்களின் சேமிப்பு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்காகவாவது இருக்க வேண்டும். உதாரணமாக குடும்பத்துடன் அடிக்கடி வெளியில் செல்ல, தியேட்டர் சென்று படம் பார்க்க, விடுமுறையை கழிக்க ஒரு மலைப்பிரதேசத்திற்கோ அல்லது ஏதாவது உங்களுக்கு பிடித்த இடத்திற்கோ செல்லவாவது உங்களிடம் பணம் எப்போதும் இருக்க வேண்டும். உங்களிடம் தேவையான பணம் இல்லை என்றாலோ, எப்போதும் கடனுடனே வாழ்க்கை இருந்தாலோ, உங்களால் சந்தோசமாக வாழ்க்கையை வாழமுடியாது.

3. மூன்றாவது உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு சின்ன வீடாவது இருக்க வேண்டும். வாடகை வீடு எப்போதுமே உங்களுக்கு சந்தோசத்தை தராது. அதுவும் உங்கள் வீட்டில் ஒரு கார்டன் வைக்கும் அளவிற்கு இடம் இருந்து, அதில் ஒரு மரமோ செடியோ வைத்து வளர்த்து வந்து அதை தினமும் பராமரித்தீர்கள் என்றால், அதில் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.

4. நான்காவது, ஒரு நல்ல பரஸ்பரம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு துணை அவசியம். அது கணவனோ அல்லது மனைவியோ அல்லது நண்பராக கூட இருக்கலாம். இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து அப்படியே சேர்ந்து வாழும் பட்சத்தில், உங்கள் வாழ்க்கை எப்போது அமைதியாக இருக்காது. கஷ்டப்பட்டு பிடிக்காமல் வாழ்வதைவிட விவாகரத்து எவ்வளவோ மேல்.

5. ஐந்தாவது, நம்மைவிட நல்ல முறையில் பணத்தால், பதிவியால் முன்னேறியவர்களை பார்த்து பொறாமைப்படுவதில் தவறில்லை. ஆனால், முன்னேற எந்த ஒரு முயற்சியும் எடுக்காமால் எப்போதும் அடுத்தவர்களை கம்பேர் செய்து பொறாமைப்பட்டுக்கொண்டே வாழ்க்கையை வாழ்வது அவ்வளவு நல்லது அல்ல,

6. ஆறாவதாக, நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பொழுதும் நாம் மற்றவர்களுடைய வெறும் வாயை மெல்வதற்கு அவல் ஆகிவிடக்கூடாது. ஏனென்றால் நாம் விழித்துக்கொள்ளூம் முன்னர் அவர்களுடைய கிசுகிசுப்புகள் பேச்சுகள் நம்மை பலமாக பாதித்திருக்கக்கூடும்.

7. ஏழாவதாக நல்ல சில ஹாபிஸை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது கார்டனிங்காகவோ, புத்தகங்கள் படிப்பதாகவோ, எழுதுவதாகவோ, பெயிண்டிங்காகவோ, விளையாட்டோ அல்லது நல்ல இசையை கேட்பதாகவோ கூட இருக்கலாம். கிளப்புக்கோ அல்லது பார்ட்டிகளுக்கோ சென்று தண்ணி அடிப்பது எல்லாம் நேரத்தை விரயமாக்கக்கூடிய விசயம்.

8. எட்டாவதாக, தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு 15 நிமிடமாவது ஒதுக்கி நாம் நம்மை ஒரு சுயசோதனைபோல் செய்துகொள்வது நல்லது. காலையில் முதலில் ஒரு 10 நிமிடம் நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்வது நல்லது, என்ன செய்தோம்? என்ன செய்கிறோம்? செய்வதெல்லாம் சரியா? அதனால் ஏதேனும் பலன் இருக்கிறதா? அடுத்த ஒரு ஐந்து நிமிடம் இன்று என்ன செய்யவேண்டும்? என்று ஒரு காகிதத்தில் ஒரு லிஸ்ட் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. அதே போல் மாலையிலும் அதே போல் நம்மை நாமே கேள்விகள் கேட்டுக்கொண்டு நம்மை தயார் படுத்திக்கொள்வது எப்போதும் நல்லது.


RICHNESS is not Earning More, Spending More Or Saving More, but ...

"RICHNESS IS WHEN YOU NEED NO MORE"

**************************************************Nov 19, 2010

விமானத்தில் ஒரு இரவு!

ந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். காலையில்தான் எங்கள் ஊரிலிருந்து 5 மணிக்கு காரில் கிளம்பி அறு மணிக்கு அடுத்த டவுணில் உள்ள ஏர்போர்ட்டை அடைந்து அவசர அவசரமாக முதல் விமானத்தை பிடித்து கோலாலம்பூர் வந்து, டாக்ஸியில் சென்றால் நேரம் ஆகும் என்று அங்கிருந்து KLIA Express Train பிடித்து காலை 9 மணிக்கு அந்த மீட்டிங் ஹாலை அடைந்து, காலை உணவு சாப்பிடாமல், பசியுடன் அமர்ந்து இருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது.

பொதுவாக மீட்டிங்கின் போது எந்த தொலைபேசி அழைப்பு வந்தாலும் எடுப்பதில்லை. காரணம் வரும் அழைப்புகளால் நாம் பேச வேண்டியதில் இருந்து நம் கவனம் சிதறிவிடும். ஆனால் இப்போது வந்திருப்பது சேர்மனிடம், அதனால் எடுத்தே ஆக வேண்டிய சூழல். அவசரம் இல்லாவிட்டால் அவர் அழைக்க மாட்டார். அதனால் ஒரு 'எக்ஸ்மீ சர்ஸ்' சொல்லிவிட்டு போனை எடுத்துக்கொண்டு மீட்டிங் ஹாலைவிட்டு வெளியே வந்தேன்.

"உலக்ஸ், நீ உடனே புறப்பட்டு சென்னைக்கு வா. முக்கியமான விசயம் பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும்''

"சார், நான் இப்போ வந்து கோலாலம்பூரல..." நான் முடிப்பத்ற்குள்,

"தெரியும். எப்படியாவது வந்துவிடு"

இதற்கு மேல் அவரிடம் எதுவும் பேசமுடியாது. போய்த்தான் ஆக வேண்டும். மீண்டும் வீட்டிற்கு சென்று, கோலாலம்பூர் வந்து சென்னை செல்ல நேரம் கிடையாது. இங்கே இருந்து உடனே இன்று இரவு புறப்பட வேண்டியதுதான். உடனே அருகில் உள்ள எங்கள் ஏஜண்டை தொடர்பு கொண்டேன். எப்படியோ டிக்கட் கிடைத்தது. வீட்டிற்கு போன் செய்து ஊருக்கு போய் வருகிறேன் என்றதற்கு அப்படி ஒன்றும் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அவர்களை விட்டு செல்வதால் அவர்களுக்கு கோபம்.என்ன செயவது? அலுவலக விசயமாக போகும் போது எப்படி அவர்களையும்....?

ஒருவழியாக அவர்களிடம் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்று கூறிவிட்டு, கோலாலம்பூரிலிருந்து ஏர்போர்ட்டுக்கு கிளம்ப மாலை ஆறு கிவிட்டது. கோலாலம்பூரிலிருந்து KLIA விமான நிலைஇயம் செல்ல ஒரு மணி நேரம் ஆகும். அந்த சமயத்தில் ஏதாவது படிப்பது வழக்கம். கொண்டு வந்த புத்தகம் துப்பறியும் கதை போல் இருந்ததால் சிறிது தூங்கி, ஏற்போர்ட் வந்து சேர இரவு 7 ஆனது. இரவு 9.35க்குத்தான் விமானம். அதுவரை அங்கே இங்கே சுற்றிவிட்டு போர்டிங் பாஸ் வாங்கி விமானத்தில் அமர்ந்தபோது மணி 9. அப்போதுதான் 'அவன்' ஏறினான். அவனை பார்த்தவுடன் என் மனதை என்னவோ செய்தது.

பார்ப்பதற்கு 28 வயது இருக்கலாம். நல்ல உயரம். தலை கலைந்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தன. ஒரு ஜீன்ஸ் அதுவும் முழங்காலில் கிழிந்து இருந்தது. ஒரு பழைய டி ஷர்ட். அவன் என்னையே வேறு பார்த்துக்கொண்டு இருந்தான். அவனை தவிர்க்க எவ்வளவோ முயற்சித்தும் என்னால் முடியவில்லை. நான் பார்க்கும் போது எல்லாம் அவனும் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

நான் எப்போது எந்த விமானத்தில் போனாலும் என்னுடைய சீட்டை முன்பே ரிசர்வ் செய்துவிடுவேன். அதாவது பிஸினஸ் கிளாஸ் அருகில் வருவது போல் பார்த்துக்கொள்வேன். அப்போதுதான் சென்னை வந்ததும் உடனே இறங்கிவிடலாம். ஆனால் இன்று அவசரமாக கடைசி நிமிடத்தில் புக் செய்ததால் அந்த சீட் கிடைக்க வில்லை. அதனால் இப்படிப்பட்ட சூழ்நிலை.

என்னவோ அவனை பார்த்தாலே பயமாக இருந்தது. இன்று ஏதோ நடக்கப்போவதாக என் மனம் கூறியது. நமக்கு யாரும் மலேசியாவில் எதிரிகள் இல்லையே என்று பலவாறு சிந்தித்துக்கொண்டிருக்கையில், விமானம் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்தது. பல நூறு முறை விமானம்பயணம் மேற்கொண்டிருந்தாலும், விமானம் மேலே ஏறும்போதும், கீழே இறங்கும்போதும் என்னை அறியாமல் என் கண்கள் மூடிக்கொள்ளும். மனம் கடவுளை பிரார்த்திக்க ஆரம்பித்துவிடும். அதுவும் தனியாக பயணம் மேற்கொள்ளும்போது மனைவியின் முகமும், பிள்ளைகளின் முகமும் வந்து போகும். இன்றும் அப்படித்தான்.

விமானம் ஏறி சரியான நிலைக்கு வந்தவுடன்தான் மீண்டும் விளக்குகளை போடுவார்கள். ஆனால் புத்தகம் படிக்க விரும்புவர்கள் சிறு விளக்குகளை போட்டுக்கொள்ளலாம். அப்போதுதான் அவனை கவனித்தேன். அவன் என்னை பார்த்துக்கொண்டே பையில் என்னத்தையோ எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான்.

எனக்கு புதுவிதமான ஒரு பயம் தொற்றிக்கொண்டது. ஒரு வேளை அவன் எடுத்து வைத்தது துப்பாக்கியாக இருக்குமோ? விமானத்தை கடத்த போகிறானோ? இல்லை என்னை கொல்ல எங்கள் கமபனியின் காம்படிட்டர்கள் அனுப்பிய கூலிப்படையின் ஆளாக இருப்பானோ? பலவிதமாக குழம்பி போய் இருந்தேன்.

பொதுவாக விமான பயணத்தின்போது நான் தூங்குவது கிடையாது. ஒருவேளை நான் தூங்கிவிட்டால் விமானி சரியாக ஓட்டமாட்டோரோ என்பது மாதிரியான பயம் எனக்கு எப்போதும் இருக்கும். அப்போது பணிப்பெண் ஒரு குளிர்ந்த டிஷ்யூ பேப்பர் அனைவருக்கும் கொடுத்தார். முதலில் முகத்தில் நன்றாக துடைத்தபின் ஓரளவு பிரஷ் ஆன பின் நிமிர்ந்து பார்த்தால் அவன் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கஷ்டப்பட்டு தலையை திருப்பிக்கொண்டேன்.

ஒரு வழியாக டிரிங்ஸ் வந்தது. நான் எப்பவும்போல் ஜூஸ் எடுத்துக்கொண்டேன். அவன் விஸ்கியோ பிராந்தியோ எதையோ எடுப்பதை கவனித்தேன். பயம் அதிகமானது. அவன் ஒரு ரவுண்டு டிரிங்ஸ் முடித்து அடுத்த ரவுண்டுக்காக எழுந்து பின்னால் செல்வதை கவனித்தேன்.

சரி அவனை கவனிக்காமல் ஏதாவது வேலை செய்யலாம் என நினைத்து, என்னுடைய இமிக்ரேஷன் பாரத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன். அதில் ஒரு 15 நிமிடத்தை செலவழித்தேன். ஒரு வழியாக சாப்பாடு வந்தது,

என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை. இன்று ஏதோ நடக்கப்போகிறது. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. திடீரேன மனைவியின் முகமும், பிள்ளைகளின் முகமும் நினைவுக்கு வந்தது. "எனக்கு ஏதாவது ஆனால் அவர்களால் தனியே கிளம்பி இந்தியா செல்ல முடியுமா? நான் இல்லாமல் எப்படி வாழ்வார்கள்? இன்னும் எந்த சொத்தையும் அவர்கள் பெயருக்கு மாற்றவில்லையே? பயம் ரொமப அதிகமாக, பாத்ரூம் செல்லலாம் என எழுந்தேன். அவனும் எழுந்து இருக்கவே, அடக்கிக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன்.

அவன் அங்கே இங்கே என்று போவதும் வருவதுமாக இருந்தான். அவனுடைய செயல்பாடுகள் வித்தியாசமாக எனக்குத்தெரிந்தது. அந்த நேரத்தில் கொஞ்ச நேரம் தூங்குவதற்காக விமானத்தின் அனைத்து விளக்குகளையும் அணைத்தார்கள்.

எனக்கு மட்டும் சந்தேகம், 'அவன் எப்போது விமானத்தை கடத்தப் போகிறான். ஒரு வேளை இப்போ கடத்துவானோ இல்லை இறங்கும்போது மிரட்டி சிலோனுக்கொ இல்லை வேறு எங்காவது கூட்டிச்செல்வானோ' என்று பயந்து கொண்டிருந்தவன் என்னையறியாமல் எப்போது கண்ணை மூடினேன் என்று தெரியவில்லை.

விமானம் தரை இறங்கிக்கொண்டிருந்தது. திரும்பவும் அவன் நினைவு வந்து அவனை பார்த்தேன். அவனும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு வழியாக விமானம் சென்னையை அடைந்து, ஊரில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் அர்ச்சனை செய்வதாக வேண்டிக்கொண்டு இமிக்ரேஷன் முடிந்து கஸ்டம்ஸ் முடிந்து என் கம்பனி காருக்காக வெயிட் செய்து கொண்டிருந்தபோதுதான் பக்கத்தில் இருவர் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தேன். யார் என்று கவனித்ததில், என்னுடன் வந்தவன் என்று தெரியவே என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்தேன்,

அவனை வரவேற்க வந்தவன், "ரமேஷ் என்னடா இப்படி இருக்க. ஏன் சரியா தூங்கலையா"

"அதை ஏண்டா கேட்கற. விமானத்துல என் சீட்டுக்கு அருகில் ஒருத்தன் தீவிரவாதி மாதிரியே இருந்தான். ஒரே பயமா போச்சு. அதனால அவனை வாட்ச் பண்ணிட்டே வந்தேன். அதனால தூங்க முடியாம போச்சு. அவனின் கிழிஞ்ச ஜீன்ஸும், டி ஷ்ர்ட்டும், கலைந்த தலையும்.... அய்யோ பயந்து போய்ட்டேன். முதல்ல போய் சித்தி விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைக்கணும்"

அப்போதுதான் நான் என் உடைகளை கவனித்தேன்.

Nov 15, 2010

ஜாதகம் பார்ப்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

பொதுவாக இந்த ஜாதகம் சோதிடம் ஆகியவற்றில் அதிக நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்தேன். பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் என்னை நம்ப வைத்துவிட்டது எனலாம்.

என் நண்பனின் சித்தப்பா ஒருவர் திருச்சியில் வேலையில் இருந்தார். இப்போது அவருக்கு வயது 88. அவர் ஆரம்பத்தில் தீவிர கம்யூனிஸ்டாக இருந்தவர். அந்த காலத்தில் போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்கு எல்லாம் சென்று வந்தவர். அப்போது அவர் ஒரு தீவிர கடவுள் மறுப்பாளராகவும் இருந்திருக்கிறார். எல்லோரும் ஜாதகம் ஜோசியம் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த காலக் கட்டத்தில், அவைகள் எல்லாம் பொய் என்று நிரூபிப்பதற்காக ஜாகத்தை பற்றி படித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அப்படி ஆரம்பித்தவர் அதிலே மூழ்கி போய் ஜாதகத்தை நம்ப ஆரம்பித்துவிட்டார்.

தெரிந்தவர்களுக்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு என்று இலவசமாக ஜாதகம் பார்க்க ஆரம்பித்தார். அவரிடம் பார்த்து வந்தவர்கள் அனைவரும் அவரைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டனர். அவரும் இலவசமாக பார்த்து சொல்வதால் அவரின் பெயர் நன்கு பிரபலமானது. நாங்கள் எல்லாம் எங்கள் நண்பனை கிண்டல் செய்ய ஆரம்பித்தோம். காரணம் அவனின் சித்தப்பா ஜாதகத்தில் நம்பிக்கை ஏற்பட்டவுடன் தீவிர கடவுள் பக்தராகவும் ஆகிவிட்டார். என் நண்பனோ, "நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். வேண்டுமானால் நீங்கள் ஒரு முறை உங்கள் தலையெழுத்தை பற்றி அவரிடம் தெரிந்து கொண்டு வாருங்கள்" என்று எரிச்சலுடன் கூற ஆரம்பித்துவிட்டான்.

அந்த சமயத்தில் என் இன்னொரு நண்பரின் உறவினர் வீட்டில் ஒருவருக்கு கல்யாணம் பேசி முடிவாகி இருந்தது. என் நண்பன் அந்த உறவினர் வீட்டில் என் நண்பனின் சித்தப்பாவை பற்றி சொல்ல, அவர்களும் ஆர்வமாக பெண் ஜாதகத்தையும், பையன் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றனர். நாங்களும் அப்போது உடனிருந்தோம்.

இரண்டு பேரின் ஜாதகத்தையும் வாங்கி பொறுமையாக பார்த்தவர்,

"ஜாதகம் எல்லாம் பொருந்தி இருக்கிறது. நீங்கள் தாராளமாக கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யலாம்" எனக் கூறினார்.

உறவினரோ, "ஏற்கனவே நாங்கள் கல்யாணத்தேதி குறித்துவிட்டோம். ஜாதகமும் பார்த்துவிட்டோம். இவன் உங்களைப் பற்றி சொன்னான். அதனால் உங்களிடமும் ஒரு முறை காண்பித்து செல்லலாமே என வந்தோம்" என கூறினார்.

அவர் ஓரளவு கோபம் அடைந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், "அப்ப என் கிட்ட ஒரு தடவை சரிபார்க்க வந்திருக்கீங்க. சரி, எப்போ கல்யாணம் வைச்சிருக்கீங்க?" எனக் கேட்டார்.

உறவினர் கல்யாணத்தேதியை சொன்னார்.

கேட்டவர், "அந்த தேதியிலா வைச்சிருக்கீங்க. சரி இல்லையே. பேசாம வேறு ஒரு தேதியில் வைங்கள்" என்றார்.

வந்திருந்தவரோ டென்ஷன் ஆகிவிட்டார், "ஏற்கனவே முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கிறது. பத்திரிகையும் அடிக்க கொடுத்துவிட்டோம். இப்போ மாற்ற வேண்டும் என்றால் எப்படி? முடியாத காரியம்" என்றார்.

"அப்புறம் உங்கள் இஷ்டம்?"

" சரி, ஏன் கல்யாணத்தேதியை மாற்ற வேண்டும் என்று சொல்கின்றீர்கள்"

" காரணம், அந்த தேதியில் கல்யாணம் வைத்தீர்கள் என்றால், சொந்தக்காரர்கள் ஒரு ஐம்பது பேரைத் தவிர யாரும் கல்யாணத்திற்கு வரமாட்டார்கள். அவர்களும் முதல் நாள் மாலையில் வந்தவர்கள் ஆக இருப்பார்கள்" என்றார்.

இதை கேட்டதும் அனைவருக்கும் கோபம் வந்து விட்டது. கல்யாணம் நடக்க போவது அடுத்து மூன்று மாதம் கழித்து. உறவினரோ மிகப் பெரிய பணக்காரர். ஓரளவு செல்வாக்கு உள்ளவர். பத்திரிகையே 3000 அடித்துள்ளார். அவரிடம் போய் ஐம்பது பேர்தான் வருவார்கள் என்றால் அவருக்கு கோபம் வருமா? வரதா?

கடுப்புடன் அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டொம். வரும் வழியில் எல்லாம் அவரைப் பற்றி திட்டிக்கொண்டே வந்தோம், "இவர் என்ன பெரிய கடவுளா? நடப்பதை முன் கூட்டியே சொல்ல?" என்று.

நண்பரின் வீட்டில் திருமண ஏற்பாடு பலமாக நடந்தது. வீடே சந்தோசமாக இருந்தது. கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு சில சடங்குகள் நடந்தது. குறிப்பிட்ட உறவினர்கள் மட்டும் மாலையே வந்து இருந்தார்கள்.

கல்யாண நாள் வந்தது. அன்று காலை யாருமே மண்டபத்துக்கு வரவில்லை. முதல் நாள் வந்த ஐம்பது பேர் மட்டுமே வந்து இருந்தார்கள்.

"ஏன்?"

கல்யாணம் நடந்த நாள்: மே மாதம் 22ம் தேதி காலை, 1991 வருடம்.

Nov 4, 2010

இப்படியும் ஒரு காதல்! - இறுதி பாகம்

ந்த பெண்ணின் கல்யாணம் நடை பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதமே இருந்த நிலையில் அப்படி ஒரு கடிதம்.

அது தெரிந்தால் அந்த பெண்ணின் மேல் உங்களுக்கு கோபம் கோபமாக வரும். வெறுப்பு வரும். இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா? எனத்தோன்றும். ஆனால் இருந்தாள், இருக்கிறாள் என்பதுதான் உண்மை.

அப்படி என்ன அந்த கடிதத்தில் எழுதி இருந்தது?

"அன்புள்ள கோபால்,

நான் இங்கு நலம் இல்லை. அங்கும் அப்படியே என நினைக்கிறேன். எவ்வளவோ முயன்றும் என்னால் என் அப்பாவின் குணத்தை மாற்ற முடியவில்லை. அதனால், ஜெரோம் என்னை கல்யாணம் பண்ணப்போவது உறுதி. நம் காதல் கல்யாணத்தில் முடியும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதற்காக நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். நீங்களும் அப்படி எண்ணக்கூடாது. நீங்களும் ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளவும். அத்ற்கு முன் ஒரு முக்கியமான விசயம்.

நான் இதுவரை என் குடும்பத்திலேயே மிக நல்ல பெண்ணாக இருந்து வருகிறேன். எவ்வளவோ நீங்கள் முயன்றும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கள் விரல் நகம் கூட என்மீது பட அனுமதித்ததில்லை. அப்படி என் காதலையும் என் குடும்பத்தையும் மதித்தேன், நேசித்தேன். அது தவறு என்று இப்போது உணர்கிறேன்.

நான் எந்த அளவிற்கு என் குடும்பத்திற்கு உண்மையாக இருந்தேனோ அந்த அளவிற்கு அவர்கள் இல்லை. நம் காதலை மதிக்கவில்லை. அதனால் அவர்களை பழிவாங்க முடிவு செய்துள்ளேன். நான் இப்போ சொல்லப்போவது உங்களால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதுதான் என் மனதிற்கு கிடைக்க போகும் மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன்.

நிறைய யோசித்த பிறகுதான் இந்த முடிவை எடுத்தேன். ஜெரோமை பற்றி எனக்கு கவலை இல்லை. நம் காதலை பற்றி தெரிந்த பின்னும் அவன் எப்படி என்னை கல்யாணம் பண்ண சம்மதிக்கலாம்?. அதனால்தான் இந்த முடிவு.

நான் என் வயிற்றில் சுமக்க போகும் குழந்தை உங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதனால் நீங்கள்தான் எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும். இதை படிக்கும்போது உங்களுக்கு அருவெறுப்பாக இருக்கலாம். இதுதான் நான் என் குடும்பத்தாருக்கும், ஜெரோமிற்கும் தரப்போகும் மிகப்பெரிய தண்டனை. ஆனால் அவர்களுக்கு இது தெரியப்போவதில்லை. அவனோட குழந்தையாகவே அவன் நினைத்துக்கொள்ளட்டும். அதனால் இன்று மாலை நான் என் உயிர்த்தோழி ராஜி வீட்டில் காத்திருப்பேன். மறக்காமல் வந்துவிடு. அங்கே நம் உடல்கள் பேசட்டும். என் செக்ஸ் ஆசைக்காக இந்த கடிதத்தை எழுதியிருக்கமாட்டேன் என்று நம்புவீர்கள் என நினைக்கிறேன். அதனால் மறக்காமல் வந்துவிடுங்கள்.

என்றும் காதலுடன்,
நான்சி

பின்குறிப்பு:

ஒரு வேளை நீ வராமல் போனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது"

கோபால் இந்த கடிதத்தை என்னிடம் காண்பித்தபோது ஒரு பக்கம் அந்த பெண் மேல் கோபமும், வெறுப்பும் ஏற்பட்டது.

குழம்பிய நிலையில் கோபால் கேட்டான்,

"என்ன ரவி, இப்போ நான் என்ன செய்யறது?"

"என்ன செய்யறதா? அவ ஏதோ முட்டாத்தனமா எழுதினா, நீ அதை சீரியஸா எடுத்துட்டு பேசற?"

"எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனா உனக்கே தெரியும். அவங்க குடும்பத்தை எதிர்த்து என்னால திருமணம் செய்ய முடியாது. என்னையும் என் குடும்பத்தையும் வெட்டியே போட்டுருவானுங்க. அதனால"

"அதனால?"

"ரவி, அவ ரொம்ப பிடிவாதக்காரி. தற்கொலை அது இதுங்கறா. உண்மையாலும் செஞ்சாலும் செய்துப்பா. அதனால அவ சொல்றா மாதிரி இன்னைக்கு அங்க போகப்போறேன்"

நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. ஒரு சில குறிப்பிட்ட நண்பர்களிடம் விசயத்தை சொன்னேன். எல்லோரும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவன் கேட்கவில்லை.

எங்களுக்கு தெரிந்தே எங்களால் அவனை தடுக்க முடியாமல் போனது. சினிமாவில் வருவது போல ஒருமுறை உடலுறவுக்கு பிறகு குழந்தை என்றெல்லாம் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. அவர்களின் ரகசிய உறவு நான்சியின் கல்யாணம் வரை தொடர்ந்தது.

- இப்படியே இந்த இடத்தில் இந்த உண்மை சம்பவத்தை ஒரு கதையாக முடிக்கத்தான் நினைத்தேன். இதற்குமேல் எழுதவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் உண்மை என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதை வாசகர்களுக்கு சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

நான்சி கல்யாணம் நடந்த ஆறு மாதத்தில் கோபாலுக்கும் கல்யாணம் நடந்தது. சொந்தத்திலேயே ஒரு பெண் கிடைத்தாள். ஆனால் அவளுடன் கோபால் சந்தோசமாக குடும்பம் நடத்தவில்லை. தினமும் குடி, சிகரட் என்று அலைந்தான்.

எண்ணி ஆறே மாதத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டான். 18 வயதான இளம் பெண் விதவையான கொடுமை நடந்தது.

ஒருவருடத்தில் நான்சிக்கு குழந்தை பிறந்தது. அது கோபாலுக்கு பிறந்ததா? இல்லை ஜெரோமுக்கு பிறந்ததா என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். குழந்தை மூளை வளைர்ச்சியில்லாமல் பிறந்தது.

என்ன காரணமோ தெரியவில்லை, ஜெரோம் ஒரு பித்து பிடித்த நிலையில் அலைந்து கொண்டிருக்கிறான். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அவனுக்கும் நான்சிக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லை.

நான்சியின் குடும்பமோ அவளின் தங்கையின் காதலை எப்படி தடுப்பது என்ற சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நான்சியும் சந்தோசமாக இல்லை.

நான்சி, ஜெரோம், கோபால், அவனின் இளம் விதவை மனைவி இவர்களின் வாழ்க்கை சரியாக அமையாமல் போனதற்கு என்ன காரணம்?

வாசகர்கள் ஆகிய நீங்களே தேடி கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

Nov 3, 2010

இப்படியும் ஒரு காதல்!

(இது ஒரு உண்மை கதை. இப்படியும் நடக்குமா? என யாரும் என்னை கேட்காதீர்கள். நடந்தது அவ்வளவுதான். முதலில் இதை எழுதலாமா, வேண்டாமா என்று குழம்பினேன். பிறகு ஒரு கதையாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பலாமா? என எண்ணினேன். ஏற்கனவே என்னுடைய ஏகப்பட்ட கதைகள் வாரா வாரம் பத்திரிகைகளில் வந்து கொண்டு இருப்பதால், பத்திரிகைகள் மற்ற எழுத்தாளர்களுக்கும் இடம் ஒதுக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில், கடைசியில் இங்கேயே எழுதலாம் என முடிவு எடுத்து எழுதுகிறேன்)

கோபால் முதலில் என்னிடம் அந்த விசயத்தை பற்றி சொன்னபோது நான் நம்பவில்லை. அதிர்ச்சி மட்டுமே அடைந்தேன். அவன் சொல்லியது போல் நடக்க வாய்ப்பே இல்லை என்றுதான் நினைத்தேன். அவன் என்ன என்னிடம் சொன்னான் என்று பார்ப்பதற்கு முன்னால் அவனைப் பற்றி உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.

கோபாலும் என்னைப்போல ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் தான். அப்பா ஒரு ஆசிரியர். ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. அம்மா ஒரு ஹோம்மேக்கர். அளவான குடும்பம். கோபால் பார்ப்பதற்கு நல்ல உயரமாக ஓரளவு கவர்ச்சியாக இருப்பான். எந்த பென்ணிற்குமே அவனை முதல் பார்வையிலேயே பிடித்துவிடும். என்ன காரணமோ அவனுக்கு படிப்பு அவ்வளவு ஏறவில்லை. எப்படியோ தத்தி தத்தி டிப்ளமோ முடித்தான். எங்கும் சரியாக வேலை கிடைக்காத நிலையில் யார் யாரையோ பிடித்து பணம் கட்டி வெளிநாடு சென்றான். அங்கும் சரியாக வேலை செய்யாமல் இந்தியாவிற்கே திரும்பி வந்தான்.

என்ன காரணம்? பாழாய் போன காதல்தான். கோபால் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தான். அவன் காதலித்த வீட்டில் மொத்தம் நான்கு பெண்கள். ஏற்கனவே அதே வீட்டில் கோபால் காதலிக்கும் பெண்ணின் தங்கை ஒருத்தியை என் நண்பன் ஒருவன் காதலித்து வந்தான். எனக்கு ஒன்றும் அந்த வீட்டின் மேல் அவ்வளவு மரியாதை ஏற்படவில்லை. அவர்கள் வீட்டில் அவ்வளவு சோஷியலாக எல்லோரும் பழகுவார்கள். அந்த ஒரு விசயத்தினாலே அவர்கள் வீட்டிற்கு செல்வதை நான் விரும்புவதில்லை.

அதனால் கோபாலின் காதல் மேல் எனக்கு அப்படி ஒன்றும் மரியாதை வரவில்லை. முதலில் நான் அவர்கள் காதலை நம்பவில்லை. பின் ஒரு நாள் அந்த பெண் எழுதிய லெட்டர்கள், அவளுடன் எடுத்த போட்டோக்கள் எல்லாவற்றையும் காண்பித்த பின்புதான் நானும் நம்ப ஆரம்பித்தேன்.

கோபாலின் காதலி பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள். அவள் பெயர் நான்சி என்று வைத்துக்கொள்வோம். பார்ப்பதற்கு நடிகை மாதவி போல் இருப்பாள். நீங்கள் கமலின் 'ராஜபார்வை' படம் பார்த்திருக்கின்றீர்களா? அதில் வரும் மாதவி போலே இருப்பாள். அதனால்தான் பெயரை கூட நான்சி என்றேன். கண்கள் மட்டுமே அப்படி ஒரு அழகு. அவள் ஒரு அழகு சிலை. இதற்குமேல் நண்பனின் காதலியை பற்றி வர்ணிப்பது நல்லதல்ல.

இப்போது விசயத்திற்கு வருகிறேன். கோபாலின் காதல் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று யாருமே நினைக்கவில்லை. நான்சியோ வேற்று மதத்தை சேர்ந்தவள். இவனோ இந்து. எங்கள் ஊரோ ஒரு கிராமமும் இல்லாத டவுணும் இல்லாத ஒரு ஊர். எப்படி இந்த கல்யாணம் சாத்தியமாகும். ஆனால் இதை எல்லாம் பார்த்து காதல் வருவதில்லையே?

இவர்களின் காதல் இருவர் வீட்டிற்கும் தெரிய ஆரம்பித்தது. பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்தது. இருவர் வீட்டிலும் பிரச்சனைகள் பெரிய அளவில் வெடித்து அடிதடி அளவிற்கு சென்றது. கோபால் அந்த பெண்ணை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த சமயத்தில் அந்த பெண்ணிடமிருந்து கோபாலுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இருந்த விசயத்தை படித்த போதுதான் நான் முதல் பாராவில் சொன்னது போல் அதிர்ச்சி அடைந்து ஏறக்குறைய மயக்கம் அடையும் அளவிற்கு ஆனேன்.

அந்த பெண்ணின் கல்யாணம் நடை பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதமே இருந்த நிலையில் அப்படி ஒரு கடிதம். அப்படி என்ன அந்த கடிதத்தில் எழுதி இருந்தது?

அது தெரிந்தால் அந்த பெண்ணின் மேல் உங்களுக்கு கோபம் கோபமாக வரும். வெறுப்பு வரும். இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா? எனத்தோன்றும். ஆனால் இருந்தாள், இருக்கிறாள் என்பதுதான் உண்மை.

அவள் மேல் உங்களுக்கு கோபம் வர நாளை வரை காத்திருங்கள்.

- தொடரும்